பொன்னிழைகளால் ஆதவன் புவியை வேயத் தொடங்கினான். பூ மகள் சிலிர்த்தாள். மாதவிப் பந்தலில் பறவைகள் உறக்கம் கலைந்தன. ஒவ்வொரு இதழாக மெதுவாக தாமரை விழித்தது. உள்ளே தேன் மயக்கில் இருந்த வண்டு, தன் பொன் சிறகை விரித்து ஆசையுடன் அவளை மீண்டும் முத்தமிட்டுப் பறந்தது. மொட்டவிழும் இரகசியத்தை செடிகள் மரங்களுக்குச் சொல்லின. கொடிகள் தங்கள் பங்கிற்கு மரங்களை இறுகப் பிணைத்துப் பேசின. அத்தி மரங்களின் வேர்ப்புடைப்பின் கீழிருந்த வலைகளில் சிறு முயல் குட்டிகள் காதுகளை விடைத்து மான்களைப் போலச் செய்ய முயன்றன. அருகிலிருந்த கனி மரங்களில் ஒரு கண்ணும், குட்டிகளின் துஷ்டத்தனத்தில் ஒரு கண்ணுமாக அன்னை முயல்கள், பூக்கள், மொட்டுக்கள், காம்புகள், கனிச் சிதறல்கள், புற்கள் எனக் கிடந்தனவற்றையெல்லாம் கவ்விக் கொணர்ந்தன. தொலைதூரக் காட்டில் சிம்ம கர்ஜனை கேட்டது. தன் துதிக்கையை வளைத்து மட்டையை விழுங்கிக் கொண்டிருந்த களிறு பிளிறிற்று. பசுக்கள், கன்றுகள், எருதுகள், காளைகள், குடங்களுடன் பெண்கள், சமித்துக்களுடன் முனிவர்கள், ஏருடனும், கலப்பையுடனும் உழவர்கள், சிறு தானிய வணிகர்கள், நெய்க் கூடைகளுடன் ஆச்சியர்…
கர்ணன் நாளும் பார்க்கும் காட்சிதான் அது. இரவு வெளியில் தள்ளிய வெளிச்சம் என்று அவன் கவித்துவமாக நினைத்தான். ‘மெதுவாகத் தொடங்கி, உக்கிரமாய், பின் தணிந்து ஆதவன் தன்னை இருளிற்கு ஒப்புக் கொடுக்கிறானா? இல்லை, என் ஒளித் தெய்வம் அப்படி ஒரு நாளுமில்லை; அவன் இருளிற்கும் இடம் கொடுப்பவன். அவன் தன் தேர்க்காலை ஊன்றி வானிலேயே நின்றுவிட்டால், இருள் எங்கிருந்து வரும்? அவன் நல்லவன், நியாயமானவன், அவன் கருமையான இருளைப் பழிப்பதில்லை, இருளின் குலத்தைக் கேட்டு மதிக்கும் இழிச் செயல் சூர்யனிடம் ஒரு நாளுமில்லை. ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்றான் அவன். வானை உழுகிறான், பூமியில் விளைச்சல். அவனைப் பார்த்து எத்தனை உயிர்கள் ஆரவாரிக்கின்றன. அவனது பெருமிதம் மிகையற்றது. அவன் என் தந்தை தான். ஆனால், நான் எப்படி இப்படித் தீர்மானிக்க முடியும்? அவன் தேவன், வான் விளக்கு; நான் குலமறியாத சூதன்; குதிரைக்காரனால் வளர்க்கப்பட்டவன். என் வீரம், அறிவு, அழகு, கருணை, நட்பு எதுவுமே இந்த உலகத்திற்குப் பொருட்டல்ல. என் குலம் தெரிந்து இவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்?’
‘இந்தச் சிந்தனைச் சுழல் என்னைக் கொன்றுவிடப் போகிறது. என்ன இல்லை என்னிடம், ஏன் இந்தத் தாபம்? எத்தனை நாட்களானாலும், எத்தனை வயதானாலும் குடையும் இந்தக் கேள்விகள் என் பேராண்மையின் மீது சாட்டையெனச் சுழன்று அடிக்கின்றன. இந்தத் தாழுணர்வு என்னை விட்டு நீங்காதா, ஐயனே’ என்று முணுமுணுத்தவன் சூர்யனுக்கான அர்க்யம் செய்துவிட்டு மாளிகைக்குத் திரும்பினான். வாயிலில் விதுரரின் முக்கிய அணுக்கனாகிய கானப்ரியன் நின்றிருப்பதைப் பார்த்தான். ‘இவர் இவ்வளவு காலையில் இங்கே ஏன் எனக்காகக் காத்திருக்கிறார்?’
