
முன் கதைச் சுருக்கம்:
பூம்புகார் நகரத்துப் பெருங்குடி வணிகனின் அருமை மகள் பத்திரை.
கொலைத் தண்டனை விதிக்கப்பட்ட காளன் என்ற கொடிய கள்வன் மேல் காதல் கொண்டாள்.
மகளின் மனதை மாற்ற முடியாத வணிகன்,மன்னனிடம் நயமாகப் பேசி மன்றாடி அவனை விடுவிக்கிறான்……..
மன்னனுக்கு வணிகன் நன்றி தெரிவித்தல்
இன்முகத் தோடு மன்னன்
இருங்கழல் பணிந்து வீழ்ந்தான்.
பொன்மணி,அணிகள், யானை,
புரவிகள் பலவும் தந்தான்
என்மன மகிழ்ச்சிக் காக
இவற்றைநீ ஏற்ற ருள்வாய்
வன்முறை இன்றிக் காளன்
வாழ்ந்திடச் செய்வேன் என்றான்.
மன்னன் கூற்று
கொட்டியே கொடுத்த போதும்
கோமுறை பிழைத்தல் செய்யேன்
மட்டிலா அன்பு மிக்கு
மன்னனைத் தந்தை யாகச்
சுட்டிய சொல்லென் உள்ளம்
தொட்டதால் இணங்கி விட்டேன்
கிட்டிய விடுத லையைக்
கேடுறா வண்ணம் காப்பாய்
( கோமுறை — அரச நீதி)
வணிகன் மறுமொழி
வாழி வேந்தே! வாழிகொற்றம்!
வளமார் நாடு வாழியவே!
சூழும் புகழ்சால் தொன்மைமிகு
சோழர் குடியும் வாழியவே!
பாழி லாதுன் ஆணையினைப்
பக்கு வமாகக் கடைப்பிடிப்பேன்.
ஆழும் அன்பு மகள்மணத்தை
அடியேன் நடத்த வாழ்த்திடுவாய்
காதல் நோய் கொண்ட பத்திரை, தனிமையில் வாடுகிறாள். தன் பிரிவுத் துன்பத்தைப் பெருகச் செய்வதாக, அன்றில் பறவையையும், நிலவையும், தென்றலையும் வெறுத்துக் குறை கூறுகிறாள்:
அன்றில் பறவையைக் கடிந்து கொள்வது
அன்றில் புள்ளே நீயென்றும்
அன்புத் துணையைப் பிரிவதுண்டோ?
இன்று நானும் தனித்திருக்க
ஏனோ உரத்துக் கூவுகின்றாய்?
நன்று நீளும் இரவுக்குள்
நலிந்தென் உயிரும் பிரிந்துவிட்டால்
கொன்ற பழியும் உனக்காகும்
கொஞ்சம் அமைதி காப்பாயே!
நிலவை வெறுப்பது
வெள்ளை நிலவே நீயின்று
வெயிலாய் வெம்மை வீசுவதேன்?
கொள்ளை அழகுக் குளிர்நிலவாய்க்
கூறும் கவிஞர் பொய்யர்கொல்?
முள்ளின் தொகுப்போ உன்கதிர்கள்?
மூண்ட பகையும் நமக்குண்டோ?
தள்ளிப் போவாய் வேறிடமே
தனியே தவிக்க விட்டுவிடு!
தென்றலை விரட்டுவது
மலையில் இருந்து மணம்சுமந்து
வருவாய் தென்றல் எனநினைத்தேன்.
உலையின் தீயாய் வெப்பத்தை
உன்றன் மூச்சாய் விடுகின்றாய்!
இலையோ ஈரம் உன்நெஞ்சில்
இரக்கம் என்மேல் வரவிலையோ?
நிலையைக் கண்டு நின்றுவிடு
நெருங்கி டாமல் சென்றுவிடு!
திருமணம்
மகளின் நிலைமை கண்டிரங்கி
வணிகன் செயலில் உடனிறங்கித்
தகவு சார்ந்த சான்றோரைத்
தனது மனைக்கு வரவழைத்தான்
புகன்ற கருத்தைச் செவிமடுத்தான்
பொழுதைத் தள்ளிப் போடாமல்
மிகவும் சிறப்பாய்த் திருமணத்தை
விரைவில் நடத்த முடிவெடுத்தான்
யானை மீதேறி மகளிர் திருமணச் செய்தியை அறிவித்தல்
தேனின் மொழியாள் பத்திரைக்கும்
சிந்தை கவர்ந்த காளனுக்கும்
வானின் மீன்கள் நன்னிலையில்
வயங்கும் நாளில் மணமென்று
மானின் சாயல் இளமடவார்
வளைகள் குலுங்கி இசையொலிப்ப
யானை எருத்தம் மீதேறி
எங்கும் நகரில் அறிவித்தார்!
( எருத்தம் – கழுத்து/ பிடரி)
(தொடரும்)
பிரமாதம். அடுத்தது கல்யாண சாப்பாடு வர்ணனை
LikeLike
அருமை கல்லூரி நாட்களின் தமிழ் வகுப்பு க்கு நினைவுகள் பின் நோக்கி சென்று தமிழ் ஆசிரியரை அககண் முன் கொண்டு வந்து நிறுத்தியது
LikeLike
கதை சூடு பிடிக்கிறது
LikeLike
வெள்ளைநிலவே நீ இன்று வெயிலாய் வீசுவதேன் என்பது இலக்கிய நயம் சார்ந்த கேள்வி
பாராட்டுகள்
LikeLike
when the mind is in imbalanced condition, natures splendour will seem to be disgusting.excellently narrated. best wishes for the poet for his awesome work
LikeLike
அருமை!மிக அருமை!! என்ன நடையழகு! சொல்லங்காரம்!!
” குத்தும் முள்ளோ. உன் கதிர்கள் ” என்னே உன் வர்ணனை!
படிக்கப்படிக்கத் தகட்டாத தேன்!
வாழ்க! வளர்க உன்திறமை!!
LikeLike