கி. ராஜநாராயணன்
ராயங்குல ஸ்ரீ கிருஷ்ண ராஜ நாராயணப் பெருமாள் ராமானுஜ நாயக்கர் என்னும் இயற்பெயர் கொண்ட கி.ரா கோவில்பட்டி அருகிலுள்ள இடைச்சேவல் கிராமத்தைச் சேர்ந்தவர். 1923ல் பிறந்தவர். அண்டை வீட்டுக்காரரான கு.அழகிரிசாமி இவரது பால்ய சிநேகிதர். இருவரும் சாகித்ய அகதமி விருது பெற்றவர்கள்.
கரிசல் வட்டாரத்து மக்களின் வாழ்க்கையைச் சொற்களால் படம் பிடித்துக் காட்டியவர். விவசாயக் குடும்பத்தில் பிறந்த, அதிகம் படிக்காத இவர், பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் சிறப்புப் பேராசிரியராகப் பணியாற்றியவர். எண்ணற்ற விருதுகள் பெற்ற இவர் பாண்டிச்சேரியில் வாழ்ந்துவருகிறார்.
** ** ***
இவரது “காய்ச்ச மரம்” என்னும் கதை
நிம்மாண்டு நாயக்கர் பெரிய சம்சாரி. எம்பது ஏக்கர் கருசக்காடு, நாலு சோடி உழவு மாடு. தொழு நிறைய கால்நடைச் செல்வங்கள். நிறைஞ்ச வெள்ளாமைக் குடியிருக்கும் வீடு. பூர்வீக வீடு போக மூணு கார வீடுகள்.
என்று தொடங்குகிறது.
நிம்மாண்டு நாயக்கரின் மனைவி பேரக்காள். நான்கு பெண் மக்களுக்கும் நான்கு ஆண் பிள்ளைகளுக்கும் நல்ல குடும்பங்களில் சம்பந்தம் செய்து… பேரப்பிள்ளைகள் எடுத்து .. பெரிய ஆலமரம்தான் அவர் குடும்பம். பேரக்காள். கொண்டுவந்த 1௦௦ பவுன் நகைகள் பெண்களுக்கும் பேரக்குழந்தைகளுக்கும் போட்டாயிற்று
சொத்தைப் பிரித்துத் தந்துவிடவேண்டும் என பிள்ளைகள் விரும்புகிறார்கள். நேரடியாகக் கேட்காவிட்டாலும் பெரியவர் காதிற்கு எட்டிவிடுகிறது. பருத்திக்காடு சென்று திரும்பும்போது, ஒரு மரத்தடியில் பெரியவரும் அவர் மனைவியும் அமர்கிறார்கள். அப்போது பையன்கள் ஆசைப்படுகிறார்களே என்ன செய்யலாம் என மனைவிடம் கேட்கிறார் நிம்மாண்டு.
“இதிலே என்ன இருக்கு? எப்ப இருந்தாலும் அவங்ககிட்ட ஒப்படைக்க வேண்டிய பாரம்தானே, பிரிச்சுக் கொடுத்திட வேண்டியது தானே? நமக்கும் வயசாகிப் போச்சு. கிட்ணா, ராமான்னு உட்கார்ந்து சாப்பிட வேண்டிய காலத்திலே ஏன் இப்படி லோலோன்னு அலைஞ்சு திரியணும்” என்றாள் பேரக்காள்.
பையன்களை அழைத்து முடிவினைத் தெரிவிக்கிறார். ஒரு மத்யஸ்தரை அழைத்து வரச் சொல்கிறார். நீங்களே பிரித்துவிடுங்களேன் என்று பிள்ளைகள் சொல்ல கட்டாயம் மத்தியஸ்தர் வேண்டும் என்று சொல்லிவிடுக்ரர் நாயக்கர்.
பையன்கள் நால்வரும் பாறைப்பட்டி கந்தச்சாமி நாயக்கரைக் கூட்டி வந்தார்கள். பாறைப்பட்டி நாயக்கர் எல்லோருக்கும் பொதுவானவர். ஊர்ப் பெரிய மனுசன். தெற்கு வடக்கு போய் வரும் மனுசன். விபரம் தெரிந்தவர்.
