இந்த இதழின் அட்டைப்படம் தயாரித்தவர் ஸ்ரீனி ராஜா!( நன்றி)
மின்னிதழ் பற்றிய கருத்தரங்கில் வந்த முதல் ஆலோசனை அட்டைப்படத்தை சிறப்பாக வடிவமைப்பது.
அதன்படி இந்த இதழின் முக்கியக் கட்டுரையான உலக இதிகாசங்கள் தொடரை விளக்குவதுபோல அமைந்திருக்கிறது அட்டைப்படம்
இனி தரமான சிறப்பான அட்டைப்படம் தொடர்ந்து வரும்.
இதிகாசம் என்பது ஒரு நாட்டின் அடையாளச் சின்னம்.
அது சரி! இதிகாசம் என்பது எது?
ஒரு நாட்டின் அல்லது இனத்தின் செவி வழியாக வந்த பண்டைய நிகழ்வுகளை – குறிப்பாக கதையின் நாயகனின் வீரதீர சாகசச் செயல்கள் மூலம் விவரிக்கும் பெரிய பாடல்கள் நிறைந்த காவியம் இதிகாசம் ஆகும்.
பல சிறு கதைகளைக் கொண்ட பெரிய கதை. அதை ஒருவரே எழுதியிருக்கலாம். அல்லது பலர் சேர்ந்து அமைத்திருக்கலாம்.
பாடல்கள் அவற்றின் முக்கிய அம்சம்.
இதிகாசங்கள் எப்படித் தோன்றியிருக்கும் என்பதற்கு பல விளக்கங்கள் கூறப்படுகின்றன.
அவை மனிதர்களின் மனத்திலிருந்து உதித்தவை என்பதில் ஐயமில்லை.
எப்படி அவர்கள் மனத்தில் இப்படி நம்ப இயலாத நிகழ்ச்சிகள் எல்லாம் தோன்றியிருக்கும்? இன்று நாம் படிக்கும்
மனோதத்துவ நிபுணர் பிராய்டின் தத்துவத்தைக் கொண்டு இதை ஒருவர் விளக்க முயலுகிறார்.
மனதின் ஆழத்தில் புதைக்கப்பட்டுள்ள நினைவுகளற்ற தொல்பொருள்களின் கூட்டுக் கலவையிலிருந்து வெளிப்படும் கற்பனைகளும், கதைகளும் தான் இதிகாசங்களாகின்றன என்கிறார்.
பல்லாயிரம் ஆண்டுகளாக மனிதன் மனத்தில் பதிந்த ஆழ்ந்த பழமையான நம்பிக்கைகளும் எண்ணங்களும்தான் மந்திர தந்திரங்களாக மதங்களாக உருவெடுக்கின்றன. பின்னர் அவை சொற்களில் வரும்போது இதிகாசங்களாக மாறுகின்றன என்று அவர்கள் அதற்கு விளக்கம் கொடுக்கிறார்கள்.
இதனால் இதிகாசங்கள் என்பவை வெறும் கட்டுக்கதைகள் என்ற தவறான வரைமுறைக்குச் சென்றுவிடக்கூடும்.
அதீதமான கற்பனைகளுடன் பகுத்தறிவும் கலந்து படைத்தவையே இதிகாசங்கள் என்பது ஆராய்ந்து அறிந்த அறிஞர்களின் கூற்று .
பழங்குடி மக்களின் கலாச்சாரத்தை ஆராய்ந்து அதன் மூலம் இதிகாசங்களின் மூலக்ககூற்றை வரையறுப்பது ஒரு வகை.
சமூக மானிடவியலை ஆராய்வது இரண்டாவது வகை. இதன்படி சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் கதைகளுடன் சேர்த்து ஆராய்வது முக்கியமாகிறது.
ஆனால் இவை எல்லவற்றையும்விட இந்த தொன்மக் கதைகள் எல்லாம் மனித இனம் தங்கள் அனுபவங்களின் துணை கொண்டு வெளிப்படுத்திய எறிகாட்சி என்று சமீபத்திய ஆராய்ச்சி கூறுகிறது. அதாவது, மனிதன் தான் பெற்ற மற்றும் கற்ற அனுபவங்களை பெரிதுபடுத்தி நீட்டிப் பார்க்கும் (PROJECTIONS) முயற்சியின் விளைவே இதிகாசம் என்பது இவர்கள் வாதம்.
இந்த முன்னுரையுடன் இதிகாசம் என்ற இலக்கிய வடிவின் குணங்களைப் பார்ப்போம்.
- இதிகாசம் என்பது நடுவில் ஆரம்பிக்கவேண்டும். அதற்கு முன் நடைபெற்ற நிகழ்ச்சிகளை கதையின் போக்கில் பிறகு சொல்லலாம்.
- பல நாடுகள், உலகங்கள் கதையின் ஊடே வரவேண்டும்.
- துவக்கத்தில் கடவுளின் துதி இருக்கவேண்டும்.
- காவியத்தின் கருத்தை முன்னுரையாகச் சொல்ல வேண்டும்.
- கதை மாந்தர்களின் பட்டப்பெயர்களைச்ச சேர்த்துக் குறிப்பிடவேண்டும்.