‘வரவேண்டும், வரவேண்டும் ஐயனே; இன்று நற் சகுனங்கள் காண்கிறேன். ஈடு இணையற்ற அறிவாளியான அமைச்சரின் உத்தம நண்பர் என் மாளிகைக்கு வந்துள்ளார். அவர் வரவு நல்வரவாகட்டும். தேன் சாற்றில் பழ ரசம் கலந்து தருகிறேன், அதை ஏற்றுக் கொள்வீர்களல்லவா?’
“மா வீரன் கர்ணன் நலம் பல பெற்று வாழ குரு விதுரர் வாழ்த்தினை அனுப்பியுள்ளார். கங்கை நீரில் சிறிது தேன் கலந்து தாருங்கள்; உங்கள் அன்பை மறுக்க மனம் வரவில்லை.” என்றவர் ஆசனத்தில் அமர்ந்தார். மாளிகை முழுதும் ஆதவன் கதிர்கள் சாய் கோணங்களில் வருமாறு அமைப்பட்டிருந்த விதம் அவரை மிகவும் கவர்ந்தது. ‘சூரியக் கவசம்’ என்றார். கர்ணன் முறுவலித்தான்.
“குருவே வருவதாக இருந்தார். உங்களுக்குச் சௌகர்யமானால் தன் குடிலுக்கு உங்களை அழைத்து வரச் சொல்லி என்னை அனுப்பியுள்ளார். நீங்கள் அரசராயிற்றே என்று தயங்கினேன். உங்களுக்கு இதில் தயக்கம் இருக்காது என்று என்னை ஊக்கப்படுத்தி அனுப்பினார். ஒருக்கால், உங்களால் முடியவில்லை என்றால் அவர் எப்போது உங்களைச் சந்திக்கத் தான் வரலாமென்றும் கேட்டு வரச் சொன்னார்.”
கர்ணன் பதறி தன் ஆசனத்திலிருந்து எழுந்தான். ‘அவரை சந்திக்க நான் வருவது தான் முறை. அறிவிலும், வயதிலும் மூத்தவர் அவர். வாருங்கள், புறப்படுவோம்.’
ஆபரணங்கள் எதுவுமே அணியாத இந்த எளிமையிலும் கர்ணன் எவ்வளவு அழகாக இருக்கிறான் என்ற எண்ணத்தை கானப்ரியரால் தவிர்க்க முடியவில்லை. “இவன் ஆதவனை நிகர்த்தவன், கருணைப் பெருங்கடல், துரியனைப் போல இவனிடம் ஆணவமில்லை. தகதகக்கும் சூரியனைச் சில கரு மேகங்கள் மறைப்பது போல் இவன் உள்ளாடும் வருத்தம் இவன் வதனத்தில் படிந்தாலும் அந்த சோகத்தில் இவன் இன்னமும் சோபிக்கிறான். ஆமாம், இவனை ஏன் குரு அழைக்கிறார்? இவன் ஏன் ஒரு கேள்வி கூடக் கேட்காமல் உடனே கிளம்பி விட்டான்? வீரம், பணிவு, தன்மை,எல்லாம் நிறைந்த குணவான்.” என்று நினத்துக் கொண்டார் அவர்.
‘அரசில் அமைச்சர் பதவியில் இருப்பவர், பேரரசரின் சகோதரர், தன் அரசு மாளிகையில் இல்லாமல் தான் வசிக்கும் குடிலிற்கு என்னை அழைத்திருக்கிறார்; அப்படியென்றால், இது அரசு சம்பந்தப்பட்டதல்ல, தனிப்பட்ட செய்தி ஏதோ சொல்லப் போகிறார். என் அன்னையைப் பற்றிச் சொல்வாரோ? என் பிறப்பின் இரகசியம் தெரியப் போகிறதா, ஆதவனே? உலக விளக்கான நீ சாட்சி நிற்க வேண்டும். பகைவர்களைப் பந்தாடும் போது கூட அமைதி காக்கும் என் இதயம் இன்று அஸ்வமேதக் குதிரையாகப் பாய்கிறது. சூரியனே, இந்த நாளின் நற்குறிகள் நல்லவையாக முடியட்டும்.’
