திரை ரசனை வேட்கை  – அதிகாரவல்லி  எஸ்  வி வேணுகோபாலன் 

Aravalli film poster.jpg
இசை வாழ்க்கை எனும் தொடர் ஒன்றில் பயணம் போய்க் கொண்டிருக்கையில்,சேலம் பாலம் நூல் நிலைய அன்பர் சஹஸ் எடுத்துக் கொடுத்த பாடல் ஒன்று, உள்ளபடியே ஆஸ்கர் விருது பெற்ற ஆங்கில மொழிப் படத்தின் அற்புதமான பாடல். அந்தப் பாடலை அப்படியே இங்கு பி பானுமதி பாடியதையும் கேட்டு வியப்புற்ற  நேரத்தில், மற்றுமோர் அறியாத தகவல் (அதாவது நான் அறியாதது) கிடைக்க, அதைத் தேடிப்போனபோது, ஏற்கெனவே கேள்விப்பட்டிருந்த பெயருள்ள படம் என்றாலும், அதை இந்த ஊரடங்கு காலத்தில் வீடடங்கி இருந்த ஒரு நேரத்தில் பார்க்கப் பார்க்க வியப்பு விரிந்து கொண்டே போனது.

என் இளமைக் காலத்தில் (எவ்வளவு வசதியாக இருக்கிறது, இப்போது முதுமைக் காலம் என்பதைக் கவித்துவமாக மறைத்துக் கொள்வது), யாராவது துணிச்சலான பெண்மணி, துடுக்கான மூதாட்டி, நெத்தியடியாகப் பதில் சொல்லிவிட்டுப் போகும் சிறுமியைப் பார்த்தால் போதும், அய்யோ அவளா, ஆரவல்லி சூரவல்லியாச்சே என்று சொல்வார்கள் கதி கலங்கிப் போகும் வீட்டு ஆண் மக்கள். அப்போதே, விளக்கமாகக் கேட்டுக் கொள்ளாமல் போயிற்று. இப்போது பார்த்தாயிற்று.

கதைக்குள் போகுமுன், முக்கியமான இரண்டு செய்திகளை இங்கே சொல்லியாக வேண்டும். ஒன்று, பெண்கள் ஆட்சி பரிபாலனம் செய்வதைக் குறித்த திரைக்கதை, அதனால்,  பாதிப்புறும் ஆண்கள் எங்குமே பெண்மையை இழிவு செய்வதாக இல்லாமல் வசனங்கள் அமைக்கப்பட்டிருப்பது. மற்றொன்று, இந்தப் படத்தைப் பார்த்தபின், அ. மாதவையா அவர்களது திரௌபதி கனவு  சிறுகதை குறித்த கட்டுரை, அண்மையில் தி இந்து தமிழ் நாளிதழில் பிருந்தா அவர்கள் எழுதி இருப்பதை வாசிக்க நேர்ந்தது.  ( பெண் எழுத்து: மாதவையாவுக்கு உத்வேகம் அளித்த கதை? | sultana dream – hindutamil.in ). இரண்டிற்கும் அடிப்படையில் ஒற்றுமை ஒன்று உண்டு, ஆண்களால் ஒடுக்கப்படும் பெண் மனத்தின் எதிர்வினை என்பதில். ஆனால், மாதவையா கதை, இன்னும் ஆழமாக இந்தக் கருத்தோட்டத்தை ஓர் அருமையான புனைவாக மாற்றி இருந்தது.

சகோதரிகள் ஆரவல்லி, சூரவல்லி இருவரும் ஆட்சி புரியும் சிற்றரசில், பொறுப்புகள் அனைத்தும் நிர்வகிப்பவர்கள் பெண்கள், வீட்டிலிருந்து, நாட்டின் பாதுகாவல் வரை, பணியாட்களாக ஆண்கள் ! ஆரவல்லியின் அரசாட்சியில் மன்னிப்பு என்பதற்கு இடம் கிடையாது. அவளது அகன்ற புருவங்கள், விரிந்த விழிகள், பரந்த நெற்றியில் எப்போதும் பெண்மையின் அதிகாரத்தின் கம்பீரமும், ஆண்களுக்குப் பாடம் கற்பிக்கும் சமரசமற்ற ஆவேசமும் சுடர் விட்டுக் கொண்டிருக்கும்.   விற் போர், வாட் போர், மல்யுத்த பயிற்சிகளில் பெண்கள் அசத்திக் கொண்டிருக்கும் காட்சியும், தர்பாரின் தலைமை வீராங்கனைகள், ஆங்காங்கு வெவ்வேறு பணிகளைச் செய்து கொண்டிருக்கும் ஆண்களை அரட்டியுருட்டி மேற்பார்வை பார்த்துக் கொண்டிருப்பதும், தன்னிடம் வரும் வழக்கில் ஆணுக்குப் பாவம் பார்க்கும் பெண்ணுக்கு சிறைத் தண்டனை தீர்ப்புமாக திரைப்படத்தின் தொடக்கமே அசத்தலாக இருக்கும்.

