மூன்றாம் நந்திவர்மன் அல்லது
கழற்சிங்கனார்
(கி பி 847-869)
சென்ற நூற்றாண்டில் தமிழ்ப் புதினங்கள் வர ஆரம்பித்த காலம்.
ஒரு நாவலுக்கு இரண்டு தலைப்புகள் வைப்பது என்பது அன்று சாதாரணமாக இருந்தது.
‘சோமசுந்தரம் அல்லது தோலிருக்க சுளை முழுங்கி’ – என்ற என்ற வடுவூர் துரைசாமி ஐயங்கார் எழுதிய நாவலை யாராவது படித்திருந்தால் ‘கையைத் தூக்கவும்! (சரி.. கை தூக்கியவர்களின் வயதை நான் துல்லியமாகக் கணித்துவிட்டேன்!).
அது போல் இன்றைய நமது கதை இன்று இரண்டு தலைப்புகளுடனும் வருகிறது.
தந்திவர்மனுக்குப் பிறகு மூன்றாம் நந்திவர்மன் அரசு கட்டிலில் ஏறினான்.
தந்தையின் இறுதிக்காலத்தில் காஞ்சியை மீட்ட நந்திவர்மன் – தந்தை அடைந்த தோல்விகளுக்குப் பரிகாரம் செய்யத் துணிந்தான்.
நந்திவர்மன் இராஷ்டிரகூடர்களுடனும், கங்கர்களுடனும் கூட்டணி அமைத்துக் கொண்டு சீவல்லபன் தலைமையிலான பாண்டிய மற்றும் சோழர் கூட்டுப் படையை திருவண்ணாமலை வந்தவாசிக்கு அருகில் உள்ள தெள்ளாறு என்னுமிடத்தில் எதிர்கொண்டு தோற்கடித்தான். இதன் மூலம் ‘தெள்ளாறெறிந்த நந்திவர்மன்’ என்ற சிறப்புப் பெயரையும், பெரும் புகழையும் பெற்றான். பின்வாங்கி ஓடிய பாண்டியப் படைகளை கடம்பூர், வெறியலூர், வெள்ளாறு, பழையாறு ஆகிய இடங்களில் எதிர்கொண்டு அப்போதைய பாண்டிய நாட்டு எல்லையான வைகையாறு வரை விரட்டிச் சென்றான். சோழர்கள் பல்லவர்களுக்கு கப்பம் கட்ட உடன்பட்டனர்.
தெள்ளாற்றுப் போர் நடைபெற்ற சில ஆண்டுகளுக்குப் பிறகு குடமூக்குப் போர் நடைபெற்றது. பாண்டிய மன்னன் சீவல்லபன் பல்லவர்களால் கைப்பற்றப்பட்டப் பகுதிகளில் பெரும்பாலானவற்றை மீட்டதோடு மட்டுமல்லாது பல்லவர்களைக் கும்பகோணத்தில் (குடமூக்கு) தோற்கடிக்கவும் செய்தான். சரித்திரத்தில் வெற்றியும் தோல்வியும் சகஜமப்பா!
தெள்ளாறு தமிழக சரித்திரத்தை இரண்டு முறை புரட்டிப் போட்டுள்ளது.
பின்னாளில் சோழர்களது இறுதிகாலத்தை உறுதிப்படுத்தியதும் இந்தப் போர்க்களமே! இவ்வாறு இந்த இடத்தில் நடந்த இரு பெரும் போர்களுக்குப் பின்னர் தமிழகத்தின் வரலாற்றின் பாதையே மாறியுள்ளது, ஒரு வேளை முதல் போரில் பல்லவர்கள் தோற்று பாண்டியர்கள் வெற்றிபெற்றிருந்தால், சோழ வம்சமே மீண்டும் வராமல் போயிருக்ககக்கூடும், அவர்கள் பாண்டியர்களுக்கு கப்பம் கட்டும் குறுநில மன்னர்களாகவே இருந்திருப்பார்கள் ! தஞ்சை கோயில், கடாரம் வரை ஆட்சி என தமிழர்களின் புகழ் விரிவடையாமலே சென்றிருக்கலாம் ஒரு வேளை (பின்னாளில்) காடவர்களுடன் நடந்த இரண்டாவது போரில் சோழன் வென்றிருந்தால்? அவர்கள் வலிமையுடன் தமிழகத்தை மேண்டும் சில நூற்றாண்டுகள் ஆண்டிருக்கக்கூடும்!
யாரோ அறிவர்!
தெள்ளாற்றுப் போரில் வெற்றி பெற்ற நந்திவர்ம பல்லவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பெற்றது ‘ நந்திக் கலம்பகம்’.
இதுவே முதலில் தோன்றிய கலம்பக நூலாகும்.
இது நந்திவர்மனது போர் , வெற்றி, வீரம், கொடை, கல்வி முதலியவற்றைப் புகழ்ந்து கூறுகிறது.
