டாக்டரும் எகனாமிஸ்ட்டும்  – ஸிந்துஜா

சிறுகதை – குட்டி கதைகள்

ராமநாதனும் வைதேகியும் இனிய மணம் கமழும் அந்த வரவேற்பறையில் உட்கார்ந்திருந் தார்கள். வரவேற்பு அறையில் அவர்கள் இருவரைத் தவிர வரவேற்பாளினி சற்று தூரத்தில் உட்கார்ந்திருந்தாள். டாக்டர் இன்னும் வரவில்லை என்று அவர்கள் வந்ததும் அவள் தெரிவித்தாள். ராமநாதன் அறையை ஒரு முறை சுற்றிலும் நோக்கினான். டாக்டர் பல பிரமுகர்களுடன் இருந்த புகைப்படங்கள் சுவற்றில் தொங்கின.  அனைத்திலும் புன்னகையை எறிந்து  கொண்டிருந்த முகமாயிருந்தார் அவர்.  ‘உலகமே காண்டாக்ட் லென்ஸை நம்பி உயிர் வாழ்கிறது’ என்று கூறும் போஸ்டர் ஒன்று ராமநாதனின்

கண்ணைத் தாக்கியது. ‘உங்கள் அண்டர்வேர் போலத்தான் உங்கள் காண்டாக்ட் லென்ஸ்’ என்று அறிவித்த ஒரு போஸ்ட்ரைப்  பார்த்து ராமநாதன் திடுக்கிட்டான்  அணிந்திருந்த கண்ணாடியைச் சற்றுச் சரி செய்து கொண்டு அந்த விளம்பரத்தின் தலைப்புக்குக்கீழே இருந்ததைப் படித்தான்.

அதிகம் உபயோகிக்காதே;

லூசாக இருந்தால் தூக்கியெறி

எப்போதும் எக்ஸ்ட்ரா ஒன்று

கைவசம் இருக்கட்டும்.

ராமநாதன் கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கிக் கொண்டான். வைதேகி அவனிடம் ‘என்ன விஷயம்?’ என்று கண்ணால் கேட்டாள். அவன் போஸ்டரை மறுபடியும் நோக்கினான். அதை அவளும் படித்தாள்.

முகத்தில் கேள்விக் குறியுடன் அவனைப் பார்த்த அவளிடம் “காண்டாக்ட் லென்ஸ் பத்தி சொல்றானா, இல்லே நிரோத் விளம்பரமா?” என்று அவள் காதில் குசுகுசுத்தான். அவள் “உங்களுக்குன்னு தோணறதே?” என்று வாயைப் பொத்திக் கொண்டு சிரித்தாள்.

அப்போது வரவேற்பாளினி அவர்களைப்  பார்த்து “டாக்டர் இன்னும் சில நிமிஷங்களில் வந்து விடுவார்” என்று சொல்லிப் புன்னகை செய்தாள். அவளது வலது கை அவளணிந்திருந்த கண்ணாடியைச் சரி செய்தது. அவர்கள் இங்கு வந்த பத்து நிமிஷங்களில்  அவள் இவ்வாறு செய்வது ஏழாவது அல்லது எட்டாவது தடவையாக இருக்க வேண்டும் என்று வைதேகி நினைத்தாள். ஸ்டைலுக்காக ஆரம்பித்தது இப்போது பழக்கமாகிவிட்டது போலும். ஆனால் கண்ணாடி அணிந்து எடுப்பாகத்தான் இருக்கிறாள்.

வைதேகி எழுந்து அவளருகில் சென்று “உங்க கண்ணாடி பிரேம் ரொம்ப அழகாயிருக்கு” என்று சிரித்தாள்.

அவளும் புன்னகை செய்தபடி “புதுசா இப்பதான் ரெண்டு வாரம் முன்னே வந்தது” என்றாள்.

அந்த பிரேம்  அவளை அழகாகக் காட்டுகிறது என்று வைதேகி சந்தேகப்பட்டாள். அதை அவளிடம் சொல்லியும் விட்டாள்.

வரவேற்பாளினி தனது மேஜை டிராயரைத் திறந்து “ஒரு எக்ஸ்ட்ரா இருக்கு, பாருங்களேன்” என்றாள்.

“ரொம்ப விலை இருக்கும் போலிருக்கே? ஆயிரம்லாம்னா எனக்குக் கட்டுப்படியாகாது” என்றாள் வைதேகி.

