எலியாயணம்!
அசோகமித்திரனின் ‘எலி’ கதை வாசித்துக்கொண்டிருந்தேன் – சமையலறையில் ‘படார்’ என்ற சத்தம் கேட்டு, ‘விழுந்திருச்சு’ என்று கத்தியபடி புத்தகத்தைப் போட்டுவிட்டு ஓடினேன் – மர எலிப்பொறியின் கம்பிகளுக்குப் பின்னால், புதிதாய் ஜெயிலுக்கு வந்த கைதியைப் போல ’திரு திரு’ என முழித்தபடி ஓர் எலி தன் கூரிய மூக்கால் கம்பிகளைத் துழாவியவாறு நின்றிருந்தது. முகம் முழுதும் மரண பயம் அப்பியிருந்தது!
மேற்பக்கக் கம்பிகளின் வழியே ‘டாப் ஆங்கிள்’ வியூவில், சுமாரான பெரிய எலி, ஆசைப்பட்ட வடையை மறந்து, பரிதாபமாக வெளியேற வழியை முகர்ந்து பார்த்துக்கொண்டிருந்தது! யாரோ திருமணங்களை எலிப்பொறியுடன் ஒப்பிட்டது நினைவுக்கு வந்தது – வெளியிலிருக்கும் எலிக்கு உள்ளே வர ஆசை – வடையின் வசீகரம்!. உள்ளே மாட்டிக்கொண்ட எலிக்கோ வெளியே ஓடி விட ஆசை – ஆனால் வழியில்லை, வடை கூட தேவையில்லை!
வீட்டில் எலிகளின் லூட்டி இரவில்தான் அதிகமாயிருக்கும்! அந்தக் காலப் பரண்கள், நெல் பத்தாயம் என எல்லா இடங்களிலும் புழங்கும் எலிகள், இரவானால், இரையைத் தேடி, வீடு முழுவதும் வித விதமான ஓசைகள் எழுப்பியபடி, வலம் வருவது நம் தூக்கதைக் கெடுப்பது! எலிகள் சர்வ சுதந்திரத்துடன் ஓடியாடி விளையாடும்! இரவில் துணி உலர்த்தும் மூங்கில் கோல், பித்தளைத் தாம்பாளம், செய்தித்தாள்கள், பரண், பீரோ காலித் தகர டின்கள், எண்ணெய் ஜாடி என எலிகள் உருட்டும் சத்தம் எந்த ஒரு மர்மப் படத்தின் பின்னணி இசையையும் தோற்கடிக்கக் கூடியது!. மாவு டப்பாக்கள், ஊறுகாய் ஜாடிகள், எண்ணெய்த் தூக்குகள் என எல்லாவற்றையும் உருட்டித் தரை முழுதும் மாடர்ன் எண்ணெய்க் கோலங்கள்! விளக்குத் திரிகளை இழுத்துச் சென்று விடும் அபாயம் இருப்பதால், கிராமங்களில், இரவில் எண்ணெய் விளக்குகளை அணைத்து விடுவது பழக்கம்! ‘இரவினில் ஆட்டம், பகலினில் தூக்கம்’ என்று பாடாத குறைதான்!
சுண்டெலி, வெள்ளெலி (அடிப்பக்கம் மட்டும் வெள்ளையாக இருப்பது – சோதனைக் கூடங்களில் புதிய மருந்தையோ, வாக்ஸினையோ போட்டுக் கொள்ளும் தைரியசாலி – சில ஊர்களில் உணவாகவும் …..), ‘கீச் கீச்’ சென்று குரலெழுப்பும் வீட்டு எலி – மூஞ்சூறு, பெருச்சாளி (பெரிய சைஸ் எலி! சாக்கடை, டிரெய்னேஜ் வாசம், பெரிய மளிகைக் கடை, ஓட்டல்களில் ராவேட்டை!), வயல் எலி, கல்லெலி (தன் வளைகளைக் கற்களால் முடி வைக்கும் உஷாரு பார்ட்டி!) என எத்தனை வகை எலிகள்!
‘சரவெலி’ கொஞ்சம் சுவாரஸ்யமானது – பனை, தென்னை, ஈச்ச மர உச்சிகளில் கூடு கட்டி உயரே வாழ்பவை! இரவில் கீழே இறங்கி இரைக்கு அலையும்போது மட்டும் எல்லா எலிகளையும் போலத்தான் – சில மனிதர்கள் எவ்வளவு உயரம் போனாலும், வாழ்க்கை கீழேதான் என்பதை மறந்து விடுகிறார்கள், இந்த ‘சரவெலி’களைப் போல! (‘இன்னா, தத்துவமா?’ என்பவர்கள் ஜாக்கிரதையாக இருக்கவும் – தூக்கத்தில் பாதத்தைத் தேங்காய்ப் பத்தையைப் போல வருவும் எலிகள் ஏவிவிடப்படும்!).