பாறைப்பட்டி நாயக்கர் வந்தார். “வாங்க பாறைப்பட்டி மாப்ள!” என்று சிரித்தபடி நிம்மாண்டு நாயக்கர் வரவேற்றார்
வெற்றிலை எச்சில் துப்ப வசதியாக் தொழுவத்திலேயே அமர்ந்துகொண்ட கந்தச்சாமி, பேரக்ககாள் கொடுத்த காப்பியைக் குடித்து விட்டு விவரம் கேட்டுக்கொள்கிறார்.
வீட்டிலிருந்த பருத்தி, வத்தல், மல்லி, தானியங்கள் உட்பட மொத்த சொத்தும் நான்கு பாகங்களாகப் பிரிக்கப் பட்டன. எல்லாம் வாய்க்கணக்காகவே. சரி தானே என்று கேட்டார் பாறைப் பட்டி. பையன்கள் தங்கள் மனைவிமார்களிடம் சென்று கலந்து பேசினார்கள். பின்பு வந்து சரி என்றார்கள்.
நான்கு பாகங்களையும் நான்கு துண்டிச் சீட்டில் எழுதி குலுக்கிப் போடப்படுகிறது. ஒவ்வொரு பையனும் எடுத்த சீட்டில் உள்ளது அந்தப் பையனுக்கு. அதில் ஆளுக்கு ஒரு வீடு இருந்தது. ஒவ்வொரு வீட்டிலும் சில சௌகர்யங்களும் சில அசௌகர்யங்களும் இருந்தன. கிடைத்த வீட்டின் அசௌர்யங்கள்தான் அந்தந்த மருமகளின் கண்களில் பட்டன. பூர்வீக வீடு அண்ணனுக்குக் கிடைத்ததில் தம்பிகளுக்கெல்லாம் வயத்தெரிச்சல்.
பாகப்பிரிவினை ஒருவழியாக முடிந்தது. என்றாலும் நிம்மாண்டு பூர்வீக வீட்டுக்குள் சென்று பெரிய வெங்கலத் தவலையைத் தூக்கி வந்தார். எல்லாம் வெள்ளைக்காரன் காலத்து வெள்ளிக் காசுகள் 2000 இருந்தன. அவற்றையும் சம பங்காக பிள்ளைகளுக்குக் கொடுத்தார். நிம்மாண்டு. (இந்த இடத்தில் ஒரு கணக்கு 12 வெள்ளிக்காசுகள் ஒரு பவுன் தங்கத்திற்கு சமமாம்.)
அந்தக் காலத்தில் 12 வெள்ளிக் காசுகளுக்கு ஒரு பவுன் தங்கம் வாங்கலாம். மொத்தம் 2000 காசுகள் இருந்தன. காசுகளையும் சரிசமமாகப் பகிர்ந்தார்கள்.காசுகளை மகன்களுக்குப் பகிர்ந்து கொடுக்கும் போது நிம்மாண்டு நாயக்கரின் முகத்தைப் பார்க்கணுமே . மனுசன் முகத்திலே ஒரே சந்தோசம்.
மகன்களுக்கும் மகிழ்ச்சி. என்றாலும் ‘பொல்லாத கிழவரு’ மேலும் பணத்தை புதைத்து வைத்த்திருக்கலாம் என்கிற சந்தேகமும் இல்லாமலில்லை.
பணத்தைப் பகிர்ந்தது சரியில்லையே என்று பாறைப்பட்டி கவலைப்படுகிறார்.
“இப்போ இந்தக் கிழவர் பண்ணியது வம்பான வேலை. பையன்களுக்கு ஏற்கெனவே போதுமான அளவு கொடுத்திருக்கு. வத்தல், பருத்தி, உளுந்து, மல்லி முதல் கொண்டு அவ்வளவும் கொடுத்தாச்சு. இப்பப் போயி இவரு ஏன் பணத்தையும் பகிர்ந்து கொடுக்கணும். நோக்காடு, சாவுன்னா பிரயோசனப்படுமே” என்று பாறைப்பட்டி நினைத்துக் கொண்டார்.