“இந்த மேஜையைக் கெட்டியாப் பிடிச்சுக்குங்க. மயக்கம் போடாம இருக்க” என்று அவள் சிரித்தாள். “இது வெலை நானூறு ரூபாய்தான்.”

“ரியல்லி?” என்று அந்த பிரேமைக் கையில் எடுத்துப் பார்த்தாள்.

“கண்ணாடியோடு சேர்த்து எழுநூறு ஆகும்” என்றாள். “ரெண்டு வருஷம் வாரண்டி கொடுக்கறாங்க.”

அப்போது வைதேகியின் பார்வை வரவேற்பாளினியின் மேஜை மீது விழுந்தது. அதில் இருந்த புகைப்படத்தில் அவளும் டாக்டரும் நின்றார்கள். அவள் டாக்டரின் தோள் மீது கையைப் போட்டபடி சிரித்துக் கொண்டிருந்தாள்.

வைதேகியின் ஆச்சரியத்தைப் பார்த்து அவள் பார்வை புகைப்படத்தின் மீது விழுந்தது. “அவர் என்னுடைய மாமா. என் அம்மாவின் அண்ணா” என்றாள்.

அப்போது டாக்டர் உள்ளே நுழைந்தார். கூடவே ஓர் யுவதியும்.

அங்கிருந்தவர்களைப் பார்த்து இருவரும் புன்னகை செய்தபடி டாக்டரின் அறைக்குள் நுழைந்தார்கள்.

சில நிமிடங்களில் ராமநாதன் அழைக்கப்பட்டான். வைதேகியும் அவனுடன் சென்றாள்.

“இதற்கு முன்னால்  நான் உங்களைப் பாத்திருக்கிறேனா?” என்று ஆங்கிலத்தில் கேட்டார் டாக்டர்.

“இல்லை. நான் இங்கே வருவது  இதுதான் முதல் தடவை” என்றான் ராமநாதன். “மிஸ்டர் திம்மராயப்பாதான் அனுப்பினார்.”

“ஓ, திம்மனா?” என்ற அந்த ‘ன்’னில் நெருக்கத்தை அளித்து விட்டார். “இப்போது உங்கள் பவர் என்ன?”

“வலது கண் மைனஸ் நான்கு. இடது கண் மைனஸ் மூன்றறை. ஆனால்  என் பவர் கிராஜுவலாக வருடா வருடம் ஏறிக் கொண்டே போகிறது.

பெட்ரோல் விலை மாதிரி” என்றான்.

டாக்டருடன் இருந்த பெண் புன்னகை செய்தாள் .

“இவள் என் டாட்டர். லாவண்யா. இவளும் டாக்டர்தான்” என்றார் சீனியர். கணவனும் மனைவியும் அவளைப் பார்த்துப் புன்னகை செய்தார்கள்.

“அதனால்தான் திம்மராயப்பா காண்டாக்ட் லென்சிற்கு மாறி விடு என்று என்னை உங்களிடம் அனுப்பினார்” என்றான் ராமநாதன்.

“அதுவும் சரிதான். இப்போது நீங்கள் போட்டிருக்கும் கண்ணாடி நாளடைவில் உங்கள் மூக்கின் மேல் பகுதியிலிருந்து சிறிது சிறிதாகச் சரிந்து கொண்டே வரும். உங்கள் கண்ணுக்கும் கண்ணாடிக்கும் இருக்கும் இடைவெளியும் அதனால் அதிகமாகும். இது பார்வையில் உங்களுக்கே தெரியாமல் அழுத்தத்தைக் கொடுக்கும். வாங்கின அன்றைக்கு இருந்த பவர் மெதுவாக ஏற  ஆரம்பிக்கும்” என்றார்.

“நீங்கள் சொல்வது சரி டாக்டர்” என்றான் ராமநாதன்.

“காண்டாக்ட் லென்ஸில் இந்தக் குறை வராது. ஏனென்றால் அது உங்கள் கண்ணில் ஒட்டியபடி இருக்கும்.”

ராமநாதன் ஒப்புக் கொள்வது போலத் தலையசைத்தான்.

“இதைத் தவிர நீங்கள் பார்ப்பது எதுவும் மிக துல்லியமாக உங்களுக்குத் தெரியும்.  வேர்வை அல்லது மழை நீர் பட்டு பிரேம்கள் கெட்டுப் போவது மாதிரியான தொந்திரவுகள் இதில் கிடையாது. பிரேமுடன் இருக்கும் கண்ணாடியை அணியும் போது உங்கள் தோற்றத்தில் மாறுதல் காண முடியும். காண்டாக்ட் லென்ஸில் உங்கள் முகம் மாறாத  முகமே” என்று சிரித்தார். பிறகு “நீங்கள் ரிஸப்ஷனுக்குப் போய் கண்களில்  சொட்டு மருந்து போட்டுக் கொள்ளுங்கள் ” என்றார் .