சிறிய தலையும், நீண்ட வாலும், சற்றுப் பருத்த வயிறும் உள்ள ‘கொறி’ விலங்கு – பாலூட்டிகள் வகையில் அடங்கும் எலிகள்! உலகத்தின் எலிகளையெல்லாம் ‘கருப்பு எலி’, ‘மண்ணிற (பிரவுன்) எலி’ என்ற இரண்டு வகைக்குள் அடக்கிவிடலாம் என்கிறது கூகிளைக் க்ளிக்கும் ‘மவுஸ்’! எந்தப் பொறியிலும் மாட்டாவிட்டால், பிரவுன் எலி இரண்டு வருடங்களும், கருப்பு எலி ஒரு வருடமும் வாழும் சாத்தியம் உண்டாம்.
எலி பாஷாணம் – எலிகள் கொறிக்கும் உணவுப்பொருட்கள் போலவே இருக்கும் – ஆர்செனிக், சல்ஃபர், கொமாரின் போன்ற பல வகை ரஸாயனக் கலவை – கேக் மற்றும் பேஸ்ட் ஆகக் கிடைக்கின்றன. மனிதர்களுக்கும், நாய்களுக்கும் ஆபத்தானவை, மிக அதிகமான கவனம் தேவை. எலிகள் எங்கோ விஷத்தைத் தின்றுவிட்டு, வேறெங்கோ இறந்து கிடக்கும். உடல் நிலை சரியில்லை யென்றாலும், இறக்கும் தறுவாயில் இருந்தாலும், எலிகள் தங்கள் வளைக்குள் வந்து விடவே விரும்புமாம்.
‘கிரீச்’ எனக்கத்தும் எலிக்கு, வலி அல்லது பயம்தான் காரணமாம் – எதிர்பாராமல் நம் மீது பாயும் எலியைக் கண்டு நாம் கத்துவதற்கும் அதேதான் காரணம்! (வீட்லெ எலி, வெளீலெ புலி க்கும் இதற்கும் சம்பந்தம் கிடையாது!)
எலிப்பொறிகள் எண்ணெய்ப் பண்டங்களை வைத்து எலியைப் பிடிக்க உதவுபவை. மர எலிப்பொறிகளில் உயிருடன் மாட்டிக்கொள்ளும் எலிகள்! இரும்புப் பற்கள் (பீமன் பொறி), தடித்த இரும்பு வளையங்கள் கொண்டு எலிகளைப் பிடிப்பது மனதிற்கு வலியைத் தருவது – இரத்த வெள்ளத்தில் அல்லது இரும்பு வளையத்தில் இறந்துகிடக்கும் எலிகளைப் பார்த்தால் பாவமாயிருக்கும்.
பொறியிலிருந்து வெளியே விடப்படும் எலிகள் (சண்டை போடும் பக்கத்து வீட்டு அல்லது எதிர் வீட்டு வாசலில் விட்டு விடுவது பெரிய ராஜதந்திரம் – ‘யூ’ டர்ன் அடித்து, நம் கால்களுக்கிடையே ஓடி, திரும்பவும் நம் வீட்டுக்குள்ளேயே வராத வரையிலும் பெருமைப் பட்டுக் கொள்ளலாம்!), ஓடித் தப்பிக்கலாம்; நாய்களாலோ, பூனைய்களாலோ துரத்திப் பிடிக்கப் (கடிக்க!) படலாம்; செங்குத்தாகப் பறந்து வரும் காக்கையினால் கொத்திச்செல்லப்படலாம்! எலியின் விதியைப் பொருத்தது. வெளியே வரும் எலியை ஒரு சாக்கில் பிடித்து, கண நேரத்தில், துணி துவைப்பதைப் போல சாக்கைத் தரையில் அடித்துக் கொல்வது அராஜகமான கொலைக்குச் சமம்! வயல்களில் எலிகளுக்காகக் காத்திருக்கும் பாம்புகள், தப்பித்து வளைக்குள் ஓடும் எலிகள் – வாழ்க்கைப் போராட்டத்தின் குறியீடுதான்!
நாற்பது வகை வியாதிகளைப் பரப்ப வல்லவை எலிகள்! மழைநீர், உணவுப் பொருட்கள் இவற்றில் கலந்துவிடும் எலியின் சிறுநீர், எச்சல் போன்றவைகளால், எலிக் காய்ச்சல் (leptospirosis), ப்ளேக் போன்ற வியாதிகள் பரவலாக வரக்கூடும்.