நிம்மாண்டு, பாறைப்பட்டியைப் பார்த்து சொன்னார், “இத்தனை நாள் பிள்ளைகள் என் கையை எதிர்பார்த்து இருந்தாங்க . இனி நான் அவங்க கையை எதிர்பார்த்து இருக்கணும்” என்று சொன்னார்.
இருக்கிறது எல்லாத்தையும் கொடுத்தாகிவிட்டது. மூணு வேளைக் கஞ்சி, கட்டிக்கிடத் துணி, தலைக்கு எண்ணெய் இவைதான் இனி தேவை என்று பிள்ளகளிடம் சொல்லிவிடுகிறார். மாதம் ஒரு பையனிடம் என்று முறை. முதல் சுற்று நல்ல கவனிப்போடு சந்தோஷமாகச் சென்றது. ஆனால், நாளாக நாளாக நிலைமை மோசமானது.
மூன்று வேளைச் சாப்பாடு இரண்டு வேளை ஆனது. இரண்டு வேளைக் காப்பி ஒரு வேளை ஆனது. பேரக்காள் பிரியமாய்ப் போடும் வெற்றிலையும் நிறுத்தப்பட்டது. அடுத்த அடுத்த மாதங்களில் தலைக்கு எண்ணெயும் போச்சு, உடு மாத்துத் துணி குறைஞ்சாச்சு.
இருவரும் வற்றி, மெலிந்து, சாயம் போன கந்தல் துணி போலாகிவிட்டார்கள். எண்ணெய் காணாத தலை பிசுபிசுவென்று ஆகிப்போனது.
அப்பா அம்மாவைப் பார்த்துப் போக வந்த சின்ன மகள் நிலைமையைப் புரிந்து கொள்கிறாள். கோபத்தோடும் ஆங்காரத்தோடும் அண்ணன்களையும் மதினிகளையும் திட்டித் தீர்க்கிறாள். பெற்றோர் குனிந்த தலை நிமிராமல் கண்ணீர் வடிக்கிறார்கள்..
தன்னோடு வந்து விடும்படி மகள் சொல்ல ‘சம்மந்தக்காரங்க’ வீட்டுல போய் இருக்கிறது சரியில்லை என்று சொல்லிவிடுகிறார் நிம்மாண்டு.
“எங்கேயாவது கண்காணாத இடத்துக்குப் போயிருவோமா?” என்று யோசிக்கிறார்கள். நடுவுள்ள மகள் வருகிறாள். அப்பா, அம்மாவுக்குப் பிடிச்ச பலகாரம் பண்டமெல்லாம் கொண்டு வருகிறாள். கொஞ்சம் பணமும் கொடுக்கிறாள்.
ஒரு நாள் அதிகாலை வயசாளிகள் இருவரும் கோவில்பட்டி புறப்பட்டுப் போனார்கள். தெரிந்தவர்கள் கண்ணில் படாமல் பயந்து பயந்து நடந்தார்கள். கம்மலையும், வெள்ளி அரணாக் கயித்தையும் விற்றார்கள். சாமியைக் கும்பிட்டு ரயிலேறி மதுரைக்குப் போனார்கள்.
மதுரை ரயில்வே ஸ்டேசனில் கணக்கு வழக்கில்லாத கூட்டம். என்ன செய்வது, எங்கே போவதென்று தெரியாமல் திண்டாடுகிறார்கள். பேரக்காவிடம் ஒரு சின்ன குழந்தை வந்து ஒட்டிக்கிகொள்கிறது. குழந்தையின் குடும்பம் இராமேஸ்வரம் போகிறது.. இவர்களும் ராமேஸ்வரம் போகலாம்னு முடிவு செய்கிறார்கள்.
