காலமில்லாக் காலத்தில் நேற்று மாலையிலிருந்து நல்ல மழை. முதலில் தயங்கிப் புதிதாக வேலைக்கு வருபவர்கள் போல் அடக்கமாக வந்தது. மொட்டைமாடியில் சிறு தூரல்; உடல் நனைக்க வேண்டும் என்று விபரீத ஆசை வந்தது எனக்கு. கண் இமைகளின் மேல், முகவாய்க் குழியில், அண்ணாந்த கழுத்தில், நீட்டித் துழாவிய இருகரங்களில் காதலனென முத்தமிட்டு முத்தமிட்டுச் சல்லாபித்த மழை. அது வலுக்க ஆரம்பிக்கையில் கணவனின் நினைவு ஏனோ வந்தது. அம்மா கீழ் முற்றத்தில் நனைந்தபடியே என்னைத் திட்டிக் குரல் கொடுத்தாள். இன்னமும் கூட நான் வெல்லம் போலக் கரைந்து விடுவேன் என்று பயப்படுகிறாள்.
“வொங் கொழந்தைக்கே நாலு நாள்ல ஆயுக்ஷோமம்; நீ மாட்டுக்கும் மழேல வெளயாட்ற; ஒன் ஆம்படையான் எல்லாரோடையும் நாளன்னிக்கு வந்திடுவானோல்யோ?”
‘வருவாம்மா, ஐஞ்சு பேரு வரா; ஐயோ எதுக்கு இப்போ என்னத் தொடைக்கற; ஜில்லுன்னு இருந்ததெல்லாம் போச்சு’
“நெருப்பு காங்கய இப்டி அணக்கறயாக்கம். சும்மா இருடி, நாளும் கெழமையுமா படுத்துண்டா, கொழந்தைக்கும் உன்னால ஜொரம் வந்துடும்.”
ஒருமுறை பறிகொடுத்தவளை அப்படியே என்று முத்திரை குத்திவிடுவார்கள் போலிருக்கிறது. அம்மாவின் கவலை ஊராரைக், குறிப்பாக, என் புக்ககத்தைப் பற்றியது. பாவம், கவலையினால் உடம்பு ஊதுகிறது அவளுக்கு. உனக்கும் மழை பிடிக்கவில்லையா என்ற வார்த்தைகளை விழுங்கி விட்டேன். மழை ஆக்ரோஷமாக அறைந்து கொண்டிருந்தது. மரங்கள், செடிகள், கொடிகள், தளிர்கள் எல்லாவற்றையும் நனைக்கும் மழை. வளைந்து குனிந்து ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை அவைகளுக்கு. இரவு விளக்கின் மென்மையான நீல ஒளி, ஜன்னல் கண்ணாடியில் சிதறி வெளியே தெறிக்கும் நீர்த்துளிகளில் ஒரு பக்கம் அவிழ்ந்த தூளியென கோட்டுரு வரைந்தது. எப்போது தூங்கினேன் என்று தெரியவில்லை. ஆனால், கனவுகள், கனவுக்குள் கனவுகள், பாபத்தின் நிழல் கொத்தைக் காட்டும் அனுபவம், மாறாத கொடூரத்தில் என்னைத் தோலுரிக்கும் கேள்விகள், தன்னிரக்கத்தில் அலறும் மனது, அந்தச் சமயத்தின் ஆர்ப்பாட்டம் என்ற சமாதானம், அவல் ஆச்சியைப் பார்க்க முடியுமா, அவள் கால்களில் விழுந்து அழ முடியுமா, அவளிடம் மன்னிப்புக் கேட்க என் வறட்டுக் கௌரவம் இடம் கொடுக்குமா என்று கனவுக்குள் பதில் தேடும் கேள்விகள். என் கனவும்,நினைவும் அந்தத் தருணத்தில் பூத்து, வாடாமல் அப்படியே என்னைத் தின்று கொண்டிருக்கிறது.
