சரித்திரம் பேசுகிறது! –யாரோ
தந்திவர்மன்
(கி.பி.774-825)
இரண்டாம் நந்திவர்மனுக்குப் பிறகு வந்தவன் தந்திவர்மன்.
செய்திகளை முந்தித் தரும் தந்தி (தினத்தந்தி) போல தந்திவர்மன் கதை இங்கே:
நந்திவர்மன்- ரேவா இருவருடைய காதல் காட்சிகளை வாசகர்கள் ஏற்கனவே கற்பனை செய்து பார்த்திருப்பீர்கள்.
ஒரு பாடல் ஒலிக்கிறது :
‘நான் காதலென்னும் கவிதை சொன்னேன் கட்டிலின் மேலே..’
‘அந்தக் கருணைக்கு நான் பரிசு தந்தேன் தொட்டிலின் மேலே..”
அவர்களுடைய காதல் பரிசுக்குத் தந்திவர்மன் என்று பெயரிட்டனர்-
இராட்டிரகூட தாத்தா தந்திதுர்கன் பெயரில்.
பல ஆண்டுகள் மன்னனாக இருந்த நந்தி ஒரு நாள் மறைந்தான்.
நந்திக்குப் பிந்தி தந்தி மன்னன் ஆனான்.
காய்த்த மரம் கல்லடி படும்!
காஞ்சி அன்று நகரங்களில் பேரழகி!
அதன் மேல் காதல் கொண்ட மன்னர்கள் அவளை அடையத் துடித்தார்கள்.
புலிகேசி முதல் பின்னால் வந்த சோழர் வரை.-
இடையிலும் பல மன்னர்கள்..
இந்தச் சூழ்நிலையில் தந்தியின் ஆட்சி தொடங்கியது.
அது தந்திக் கம்பி மீது நடப்பது போன்ற காட்சி!
‘சோதனை மேல் சோதனை போதுமடா சாமி’
‘போர்களில் அனைத்திலும் ஒரு மன்னன் தோற்றால் அவனது வாழ்க்கை எப்படியிருக்கும்?’
அன்று தந்தியின் நிலை அதே தான்!
சாகிற வரைக்கும் சங்கடமானால் வாழுகிறது எக்காலம்?
பிறகு எதற்காக இந்தத் தோற்ற மன்னனைப் பற்றி எழுதுகிறாய் – என்று தானே கேட்கிறீர்கள்?
தோல்விகளும் சரித்திரம் படைக்குமென்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
அந்தத் தோல்விகளையும் தாண்டியும் ஒரு மன்னன் 50 வருடம் மன்னனாக இருப்பது என்பதும் ஒரு சாதனை தானே!
தவறான கூட்டணியில் சேர்ந்ததால் அரசியலில் தோற்ற கட்சிகளை நாம் பார்த்திருக்கிறோம். அன்றைய அரசியலிலும் கூட்டணி அரசியல் தான் நடந்தது.
முதலில் இராட்டிரகூடர், பாண்டியர் தாக்குதலுக்குக் காஞ்சி உள்ளாயிற்று. இராட்டிரகூட அரசன் துருவன் காஞ்சி நகரத்தை முற்றுகையிட்டான்.
தந்திவர்மன் தோல்வியுற்றான். பெரிய யானைப் படையைத் துருவனுக்கு அளித்துச் சரண் புகுந்தான். துருவனுக்கு அடங்கிக் கப்பம் கட்டும் நிலை பல்லவனுக்கு ஏற்பட்டது.
கி.பி.803இல் மீண்டும் இராட்டிரகூட – பல்லவப் போர் நடந்தது. இம்முறை போர் தொடுத்து வந்தவன் துருவனின் மகன் மூன்றாம் கோவிந்தன். அவனிடமும் தந்திவர்மன் தோற்றான்.
வெற்றி பெற்ற மூன்றாம் கோவிந்தன் வடநாடுகளை வெல்லச் சென்றான். அப்போது தந்திவர்மன், கங்கபாடி அரசன், சேர, சோழ, பாண்டியர் அனைவரும் ஒன்று சேர்ந்து கோவிந்தனை வெல்லத் திட்டமிட்டனர்.
மீண்டும் தவறான கூட்டணி!
கோவிந்தன் பெரும்படையுடன் வந்து கி.பி.808-810இல் தென்னாட்டு அரசர் அனைவரையும் வென்றான்.
காஞ்சியைக் கைப்பற்றினான்.
இலங்கை அரசன் அவனுக்குப் பரிசுகள் பல அனுப்பி நட்புக் கொண்டான்.
பல்லவ தந்திவர்மன் சந்தித்த மூன்று பெரும் போர்களும், போர்த் தோல்விகளும் பல்லவ அரசைத் தளர்வுறச் செய்தன. இம் மூன்று போர்களாலும் பல்லவநாட்டிற்கு உண்டான ஆள் இழப்பும் பொருள் இழப்பும் ஏராளம்.
பட்ட காலிலே படும்!
வரகுண பாண்டியன் கி.பி.800 முதல் 830 வரை பாண்டிய நாட்டை ஆண்டவன்.
