முன்கதைச்சுருக்கம்: மகத நாட்டரசன் பிம்பிசாரன் புத்தரின் உபதேசங்களில் ஈடுபட்டவன்; தனது அரண்மனைத் தோட்டத்து அசோகமரத்தடியில் புத்தர்பிரான் அமர்ந்து உபதேசம் செய்த இடத்தில் ஒரு வழிபாட்டு மேடையை அமைத்திருக்கிறான்.
இளவரசன் அஜாதசத்ரு விரும்பியவண்ணம் அவனுக்கு அரசைக் கொடுத்துவிட்டு நகரிலிருந்து சிறிது தொலைவில் வசித்துவந்தான் பிம்பிசாரன். அரசி லோகேஸ்வரி இதனை விரும்பாததால் மிகவும் மனக்கசப்பிற்குள்ளாகி இருந்தாள். அவளுடைய மகன் சித்ராவும் பிட்சுவாகிவிட்டதில் மனம்நொந்து போயிருக்கிறாள்.
ஸ்ரீமதி எனும் நாட்டியமங்கையிடம் உபாலி எனும் பிட்சு யாசகம் வேண்டி வருகிறார். எதைக் கொடுப்பது எனத் திகைப்பவளிடம் உரிய சமயத்தில்கடவுளே அதனைப் பெற்றுக்கொள்வார் எனக் கூறுகிறார். மாலதி என்றொரு கிராமத்துப்பெண் வழிபாட்டுவேளையில் பணிபுரிய ஸ்ரீமதியிடம் வந்து சேர்கிறாள். அவள் தன் கதையை ஸ்ரீமதியிடம் விளக்கிக்கொண்டிருக்கும்போது இளவரசிகள் வந்து இருவரையும் கிண்டல்செய்து துன்புறுத்துகின்றனர்.
அரசி லோகேஸ்வரி அப்போது உள்ளே வருகிறாள்.
இனித் தொடர்ந்து படிக்கவும்:
ரசி: என்னால் இனியும் இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாது! வீதியிலிருந்து வரும் அந்த இரைச்சல் எதிரொலிப்பதனைக் கேட்டாயா?- எங்கள் குருவான புத்தபிரானுக்கு வணக்கங்கள்! ஓ! அது என் உள்ளத்தை நடுநடுங்க வைக்கிறது.
(அவள் காதுகளைப் பொத்திக் கொள்கிறாள்). அது இன்று முடிவுற வேண்டும், இங்கேயே, இப்போதே!
மாலதி: மகாராணி, அமைதியாக இருங்கள்!
அரசி: எனது மனவேதனையை நான் எவ்வாறு தணித்துக் கொள்வேன்? ஒரு வாசகம் (சொல்) அதனை ஆற்றுமா? உயர்வான அமைதிக்கு எங்கள் வணக்கங்கள், உயர்வான அமைதி?- இந்த மந்திரத்தினால் எனக்கு இப்போது என்ன பிரயோசனம்? இல்லை. சினமிக்க மின்னலை விளைவிக்கும் இறைவிக்கு வணக்கங்கள்! அழிப்பவளும், கொடியவளுமான அப்பெண்மணிக்கு வணக்கங்கள்! குருதியும் நெருப்பும் மட்டுமே அமைதியைக் கொணர இயலும் – இல்லாவிடில் ஒரு தாயின் கரங்களிலிருந்து மகனை வலியப் பிடுங்க இயலுமா? புகழ்வாய்ந்த ஒரு அரசன் தன் அரியாசனத்திலிருந்து காய்ந்த இலைச்சருகு போல உதிர்ந்து விழ இயலுமா?
(மற்ற இளவரசிகளிடம்) என் குழந்தைகளே! நீங்கள் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?
ரத்னாவளி: (சிரித்தவாறு) நாங்கள் மோட்சத்துக்காகக் காத்துக் கொண்டிருக்கிறோம். எங்களுடைய பாவப்பட்ட உள்ளங்களைப் புனிதப்படுத்திக்கொண்டு சிறிதுசிறிதாக எங்கள் குருவான ஸ்ரீமதி காட்டும் பாதையைப் பின்பற்ற முயல்கிறோம்.
