ரொம்பவே அவசரமாகக் குப்பையைத் துழாவித் துழாவிப் பொறுக்கினான் ஜனா.. அவனுக்குத் தெரியும்.. எவ்வளவு சீக்கிரம் கிடைத்ததை அள்ளிப் போட்டுக் கொண்டு போய் சிங்காரம் கடையில் கொட்டுகிறானோ.. அவ்வளவு சீக்கிரம் அவன் குடிசையில் அடுப்பு எறியும்.. விபத்தில் முதுகெலும்பு உடைந்து படுத்த படுக்கையாகக் கிடக்கும் அப்பா.. காச நோய் முற்றிய நிலையில் அம்மா.. இருவரையும் பார்த்துக் கொள்ளும் தங்கை.. சூழ்நிலைக் காரணமாக பள்ளிப் படிப்பை நிறுத்தி விட்டு வேறு வேலை கிடைக்காமல் சிங்காரத்தின் அறிவுரைப் படி இந்த குப்பைப் பொறுக்கும் வேலை.. கஷ்டமாக இருந்தாலும்.. தன் குடும்பத்தை நினைத்து விடாமல் குப்பையைக் கிளறினான்.. தினமும் நூறு நூற்றைம்பது தேறுகிறது.. அதிருஷ்டம் இருந்தால் சில நாட்கள் போனசாக மேலும் ஐம்பது நூறு கிடைக்கும்..
இன்று நான்கு தெருக்கள் சுற்றியாகி விட்டது.. உருப்படியாக எதுவும் தேறவில்லை.. சில நாட்கள் இப்படியும் இருக்கும்.. இன்று கிடைத்ததை வைத்துப் பார்த்தால் ஐம்பது கூடத் தேறாது போலிருந்தது.. நான்கு பேர் சாப்பிட இது போதாதே.. மனதில் வேகம் ஏற ஏற.. கண்கள் இன்னும் வேகமாக அலைபாய்ந்தன.. அறுந்த செருப்பு.. அழுகின பழங்கள்.. காய்கள்.. ஈரத்தில் நனைந்த காகிதங்கள்.. கிழிந்த நாராகத் துணிகள்..
“சே.. இன்னிக்கு ஏன் இப்படி ஒரு சோதனை?”
அலுத்துக் கொண்டு நிமிர்ந்தான் ஜனா.. இந்த குப்பை மேட்டை விட்டால் பெரிதாக வேற எந்த குப்பைத் தொட்டியும் அவன் போகும் பாதையில் கிடையாது என்று அவனுக்குத் தெரியும்..
என்ன செய்வது என்று புரியாமல் சில கணங்கள் சிலையாக நின்றான்.. வெயிலின் தாக்கத்தில் வியர்வை கசிந்து தொண்டை வரண்டது.. காலையிலிருந்து எதுவும் சாப்பிடாததால் கண்கள் இருட்டிக் கொண்டு மயக்கம் வருவது போலிருந்தது..
தன்னையுமறியாமல் குப்பை மேட்டில் அப்படியே உட்கார்ந்தான்.. கீழே சாயாமல் இருக்க இரண்டு கைகளையும் ஊன்றியபடி கண்களை மூடிக் கொண்டான்.. சிறிது நேரம் அப்படியே உட்கார்ந்திருந்தவனுக்கு சற்று ஆசுவாசப் பட்டது போல் இருந்தது..
மெதுவாக எழுந்திருக்க முயன்றான்..
குப்பையில் புதைந்திருந்த அவனுடைய இடது கையில் ஏதோ சிக்கியது.. எடுத்துப் பார்த்தான்..
மணி பர்ஸ்..
அவசரமாக அதைத் துழாவினான்.. உள்ளே பத்து இரண்டாயிரம் நோட்டுக்கள்.. நான்கு நூறு.. மூன்று ஐம்பது.. மிச்சபடி சில கசங்கிய காகிதங்கள்..
இவ்வளவு பணத்தை ஒன்றாகப் பார்த்தவுடன் ஜனா முதலில் மிரண்டு போனான்.. நம்பாமல் அந்த நோட்டுக்களைக் கையில் எடுத்து மறுபடியும் மறுபடியும் தடவிப் பார்த்தான்.. எண்ணிப் பார்த்தான்..
நிஜம் தான்..
என்ன செய்யலாம்?