அவன் தகடூர் அதியமானை எதிர்த்தபோது தந்திவர்ம பல்லவன் அதியமானை ஆதரித்தான். சேரனும் அவனை ஆதரித்தான்.
மீண்டும் ஒரு தவறான கூட்டணி!
வரகுண பாண்டியன் கி.பி.806 இல் இவர்கள் அனைவரையும் தோற்கடித்தான். பல்லவர் ஆட்சியின் கீழ் இருந்த சோழநாடு முழுவதையும் தொண்டை நாட்டில் பெண்ணையாற்றங்கரை வரை உள்ள பகுதியையும் பாண்டியன் கைப்பற்றிக் கொண்டான்.
வடக்கே இராட்டிரகூடர் படையெடுப்பாலும், தெற்கே பாண்டியர் படையெடுப்பாலும் பல்லவ மன்னன் தந்திவர்மன் இருதலைக் கொள்ளி நாகம் போல் தத்தளித்தான்.
அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்!
இடி மேல் இடி இடித்தால்- தந்தியும் தளரும்!..
மாவு விற்கப் போனால் காற்றடித்தது.
உப்பு விற்கப் போனால் மழையடித்தது.
(போதுமடா சாமி இந்தப்பழமொழி என்று யாரோ புலம்புகிறார்கள்!
சரி ஒன்றே ஒன்று சொல்லி அதன் பின் விட்டு விடுவோம்)
சேற்றிலே புதைந்த யானையைக் காக்கையும் கொத்துமாம்!
அதுபோல..
தெலுகு சோடா நாட்டு சிற்றரசன் ஸ்ரீகாந்தா – பாண்டியன் மாறவர்மனின் மருமகன்.
அவன் காஞ்சியைத் தாக்கி தந்திவர்மனைத் துரத்தினான்.
அவன் தனது உறவினனை ‘அபிமானசித்தி பல்லவன்’ – என்ற பெயரில் காஞ்சித் தலைவனாக்கினான்.
தந்தி கடம்ப நாட்டில் அடைக்கலமடைந்தான்.
(கடம்ப மன்னர் குலத்தில் பிறந்த ‘அக்கள நிம்மடி’ என்னும் இளவரசியைத் தந்தி மணந்து கொண்டிருந்தான்).
சில வருடங்கள் கழிந்தது
தந்தியின் மகன் (மூன்றாம் நந்தி) – வீர வாலிபனானான்.
கடம்ப நாட்டில் போர்க்கலையை நன்கு கற்றான்.
சின்னஞ்சிறுகதை ஒன்று!
வருடம் கி பி 814:
கடம்ப மன்னரின் மந்திராலோசனைக் கூடம்.
பல்லவன் தந்தி, இளவரசன் நந்தி, மகாராணி அக்கால நிம்மடி, கடம்ப மன்னன்- மற்றும் கடம்ப தளபதி.
அத்துடன் நந்தியின் இரு சகோதர்கள்.
நந்தி சொன்னான்:
“அப்பா, தாத்தா!
நாம் உடனடியாக காஞ்சியை மீட்க வேண்டும்.
மேலும் நமது எதிரி – இராட்டிரகூட மன்னன் மூன்றாம் கோவிந்தா காலமான செய்தி இன்று வந்துள்ளது. அவன் மகன் அமோகவர்ஷன் இன்று மன்னனாகிறான்.
ஆதிக்க மாற்றம் என்றுமே ஒரு நாட்டின் பலவீனமான காலம்.
காஞ்சியை மீட்டு.. இராஷ்ட்ரியக்கூடாரின் ஆதிக்கத்திலிருக்கும் பல்லவ பகுதிகளையும் மீட்டு – அவனுக்குச் செலுத்தி வந்த கப்பத்தை நிறுத்த வேண்டும். அதற்கான காலம் கனிந்துள்ளது”
தந்தியின் தளர்வுற்ற முகம் சற்றே மேலும் வெளுத்தது.
இன்னொரு தோல்விக்கு அவன் தயாராக இல்லை என்பது அவன் முகத்தில் தெளிவாகத் தெரிந்தது.
மௌனமாக இருந்தான்.
கடம்ப மன்னர்: “நன்று சொன்னாய் நந்தி! நமது கடம்ப நாட்டுப் படையுடன் – சிதறிக்கிடக்கும் பல்லவ சேனையை ஒன்று சேர்த்து நீயே தலைமை நடத்திப் படையெடுப்பாய்”
சிறுகதை முடிந்தது.
காஞ்சி மீட்கப்பட்டது.
தந்திவர்மன் மீண்டும் பல்லவமன்னன் ஆனான்.
இளவரசன் நந்தி தான் சொன்னது போல் அமோகவர்ஷனிடமிருந்த பல்லவபகுதிகளை மீட்டான்.
தந்தியின் இறுதிக்காலம்.
நந்தியை அழைத்து:
“மகனே! உன்னால் இந்த காஞ்சி உன்னதமாகட்டும்!
என்னால் ஏற்பட்ட அவமானங்கள் உன்னால் அறுபடட்டும் ”
தந்தி அறுந்தது!
இனி நந்தியின் கதை விரைவில்…