வாசவி: ஓ, பொறுப்பில்லாமல் பேசாதே!
அரசி: ஒரு நாட்டிய மங்கை உனது குருவா? ஆனால் உண்மையில் அப்படித்தான் இந்த மதம் நம்மை வழிநடத்துகிறது. நாதியற்றவர்களே நம்மை முக்திக்கு வழிகாட்டுபவர்களாக அமைவார்கள். ஆக, ஸ்ரீமதி துறவியாக வடிவெடுத்துள்ளாளா? புத்தர்பெருமான் நமது தோட்டத்திற்கு வந்திருந்தபோது, அனைவரும் அவரைத் தரிசிக்க முந்தினார்கள்; நான் இந்தப்பெண்மீது பரிதாபப்பட்டு அவளையும் வருமாறு அழைத்தேன். ஆனால் துரதிர்ஷ்டசாலியாகிய இந்த ஜன்மம் மறுத்துவிட்டது. இப்பொழுது என்னவென்றால், பிட்சு உபாலி பிட்சைக்கு வருபோதெல்லாம் அரசர்களின் வம்சத்தில் வந்த இளவரசிகளைப் பார்ப்பதனைத் தவிர்த்துவிட்டு, இந்தப் பெண்ணின் கைகளிலிருந்தே பொருள்களைப் பெற்றுச் செல்கிறார் எனக் கேள்விப்படுகிறேன். ஆ! முட்டாள் பெண்களே! இன்னுமா நீங்கள் இந்த மதத்தை ஏற்றுக்கொள்ளத் தயாரக இருக்கிறீர்கள்? அது புழுதியில் கிடப்பவர்களையும் வல்லமை படைத்தவர்களின் ஆசனத்துடன் சரிசமமாக இருத்துகிறது. அரசர்கள் செல்ல விரும்பாத இடங்களுக்குள் பிச்சையெடுப்பவர்கள் புகுந்து விடுகிறார்கள். பைத்தியக்கார தற்கொலைவாதிகளே! இதுவே உங்களுக்கு உண்மையான மதமாக இருக்கிறது.
(ஸ்ரீமதியிடம் கூறுகிறாள்) நாட்டியப்பெண்ணே! உபாலி உனக்கு முதலில் தீட்சைகொடுத்தபோது எந்தப் புனித நூலை நீ அவரிடமிருந்து பெற்றாய்? இப்போது உனக்கு அதனைப் பாட தைரியமிருக்கிறதா? உனது புனிதமற்ற நாக்கு ஊமையாகி விடும்.
ஸ்ரீமதி: (பாடுகிறாள்)
புத்தருக்கு வணக்கங்கள், அவரே கற்பிப்பவர்,
தர்மத்திற்கு வணக்கங்கள், அதுவே தலைகாக்கும்,
சங்கத்திற்கு வணக்கங்கள், அதுவே அனைத்திலும் உயர்வானது.
அரசி: (உடன் சேர்ந்து கொள்கிறாள்)
புத்தருக்கு வணக்கங்கள், அவரே கற்பிப்பவர்,- இல்லை இல்லை, போதும்!
ஸ்ரீமதி: (தனது பாடலைத் தொடருகிறாள்)
ஓ! கடவுளே! நண்பர்களேயற்ற என்மீது நீரே தாங்களே கருணை காட்டுவீர்கள்
அரசி: (தனது மார்பிலடித்துக்கொண்டு) ஓ நண்பர்களேயற்ற நான், நண்பர்களேயற்ற நான்! ஸ்ரீமதி, அந்த வரிகளை எனக்காகப் பாடு:
ஓ மிகவும் கருணை நிறைந்த கடவுளே!
ஸ்ரீமதி: ஓ மிகவும் கருணை நிறைந்த கடவுளே!—
அரசி: போதும்! மேலே வேண்டாம்! மின்னலை விளைவிக்கும் சினமிக்க இறைவிக்கு வணக்கங்கள்!