அரை மணி கழித்து மறுபடியும் ராமநாதனும் வைதேகியும் டாக்டரின் அறைக்குள் சென்றார்கள்.  தான் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தி

லிருந்து கண்ணாடியையும் கண்ணையும் எடுத்து விட்டு டாக்டர் அவர்களைப் பார்த்தார். “டாக்டர் லாவண்யா வில் சி யூ” என்றார்.

உள்ளேயிருந்த அறையிலிருந்து லாவண்யா வந்தாள். கண் பரிசோ

தனை செய்யும் உபகரணத்தின் முன்பு ராமநாதனை உட்கார வைத்து உயரத்தைச் சரி செய்தாள். தான் அணிந்திருந்த கோட்டிலிருந்து கண்ணாடியை எடுத்து அணிந்து கொண்டாள். முதலில் வலது கண்ணுக்கும் பிறகு இடது கண்ணுக்கும் சிறிய கண்ணாடிகளைப் போட்டு சற்றுத் தொலைவில் சுவர் மீது பதிந்திருந்த போர்டில் மேலிருந்து கீழாக வரிசையில் வரும் எழுத்துக்களைப் படிக்கச் சொன்னாள். வலது கண்ணில் ஐந்தாவது வரிசை வரையிலும்  இடது கண்ணில் ஆறாவது வரிசை வரையிலும் எழுத்துக்கள் தெளிவாக இருந்தன போலத் தோன்றி அவற்றை அவன் படித்தான்.

அவர்கள் சீனியரிடம் வந்து அவர் எதிரில் உட்கார்ந்து கொண்டார்கள். அவர் ராமநாதனிடம் வலது கண்ணில் பவர் கொஞ்சம் ஏறியிருக்கிறது என்றும் இடது கண்ணில் மாற்றம் எதுவும் இல்லை என்றும் சொன்னார்.

அவர் ராமநாதனிடம் பல்வேறு கம்பனிகளின் தயாரிப்புகளைக் காட்டினார். “தினமும்  டிஸ்போஸ் செய்கின்ற லென்சுக்கும் மாதத்

திற்கு ஒரு தடவை வாங்கும் லென்சுக்கும் விலையில்  அப்படி ஒன்றும் பெரிய வித்தியாசம் இல்லை. குறைந்த விலை என்று முன்னூறுக்கும் கிடைக்கும். ஆனால் அதன் தரம்  அப்படிக்கப்படிதான் ” என்றார் டாக்டர்.

தொடர்ந்து ” என்னைக் கேட்டால் நீங்கள் மாதம்  ஒரு தடவை மாற்றுகிற மாதிரி வாங்குவதே பெட்டர்.  பாஷ் அண்ட் லாம்பே ஒரு செட் ஆயிரத்து இருநூறுக்கும் தருகிறார்கள். இரண்டாயிரத்துக்கும் தருகிறார்கள்.

நீங்கள் ஆயிரத்து இருநூறுக்கே போகலாம். ஆறு மாதத்துக்கு வாங்கி வைத்துக் கொள்வது சௌகரியமானது” என்றார்.

ராமநாதன் மனைவியைப் பார்த்தான். வைதேகி தோள்களைக் குலுக்கினாள்.

“திம்மா அனுப்பியதால் நான் டிஸ்கவுண்ட் தர வேண்டும். நான் உங்களுக்கு ஆறு மாதத்துக்கு ஆறாயிரத்துக்குத் தருகிறேன்.ஓக்கேவா?”

ராமநாதன் “தாங்க்ஸ் டாக்டர்” என்றான். அவர்கள் மறுநாள் காலை வந்து லென்ஸை வாங்கிக் கொள்ளலாம் என்றார் அவர்.

மறுநாள் டாக்டர் சொன்ன நேரத்துக்கு அவர்கள் சென்றார்கள். டாக்டர் லாவண்யா, ராமநாதனிடம் எப்படி லென்ஸ்களை அணிய வேண்டும் என்று செய்து காண்பித்தாள். அவற்றை அணிந்த பின்  ராமநாதன் “குபேரன் பிங்களாக்ஷனாக மாறிய போது  எப்படி ஃபீல் பண்ணியிருப்பான் என்று தெரிகிறது எனக்கு” என்று சிரித்தான்.