மகாபாரதக் கதையின் கிளைக் கதையாக, தருமர், வீமன் எல்லோரும் துணை பாத்திரங்களாக வரும் படத்தில், சகோதரிகளை அடக்குகிறேன் என்று சவால் விட்டுப் போகும் வீமன், இவர்கள் வைக்கும் போட்டியில் தோற்று சிறைப்பட்டு நிற்கிறான். அங்கிருந்து தப்பியோடும் அவனைக் குறித்து புகார் செய்ய, தருமரிடமே துணிந்து போய்ப் புகார் செய்கிறார் சூரவல்லி.  வீமன் மீண்டும் சிறைக்குத் திரும்புகிறான். அங்கே தான் கதையில் ஒரு மாற்றம்.

பாண்டவர்களது உறவுக்கார வாலிபன் அல்லிமுத்து வீமனை சிறை மீட்கப்  புறப்படுகிறான். ஆரவல்லி  வைக்கும் போட்டியில் வெற்றி பெறுவதோடு, அவள் மகள் அலங்காரவல்லியின் காதலையும் பெறுகிறான், மணக்கிறான். மடிகிறான். பிழைத்தெழுகிறான்.  ஆரவல்லி தான் அவனது உயிருக்கு உலை வைத்தது என்று கண்டறியப்பட்டு என்ன தண்டனை, என்ன முடிவு என்பதெல்லாம் கறுப்புத் திரையில் காண்க! (யூ டியூப் சானலை எப்படி சொல்வது!)

 ஆரவல்லி தர்பாரில் அவளது உக்கிரமான வசனங்கள், ராணி களை (ராஜ களை நிறைய பார்த்துக் களைத்ததற்கு இது எத்தனை பரவச மாற்றம்), அதிகார தோரணை, பெற்ற பெண்ணே ஆனாலும் ஆணிடம் மயங்கியதற்கு சமரசமற்ற அணுகுமுறை எல்லாம் அமர்க்களம். அவையில் சகோதரிகள் நடப்பதும், அடுத்தடுத்து நடப்பதும் எல்லாமே விவரிப்புக்கு அப்பாற்பட்டது. ஜி வரலட்சுமி, இந்த ஒரு திரைக்கதைக்காகவே, ஆரவல்லி பாத்திரத்திற்காகவே பிறந்து நடிகையாக வந்திருப்பாரோ என்று தோன்றிற்று.

வீட்டில் பழைய காலத்துப் புகைப்படம் ஒன்றை எடுத்து வைத்துக் கொண்டு, இது என் நான்காவது வகுப்பு குரூப் புகைப்படம்.  நான் எங்கே இருக்கிறேன் சொல் என்று அறுபத்து ஐந்து வயது ஆசாமி கேட்டால் எப்படி இருக்குமோ, அந்த அளவுக்கு புதிராக இராது, என்றாலும், வி கோபாலகிருஷ்ணன், காகா ராதாகிருஷ்ணன், ஏ கருணாநிதி, டி பி முத்துலட்சுமி …. எங்கே கண்டுபிடி என்று படத்தில் தேடிப் பார்க்க ஆனந்தமாகத் தான் இருக்கும்.

சிறப்பான இயக்கம், கிருஷ்ணா ராவ். படத்தின் வசனத்தில் (வி என் சம்மந்தம்) எதுகையும், மோனையும், வேகமும் கலக்கலாக இருக்கும். அரண்மனை வேலைக்குப் போகும் பெண்மணி, வீட்டு வேலைகளைக் கவனித்துக் கொள்ளும் கணவனிடம் பேசும் காட்சிகள் (ஏ புருஷா புருஷா, இதோ வந்துட்டேனுங்க, ஏன்யா இன்னும் சமையல் ஆகல, கொதிக்குது, ஓ நான் கேள்வி கேட்டா கொதிக்குதோ ஏதேது என்னை எதிர்த்துப் பேசுறியா, பாத்தீங்களா நான் என்ன சொன்னாலும் தப்பாவே புரிஞ்சுக்கிட்டு திட்டறீங்க, அடிக்க வறீங்க …) நகைச்சுவையாகவோ, எதிர்மறையாகவோ தோன்றினால், பாலினத்தை மாற்றிப் பார்த்து, வீடுகளில் என்ன நிலைமை என்று சிந்தித்துப் பாருங்கள், அப்படித் தான் நடைமுறை இன்னும் கூட சமூகத்தில் நிலவுகிறது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டி இருக்கும்.

படத்தின்  காட்சி அமைப்புகள், பாடல்கள் படமாக்கப்பட்டிருப்பது எல்லாமே அசர வைக்கும். மாடர்ன் தியேட்டர்ஸ் என்றால் சும்மாவா…

படத்தின் உயிரான அம்சங்கள் எனில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது, பாடல்கள்!  மருதகாசி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், வில்லுபுத்தன் மூவர் பெயர் ஓடுகிறது டைட்டிலில். அன்றைய புகழ் பெற்ற பாடகர்கள் எல்லோரும் பாடி இருக்கின்றனர், சி எஸ் ஜெயராமன், டி எம் எஸ், சீர்காழி, ஏ எம் ராஜா, ஜிக்கி… 

இசை ஜி ராமநாதன் அவர்கள்!