(ஒரு சேவகன் நுழைகிறான்)
சேவகன்: (அரசிக்கு மட்டும் கேட்கும்படி) மகாராணி, இளவரசர் சித்ரா தன் தாயைக் காண வந்துள்ளார்.
அரசி: இந்த மதம் (புத்தமதம், சமயம்) பொய்யானது என்று எவரால் கூற இயலும்? புனிதமான புத்தகத்தின் சில பகுதிகள் பாடப்பட்ட உடனேயே, கெடுதல்கள் அனைத்தும் மறைந்து விடுகின்றன! ஓ! நம்பிக்கையில் பலமற்றவர்களே! ஒருகாலத்தில் நீங்கள் எனது துயரத்தைக்கண்டு நகைத்தீர்கள்; ஆனால் இப்போது மிகவும் தயாளனான எனது கடவுள் வழங்கும் கருணையின் பலத்தைக் காணுங்கள் – அது கல்லையும் கரையச் செய்யும்! நான் சொல்வதைக் கேளுங்கள்: எனது மகனை மீட்டெடுப்பேன் என்றும், எனது அரியாசனத்தைத் திரும்ப அடைவேன் என்றும் நான் மறுபடியும் கூறுகிறேன். நமது கடவுளைப் புழுதியில் கிடத்தி அவமதித்தவர்களின் வீண்பெருமையை நான் திரும்பவும் பார்க்கத்தான் போகிறேன்.
எனது அடைக்கலம் புத்தரிடமே!
எனது அடைக்கலம் தர்மத்தினிடமே!
எனது அடைக்கலம் சங்கத்தினிடமே!
அவள் சேவகனுடன் செல்கிறாள்.
ரத்னாவளி: காற்று இப்போது எங்கிருந்து வீசுகிறது, மல்லிகா?
மல்லிகா: கண்மூடித்தனமான காற்று இன்று ஆகாயமெங்கும் நிறைந்துள்ளது. அவை எங்கிருந்து வருகின்றன, எங்கு செல்கின்றன, அல்லது எவ்வாறு மனிதர்களை அலைக்கழிக்கின்றன எனக் கூறவும் முடியுமா என்ன?
ரத்னாவளி: இருந்தாலும் இளவரசன் சித்ரா திரும்ப வந்துவிட்டான்!
மல்லிகா: இது எவ்வாறு முடிவுறுகின்றதெனப் பொறுத்திருந்து பார்.
மாலதி: (ஸ்ரீமதியிடம்) சகோதரி, நமது கருணைமிகுந்த கடவுள் இந்தத் தோட்டத்திற்கு வரும்போது, நீங்கள் சென்று அவரைத் தரிசிக்க முடியாதென்பது உண்மையா?
ஸ்ரீமதி: ஆம்; முற்றிலும் உண்மையே! அவர் முன்பு ஒருவர் நிற்பதென்பது, அவருடைய சந்நிதிக்கு ஒரு காணிக்கை அளிப்பதற்காகவே. நான் புனிதமற்றவள், எனது சமர்ப்பணம் தயாராக இல்லை!
மாலதி: ஐயோ! எவ்வளவு துயரமானது இது, அன்பான சகோதரி!
ஸ்ரீமதி: அவரைக் கண்களால் காண்பதென்பது அவரை உண்மையாக தரிசிப்பதற்கல்ல; அவரைக் காதால் கேட்பதும் அவரைப் புரிந்து கொள்வதற்கல்ல.
ரத்னாவளி: ஓஹோ! நல்ல அடி நமக்கு! இந்த நாட்டிய மங்கையின் வினயம் எனும் பலமற்ற திரை, தண்டனையிலிருந்து வேண்டும் மன்னிப்பின் கடைசி மூச்சில் கவிழ்ந்துவிட்டதே!
ஸ்ரீமதி: ஒரு சம்பிரதாயமாக இருந்த எனது வினயத்தின் நாட்கள் முடிவடைந்து விட்டன. உங்களைப் புகழ்ந்து பொய்களைக் கூற நான் மறுக்கிறேன். உங்கள் கண்கள் மட்டுமே கண்டிருக்கும் அவரை (கடவுளை, புத்தரை) நீங்கள் உண்மையாகக் கண்டதில்லை (அறிந்து கொண்டதில்லை) என நான் பகிரங்கமாகக் கூறுகிறேன்.
