அழகான நீல வானம். குயில்களின் பாட்டு. அடர்த்தியான மர வேர்களில் துள்ளி விளையாடிக் கொண்டிருக்கும் அணில்கள். பூத்துக் குலுங்கும் பூக்கள். ரம்மியமாக இருந்தது. இதையெல்லாம் பார்க்கும் போது நினைவூட்டுகிறது, இந்த வீட்டை நாங்கள் எவ்வளவு பாசத்தைக் கொட்டி கட்டினோம் என்று! மிக அற்புதமான நாள் இன்று.
சொல்லி முடிக்கவில்லை, இதோ வருகிறாள் என் புன்னகை சிந்தும் ராஜாத்தி ! என் மகள். தன் வீட்டைச் சரி செய்து, சமைத்து வைத்த பிறகே வருவாள். தான் வெளியே போக வேண்டும் என்றால், வீட்டு வேலை அனைத்தையும் செய்து வைத்து விட்டே வருவாள், இந்த மகராசி. அவள் மாமியார் எவ்வளவோ சொல்லிப் பார்ப்பாள், இவள் காதில் போட்டுக் கொள்ள மாட்டாள். மாமனார்-மாமியார் இவளைப் புகழ்ந்து கொண்டே இருப்பார்கள்.
இங்கேயும் சலித்துக் கொள்ளாமல் செய்வாள். தன் உயர்ந்த பதவியையும், மேல் படிப்பையும் காட்டிக் கொள்ள மாட்டாள். இவளைப் போலவே இவள் கணவனும். கண்ணியமானவர். அரசாங்க அதிகாரி. பலருக்கு உதவி செய்வார். தயாளள மனம் உடையவர். எங்களைப் பொறுத்த வரை கடவுள் எங்களுக்குத் தந்திருக்கும் வரப்பிரசாதம், அவர்.
இருவருக்கும் என் சமையலறையில் சமைக்கப் பிடிக்கும். போளி, பஜ்ஜி போடுவது ஆரம்பமானது.
இவர்கள் வருவதற்கு முன்பாக, எங்களோடு ப்ரிட்ஜ் (bridge) விளையாடும் நண்பர்களை ஒவ்வொருவராகப் பட்டியலிட்டேன். அடுத்து, எங்களோடு இயற்கையை ரசித்துப் பரிமாறிக் கொள்பவர்களையும் சேர்த்தேன். பிறகு பேச்சுத் துணை நண்பர்களும். கடைசியில், இவருக்குச் சமைக்கப் பிடிக்கும், செடிகளைப் பார்த்துக் கொள்வதும் பிரியமானது என்று இவற்றின் பட்டியலையும் சேர்த்து விட்டேன். கூடை நிறைந்தது எனத் தோன்றியது. எல்லாம் ரெடி. என் கணவரின் நாட்கள் விதவிதமாக, வண்ணமயமாக இருக்க விரும்பினேன். இதெல்லாம் அதற்கான ஏற்பாடுகள்.
எங்கள் பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் நான் எப்போதும் ப்ளான் செய்வதைக் கேலி செய்வார்கள்!
அவரை நினைத்துக் கொண்டு இருந்தேன். பல நாடுகளில் வசித்து, எவ்வளவு சுவையான அனுபவங்கள்! வாழ்க்கை அருமையாகப் போய்க் கொண்டு இருக்கிறது. இன்று போல!
இதோ சிரித்து-ஆடி, ஒருத்தரை ஒருத்தர் சீண்டிக் கொண்டு வருகிறார்கள் அப்பாவும்-பிள்ளையும். என்னமான ஜோடி இவர்கள்! ஞாயிற்றுக்கிழமை என்றால், இங்கு எல்லோருக்கும் தெரியும், க்ளிங் க்ளிங்… என ஆரம்பிக்கும் அவர்கள் சைக்கிள் பயணங்கள். எல்லா பாதுகாப்பு கவசங்களையும் அணிந்த பிறகே தொடங்கும். முடித்து வந்தார்கள்.
சற்றே பின்தொடர்ந்து வந்தார்கள் எங்கள் நண்பர்கள் பலர். சிலர் குடும்பத்துடன் வந்தார்கள். வரவேற்கச் சட்டென்று குளித்து ஜம்மென்று உடை அணிந்த அவருடன், எங்கள் மகராசி மகள் கையைத் துடைத்துக் கொண்டு வந்தாள்.
என் மகன் மடமடவென குளித்து, அப்படியே ஃப்ரெஷாக வந்தான். என்னை அணைத்தவாறு தான் செய்து வைத்திருந்த சாக்லேட் கேக் நோக்கிக் கூட்டிச் சென்றான். பைட் பைப்பர் ஆஃப் ஹெம்லின் போல எல்லோரும் பின் வந்தார்கள்.
உணவு வாசனைக் கமழ எல்லோரும் கூடினார்கள். கேக்கை வெட்டி, பாட்டுப் பாடினோம். சாப்பிட்டோம்.
இதோ சொல்லி வைத்தது போல என்னுடைய ஹாச்பைஸ் (hospice) வண்டி வந்து நின்றது. என்னை முதல் சிகிச்சைக்கு அழைத்துப் போகவே.
எனக்கு “மறுவாழ்வு” தரவிருக்கும் கீமோ, அதற்குச் செல்ல வேண்டும். அதற்கு நான், கூடவே என் புத்தகங்கள், பாட்டு, பென்சில், திருத்த வேண்டிய தாள்கள், ஸ்கைப் மூலமாக வகுப்புகள் எடுக்க டேப்லட் (மருந்து அல்ல). ஓட்டுநர் வந்து எல்லா பொருட்களையும் எடுத்துக் கொள்ள, அவர் ஏதோ ஜோக் சொல்ல சிரித்தபடியே சென்றோம்.
எங்களைப் பொறுத்தவரை, புற்றுநோய் வாழ்க்கையையோ எங்கள் சந்தோஷத்தையோ கலைக்க முடியாது!