கரு மலைப் பாம்பென நீண்ட சாலை இது. வடக்குத் தெற்காகப் பரந்த சாலையில் எதிரெதிராக வீடுகள். அரை கிலோ மீட்டர் தொலைவில் நடு நாயகமாக பூவாடை நாதர் திருக்கோயில். வில்வ தளப் பிரியரான அவர், ஒரு சிவயோகியின் கனவில் நானூறு ஆண்டுகளுக்கு முன் தோன்றி, தனக்குத் தினமும் வாசனைப் பூக்களால் ஆடை செய்து ஆவுடையிலும், தன் மேற்புறத்திலும் சார்த்தச் சொன்னாராம். சிவன் கோயில் நந்தவனம் பருவத்திற்கேற்றாற் போல், மருக்கொழுந்து, முல்லை, மல்லிகை, ரோஜா, நாகலிங்கம், நந்தியாவட்டை, கதிர்பச்சை, செண்பகம் எல்லாம் பூத்து எங்கள் தெருவே பூவின் மணத்தால் நிறையும். அவர் கோயிலை ஒட்டிய திருக்குளத்தில் ஆம்பல், தாமரை, அல்லி மலரும். ஆனால், அவருக்குத்தான் மலர்ந்த மலர்களைச் சாற்றுவார்கள்; அம்பாளுக்கு மொட்டரளி, விரியாத தாமரை மொட்டு போன்றவை. இந்த விசித்திரம் என்னை என்னவோ செய்யும், சிறு பெண்ணாக இருக்கையிலேயே. எனக்கு எந்த சந்தேகம் வந்தாலும் நான் நம்பக் கூடியமாதிரி பதில் சொல்பவள் அவல் ஆச்சிதான்.
‘கௌரிக் கண்ணு, அம்மயே ஒரு பூவு. பேரும் மொட்டுக் கன்னி; அப்ப அதுதான மொற’
“ஆச்சி, அது முத்துக் கன்னி ஆச்சி. பேரயே மாத்திப்புட்டீயளே”
‘சரிதானே, பேருல கன்னி இருக்குதில்ல.’
அந்த வயதில் அது எனக்குப் போதுமானதாக இருந்தது. ஆச்சியிடம் ஒரு நளினமும், கம்பீரமும் எப்போதும் இருந்தன. அவள் நெடுநெடுவென்று உயரமாக இருப்பாள். கொஞ்சம் கருமை கலந்த மண் நிறம். முட்டி வரை நீளும் கைகளில் தேளை பச்சை குத்தியிருப்பாள். வெள்ளைச் சேலை, மார்பில் எதுவும் அணியாத போதும், முழுக்க உடலை மறைத்திருக்கும். செருப்பு அணிய மாட்டாள். பனைக் கொட்டான் கூடையில் தலைச் சுமையாக அவல்; தோல்பட்டையிலிருந்து தொங்கும் பனை நார்ப்பையிலும் அவல்தான். ஊருணிக்கு அப்புறம் உள்ள செங்கையூர் அவளுக்கு.
ஐந்து நாட்களுக்கு ஒரு முறை அவளை நிச்சயமாக எங்கள் தெருவில் பார்த்துவிடலாம். அவளுக்கு கிலோ கணக்கெல்லாம் தெரியாது. படி, ஆழாக்கு என்று இன்று வழக்கில் இல்லாத பெயர்களைத்தான் சொல்வாள். நாங்கள் பள்ளியில் கிலோவைப் படித்தோம், வீட்டில் அம்மா படியால் அளந்தாள். அந்தத் தெரு முழுவதற்கும் எங்கள் வீட்டுப் படி ஆச்சியுடன் பயணிக்கும். எல்லாவற்றையும் விற்றுவிட்டு எங்கள் வீட்டுத் திண்ணையில் உட்காருவாள். மோர் மட்டும் தான் குடிப்பாள், சாப்பிட எது கொடுத்தாலும் வாங்க மாட்டாள். நான்கு நாட்கள் ஆகிவிட்டதென்றால் காலையில் சீக்கிரம் எழுந்து அவள் வருவதற்கென்றே நான் வாசலை, வாசலைப் பார்த்திருப்பேன். ‘இந்தக் குட்டியை, அந்த ஆச்சிக்குப் புள்ள இருந்தா கல்யாணம் செஞ்சுடலாம்’னு கேலி செய்யும் அப்பாவிற்குப் பின்புறமாக பழிப்புக் காட்டிக்கொண்டே நான் அலை பாய்வேன். சுமையை எங்கள் வீட்டுத் திண்ணையில் இறக்கி வைத்துவிட்டு, ‘பாத்துக்க கண்ணு, இந்தா வந்திடுதேன்’னு ஓட்டமா கோயிலப் பாக்க ஓடுவா ஆச்சி. அவ சொத்துக்கு நான் காவல்ன்னு நான் கர்வமா இருப்பேன்.