ரத்னாவளி: வாசவி! பத்ரா! ஒரு நாட்டிய மங்கையின் அதிகப்பிரசங்கித்தனத்தை நீங்கள் எவ்வாறு பொறுத்துக் கொள்கிறீர்கள்?
வாசவி: வெளியில் காணும் உண்மையின் ஒளியை நாம் பொறுத்துக்கொள்ள முடியாவிடின், உள்ளுக்குள் இருக்கும் பொய்ம்மையைத் தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும்.
ஸ்ரீமதி, எனது உள்ளத்தில் தைத்துள்ள முட்கள் தங்களது கூர்மையை இழக்கும்படி, அந்த வரிகளைத் திரும்ப இசை (பாடு).
ஸ்ரீமதி: ஆசானாகிய புத்தபிரானுக்கு, வணக்கங்கள்,
காத்தளிக்கும் தர்மத்திற்கு, வணக்கங்கள்,
அனைத்திலும் உயர்வான சங்கத்திற்கு, வணக்கங்கள்!
நந்தா: நமது கடவுளைக்காண நாம் வெளியே சென்றோம். ஆனால் அவர் ஸ்ரீமதிக்கு அவளுடைய உள்ளத்தின் ஆழத்தில் காட்சி கொடுத்துவிட்டார்.
ரத்னாவளி: நாட்டியமங்கையே, நீ உனது அடக்கத்தை இழந்துவிட்டாயா? இதனை மறுத்துக் கூற மாட்டாயா?
ஸ்ரீமதி: எதற்காக, இளவரசி? அவர் கருணையோடு எனது உள்ளத்தில் அடியெடுத்துவைக்க எண்ணினார் எனில், அந்தப் புகழ் அவருக்கே, எனதல்லவே.
வாசவி: போதும். சொற்கள் மேலும் சொற்களைப் பிறப்பிக்கின்றன. நீ பாடு, ஸ்ரீமதி.
(காட்சிக்குப் பின்னிருந்து ஒரு குரல் கேட்கின்றது)
மூன்று ரத்தினங்களுக்கு வணக்கங்கள்!
ஞானம் பெற்றவருக்கு வணக்கங்கள்!
உயர்வான வாழ்க்கைக்கு, வணக்கங்கள்!
பேரருள் நிறைந்தவருக்கு, வணக்கங்கள்!
பிட்சுணி உத்பலா தோன்றுகிறாள்.
இளவரசிகள்: (வணங்கியவாறு) வணக்கத்துக்குரிய பெண்மணியே, தங்களை வணங்குகிறோம்.
பிட்சுணி: ஸ்ரீமதி!
ஸ்ரீமதி: தங்கள் உத்தரவு, பெண்மணியே!
பிட்சுணி: இன்று நமது தெய்வத்தின் பிறந்தநாள்; வசந்தகாலத்துப் பௌர்ணமி இரவு; இன்று மாலை அசோகமரத்தடியில் உள்ள அவருடைய பூஜாபீடத்தில் காணிக்கைகளை வைப்பது ஸ்ரீமதியின் கடமை.
ரத்னாவளி: என் காதில் சரியாகத்தான் கேட்டேனா? எந்த ஸ்ரீமதி என்று கூறுகிறீர்கள்?
பிட்சுணி: இதோ, இங்குள்ள இந்த ஸ்ரீமதி.
ரத்னாவளி: அரண்மனை நாட்டிய மங்கையா? (தொடரும்)
———————-&&&———————
மீனாட்சியின் மொழிபெயர்ப்பு தாகூரின் மூல நாடகத்தையே படிப்பது போன்ற உணர்வைத் தருகிறது… இதுபோன்ற கட்டுரைகள் தொடர்ந்து வந்தால் மற்ற மொழியிலுள்ள சிறந்த படைப்புகளை படிக்க சிறந்த வாய்ப்பாகவும் அமையும்..
LikeLike