“அது என்ன கதை?” என்று டாக்டர் கேட்டாள்.

“குபேரன் சிவனிடம் போய்ப் பணத்தால் இந்த உலகத்தில் வாங்க முடியாததென எதுவுமில்லை என்று கர்வப்பட்டான். இதைக் கேட்டுக் கொண்டிருந்த சக்திக்குக் கோபம் வந்து அவனுடைய ஒரு கண்ணைப் பிடுங்கி விட்டாள். குபேரன் தன் தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்டுக் கொண்ட பின் தங்கத்தால் ஆன கண்ணைச் செய்து போட்டுக் கொண்டான். அதை வைத்து உலகைப் பார்த்த போது உலகமே மிகவும் பிரகாசமாகத் தெரிந்ததாம் அவனுக்கு” என்றான் ராமநாதன்.

“இப்போது இந்தக் கண்ணாடியைப் போட்டுக் கொண்ட பின்உங்களுக்கும்

பிரகாசமாகத் தெரிகிறதா?” என்று டாக்டர் லாவண்யா சிரித்தாள்.

“ஆமாம். உதாரணமாக இங்கே வருவதற்கு முன் பார்த்ததை விட இப்போது என் மனைவி மிக அழகாக இருப்பது எனக்குத் தெரிகிறது !” என்றான் ராமநாதன்.

“அடப்பாவி !” என்றாள் வைதேகி.

“நீங்கள் முதல் மாடிக்குப் போனால் அங்கே கடையும் பில் செக்ஷனும் இருக்கிறது” என்றாள் லாவண்யாவும் சிரித்தபடி. “இந்த பிரிஸ்க்ரிப்ஷன் காப்பியையும் அங்கு காண்பியுங்கள்.”

ராமநாதனும் வைதேகியும் அவளுக்கு நன்றி தெரிவித்து விட்டு முதல் மாடிக்குச் சென்றார்கள். பெரிய கண்ணாடிக் கடை.  ஜன்னல்கள், கூரை, ஷெல்ஃபுகள், கவுன்ட்டர்கள்  என்று தரையைத் தவிர மற்ற எல்லாவற்றையும் கண்ணாடியால் பின்னியிருந்தார்கள். கண்ணாடி அலமாரிகளில் மூக்குக் கண்ணாடிகள், பிரேம்கள், காண்டாக்ட் லென்ஸ் கூடுகள், லோஷன் அட்டைப் பெட்டிகள் ,சன் கிளாஸஸ் என்று அடுக்கி ஒப்பனை செய்து வைக்கப்பட்டிருந்த   கவுண்டர் மேஜைகளுக்குப் பின்புறம்  இரண்டு இளைஞர்கள் நின்றிருந்தார்கள்.

அவர்களில் ஒருவனிடம் ராமநாதன் தன்னிடமிருந்த சீட்டைக் கொடுத்தான். அவன் அதை வாங்கிக் கொண்டு மற்றவனிடம் “சிவா,

இன்னிக்கி ஸ்கூட்டர்லேந்து கீழே இறங்கறப்போ என் கண்ணாடி கீழே விழுந்து பிரேம் ஒடஞ்சு போச்சு.  இந்த பில்லை நீயே போட்டுக் கொடுத்திடறியா?” என்று கொடுத்தான். மற்றவன் அதைப் பார்த்து விட்டுக்  கம்ப்யூட்டரைத் தட்டினான். பின்பு ராமநாதனிடம் “ஆறாயிரம்  ரூபாய் சார் லென்சுக்கு. கேஷா கார்டா?” என்று கேட்டான்.

“டாக்டர் ஃபீஸ்?” என்று கேட்டான் ராமநாதன்.

“டாக்டர் சேர்க்க வேண்டாம் என்று சொல்லி விட்டார்” என்றான் சிவா.

ராமநாதன் திம்மராயப்பாவை நன்றியுடன் நினைத்தான்.

ராமநாதன் கார்டு தருவதாகச் சொன்னான். சிவா பில்லைப் பிரிண்ட் செய்து ராமநாதனிடம் கொடுத்து “கோடியில் கேஷ் கவுன்ட்டர் இருக்கிறது” என்றான்.