சீரகச் சம்பா நெல்லைப் புழுக்கி அவள் கொண்டு வரும் அவலுக்கு நாங்கள் அனைவரும் அடிமை. அம்மாவிற்குத் தெரியாமல், என் கைகள் நிறைய அவலும், பொடி வெல்லமும் சேர்த்து எனக்கு மட்டும் ஸ்பெஷலாகத் தருவாள். ‘கண்ணனும், குசேலனும்’ என்று அப்பா சிரித்துக்கொண்டே சொல்கையில் நாணிச் சிரிப்பாள். அவர்கள் இடத்தில் அவல் எப்படி செய்கிறர்கள் எனப் பார்க்க நான் ரகளை செய்தாலும் என் பெற்றோர்கள் விட்டதில்லை. ஆச்சியும் அவ்வளவு எளிதாக ஒத்துக்கொள்ளவில்லை. சற்று வயதான பிறகு நான் ஒரு ட்ரிக் செய்தேன்-அந்த ஸ்பெஷல் அவலை வாங்காமல் உள்ளே ஓடிவிட்டேன் ஒரு நாள். நடு முற்றம் தாண்டி அன்றுதான் ஆச்சி உள்ளே வந்தாள். ‘பொளச்சுக் கிடந்தா நாளக்கி போயாரலாம். அம்மா, புள்ள எம் புள்ளயாக்கம், கூட்டிப் போயி கொணாந்தும் விட்டுடுதேன். வெசனப் படாதீய’
எப்போதும் நடந்து வரும் ஆச்சி மறு நாள் மாட்டு வண்டியில் வந்தாள்; ‘பூவுக்க பொன்னு பாதமில்லா’ என்று அவள் என்னைத் தூக்கி வண்டியில் அமர வைத்த போது அம்மா கமறிய குரலில் ஏதோ சொன்னாள். அப்பா, அவசர அவசரமாக எடுத்துக் கொடுத்த பணத்தையும் வாங்க மறுத்தாள். ‘எனக்க மவ, நானும் பூவாடைக்காரியாக்கும்’
பயண வழியெங்கும் பாக்கு மரங்களும், புளி மரங்களும் நின்றிருந்தன. சற்றுத் தொலைவில் பனை மரங்கள் தெரிந்தன. வான் நீலம் சொட்டுச் சொட்டாக ஊருணியில் இறங்குவதைப் போல் ஒரு தோற்றம். அது நீல மேகங்களின் மாயம். ஊருணியைக் கடக்கையில் சொன்னாள்- ‘ஐயா, ஒரு நிமிசம் நிப்பாட்டு; வா மவளே, இந்தா இங்கண கையள்ளிக் குடி தாயி தண்ணிய, ஊருக்குள்ள வாரத் தண்ணிதான், அதில என்னமோ மருந்து அடிக்கான்.’ ஆம், இது தேனாய் இனித்தது, நெல்லிக்காயைச் சாப்பிட்ட பிறகு குடிக்கும் தண்ணீர் இனிக்குமே அது போல் இருந்தது.
ஆச்சியின் வீடு ஒரு சிறு தோட்டத்திற்குள் இருந்தது. இரு தென்னை, வாகை மரங்கள். கீரைப் பாத்தி சற்றுப் பெரிதாக இருந்தது. வெண்டை, தக்காளி, பச்சை மிளகாய், அவரைப் பந்தல், சில காய்கறிச் செடிகள்; கூரை முகப்பில் பூசணி படர்ந்திருந்தது. ஒரு மாடத்தில் அம்மனின் முகம் போல ஒன்று செதுக்கப்பட்டு அதில் இரு பிரிவுகளாக துளசியும், தும்பையும் இருந்தன; ‘எங்க மாமியா வூட்டு சாமி, கன்னி பரமேசுரி, கும்புட்டுக்க கௌரி.’ அந்த அம்மன் முகம் அசப்பில் ஆச்சி முகம் போலத்தான் எனக்கிருந்தது.