ஒருமுறை என் காரில் வேலூர் செல்லும்போது, ஏசி வேலை செய்யவில்லை. சிறிது தூரம் சென்ற பிறகு, எஞ்சினில் கோளாறு என்று டேஷ் போர்ட் ஸ்க்ரீன் கண் சிமிட்டியது. ஸ்டீரிங் வீல் இறுகிப் போக, வண்டி, மாப்பிள்ளை ஊர்வலக் கார் போல, இஞ்ச் இஞ்சாக நகர்ந்தது. வண்டியை ஓரங்கட்டி, போனில் தொடர்பு கொண்ட சர்வீஸ் டீம், இரண்டு மணி நேரத்தில் வந்து, வலது முன் டயருக்கு உட்புறம் எஞ்சினின் அடிப்பக்கத்தில் சில ஒயர்களை எலி கடித்துத் துண்டாக்கியிருப்பது தெரிய வந்தது! வீட்டிற்கு வந்த பிறகுதான் தெரிந்தது, செக்யூரிடி, தேங்காய்த் துண்டுகளை காருக்கருகில் காயவைக்கிறார் என்று – பிறகு என்ன, காரின் அடிப்பக்கத்துக்கு எலி ஸ்ப்ரே, புகையிலைக் கட்டு, வலை என்று ஏக காபந்து!
‘எலிக்கு மரணவலியாம், பூனைக்குக் கொண்டாட்டமாம்’, ‘எலி வளையானாலும் தனி வளை தேவை’, ‘அறுப்பு காலத்தில் எலிக்கு ஏழு பொண்ணாட்டியாம்’, ‘சிங்கம் இளைச்சா, எலி மச்சான் முறை கொண்டாடுமாம்’ – இந்தப் பழமொழிகள் எலிகள் எப்படி நம் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்துள்ளன என்று சொல்கின்றன!
அசோகமித்திரனின் ‘எலி’ கதையைப் படித்ததால் வந்த எண்ண எலிகள் இந்தக் கட்டுரை – அவசியம் வாசிக்க வேண்டிய கதை ‘எலி’! தி.ஜா. வின் ‘சங்கீத சேவை’ – ஒரு சங்கீத எலியின் மேல் நாட்டு அனுபவத்தைப் பகடி செய்கிறது!
‘எலிப்பத்தாயம்’ (தமிழில் பத்தாயம் என்றால் எலிப் பொறியாம்) அடூர் கோபாலகிருஷ்ணனின் தேசீய விருது பெற்ற மலையாளப் படம்.
உலகின் எல்லா வயதினரும் சிரித்து மகிழும் கார்டூன் –
‘டாம் அண்ட் ஜெர்ரி’! எலியும், பூனையும் அடிக்கும்கொட்டம் விலா நோக வைக்கும் சிரிப்பு – எலியின் சாமர்த்தியமும், சுறுசுறுப்பும்,புத்திசாலித்தனமும்அபாரமாயிருக்கும். இந்த அனிமேஷன் படத்தை உருவாக்கிய வில்லியம் ஹன்னா, ஜோசஃப் பார்பெராபாராட்டுக்குரியவர்கள்!
“சுவாமியால் தான் வாகனத்துக்குக் கெளரவம் – அந்த கெளரவத்தைக் கொடுக்க, மூஞ்சூறுக்கேற்றபடி கனம் இல்லாமல் நெட்டியில் செய்த மாதிரி இருக்கிறாராம் பிள்ளையார். ‘பக்தர்கள் இருதயத்தில் கனக்காமல் லேசாக இருப்பேன்’ என்று காட்டுகிறாராம்!” – தெய்வத்தின் குரலில் மஹா பெரியவா.
பெருச்சாளி இருளை விரும்பும். கீழறுத்துச் சென்று கேடுதனை விளைவிக்கும். ஆதலின் அது அறியாமை அல்லது ஆணவ மலத்தைக் குறிக்கிறது. இவற்றை அடக்கி நம்மை ஆட்கொள்பவர் பிள்ளையார் என்பதைப் புலப்படுத்தவே தனது காலின் கீழ் பெருச்சாளியை வத்திருக்கிறார் என்ற ஒரு வியாக்கியானமும் உண்டு!
ஏதோ தம்ப்ளர் உருளுகிற சத்தம் வரவே, கிச்சன் பக்கம் தாவிச் சென்றேன் – டைனிங் டேபிள் மேல், கூடையில் இருந்த ஆப்பிளின் மேல் பக்கம் வருவியிருந்தது – நான் எழுதி முடிக்கும் வரை காத்திருந்ததோ என்னவோ!
ஜெ.பாஸ்கரன்
எலிப் புராணம் அருமை. எலியும் நம் உறவினர்களே என்று கருதுபவர்கள் ஜைனர்கள்.
LikeLike
அருமையான கட்டுரை; நகைச்சுவை; சுவையான சமாச்சாரங்கள். சிரித்து வயிறு வலித்தது; சிந்திக்கவும் வைத்தது!! மிக்க நன்றி!
LikeLike