விதுரர் வாயிலில் நின்று வரவேற்பார் என அவன் எதிர்பார்க்கவில்லை. தேகம் நடுங்க அவர் பாதங்களில் பணிந்தான். அவர் அவனை அணைத்துக் கொண்டு ஆசிகள் சொன்னார். பிறகு நீண்ட மௌனம். அவனுக்கு அவரிடம் என்ன பேசுவது என்பது தெரியவில்லை; ‘ஆனால், அவர் ஏன் ஒன்றும் பேசவில்லை? கூப்பிட்டது அவர் தானே? அப்போது அவரிடம் தானே சொல்வதற்கு விஷயம் இருக்கிறது?’
அவர் தொண்டையைக் கனைத்துக் கொண்டார். கானப்ரியன் காணப்படவில்லை. அவர் எப்போது அங்கிருந்து போனார் என்பதைக் கூட உணர்வெழுச்சியில் தான் கவனிக்கவில்லை என்று கர்ணன் தனக்குள்ளே சிரித்துக் கொண்டான்.
“கர்ணா, நீ துரியனுக்கு சற்று மூத்தவன். நீயும் என் மகன் போலத்தான். இந்த உலகில் பிறர்க்கென அவன் ஒன்று செய்வானென்றால் அது உனக்கு மட்டும்தான்.”
கர்ணனால் தன் காதுகளை நம்ப முடியவில்லை. ‘நான் இவருக்கு மகனைப் போலவா? இந்தக் குதிரைக்காரனை, தேரோட்டியை இவர் ஏற்றுக் கொண்டுவிட்டாரா என்ன? நேரே பார்க்கும் சந்தர்ப்பங்களில் கூட ஒரு அரைப் புன்னகையுடன் கடந்து செல்லும் இவருக்கு எப்போதிருந்து நான் மகனுக்குச் சமானமானேன்? என்ன நடந்து கொண்டிருக்கிறது இப்போது? இதற்கு நான் என்ன பதில் சொல்வது?’
“கர்ணா, நான் அமைச்சராக உன்னிடம் பேசவில்லை. துரியனின் பெரிய தந்தையாகப் பேசுகிறேன்.” என்றார் விதுரர்.
கர்ணனுக்கு மீண்டும் திகைப்பு. ‘இவர் என் நண்பனின் சிறிய தந்தை அல்லவா? ஒருக்கால், வியாசர் சொன்னதை என்னிடம் சொல்லப் போவதாக இருக்கிறாரோ?’
விதுரர் அவனது குழப்பதைப் பார்த்து சிரித்தார். “கர்ணா, நான் சிவையின் மைந்தன்; வியாசரால் சிவையின் கர்ப்பத்தில் வந்தவன். என் தாய் சிவை, லோமஹர்ஷன் குலத்தில் வந்த சுபைக்குப் பிறந்தவள். உனக்கு ஆச்சர்யமாக இருக்கும்; சுபையைக் கூடியவர் ஒரு பீதர்.”
கர்ணனுக்கு இவ்விவரங்கள் புதிதாக இருந்தன. இந்தச் செய்திகளை தன்னிடம் ஏன் சொல்கிறார் என்றும் சிந்தித்தான்.
“காரணம் இருக்கிறது, மகனே. உன்னை ஒன்று கேட்கிறேன், க்ஷத்ரிய வம்சத்தில் பட்டத்திற்கு உரிமை யாருக்கு இருக்கிறது?” என்றவர் தொடர்ந்தார்.“மூத்த பிள்ளைக்கென்று, பொதுவான வழிமுறை இருக்கிறதல்லவா? அதுவும் தந்தை வழிக் குலம்.”
கர்ணன் தலையசைத்தான்.
“அதன்படி, நான் அஸ்தினாபுரியின் அரியணைக்கு முதல் உரிமை உள்ளவன்.” என்று அமைதியாகச் சொன்னார் விதுரர். கர்ணனுக்கு ஒன்றும் புரியவில்லை. பல நொடிகள் இருவரும் ஒன்றும் பேசாதிருந்தார்கள்.
விதுரர் கண்களின் மேல் உள்ளங்கைகளை வைத்துக் கொண்டார்; பிறகு காரணமற்று சிரித்தார்.