‘உங்க வீட்டாரு செய்ற மாரி செய்ய மாட்டோம்; இது சீனியும், துருவலும் போட்டு செஞ்ச சேப்பு அவல் புட்டு, எடுத்துக்க தாயி’
அம்மா நிறைய நெய் ஊற்றி அரிசிப் புட்டு செய்வாள்; இந்த எளிமையில் ஏதோ இனம் புரியா ருசி இருக்கிறது-அது அன்பின் ருசியோ என்னவோ?
செங்கல் பாவி சிமெட்டிப் பால் ஊற்றி இறுக்கி வெள்ளை வண்ணம் பூசி விறகால் எரிந்து கொண்டிருந்த அடுப்புகளின் மேல் ஆறு சர்வங்களில் இருவர் நெல் புழுக்கிக் கொண்டிருந்தார்கள். என்ன ஒரு மணம்! பெரிய நான்கு அண்டாக்களில் நெல்லை ஊற வைத்தார் ஒருவர். புழுக்கிய நெல்லை சரேலென்று சரித்து வடிகட்டினார்கள் நால்வர். பெரும் கரண்டிகளால் வரிசையாக இருந்த பெரும் வாயகன்ற சமச்சீரான தவளைகளில் போட்டு கும்மாடத்தால் அமிழ்த்திப் புடைத்து உமியை வெளியேற்றினார்கள் மூவர். அத்தனையும் உடலுழைப்பு. பின்னரும் முறத்தில் போட்டு புடைத்து எடுத்தார்கள். தொழுவத்தில் இருந்த எருமைகளும், ஒரு பசுவும் கன்றும் நெல் களைந்த நீரை ஆசையாகப் பருகுவதைப் பார்த்தேன். ஆச்சி என்னை மீளவும் வீட்டிற்கு கொண்டு வந்து விட்டாள்; கண்ணாடி வளையல்கள், பருத்திப் பாவாடை, மேல்சட்டை, தாவணி, கண்மை பனைச் சிமிழில், குங்கமமும் அதைப் போலத்தான்.
அப்பா ரிடையர் ஆகப் போவதால் எனக்குப் பதினெட்டு வயதில் திருமணம். ஆச்சி தானே தன் கிராமத்திலிருந்து அனைத்து வேலைகளுக்கும் ஆட்களைக் கூட்டி வந்தாள். பதினெட்டு வண்ண பனைக் கொட்டான்களில் அனைத்து வகை அவல்கள்; ‘எம் மவளுக்கு, கட்டு சாதமில்ல கொடுக்கேன்’
எனக்கு அம்மா,அப்பாவை விட ஆச்சியைப் பிரிவது அவ்வளவு வேதனையாக இருந்தது. கிளம்புகையில் தனியே அழைத்துச் சொன்னாள் “கௌரிம்மா, மாசில்லாத ஊருணித்தண்ணி இனிச்சது நெனப்பிருக்கா; இந்தா இருக்காரே பூவாட நாதரு;அவரது கோயிலுக்குள்ளாற இருக்கே கேணித் தண்ணி, அது அம்புட்டு இனிக்காது; தலேல வக்குற பூவு வாசம், பதார்த்தத்ல எறங்கிடுச்சுனா உண்ண ஏலாது. நாவு இனிக்க ஒரு தண்ணி, ஊரே மணக்க ஒரு நீரு.” எனக்குப் புரிந்தும் புரியாததுமாக இருந்தது.