‘சின்ன குட்டி நாத்தனா, சில்லறையை மாத்துனா…குன்னக்குடி போற வண்டியில் குடும்பம் பூரா ஏத்துனா’  என்ற மிகவும் நகைச்சுவை ததும்பும் பாடல், பட்டுக்கோட்டையார் எழுதியது, திருச்சி லோகநாதன் பெயரில்தான் அறியப்படுகிறது, ஆனால், டைட்டிலில் அவர் பெயர் பார்த்த நினைவில்லை.. ஏ. கருணாநிதி நடிப்பில் அசத்தல் பாடல் அது. ‘கும்மாளம் போட்டதெல்லாம் அடங்கியதா’ என்று ஆண்களை, அரசவை வீராங்கனைகள் நையாண்டி செய்வது  அருமையாக இருக்கும்.   ஜிக்கியின் ‘துடிக்கும் யவ்வனம்’ (‘கொடுமை செய்யும் ஆண்கள் கையில் பதுமை ஆவதா’…என்ன வரிகள்)  உள்பட அமர்க்களமான இசையில் அசத்தல் பாடல்கள் நிறைய உண்டு, படத்தில்.

இப்போது, தொடங்கிய பிரச்சனைக்கு வருவோம், ஆரவல்லியைத் தேட வைத்த ஆங்கிலப் பாடல், கே செறா செறா  (QUE SERA SERA ), டோரிஸ் டே எனும் பாடகி அருமையாகப் பாடியது (விரிவான அலசல், இசை வாழ்க்கை கட்டுரையில் உண்டு. இசை வாழ்க்கை 11 : உயிருக்கு இசை காவல்  – எஸ் வி வேணுகோபாலன் – Bookday ).

1956ல் வந்த இந்தப் பாடலை, 1957 தயாரிப்பான ஆரவல்லி படத்தில் அதே மெட்டில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் தமிழில் அருமையாகக் கொண்டு வந்த வியப்புதான் இந்தப் படத்தைத் தேட வைத்தது.  ‘சின்னப் பெண்ணான போதிலே’ என்ற பல்லவியும், முழு பாடலும் ஜிக்கி சிறப்பாக இழைத்திருப்பார், நிறைவில் ஏ எம் ராஜா வந்து கலக்கும் இடமும் அமுதமாகப் பொழியும்.  (215) Chinna Pennana Pothile A M Rajah Jikki Aaravalli Tamil Old Song – YouTube

கால காலமான ஒடுக்குமுறைக்கு எதிராகத் தங்களுக்கு அதிகாரம் வந்தால் ஆண்களைப் பெண்கள் எப்படி நடத்துவார்கள் என்கிற கற்பனைக் கதை இது. ஆட்சிக்கு வந்த பெண்மணிகள், குறிப்பாக, மண்டியிட வைத்தவர்கள், யாரும் இந்தப் படத்தைப் பார்த்திருப்பார்களா, தெரியாது, சாத்தியங்கள் நிறைய உண்டு.

(ரசனை பரவும்…) 

7 responses to “திரை ரசனை வேட்கை  – அதிகாரவல்லி  எஸ்  வி வேணுகோபாலன் 

 1. கால காலமான ஒடுக்குமுறைக்கு எதிராகத் தங்களுக்கு அதிகாரம் வந்தால் ஆண்களைப் பெண்கள் எப்படி நடத்துவார்கள் என்கிற கற்பனைக் கதை இது.

  கற்பனைக் கதையே இப்படி இருக்கிறேதே, நிஜத்தில் நடந்தால்…?

  Like

 2. மிக அருமையான அலசல். ஒரு பழைய படத்திற்கு. இவ்வளவு விளக்கமாக உணர்வுடன் கலந்து எழுதா svv யார்தான் முடியும்

  Like

 3. ஆரவல்லி திரைப்பட விமர்சனம். அருமை. ‘சின்ன பெண்ணான போதிலே’
  பாட்டு இனிமையிலும் இனிமை.
  புதுப்பட விமர்சனங்களைக் காட்டிலும் உங்களின் பழைய படங்கள் விமர்சனம் மகிழ்வைத் தருகிறது. அருமை! தோழர் வேணுகோபால்!

  Like

 4. அருமை ‌‌. திரைப்படம் பார்க்க தூண்டுகிறது. இப்படியே போனால் மறு வாசிப்பு போல் மறு திரைப்பட விமர்சனம் ஜோராக இருக்கும். தாங்கள் தான் இப்படியான நடையை மாற்றி அமைக்க முடியும்.

  Like

 5. ஆரவல்லி திரைப்படத்தை மீண்டும் பார்க்கத் தூண்டுவகையில் சுவைஞர் எஸ்.வி.வேணுகோபாலன் , தான் ரசித்தவாறே நமக்கு தன் உணர்வுகளைப் பரிமாறுகிறார்.வாழ்த்துகள்.

  Like

 6. அனைவரும் அறியாத ஆரவல்லி பற்றிய அரிய பதிவு
  பாராட்டுகள்

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.