வழக்காடுமன்றம் – பொன்னியின் செல்வனில் ஆதித்தனைக் கொன்றது யார்? டாக்டர் எல். கைலாசம்

நேற்று மாலை (2/11/2020 – 6.30 pm) குவிஞம் அளவளாவல் சார்பில் இணையம் வழியாக நடத்தப் பெற்ற வழக்காடு மன்றம் கேட்டு மகிழ்ந்தேன். குவிஞம் நிறுவனம் எடுத்த ஆதித்தக் கரிகாலன் தலைப்பு சரித்திரப் பிரியர்கள் அனைவரையும் கவர்ந்திழுக்கக் கூடியது. உலகப் புகழ் பெற்ற எழுத்தாளாரான கல்கி அவர்கள் குற்றம் சாட்டப்பெற்றார்கள்.

கல்கியின் மீது சாற்றப்பெற்றக் குற்றம் பொன்னியின் செல்வன் புதினத்தில் ஆதித்தக் கரிகாலனைக் கொலை செய்தவர் யார் என்று தெரிந்திருந்தும் அதைக் கூறாமல் மறைத்துவிட்டார் என்பதே. சரித்திரப் புதினத்தின் துருவ நட்சித்திரம் காலச்சக்கரம் நரசிம்மா நடுவராக இருக்க, பாண்டிச்சேரியை சார்ந்த உளிமகிழ் வழக்குரைந்தார்.  மிக அருமையாக கல்வெட்டுச் சான்றுகளை எல்லாம் சுட்டிக்காட்டி, ஆதித்தனைக் கொன்றது மதுராந்தகன் என்பது தெரிந்தும் அதைப் புதினத்தில் கூறாமல் விட்டு விட்டார் என்று குற்றம் சாட்டினார்.

எனது நண்பர் உளிமகிழ் சொன்ன குற்றச் சாட்டை மறுத்தவர் உடுமலைப்பேட்டையைச் சார்ந்த முனைவர் தைலாம்பாள் அவர்கள். முனைவர்  தைலாம்பாள் அவர்கள் ஒவ்வொருவராக செய்திருக்க வாய்ப்பில்லை என்று சொல்லி, ஆதித்தன் தற்கொலை செய்து கொண்டான் என்று சொன்னார். அறிஞர் கல்கி வாசகர்களின் மத்தியில் சரித்திர ஆர்வத்தைத் தூண்ட புதினத்தில் சொல்லாமல் விட்டிருக்கலாம் என்றும் அது புதினம் எழுதும் எழுத்தாளரின் உரிமை என்றும் கொலை செய்தவனை சொல்லத்தான் வேண்டும் என்று எந்த விதியும் இல்லை என்றும் வாதிட்டார்.

இந்த வழக்குக்கு அனுஷா வெங்டேஷ் உட்பட ஐந்து படித்தறிந்த சான்றோர்கள் தங்களின் கருத்துகளை சொன்னார்கள்.

அவர்களில் நான்கு பேர் கல்கி எந்தத் தவறும் செய்யவில்லை என்று சொன்னார்கள். நூற்றுக்கும் மேற்பட்டப் பங்கு பெற்றோர்களில் தொன்னூறு சதவிகிதம் கல்கி எந்தத் தவறும் செய்யவில்லை என்று வாக்களித்தார்கள்.

இதையெல்லாம் கேட்ட காலசக்கரம் நரசிம்மா அனைத்தையும் ஆராய்ந்து நீண்ட தீர்ப்பைக் கொடுத்தார். அதில் புதினத்தில் கல்கி ஆதித்தனைக் கொன்றவனைப் பற்றி சொல்லாமல் ஒன்றும் இல்லை. யாழிக்குப் பின்னால் இருந்து யார் என்று தொடர்ந்திருந்தால் தெரிந்திருக்கும், வாசகர்களின் யூகத்துக்கு விட்டிருக்கிறார் என்றும் அதனால் கல்கி மீது சாற்றப்படும் குற்றம் நிரூபிக்கப்படாததால் வழக்கை தள்ளுபடி செய்தார்.