வாக்கப்பட்டு வந்த ஊரில் ஜீவனே இல்லாத தண்ணீர்தான். ருசி பேதங்கள் கடுத்தன. நான் கர்ப்பமானேன். வளைகாப்பு, சீமந்தம் முடிந்தவுடன் மீண்டும் பூவாடையூர். என் குழந்தைக்கு முதல் செவ்வெண்ணை ஆச்சிதான் வைத்தாள். அம்மா இதற்கெல்லாம் போட்டிக்கு வர மாட்டாள். ‘பசுவும், கன்னுமா போய் வாழயும் வரப்புமா வளரு தாயி’ என்று ஆச்சி சொல்கையில் ஏனோ அழுகை முட்டிக் கொண்டு வந்தது. அது பெண் குழந்தை. என் புக்ககக் குடும்ப வழக்கப்படி அனன்யா தவழ்ந்து உட்காருகையில் காது குத்தும் விழா. குழந்தைக்கும் பதினோரு மாதங்கள் ஆகிவிட்டது. மீண்டும் பிறந்த ஊருக்கு வர, சீராட இதெல்லாம் நல்ல வாய்ப்பு அல்லவா?
விபாபாரத்தை முடித்துவிட்டு வந்தாளென்றால், குழந்தையை மடியை விட்டு இறக்க மாட்டாள் ஆச்சி. ‘ஆச்சி, ஊருக்கு வந்துடுங்க,உங்க மக, பேத்தி எல்லாரோடையும் இருக்கலாமில்ல’ என்று சொல்வேன், சிரிப்பாள் ஆச்சி. மறுப்பதை மறைக்கும் சிரிப்பு அது.
அந்த ஒரு நாள் ஏன் அப்படி விடிந்தது? எந்தக் கணக்கில் முத்துக் கன்னி ஒர் உயிரைக் கொண்டு வந்தாள், பதினோரு மாதம் சொர்க்கத்தை எனக்குக் காட்டினாள்? எந்தக் கணக்கில் என்னையும் ஆச்சியையும் பிரித்தாள்? அந்தக் கணத்தை ஏன் கனமானக் கல்லாக என் மனதில் ஏற்றினாள்?
அனன்யாவை முன் வராந்தா தரையில் சிறு மெத்தையின் மேல் படுக்க வைத்து இரு பக்கமும் தலையணையை அண்டக் கொடுத்துவிட்டு நான் முகப்பில் பிச்சிப்பூ பறிக்கப் போனேன். கொட்டு மேளம் கேட்டது. அம்மையும், அப்பனும் ஆனித் திருமஞ்சண ஊர்வலத்தில். சங்கொலி, உடுக்கை சத்தம், நாகஸ்வரம்; எல்லாவற்றிற்கும் மேலாகப் பரவி வரும் பூ வாசம். ஆச்சி தலைச்சுமையை வராந்தாவில் வைத்துவிட்டு ‘சின்னப் பூவு வொறங்குது, கனா கண்டு சிரிக்குது’ என்றவாறே என் அருகில் வாசலில் வந்து நின்றாள். எங்கள் வீட்டுத் திண்ணையிலும் போவோர் வருவோர் ஏறி தரிசனத்திற்காக நின்றார்கள். ஜவ்வாதும், மருக்கொழுந்துமாக முன் வாசம்; வெட்டி வேரில் பின் வாசம். ‘வாசலுக்கு சாமி ஏன் வருது தெரியுமா? கிழடு, சிறுசு எல்லாம் நடந்து போய் பாக்க முடியாதில்ல;’ என்றாள் ஆச்சி. நான் குழந்தையை எடுத்துவர உள்ளே ஓடினேன். தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்ட அனன்யா தட்டுத் தடுமாறி நடந்து வந்து அவலை அள்ளி அடைத்துக் கொண்டிருக்கிறாள்; அது மூச்சுக் குழாயில் சிக்கிச் சொருகி அடைத்து என் குழந்தை காற்றிற்குத் திணறி இறந்திருந்தாள்; ‘ஐயோ,ஆச்சி கொன்னுட்டீங்களே’ என்று அலறிவிட்டேன்.
ஆச்சி திகைத்து நின்றாள். ஒரு வார்த்தை பேசவில்லை. வாசலுக்குச் சென்றாள். ‘மொட்டுக் கன்னி, உம்மேல ஆண-இனி அவல் செய்ய மாட்டேன், விக்க மாட்டேன்.’
ஆச்சி இந்தக் குழந்தையைப் பார்க்க வர வேண்டும்; கொஞ்ச வேண்டும். எனக்கு அவள் வீடு தெரியும்.ஆனால்…..
what a wonderful story . Ended at the right place with a right word . Even after reading, it lingers on your mind for a long time.
LikeLike