கம்பன் சொல்லும் கதை – எஸ் எஸ்

கம்பர் - தமிழ் விக்கிப்பீடியா

கம்பன் என்ற கடலில் சில முத்துக்களைத் திரட்டலாமே என்ற எண்ணம் தோன்றியது.

கம்பன் சொல்லும் கதை என்று கவி அமுதன் துவக்கிவைத்தார் அக்டோபர் குவிகம் இதழில்!

பின்னர் வெங்கட் கம்பனின் ஏரெழுபது பற்றி நவம்பரில் உரைத்தார்.

இப்போது என்  முறை.

பின்னர் நண்பர்களை அழைத்து அவர்களுக்குப் பிடித்த கம்பன் தேனில் இரு சொட்டுக்களைக் கேட்டுப் பெறப்போகிறேன். 

நான் காட்சிப் படுத்தப்போகும் நிகழ்வு  ராமாயணத்தில் மிக பதட்டமான சூழ்நிலையில் வருவது.

மந்தரை சூழ்ச்சிப் படலம் வெற்றிகரமாக அரங்கேறியது! தெளிந்த பாலைப்போல் இருந்த கைகேயியின் மனத்தைக்  கள்ளிப் பாலாக்கும் முயற்சியில் மந்தரை வெற்றி பெற்றுவிட்டாள். “பரதனுக்கு முடி சூட்டல் ; ராமனைக்  காட்டுக்குத் துரத்தல்” – வெட்டு ஒன்று துண்டு இரண்டு போல இந்த   இரு  விஷ விதையைக் கைகேயியின்  மனத்தில்  விதைத்து விட்டாள், பதித்தும் விட்டாள்  கூனி என்கிற மந்தரை!

கூனியின் விஷம் கடுமையாக வேலை செய்தது. அன்பே உருவான கைகேயியின் மனத்தில் கருமை பரவியது.  கொடுமையான சூழ்நிலைக்குத் தக்கவாறு தன்னைத் தயார்  செய்துகொள்கிறாள். தலையில் சூட்டிய மலர்களைக் களைகிறாள் . கட்டிய குழலை அவிழ்த்துப் பறக்க விடுகிறாள், போட்டிருந்த நகைகளைக் கழட்டி எறிகிறாள். இட்ட திலகத்தையும் அழிக்கிறாள். தரையில் படுத்துப் புரளுவதைப் போலக் கிடக்கிறாள். 

இப்படி ஆரம்பிக்கிறது கைகேயியின் சூழ்ச்சிப் படலம், இல்லை ,சூழ்வினைப் படலம்.

அழகிய இளைய மனைவியின் திறமையான நடிப்பை  உண்மையென எண்ணிய தசரதன்  துடிதுடித்து விழுந்தான்.

ராமன் காட்டிற்குச் செல்லவேண்டும். பரதன் பட்டம் பெறவேண்டும்.  

தசரதன் இதைக்  கேட்டமாத்திரத்திலேயே தீப்பற்றியதைப் போலத் துடித்தான். 

பரதன் வேண்டுமானால் ஆளட்டும் ராமன் காட்டுக்குப் போக வேண்டாமே என்று கைகேயியின் காலையும் பிடித்துக் கெஞ்சினான். 

தசரதனின் நிலையைப் பற்றிச் சிறிதும் கவலைப் படாத கைகேயி அவனிடமிருந்த வரங்களை வாங்கிய பின்னரே திருப்தி கொண்டாள். 

தசரதன் நிலை குலைந்து  மயங்கிச் சாய்ந்தான். 

கைகேயி அத்துடன் நின்றுவிடவில்லை.

ராமனை அழைக்கிறாள்.  எந்த ராமனை? அடுத்த நாள் அயோத்தி மா நகருக்கு அரசனாகப் போகும்  பட்டத்து இளவரசனை!

கீசு கீசென்று: கைகேயி சூழ்வினைப் படலம்

பட்டாபிஷேகத்திற்காகத் தயாராகிக் கொண்டிருக்கும்  மன்னனை !

கூப்பிட்டு என்ன சொல்கிறாள் ? ‘

ஆழி சூழ் உலகம் எல்லாம் பரதனே ஆள, நீ போய்த்
தாழ் இரும் சடைகள் தாங்கித், தாங்கரும் தவ மேற்கொண்டு,
பூழி வெம் கானம் நண்ணிப், புண்ணியத் துறைகள் ஆடி,
ஏழிரண்டு ஆண்டில் வா என்று இயம்பினன் அரசன்; என்றாள்’

அதாவது  கடலால் சூழப்பட்ட உலகம்  அனைத்தையும்  பரதனே  ஆண்டுகொண்டிருக்க;
நீ நாட்டை விட்டுச் சென்று தொங்குகின்ற பெரிய சடைகளைத் தாங்கிக்கொண்டு, தாங்குவதற்குரிய தவத்தை ஏற்று;  புழுதி நிறைந்த கொடிய காட்டை அடைந்து புண்ணியத் தீர்த்தங்களில் நீராடி பதினான்கு ஆண்டுகள் கழித்த பின்பு திரும்பி வரவேண்டும்  என்றுஅரசன்கொன்னான் என்று கைகேயி கூறினாள்.