“கர்ணா, நீ என் தந்தை வியாசரைப் பார்த்திருக்கிறாய் அல்லவா? பல நேரங்களில் ஒரு காட்டாளனைப் போலிருப்பார். அவருடைய விந்தினை சுமக்க எந்தப் பெண்ணும் முன்வரமாட்டாள். என் தாய், சிவை, அவளுக்கு அழகு முக்கியமில்லை, அறிவு முக்கியமெனப்பட்டது. அவள் விரும்பித்தான் அவரை ஏற்றாள்; முதல் கரு நான், முதலில் பிறந்ததும் நான். பின்னர் தான் பேரரசி சத்யவதியின் ஆணைக்கு உட்பட்டார்கள் என் சிற்றன்னையர். இதைப் பேரரசி என்னிடமும் சொல்லியிருக்கிறார், பீஷ்மரிடமும் சொன்னார்.”
‘அப்படியென்றால்…’
“தந்தைக்காக பீஷ்மர் மச்சக் குலக் கன்னியை அன்னையென ஏற்றார்; அன்னை சத்யவதியைச் சொல்கிறேன். அந்த அன்னைக்காக தம்பிக்கு அரியணயையும் விட்டுக் கொடுத்தார். அவர் குருதித் தூய்மையில் நம்பிக்கை உள்ளவர். மேலும் தந்தை வழியில் குல முன்னுரிமை என்ற கருத்தும் உள்ளவர். அதனால் தான், தன் அண்ணன் வியாசர் மூலம் வம்சம் வளர ஆசைப்பட்டார். அதை பேரரசியின் ஆசை என்றும் சொன்னார். அது உண்மைதான். ஆனால், பணிப்பெண்ணின் மகன் சிம்மாசனத்தில் அமர்வதை அவர் விரும்பவில்லை. யோசித்துப் பார், காசி அரசனின் மூன்று புதல்விகளையும் கவர்ந்து வந்து அதில் இருவரை தன் தம்பிகளுக்குத் திருமணம் செய்து வைத்தவர் அவர். விட்டுப் போன தூய க்ஷத்ரிய குருதியை இப்படி மீட்டெடுக்கப் பார்த்தார். பணிப்பெண்ணிற்குப் பிறந்த நான் அரசனாகலாமா, அதற்கு மற்ற அரசர்கள் ஒப்புதல் அளிப்பார்களா, என் அரசின் வழிமுறை இவர்களுக்கெல்லாம் ஒத்து வருமா, அதற்குப் பிறகு பணியாளர்கள் எஜமானரின் பேச்சுக்களைக் கேட்பார்களா என்றெல்லாம் அவர் சிந்தித்தார்.”
‘பீஷ்மர், அவர் மிகவும் போற்றும் விதுரருக்கு இப்படி ஒரு இழிவைச் செய்வாரா? இந்த எண்ணங்களால் தான் தன்னை அவர் வெறுக்கிறாரோ?’ கர்ணனுக்கு கலக்கமாக இருந்தது. இதையெல்லாம் ஏன் இப்போது இவர் சொல்கிறார் என்றும் தோன்றியது.
“கர்ணா, நான் பீஷ்மரை நிழலெனத் தொடர்பவன். அவர் சஞ்சலத்தில் இருப்பதை அறிந்தேன். ஆனால், நானாக என்ன சொல்வது அவரிடம் எனவும் தயங்கினேன். ஒரு நாள் என்னை அழைத்தார். “இந்த அரண்மனையில் எத்தனையோ நிகழ்வுகள், பாதி யூகத்திலும், பாதி உண்மையிலும் நெய்யப்பட்டுள்ளன. அரச குடும்பங்களின் வரலாற்றுச் சாபம் என நினைக்கிறேன். முன்னரே கட்டமைத்த பொய் நீ இளையவன் என்பது. அது அப்படித்தான் தொடர முடியும். இல்லையெனில் மிருக பலத்தால் திருதாஷ்டிரன் உன்னைக் கொல்லக் கூடும்.” என்றார்.