- நீண்ட பேச்சுக்கள் இருக்கவேண்டும்.
- மனித முயற்சிக்கு கடவுள் துணை வருதல் அவசியம்
- கதை நாயகன் அன்றைய நாகரிகத்தைப் பிரதிபலிக்கும் சக்தியாக இருக்கவேண்டும்
- கதை நாயகன் வீர தீர செயல்கள் புரியவேண்டும்.
- தவறு இழைத்த முக்கிய கதை மாந்தர் கதை முடிவில் நரகத்திற்கோ பாதாள உலகத்திற்கோ செல்லவேண்டும்
நம் இந்தியாவில் ராமாயணமும் மகாபாரதமும் இதிகாசங்கள் என்று போற்றப்படுகின்றன
உலகத்தின் மிகப் பிரபலமான இதிகாசங்கள் என்று குறிப்பிடுபவை
- சுமேரியர்களின் கில்கமேஷ்
- ஹோமரின் இலியட்
- ஹோமரின் ஆடிஸி
- வால்மீகியின் ராமாயணம்
- வியாசரின் மகாபாரதம்
- வர்ஜிலின் ஏனிட்
- ஓவிட்டின் மெடமார்பசிஸ்
- ஃபிர்டௌசி
- பியோ உல்ஃப்
- அரியோஸ்டோ வின் அர்லான்டோ
இவை தவிர நூற்றுக் கணக்கான இதிகாசங்கள் பல்வேறு நாடுகளில் இனங்களில் கலாசாரங்களை விளக்கும் கருவிகளாக இருந்து வருகின்றன.
ஆப்பிரிக்க நாடுகள்(எகிப்து),
தென்மேற்கு நாடுகள் ( பெர்ஷியா, அராபியா ),
கிழக்கு ஆசியா ( கொரியா, துருக்கி, ஈராக்), தெற்கு ஆசியா ( இந்தியா,இலங்கை, மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், பர்மா),
ஐரோப்பா ( ரோமர்கள்,கிரேக்கர்கள், ஸ்பானிஷ், இங்கிலாந்து, ஐரிஷ், ஜெர்மனி)
இப்படி எண்ணற்ற நாடுகள் தங்கள் கலாசாரங்கள் பிரதிபலிக்கும்படி பல இதிகாசங்களைத் தோற்றுவித்திருக்கின்றன.
இவற்றுள் ஒரு மாபெரும் அதிசயம் என்னவென்றால் பல நாடுகளில் பவனிவரும் அந்த இதிகாசங்களுக்கிடையே பல ஒற்றுமைகள் உள்ளன.
பிரளயம் பற்றி எல்லா இதிகாசங்களும் கூறுகின்றன. நோவாவின் படகு – மச்ச அவதாரம், மன்மதன் – குபிட் (CUPID), சீதையை இராவணன் கடத்துதல் – ஹெலன் பாரிஸால் கடத்தப்படல் , தேவர்களுக்கிடையே போட்டி, பொறாமை இப்படி எண்ணற்ற ஒற்றுமைகள் இருக்கின்றன.
மனிதர்கள் உலகத்தில் ஓரிடத்தில் இருந்து மற்ற இடங்களுக்கு புலம் பெயர்ந்திருப்பார்கள் என்ற தத்துவத்தை இது மெய்ப்பிக்கிறதோ? அப்படிப் புலம் பெயரும்போது தங்களுடன் இருந்த நம்பிக்கைகளையும் கதைகளையும் அவர்கள் எடுத்துச் சென்றார்களா? பின்னர் அந்தந்த நாடுகளுக்குத் தக்கவாறு அவை மாற்றி அமைக்கப்பட்டனவா? இதிகாசங்கள் உண்மையில் நடந்தனவா? அதற்கு ஆதாரங்கள் உண்டா? இன்றைக்குக் கணிக்கவே கடினமாக இருக்கும் வானவியல் கூற்றுக்களை அவர்கள் அநாயசமாகச் சொல்லுகிறார்களே, எப்படி? நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்ற மூலப் பொருட்களையும், கிரகங்களையும், கடவுளராக மாற்றியது ஏன்? பயத்தினாலா ?
உலகின் தலை சிறந்த ஆராய்ச்சியாளர்கள் இவற்றையெல்லாம் ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள்.
(சமீபத்திய செய்தி: இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே உள்ள ராமர் சேது பாலம் தோன்றிய காலத்தை நமது ஏ எஸ் ஐ, விஞ்ஞானிகளைக் கொண்டு ஆராயப்போகிறது)
அவை என்னென்ன என்பதையும் பல நாடுகளின் இதிகாசக் கதைகளையும் இனி வரும் அத்தியாயங்களில் பார்ப்போம்.
நமது முன்னோர்களின் அனுபவங்களையும் கதை சொல்லும் திறனையும் நாம் வியந்து பாராட்டுவோம் என்பதில் சந்தேகமில்லை.
படிக்கும்போதே நமக்கும் சிறகு முளைப்பது போன்ற அனுபவம் வரலாம்.
பயணத்திற்கு நீங்கள் தயாரா?
(தொடரும்)
(Ref : The Indian Theogony by Sukumari Bhattacharji)