ராமநாதன் கேஷியர் பெண்மணியிடம் பில்லையும் கார்டையும் கொடுத்தான். அவள் கறுப்பு நிறக் கண்ணாடி அணிந்திருந்தாள். ‘அலுவலகத்துக்குள் கூலிங் கிளாஸா?’ என்று வைதேகி நினைத்தாள். ராமநாதனிடமிருந்து வாங்கியதும் கேஷியர் அவளது வலது பக்கமிருந்த விளக்கைப் போட்டாள். அதன் ஒளியில் அவள் அணிந்திருந்த கண்ணாடியின் கறுப்பு நிறம் மறைந்து சாதாரண வெள்ளை நிறம் ஒளிர்ந்தது. ‘அட டூ இன் ஒன் கண்ணாடியா?’ என்று வைதேகிக்கு ஆச்சரியம் உண்டாயிற்று. கேஷியர் பில்லில் இருந்த விபரங்களைச் சரி பார்த்து விட்டுக் கார்டை மெஷினில் நுழைத்தாள். அப்போது “மம்மி” என்று அழைத்தபடி சற்று முன் கண்ணாடி உடைந்தது என்று சொன்ன கவுன்ட்டர் இளைஞன் அங்கு வந்தான். “டாடி வர இன்னும் லேட்டாகுமா?” என்று கேட்டான்.

அந்தப் பெண்மணி “அவரே வந்து விட்டார் பார்” என்று அவனிடம் சொன்னாள். அந்த இளைஞனுடன் சேர்ந்து ராமநாதனும் வைதேகியும் திரும்பிப் பார்த்தார்கள். அங்கே சீனியர் டாக்டர் வாசலில் நின்று அவர்களைப் பார்த்துக்  கையசைத்தார். ராமநாதனும் பதிலுக்கு கையை அசைத்தான். அவர் திரும்பி மாடிப்படிகளில் இறங்கிச் சென்றார்.

ராமநாதனும் வைதேகியும் பணத்தைக் கட்டி விட்டு அவர்களிடம் தந்த பொருட்களை வாங்கிக் கொண்டு வெளியே வந்தார்கள். சாலையில் இரு பக்கமும் நின்றிருந்த பெரும் மரங்கள் வாகனங்கள் விட்டுச் செல்லும் அழுக்கையும், புகையையும் உள் வாங்கிக் கொண்டு தமது கோபத்தைக் காட்டுவது  போல அசையாமல் நின்றன. எதிர்ப்புறம் தென்பட்ட ஒரு ஒட்டலைப் பார்த்த ராமநாதன் “ஒரு காப்பி அடிச்சிட்டுப் போலாமா?” என்று கேட்டான். வைதேகி தலையை அசைத்ததும் இருவரும் ஓட்டலுக்குள் நுழைந்தார்கள். ஏஸி அறை குளிர்ச்சியாக இருந்தது.. இரண்டு காப்பிக்கு ஆர்டர் கொடுத்தார்கள்.

“ஒரு விஷயம் கவனிச்சேளா?” என்று வைதேகி கேட்டாள்.

“வேலை பாக்கற ஆறு பேர்லே அஞ்சு பேர் டாக்டர் குடும்பம். அதானே?”

வைதேகி சிரித்தபடி”அது மட்டுமில்லே.காண்டாக்ட் லென்ஸ் எப்படி பெஸ்ட்ன்னு உங்களுக்கு க்ளாஸ் எடுத்தாரே ஒழிய அவா  அஞ்சு பேரும் போட்டுண்டு இருந்தது மூக்குக் கண்ணாடிதான்” என்றாள்.

ராமநாதன்  அதைக் கேட்டுத் திகைத்தான்.  அவர்கள் ஐந்து பேரும் காண்டாக்ட் லென்ஸ் அணிந்தவர்களாய் இருந்திருந்தால்?

அவன் தன் மனைவியை நோக்கி ” டாக்டர் பெரிய எகனாமிஸ்ட்டும் கூட”  என்றான்.

 

One response to “டாக்டரும் எகனாமிஸ்ட்டும்  – ஸிந்துஜா

  1. டாக்டர் எகனாமிஸ்ட் எனும் இக்கதை மருத்துவர்கள் சேவை நோக்கை உதறி வியாபாரிகளாகிவட்டனர் என்ற துயரத்தை சிரிக்கவைத்து சிந்திக்கச் செய்கிறார்.இக்கதையை வாசிக்கிறவர்கள் மருத்துவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பார்கள் அல்லவா.சிந்துஜா அவர்களுக்கு வாழ்த்துகள்.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.