சுகமா ?சோகமா?
பிரிவுகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் வித விதமான அனுபவங்களை தரும் போல !!!!!
சில சமயங்களில் பிரிவு சுகமே.
வெகுவான பல சமயங்களில் பிரிவு சோகம்தான்.
அம்மா இறந்த போது சுகம் சோகம் இரண்டுமே!! கான்சரில் வேதனைபட்ட அம்மா இறந்தபோது ஒரு கணம் மனம் வெகுவாக லேசாகி போனது சுகமா?
சகோதரர்களுடன் இடுகாட்டிற்கு சென்று அவள் மீது கொள்ளி வைத்த தருணத்தில் இனிமேல் அம்மாவை பார்க்க முடியாது என்ற உள்ளுணர்வு மடை திறந்த வெள்ளமாக கண்களில்
கண்ணீர் !இது சோகம் போலும் .
–அண்ணா,தினமும் அம்மாவிற்கு காரியம் சம்பிரதாயம்
தவறாமல் செய்யும் நாட்களில் அந்தி சாயும் நேரத்தில்
கொட்டிவாக்கம் மொட்டை மாடியில் அண்ணாந்து வானத்தை பார்த்து வாய்விட்டு அழது ‘அம்மா இந்த மேகங்களுக்கு இடையில் ஒரு நொடிபோழுது உன் தெற்றுபல் தெரிய ஒரு சின்ன சிரிப்பை உதிர்த்துவிட்டு போவாயா ?’என்று பிதற்றிய போது சோகம்.
அந்தி சாய்ந்து இருள் சூழ துவங்கும் நேரத்தில் ஒரே ஒரு நட்சத்திரம் மட்டும் தோன்றும்போது ‘நீதான் என் அம்மாவோ ?
என்று ஆச்சர்யபட இது சுகமோ!!!
என்னை பெண்ணாய் இங்கு தந்து சீராட்டி, பாலூட்டி, என் கழிவு துடைத்து, பெரிய மனுஷி ஆன அன்று என் வலக்கரத்தில் தன் வலக்கரத்தை மெதுவாக
கோர்த்து சொல்லாமல் சொல்லின விஷயங்கள் பல..
அதே அம்மா கான்சரில் தவிக்கும்போது அவள் எனக்கு செய்த அத்தனயும் ,அவளுக்கு நான் செய்ய ஒரு வாய்ப்பு. அம்மாவை, பல் தேய்த்துவிட்டு,குளிப்பாட்டி விட்டு அவள் கழிவகற்றி , முகம் அலம்பிவிட்டு,பொட்டு இட்டு, விபூதி இட்டு ஒரு நிமிடம் உற்று பார்ப்பேன் , எப்படி இருந்த என் அம்மா இப்படி இருந்த என் அழகான அம்மா, வற்றி போய் , உயிர் மட்டுமே ஊசலாடி கொண்டிருக்கும் அம்மா, பளீச்சென்று மீண்டும் அழகாகி விடுவாள்.
பாலூட்டிய கடனை அடைக்க முடியுமா ?நான் அம்மாவிற்கு
இரத்தம் கொடுத்த அன்று, தோன்றியது இந்த ஜென்ம கடன்
உன்னுடன் முடிந்துவிட்டது என்று…
சுகமான சோகம் அன்று நான் அனுபவித்தேன்.
இன்னும் எவ்ளவோ எழுத தோன்றுகிறது ……இந்த நாட்களில் நான் வியக்கிறேன் சின்ன மனதில் ஒரு வானளவு ,கடலளவு எண்ணங்களா என்று?
சொல்லுவதில் இருப்பதைவிட எழுதுவதில் உள்ள சுகம், சுவை இரண்டும் ஈடு செய்ய இயலாது. உள்ளத்தில் இருப்பது வெளிப்படும் போது, தாய் அன்பை உணர்கிறேனோ தாய் மொழியில்.!!!!!
மனதையே முன்னால் இருத்துவது தாய் மொழியில் இயல்பாக இருப்பதால்தான் நம் மொழியை தாய் மொழி என்கிறோமோ?
என் உணர்வுகளை அப்படியே ப்ரதிபலிக்கும் எழுத்துக்கள். கண்கள் குளமாகி மேலும் படிக்க முடியாமல் திணருகிறேன். நன்றி. தாயே உனக்கு நான் பட்ட கடன் ஏழேழு ஜென்மமெடுத்தாலும் அடைக்க முடியாது. இனியொரு ஜென்மம் இருந்தால் நீ என் மகளாக வேண்டும் அம்மா.
LikeLike