கண்காணாமல் போன சமாச்சாரம் முதலில் ஊருக்குத் தெரிந்து, பிறகுதான் பிள்ளைகளுக்குத் தெரிகிறது. பிள்ளைகள் மனசு பதறுகிறது. மருமக்கமார்கள் ‘எங்கனயாவது கிடக்கும்’னு எரிச்சலோடு சொல்கிறார்கள்
கிணத்தில் ஒரு தாத்தாவும் பாட்டியும் பிணமாக மிதப்பதாகச் செய்தி வருகிறது. ஓடிப்போய் பார்த்ததில் வேறு யாரோ என்று தெரிகிறது. பிள்ளைகள் கொஞ்ச நாள் தாய் தகப்பனை ஓடி ஆடித் தேடுகிறார்கள். ஒரு தகவலும் கிடைக்கவில்லை. ஐந்து வருடங்கள் கழிந்து விடுகின்றன. இவர்களை ஊரே மறந்து போய்விடுகிறது.
வேண்டுதலுக்காக ராமேஸ்வரம் போன பாறைப்பட்டி நாயக்கர் கோவில் வாயிலில் இரண்டு பக்கத்திலும் பிச்சைக்காரர்கள் இடையே நிம்மாண்டுவையும் பேரக்காளையும் பாத்து திகைக்கிறார். பாறைப்பட்டி நாய்க்கர் தற்செயலாகத் திரும்பிப் பார்க்கிறார்.
ரெண்டு பேர் தலையும் மொட்டை போட்டிருக்கு. பாறைப்பட்டியால தாங்க முடியல. தலையில தலையில அடிச்சுக்கிட்டார். ‘கோன்னு’ அழுதார்.
வயசாளிகள் இருவரும் அழவில்லை. கண்ணில் இருந்து ஒரு பொட்டுக் கண்ணீர் வரலை. நிம்மாண்டு நாயக்கர் பாறைப்பட்டி நாயக்கரை முன்னப் பின்ன தெரியாத ஆளைப் பார்ப்பது போல் பார்த்தார்.
பேர்க்காளுக்கு பாறைப்பட்டி நாயக்கரை அடையாளம் தெரிந்தது. வாயைத் திறந்து ஒரே ஒரு வார்த்தை மட்டும் பேசினாள்.
“எம்பிள்ளைக எல்லாரும் நல்லா இருக்காகளா?”
என்று முடிகிறது கதை.
** ** ** ** **
‘முதுமக்கள்’ என்று இன்னொரு கதையும் உண்டு. சொத்தை ஐந்தாகப் பிரித்து ஒரு பங்கை தங்களிடமே வைத்துக்கொண்டு மற்ற நான்கு பாகங்களை நான்கு மகன்களுக்கும் பிரித்துக் கொடுத்து நிம்மதியாக வாழ்ந்த தம்பதியரின் கதை இது. தங்கள் வசமிருந்த தோட்டம் துறவு மற்றும் கால்நடைகள் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு எந்தக் குறையும் வராமல் பார்த்துக் கொள்கின்றன. வந்திருந்த விருந்தாளிக்கு ஆட்டுப்பால் காப்பி கொடுத்து உபசரிக்கும் அளவுக்கு வசதியாக வாழ்கிறார்கள்.
கரிசல் வட்டார வழக்கில் இவரது பல படைப்புகள் இருந்தாலும், எளிய நேரடியான மொழியில் குறிப்பிடத்தக்க பல கதைகள் எழுதியிருக்கிறார். இவர் எழுதிய கதைகளில் ’இடக்கர் அடக்கல்’ அற்ற, வட்டர வசைச் சொற்கள் விரவிய கதைகளாகத் தேர்ந்தெடுத்துப் பிரசுரித்தது ஒரு பிரபல வாரப் பத்திரிகை. அதனால், கி ரா என்றாலே வட்டார வழக்கு, கொச்சையான படைப்புகள் என்று மாயை நிலவி வருகிறது என்று சொல்லலாம்.
இவரது கோபல்ல கிராமம் கதையின் ஒரு அத்தியாயத்தைப் படித்துக்கொண்டே பேருந்தில் பயணம் செய்தேன். அப்போது, பல முறை வாய்விட்டுச் சிரித்தததும், சக பயணிகள் கேலிப் பார்வைகளை என் முதுகில் உணர்ந்ததும் … அது வேறு அனுபவம்.
மெல்லிய நகைச்சுவையும் யதார்த்தமான கதை மாந்தர்களும் இவர் கதைகளின் சிறப்பம்சம்.
எஸ். கே என்.