உளிமகிழ் சொன்னபடி மதுராந்தகன் கொலை செய்திருக்க வாய்ப்பில்லை. அப்படியிருந்தால் பாசமான தம்பி அத்தனை இலகுவாக விட்டிருக்க மாட்டார். தனக்கு வந்த ராஜ பதவியைக் கொலைகாரனுக்கு விட்டுக் கொடுத்திருக்க மாட்டார். மிகப்பெரிய வீரனான என்னதான் நந்தினி சொன்னாலும் கரிகாலன் தற்கொலை செய்யும் அளவுக்கு கோழையாக இருக்க வாய்ப்பில்லை. ஆக திருமதி  தைலாம்பாள் சொன்னபடி இது தற்கொலையும் அல்ல.

இதுவரை எத்தனையோ வரலாற்று அறிஞர்கள் எத்தனை முயற்சி செய்தும் கண்டுபிடிக்க முடியாத கொலைகாரனை, ஆயிரம் வருடம் கழித்து நம்மால் தான் கண்டுபிடிக்க முடியுமா என்ன?

கல்கியின் மீது சாட்டப்பட்டக் குற்றத்தை இரண்டாகப் பிரிக்கலாம். ஒன்று ஆதித்தனைக் கொன்றவன் யார் என்று அவருக்கு தெரியும். மற்றது அது தெரிந்தும் அவர் சொல்லவில்லை என்பது.

மிகப்பெரிய ஆராய்ச்சியாளரான கல்கி ஆதித்தனைக் கொன்றவனை யூகித்திருப்பார் என்ற அனுமானத்தில் உளிமகிழ் சொன்னாலும் அதற்கு அவரால் சரியான முழுமையான ஆதாரங்களைக் கொடுக்க முடியவில்லை.

அதுமட்டுமில்லாமல் இதுவரை ஆதித்தனை கொன்றவன் யார் என்று யாராலும் அறுதியிட்டுக் கூறமுடியவில்லை. அனுமானத்தில் சோழிகளை உருட்டியும் கூட சொல்கிறார்கள். அப்படி இருக்கையில் கல்கிக்கு தெரிந்திருந்தால் கட்டாயம் புதினத்தில் சொல்லியிருப்பார் என்பது எனது கருத்து.

சரித்திரக் கதை எழுதுவதற்கும், குற்றப்புதினம், குடும்பப் புதினம் போன்றவற்றை எழுவதற்கும் நிறைய வேறுபாடு உண்டு. சரித்திரநிகழ்வுகளை மாற்றி எழுத முடியாது. ஏற்கனவே நிரூபிக்கப்பட்ட உண்மையை மறைத்து எழுத முடியாது. எனக்குத் தெரிந்து கல்கி இங்கு தவறவில்லை. நம்மைப்போலவே அவராலும் ஆதித்தனைக்கொன்றவனை சரியாக அனுமானிக்க முடியாமல் இருந்திருக்கலாம். அதை அவர் அப்படியே தனக்குத் தெரிந்ததை அப்படியே புதினத்தில் சொல்லியிருக்கிறார் என்பது எனது கருத்து. ஆக கல்கி மீது எந்தக் குற்றமுமில்லை. நரசிம்மா கொடுத்தத் தீர்ப்பு சரிதான்.

ஞாயிறு மாலையில் மிக அருமையான நிகழ்ச்சியைக் கொடுத்த குவிஞம் நிறுவனத்தாருக்கு எனது நன்றியைத் தெரிவித்துகொள்கிறேன்.

இது போன்ற நிகழ்வுகள் அடிக்கடி நடத்துவது நமது பராம்பரியத்தை அறிந்து கொள்ள உதவும்.


2 responses to “வழக்காடுமன்றம் – பொன்னியின் செல்வனில் ஆதித்தனைக் கொன்றது யார்? டாக்டர் எல். கைலாசம்

  1. நேர்மையாக ஆராய்ந்து தீர்ப்புரைத்து உள்ளார்
    பாராட்டுகள்

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.