மறுபடியும் பர்ஸை துழாவினான்.. அதில் சொந்தக் காரரின் பெயரோ விலாசமோ குறிக்கும் கார்ட் எதுவுமில்லை.. போட்டோ கூட இல்லை.. தவறுதலாக யாரோ இதைத் தொலைத்திருக்க வேண்டும்..
ஜனா ஒரு முடிவுக்கு வந்தான்..
தன் பிராத்தனைக்குக் கடவுள் கொடுத்த வரமாகவே அவனுக்குப் பட்டது..
இந்தப் பணம்.. இன்னும் பல நாட்களுக்கு அவர்கள் குடிசையில் அடுப்பு எறிய உதவும்.. அவன் அப்பாவின் முதுகுத் தண்டுக்கு தைலம் வாங்க உதவும்.. கிழிந்த பாவாடையை சுற்றிக் கொண்டு அலையும் தங்கைக்குப் புதுப் பாவாடை சட்டை வாங்கிக் கொடுக்க உதவும்.. அவனுக்கும் வேறு எங்காவது வேலை தேட கொஞ்சம் அவகாசம் கிடைக்கும்..
பணம் கிடைத்தவுடன் அவனுடைய சோர்வெல்லாம் ஒரு நொடியில் விலகியது போலிருந்தது..
சுற்று முற்றும் பார்த்தான்.. யாரும் அவனைக் கவனிக்கவில்லை என்பதை ஊர்ஜிதம் செய்த்துக் கொண்டான்.. பர்ஸை சட்டைக்குள் மறைத்துக் கொள்ள முயன்றவனின் மனதை ஏதோ குத்தியது..
”ஜனா.. நீ பண்றது சரியா?”
ஒரு கணம் திடுக்கிட்டான்.. ஆனால் உடனே அவனுடைய புத்தி அவனுக்கு ஆதரவாக வந்தது..
“என்ன தப்பு? நானா எடுத்தா திருட்டுன்னு சொல்லணும்.. இது எனக்கு எதிர்பாராத விதமாக் கிடைச்ச பணம்.. எடுத்துக்கறதுல என்ன தப்பு?”
மனம் விட வில்லை.
“இல்லை ஜனா.. எப்படி இருந்தாலும் நீ செய்யறது திருட்டு தான்.. இதை சொந்தக் காரர் கிட்ட சேர்க்க வேண்டியது உன் கடமை”
”ஏய்.. பைத்தியம் மாதிரி பேசாதே.. பர்ஸை துழாவியாச்சு.. இதோட சொந்தக் காரர் யாருங்கறதுக்கு எந்த அடையாளமும் இல்லை”
“சரி.. அப்ப நேர போலீஸ் ஸ்டேஷன் போய் அவங்க கிட்டக் கொடு.. அவங்க சொந்தக் காரனைக் கண்டு பிடிச்சு அதைக் கொடுத்துருவாங்க”
“வந்து.. “
“யோசிக்காதே ஜனா.. இந்தப் பர்ஸை போலீஸ் கிட்ட ஒப்படைக்கறது தான் தர்மம்.. நியாயம்.. அவங்க கிட்ட இதை நீ ஒப்படைச்சா உன் நேர்மையைப் பாராட்டி அவங்க உனக்கு ஏதாவது பரிசு கொடுக்கலாம்.. அது தான் உனக்குப் பெருமை.. கௌரவம்..”
“இல்லை.. வந்து..”
”உடனே எழுந்திரு.. போலீஸ் ஸ்டேஷனுக்குக் கிளம்பு”
“சரி.. சரி.. கத்தாதே.. போலீஸ் ஸ்டேஷன் போறேன்”
என்று எழுந்து குப்பைப் பையைச் சுமந்து கொண்டு நடக்க ஆரம்பித்தான் ஜனா..
“நான் ஆசைப் பட்டது தப்பு தான்.. போலீஸ் கிட்டத் தான் பர்ஸைக் கொடுக்கணும்.. போலீஸ் கிட்டத் தான் கொடுக்கணும்.. அவங்க அதை சொந்தக் காரர் கிட்ட ஒப்படைச்சுருவாங்க.. போலீஸ் கிட்டத் தான் கொடுக்கணும்.. போலீஸ்..”
ஜனாவின் மனதில் பரபரப்பு ஏறியது.. வேகமாக நடக்க ஆரம்பித்தான்..
ஆனால் கால்கள் தன்னிச்சையாக அவன் குடிசையை நோக்கி நகர்ந்தன..
–