ஒரு நாட்டில் இயற்கை மரணங்கள் தவிர்த்து செயற்கை மரணங்கள் இல்லாமலிருந்தால் எப்படி இருக்கும்?
நமது நாட்டில் விதிமுறைகளை மீறுவதால் நிகழும் விபத்து மரணங்கள் ஏராளம்.
மதவேற்றுமைகளை மையமாக வைத்து நடக்கும் வன்முறை மரணங்கள் ஏராளம்.
அமைதி போராட்டங்களினூடே ஊடுருவி சமூக விரோதிகளால் ஏற்படும் வன்முறை மரணங்கள் ஏராளம்.
கல்லூரி, பல்கலைக்கழக வளாகங்களில் உருவாகும் கோஷ்டி மோதல்களில் நடைபெறும் வன்முறை மரணங்கள் ஏராளம்.
மதுபோதையில் நண்பர்களிடையே ஏற்படும் சண்டைகளால் ஏற்படும் துர்மரணங்கள்.
பெண்களை போகப்பொருளாக எண்ணி பாலியல் வன்கொடுமையால் ஏற்படும் மரணங்கள்.
இப்படி அடுக்கி கொண்டே போகலாம். குற்றங்கள் பெருகும் ஒரு நாட்டில் இத்தகைய துர்மரணங்களுக்குஅளவு இல்லை;முடிவும் இல்லை.
ஆள்வோர் யாராக இருந்தாலும் குற்ற செயல்களைத் தடுக்கத் தவறி விடுகின்றனர்.
அங்கே கூற்றுவனுக்கு இடையறாத கூடுதல் வேலை. எமதர்மனுக்கு அந்நாடு களிப்பு களமாக திகழ்கிறது. குற்றங்கள் குறைந்து விட்டால் அல்லது குற்றச்செயல்களே இல்லாத ஒரு நாட்டில் எமனுக்கு அதிக வேலை கிடையாது. அவன் நன்கு ஓய்வெடுக்கலாம்.
நாடு என்பது நாட்டில் உள்ள இடங்களையும் இயற்கை வளங்களையும் மட்டும் குறிப்பதன்று. நாட்டு மக்களையும் உள்ளடக்கியே நாடு எனப்படும். மக்களின் தகைமை கொண்டே நாட்டின் தன்மை தீர்மானிக்கப்படும். செழுமையான சிந்தனை மற்றும் நேர்மையான எண்ணங்களை உடைய மக்களைக் கொண்ட நாடு நல்ல நாடு என்று பகிரப்படும். அங்கு அமைதி தவழும். சகோதர உணர்வு மிளிரும். சகிப்புத் தன்மைக்கு குறைவிருக்காது. எனவே மகிழ்ச்சி நிறைந்திருக்கும். சுருங்கக் கூறின் அதுவே பாருக்குள்ளே நல்ல நாடாக இருக்கும்.
அத்தகைய சிறப்பு மிக்க நாட்டை தசரதன் ஆண்டு வந்தான்.
கோசல நாட்டின் சிறப்பை கம்பன் கீழ்க்கண்ட பாடலில் விவரிக்கிறான்:
கூற்றம் இல்லை, ஓர் குற்றம் இல்லாமையால்
சீற்றம் இல்லை, தம் சிந்தனையின் செம்மையால்
ஆற்றல் நல்அறம் அல்லது இல்லாமையால்
ஏற்றம் அல்லது இழித்தகவு இலையே. (பாடல் 70)
கோசல நாடு:
குற்றங்கள் இல்லை — எமனுக்கு வேலையில்லை
நற்சிந்தனையுடை மக்கள் — மகிழ்ச்சியான வாழ்க்கை
அறவழி செயல்கள் — சிறப்பு மிக்க நாடு
மேலும் கம்பன் சொல்வான்:
வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால்
திண்மை இல்லை நேர்செறுநர் இன்மையால்
உண்மை இல்லை பொய்யுரை இலாமையால்
வண்மை இல்லை பல்கேள்வி மேவலால். (பாடல் 84)
தாராள மனப்பான்மை கொண்டு தானம் செய்வோர் அங்கில்லை. ஈகை நெஞ்சம் கொண்டோர் யாருமில்லை என்ற பொருள் இல்லை. அந்நாட்டில் வறுமை இல்லை. வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் வறியவர் இல்லை. கையேந்திப் பிழைப்போர் எவருமில்லை. அதனால் வாரி வழங்கும் வள்ளல்களுக்கு வேலையில்லை.
குடிமக்கள் பலசாலிகளாக இல்லை. சுகவாசிகளாக வாழும் மக்கள் உடற்பலம் மிக்கவர்களாக இருப்பதில்லை என்பது உலக இயல்பு. கோசல நாட்டை எதிர்க்கும் துணிவுடைய பகைவர்கள் இல்லாததால், அந்நாட்டு மக்கள் பதட்டமற்ற இனிதான வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். உடல் வலிமையை அதிகரிக்க வேண்டிய சூழல் எழவில்லை.
மேலும் உண்மை பேசுவோர் இவர்கள் என்று குறிப்பிட்டு சிறப்புற சொல்வதற்கான தேவை கோசல நாட்டில் எழவில்லை . ஏனென்றால் பொய் பேசுவோர் எவரும் இல்லை .
இறுதியாக, அந்நாட்டு மக்கள் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கியதால் “நான் மட்டுமே அனைத்தும் அறிந்தவன்” எனும் அறியாமை இருள் இல்லை. இதனால் யாரும் யாருக்கும் அடிமையில்லை எனும் சமத்துவமும் சமதர்மமும் தழைத்தோங்கியது.
கம்பன் கண்ட கோசலநாட்டின் சிறப்புகளை மீட்டெடுத்து இந்நாளில் ‘பாருக்குள்ளே நல்ல நாடு பாரத நாடு’ என்கிற பெருமை சேர்க்க நாமனைவரும் அவரவர் வழியில் முயற்சிப்போம்.
எளிமை ஆனால் அருமை.
LikeLike
கம்பன் கண்ட கோசல நாட்டின் பெருமைகளை எடுத்துரைத்து அவ்வழியில் நம் பாரத நாடும் மீட்டெடுத்து பெருமைசேர்க்கவேண்டும் என தாங்கள் கொணடுசென்றள்ளது அருமை
LikeLike
மிக அருமை
LikeLike
சித்திரமும் கைப் பழக்கம்
செந்தமிழும் நாப்பழக்கம். எழுதுங்கள் விழுப்புணர்வு ஏற்படும்
. வாழ்த்துக்கள்
LikeLike