“கர்ணா, நான் அப்போது சிரித்தேன். என் விஷ்ணு அஸ்திரத்தின் முன் யாரும் நிற்க முடியாது தந்தையே. நான் என் சகோதரர்களைக் கொல்வேன் என்றா நினைக்கிறீர்கள், அதுவும் அரசுக்காக?’ எனக் கேட்டேன். “அவர் ஆதரவாக என் தோள் மீது கைகளை வைத்தார். நீண்ட பெரு மூச்சிழுத்தார். பின்னர் சொன்னார்: எனக்கு நீ வேண்டும். உன் அறிவும், அமைச்சும், நீதியும், நெறிமுறைகளும் வேண்டும். உன் வீரமும் நான் அறிவேன். நான் இக்கட்டில் இருக்கிறேன், விதுரா, ஆனால், ஒன்று சொல், விழியிழந்தவன் அரசாளலாமா?” என்றார்.
“நீங்கள் ஞானி, தந்தையே. லகிமா தேவியின் ‘விவாத சந்த்ரம்’ ப்ருஹஸ்பதி சொன்ன ‘ஷாத்ர ஸ்மிருதி’ இவைகள் விழியில்லாதவர் ஆட்சிக்கு வர வழியமைக்கின்றன. உங்களுக்கு உரித்தான சிம்மாசனத்தை சந்தனு மாமன்னருக்காக, அன்னை சத்யவதிக்காக விட்டுக் கொடுத்தீர்கள்; மனைவி, மக்கள் சுகமுமில்லாமல் தனியனாகி விட்டீர்கள். நான் இந்த அரியணைக்குப் போட்டியில்லை, தந்தையே! நிலையில்லாத இந்தப் பதவிகளில் நான் பற்று வைக்கவில்லை. நீங்கள் சொல்வதால் அமைச்சனாக இருக்கிறேன். இல்லையெனில் என் தந்தையிடம் போய்விடுவேன். காட்டாளனாக நானும் உருப் பெறுவேன்’ என்றேன். “கர்ணா, பீஷ்மர் அழுது அன்றுதான் பார்த்தேன். அது எனது வெற்றி என்று கூட ஒரு எண்ணம் எனக்கு.”
பீஷ்மருக்குத் தியாகத்தில் விதுரர் சளைத்தவரில்லை என கர்ணனுக்குத் தோன்றியது. ஆனால், இன்னமும் ஏன் தன்னிடம் இதைச் சொல்கிறார் என அவனுக்குப் புரியவில்லை.
“கர்ணா, நானும் நீயும் ஒன்று. என் பிறப்பை இழித்துப் பேசினார்கள், என் முதுகின் பின்னே. அரசனென்பதால், உன் காதுகளுக்குக் கேட்காமல் உன்னை பழிக்கிறார்கள். இந்த உலகையே அழிக்கும் விஷ்ணு அஸ்திரம் என்னிடம் இருக்கிறது, அதைப் பிரயோகிப்பது எப்படி என்று துரோணரோ, பீஷ்மரோ கூட அறிய மாட்டார்கள். நான் ஆக்கலின் பக்கத்தில் நின்றேன்; என்றும் அப்படித்தான். அழிப்பது இயற்கையின் செயல். அதை மானிடன் ஏன் கைக்கொள்ள வேண்டும்? உடற் குறை கிடையாது எனக்கு, வீரத்திலும், விவேகத்திலும் நான் பீஷ்மரையும், வியாசரையும் கொண்டிருக்கிறேன் என்று பேரரசி சொல்வார்கள். ஆனாலும், நாடாள அதெல்லாம் தகுதியேயில்லை; என் தாய் ஒரு சேடி என்பதைத் தவிர காரணங்கள் ஏதுமில்லை. மன்னனோ, அமைச்சனோ, அதுவுமில்லையோ இவைகள் எனக்கு இல்லாவிட்டாலென்ன? என் இழப்பு இதனால் அதிகமா, அவர்கள் இழந்தது, இழக்கப்போவது அதிகமா? தலை கனத்தில் பேசவில்லை நான். எதற்கு ஏங்கி நம்மை வதைத்துக் கொள்ள வேண்டும்? சிறிய வாழ்க்கை இது மகனே. நம் கௌரவம் நம் கைகளில் தான்; நாம் தான் நம்மை மதித்துக் கொள்ள வேண்டும்; இல்லாத பொருள் மீது எல்லோருக்கும் ஆசை வரும். கிடைத்து விட்ட பிறகு பல நேரங்களில் ஏமாற்றமும், அசூயையும் தான் மிஞ்சும். புரிந்து கொள், கர்ணா. விடை தெரியாத கேள்வியில் உன்னைப் பிணைத்துக் கொண்டிருக்கிறாய். அது உன்னை அமைதியற்றுப் போகச் செய்கிறது. நுட்பமாக ஒன்று சொல்வேன், உனக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை மட்டும் நீ கணக்கில் கொள்கிறாய்; அதை உன் அவசங்களின் கவசம் என அணிகிறாய்; உன் பேராற்றலில் உனக்குப் பெருமையில்லை, உன் அழகில், உன் வசதியில், உன் வாழ்வில் எத்தனை உன்னதத் தருணங்கள்-அதையெல்லாம் கொண்டாடிக்கொள்ளாமல், பறி கொடுத்தவனைப் போல் துக்கம் கொள்வது உன் அறிவைக் கொன்று விடும். உன்னால், தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் செய்து விடும். இகழ்பவர் கண்களின் முன் நான் மீண்டெழுந்தேன் என்று நிமிர்ந்து நில். உன்னை முதலில் மதிக்கக் கற்றுக் கொள்.”