 சடாமுடி தரித்தல்,    தவம் ,மேற்கொள்ளல்,  கானம் சேர்தல், புண்ணியத் துறைகள் ஆடுதல் முதலிய நற்பயன்கள் கிட்டவே அரசன் இவ்வாறு பணித்தான் என்று வஞ்சகமாகக் கைகேயி கூறுகிறாள்.

மேலும் இது தசரதன் விருப்பம்  என்பதைக் காட்டுவதற்காக ‘இயம்பினன்அரசன்’  என்றாள். 

அதற்கு மேலே , சொன்னது  தந்தை என்று சொல்லாமல்  ‘அரசன் கூறினான்’ என்பதால் ‘இது அரசு ஆணை இது மீற இயலாது என்பதையும்  மறைமுகமாகச் சுட்டிக் காட்டுகிறாள்.

அரசன் ஏற்கனவே அளித்த தீர்ப்பை – அரசு ஆணையில் இருக்கும் உத்தரவை அப்படியே சொல்வது போல அல்லவா இருக்கிறது கைகேயியின்  பேச்சு.

இது கைகேயி போட்.ட இதிகாச வெடிகுண்டு !

ராமனுக்கு எதிராக வந்த முதல் அரசாணை !

ஆயிரம் முறை ராமாயணம் படித்திருந்தாலும் இந்த இடத்தில் இந்தப் பாடலைப் படிக்கும்போது  படிப்பவர் இதயம் சில நொடிகள் நிற்கும் என்பதில் ஐயமில்லை.   

அப்படித் துடிக்கும்  அனைத்து இதயங்களுக்கு  மருந்தாக ராமபிரான்  தருவது கம்பனின் இந்தப் பாடல் மூலம் .  

கைகேயி தனது வரத்தால் இராமனைக் காட்டுக்கு அனுப்பவும் தனது மகன் பரதன் நாடாளவும் மேற்கொண்ட செயல்களால் வெகுண்டெழுந்தான் தம்பி இலக்குவன்.

”உனக்குரிய அரசைப் பறித்த கைகேயியையும் அதற்கு உடந்தையாயிருந்த தசரதன் முதலானவர்களையும் உடனே கொன்று உனக்குப்பட்டாபிஷேகம் செய்து வைக்கிறேன்”
என்று சீறி நின்ற இலக்குவனைப் பார்த்து இராமன் அறிவுறுத்துவதாகக்  கம்பன் மிக அழகாகக் கூறுகிறான்.

கம்ப ராமாயணம் – அயோத்தி காண்டம் – நகர் நீங்கு படலம் 129 வது பாடல்

சீற்றம் கொண்ட இலக்குவனுக்கு இராமன் உரைத்தது

‘நதியின் பிழை அன்று நறும்புனல் இன்மை; அற்றே,
பதியின் பிழை அன்று; பயந்து நமைப் புரந்தாள்
மதியின் பிழை அன்று; மகன் பிழை அன்று; மைந்த!
விதியின் பிழை; நீ இதற்கு என்னை வெகுண்டது?’ என்றான். (14)

இலக்குவா!என மைந்தனே !

(அன்பு மிகுதியால், தம்பியை மகனே என்கிறான்.)

நீரோடும் நதியில் ஒரு சில காலங்களில் நல்ல நீர் இல்லாமல் வற்றிப் போவது, அந்த நதியின் குற்றம் அன்று.

அது போல, என்னை வனவாசம் போகச் சொன்னது, நம் தந்தையின் குற்றம் அன்று.

அப்படி வரம் வாங்கியது,  நம்மைப் பெற்றுக் காப்பாற்றி வளர்த்த கைகேயியின் அறிவின் குற்றம் அன்று.

அவள் மகன் பரதனது குற்றமும் அன்று.

இது விதியால் விளைந்த குற்றம்.

இந்தச் செயலுக்கு இவர்களை எல்லாம் காரணமாக்கி நீ கோபித்தது ஏன்?’ என்றான்

இதைக் கேட்டதும் துடிதுடித்துக் கொண்டிருக்கும் நம் இதயமும் அமைதியுறும் என்பதில் ஐயமில்லை. 

கவிச்  சக்கரவர்த்தி கம்பனின் இரு முத்துக்களாக இவ்விரண்டு பாடல்களையும் கருதுகிறேன்.  

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.