அண்மையில் தெலுங்கிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட ‘உள் முகம்’ என்ற நாவலை படிக்கும் வாய்ப்பு கிட்டியது. இது ஒரு மணிமேகலைப் பிரசுரத்தின் வெளியீடு. சாயி பிரம்மானந்தம் கொர்தி என்பவர் தெலுங்கில் எழுதியதை, நமக்கெல்லாம் பரிச்சயமான மொழிபெயர்ப்பாளரும், 2015 ம் ஆண்டு சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருதைப் பெற்றவருமான திருமதி கௌரி கிருபானந்தன் அவர்கள் இந்நூலை மொழி பெயர்த்துள்ளார். இவர் கடந்த இருபது ஆண்டுகளில் அறுபதுக்கும் மேற்பட்ட தெலுங்கு நாவல்களை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.
இந்த ‘உள் முகம்’ என்ற மூல நூலின் ஆசிரியரைப் பற்றி : அமெரிக்காவிற்குப் புலம் பெயர்ந்த மென்பொருள் பொறியாளர். தந்தை பத்திரிக்கை நிருபராக இருந்த காரணத்தால், சிறு வயது முதலே இவருக்கு படிப்பிலும், எழுத்திலும் ஆர்வம் அதிகம். இசையிலும் ஈடுபாடு அதிகம். இது இந்த ஆசிரியரின் முதல் சமூக நாவல்.
இந்தக் கதை 25 வருடங்களுக்கு முன் நடந்த சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்டது. மேற்படிப்பிற்காக அமெரிக்கா சென்று அங்கேயே குடியேறிவிட்ட ஒருவனின் கதை. அவனுடைய கஷ்டங்களும், வேதனைகளும், உணர்ச்சிகளும் உள்ளூர எரிமலையாகக் கொதித்துக்கொண்டிருப்பதை புதினம் முழுவதும் வாசகர்களால் உணர முடியும். இப்புத்தகத்தின் முன்னுரையில் ஆசிரியர் சாயி சொல்லியிருக்கிறார் “ புலம் பெயர்ந்த வாழ்க்கை பூப்படுக்கை ஒன்றுமில்லை, சிலவற்றைப் பெறுவார்கள், சிலவற்றை இழப்பார்கள்” என்று.kandupidi
1986 லிருந்து 2005 வரையிலான நிகழ்வுகளை கதாநாயகன் விஜய் கூறுவது போல் ஆரம்பிக்கிறார். கதாநாயகனுக்கு கார் விபத்து ஏற்பட்டு சாவின் விளிம்பில் இருக்கும்போது அவன் மனசாட்சியே அவனுடன் பேசுவது போல், கதையை நகர்த்துகிறார்.
ஆந்திராவின் ஒரு சிறிய கிராமத்தை சேர்ந்த விஜய் எப்படி அமெரிக்கா வரை சென்று ஒரு பெரிய நிறுவனத்தை நிறுவி அதற்கு சி.ஈ.ஓ. ஆகப் பொறுப்பேற்றது எப்படி என்றெல்லாம் விறுவிறுவென்று சொல்லிக் கொண்டே போகிறார். அவன் எப்படி அமெரிக்க கலாச்சாரத்திற்கு தன்னை மாற்றிக் கொள்கிறான் என்பதை படம் பிடித்துக் காட்டுகிறார். தன்னுடைய வேலையில் முன்னேறுவதற்காக என்னவெல்லாம் செய்கிறான் என்பதை வர்ணிக்கும்போது படிக்கும் நாமும் அவனுடனேயே சேர்ந்து பயணிக்கிறோம்.
கதை முழுவதும் விஜய்யை நல்லவனாகவே காட்டி வரும் ஆசிரியர், கடைசியில் அவனுடைய மனசாட்சி அவனுடைய உண்மையான முகத்தை கிழித்தெறிவதைப் படிக்கும்போது நாம் திடுக்கிடுகிறோம்.
இதற்கு மாறாக அவனுடைய உற்ற தோழன் ஹரி, அவனுடைய அறையில் சேர்ந்து இருப்பவன், இந்தியாவை வெறுப்பது, அமெரிக்கக் குடியுரிமை பெறுவதற்காக அமெரிக்கப் பெண்களை காதலிப்பது, கைவிடுவது என்றெல்லாம் செய்கிறான்.
நம்மையும் அறியாமல் நாம் ஹரியை வெறுக்கத் துவங்குவதும், விஜய்யை நேசிக்கத் தொடங்குவதும் தவிர்க்க முடியாதவை.
இருபத்து ஐந்து வருடங்களுக்கு முன்னால் இந்தியர்கள் எல்லோரும் எப்படி கணினியின் வசப்பட்டு அமெரிக்கா சென்றார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. பொறியியல் படித்த அனைத்து இளைஞர்களுமே ஒரு கால கட்டத்தில் மென்பொறியாளர் வேலைக்கு அமெரிக்கா செல்வது மிகவும் அதிகமாக இருந்தது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் எவ்வாறு ஒய்.டூ.கே ப்ராப்ளம் வந்தது, அதிலிருந்து எப்படி அவர்கள் அதற்கு தீர்வு கண்டு வெற்றி அடைந்தார்கள் என்பதெல்லாம் நம் அனைவருக்கும் தெரிந்திருந்தாலும், இந்தக் கதையைப் படித்த பின் நமக்கு இன்னும் தெளிவாகப் புலப்படுகிறது.
மொத்தத்தில் ஆரம்பம் முதல் முடிவு வரை இந்தியாவிலிருந்து புலம் பெயர்ந்து அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்ட ஒரு மனிதனின் மனப் போராட்டத்தை விளக்கும் கதை.
மொழிபெயர்ப்பு என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். அவ்வளவு கனகச்சிதமாக திருமதி கௌரி கிருபானந்தன் அவர்கள் அருமையான தன்னுடைய நடையால் வாசகர்களைக் கட்டிப் போட்டு விடுகிறார்.
தேர்ந்த வாசகர்கள் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய புதினம் “உள் மனம்” என்று நிச்சயம் சொல்லலாம். .
கௌரி கிருபானந்தன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
.