‘ஐயனே, என் பிறப்பின் களங்கம் என்னை அச்சுறுத்துகிறது. உங்களுக்கு உங்கள் தாய் யார், தந்தை யார் எனத் தெரியும். நீங்கள் தைர்யமாகப் பேசலாம்; ஆனால், நான்..’ சொல்லும் போதே அவன் குரல் தழுதழுத்தது.
“கர்ணா, ஒரு கதை சொல்கிறேன், கேள். மிக நேசித்த பொருட்கள், மிக விலையுயர்ந்தவைகள் அவைகளுடன் ஒருவன் பயணம் செய்தான். சூறைக்காற்றுடன் புயல் அடித்தது திடீரென்று. அவனுடன் வந்தவர்கள் விரைந்து சென்றுவிட்டார்கள். இவன் சுமையைத் தூக்கிக் கொண்டு அந்தப் புயலில், கொடுங்காற்றில், மழை ஈரத்தில் தத்தளித்தான்; அவன் பொருட்கள் அவை, மிக விலை உயர்ந்தவை; தண்ணீரில் நனைந்து கனத்து அவனைக் கடைசியில் நீரிலேயே மூழ்கடித்துவிட்டன.
விட்டு விடுதலையாகு, கர்ணா; காலம் போட்ட சில முடிச்சுகள் எப்போது அவிழும் என யார் சொல்ல முடியும்? நம் பேச்சு நமக்கிடையேயானது. நீ சிந்தித்துப் பார். அம்மா என்பது சத்தியம், அப்பா என்பது நம்பிக்கை. உன்னை வளர்த்தவர்களைத்தான் நீ உண்மையில் கொண்டாட வேண்டும், விட்டுப் போனவர்களையல்ல. நான் அதைத்தான் செய்தேன். என்னை வளர்த்தவர்களிடம் நேசம் காட்டினேன்; பீஷ்மருக்கு, அவரது சிந்தனைக்கு மாற்றாகக் கூட நான் ஆசைப்பட்டதில்லை. இன்றும், என்றும் தர்ம வழியில் இருக்கிறேன், கவலையில்லாமல் இருக்கிறேன். துரியன் என்னை மதிப்பதில்லை என்பதால் நான் அவனை வெறுப்பதில்லை. அவன் நலமாக வாழத்தான் சில நேரங்களில் அவனிடம், ஏன் உன்னிடமும் கூட கடுமையாக நடந்து கொள்கிறேன். உன்னால் தான் அவனை நேர்வழிப் படுத்த முடியும்; அப்போது சகுனி சொல்வதை சீர்தூக்கிப் பார்க்கும் குணம் அவனுக்கு வந்துவிடும். உறுத்தும் கவலைதான் உன்னுடையது; அதைப் புரையோடிப் போக விடாதே. உனக்கு மங்களம் உண்டாகட்டும்.’
விடை கொள்ளும் முகமாக எழுந்த கர்ணன் ‘முயல்கிறேன், ஐயனே’ என்று சொல்லி வணங்கினான். மாடும், கன்றுமாக மேய்ச்சலில் இருந்து திரும்புவதைப் பார்த்த மாத்திரத்தில் கண்களில் நீர் சுரந்தது அவனுக்கு. சூரியன் ஆயாசமாக மேற்கில் சரிந்தான்.