நந்திக்கலம்பகத்தைப் பற்றிய கதை பற்றி சற்று கதைப்போம்.:
நந்திவர்மனின் தந்தை தந்திவர்மனுக்குப் பட்டத்தரசிகள் நால்வர். நால்வர்க்கும் நான்கு ஆண் மக்கள். தந்திவர்மன் இறந்தபின்பு நந்திவர்மன் , தனது பேராற்றலால் பல்லவப் பேரரசைத் தனக்கு உரியதாக்கிக் கொண்டான். அதனை ஏற்றுக் கொள்ளாத உடன் பிறப்புகள், நந்திவர்மனை எவ்வழிகளிலாவது கவிழ்க்க வேண்டும்! அல்லது கொன்றுவிட வேண்டும்! என்று , சூழ்ச்சி செய்தனர். ஒன்றும் பலிக்க வில்லை! அந்த சூழ்ச்சியின் விளைவால் தோன்றியதே நந்திக் கலம்பகம் என்பது கதையின் களம்.
அந்தக் கதையின் படி… நந்திவர்மன்மேல் பொறாமை கொண்ட அவனுடைய தம்பியே ஒரு கவிஞனாக வந்து அவன் மீது கலம்பகம் பாடினானாம். அந்நூலில் ஆங்காங்கு நச்சுச் சொற்களையும் தொடர்களையும் வைத்துத் தன்னைக் கொல்லப் பாடியிருக்கிறான் என்று நந்திவர்மனுக்குத் தெரிந்தும் தமிழ்ச் சுவையில் ஈடுபட்ட அவனால் அந்நூலைக் கேட்காமல் இருக்க இயலவில்லை. எனவே நூறு பந்தல்கள் இட்டு ஒவ்வொன்றிலும் அமர்ந்து ஒவ்வொரு பாட்டாக அவன் கேட்டுக் கொண்டு வர ஒவ்வொரு பந்தலாகத் தீப்பற்றி எரிந்ததாம். கடைசிப் பாட்டை நந்திவர்மன் கேட்கும் போது பந்தலோடு சேர்ந்து அவனும் மாண்டான் என்று இக்கதை செல்கிறது.. அவனது மரணத்தைப் பற்றி நந்திக் கலம்பகம் எழுதுவது நமது மனத்தை முள்ளால் நெருடுகிறது.
வானுறு மதியை அடைந்தது உன் வதனம் மறிகடல் புகுந்தது உன் கீர்த்தி கானுறு புலியை அடைந்தது உன் வீரம் கற்பகம் அடைந்தது உன் கரங்கள் தேனுறு மலராள் அரியிடம் புகுந்தாள் செந்தழல் அடைந்தது உன் தேகம் நானும் என் கலியும் எவ்விடம் புகுவோம் நந்தியே நந்தயாபரனே - கழற்சிங்கனார் நந்திவர்மனுக்கு இன்னொரு பெயர் உண்டு- கழற்சிங்கனார்.
அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர்.
அந்தக் கதை பெரியபுராணத்தில் வருகிறது.
இப்படி நடந்ததா? இல்லை இது என்ன கற்பனையா? என்று வாசகர்கள் கொந்தளிக்கக் கூடும். கதை சுவையாக உள்ளதா என்று மட்டும் பாருங்கள். மற்றது சிவன் மயம்!
சரி நாம் கதைக்கலாம்..
கழற்சிங்கனார் (நமது மூன்றாம் நந்திவர்மன் தான்) மாபெரும் சிவபக்தர்.
தன் மகாராணியுடன் திருவாரூர் தியாகேசப் பெருமானைத் தரிசிக்க சென்றார்.
சிவனாரது சிலை முன் – தானும் ஒரு சிலையாக இருந்து தவத்தில் அமர்ந்தார்.
அரசியார் கோவிலைச் சுற்றி வலம் வர விழைந்தார்.
எழில் மிகுந்த மண்டபங்கள் அவள் மனதைக் கொள்ளையடித்தன.
அந்தப் பூங்காவிலிருந்த மலர்கள் சுகந்தத்தைக் கிளப்பி விட்டிருந்ததது.
அந்த மலர்கள் சிவனாருக்கு மட்டுமே அளிக்கத்தக்க மலர்கள்.
யாரும் அதைப் பறிக்கக் கூடாது.
அரசியாருக்கு அந்த மலர்மணம் மனதில் ஒரு இன்பப்புயலை ஏற்படுத்தியது.
ஒரு அழகிய மலரைப் பறித்து.. மோந்து பார்த்தாள்!
‘என்னே இந்த தெய்வீக மலர்!!’ என்று வியந்தாள்.
அரசியின் செயலை கூடியிருந்த தொண்டரில் ஒருவரான செருத்துணை நாயனார் கண்டார். ‘இறைவனுக்கு சொந்தமான மலரைப் பறித்து மோந்து விட்டாளே’ என்று சினங்கொண்டார்.
அரசியென்றும் பார்க்கவில்லை.
குறுவாளை எடுத்து ‘மலரை மோந்த’ மலர் மூக்கை சீவி விட்டார்.
குருதி கொப்பளிக்க தேவி மயங்கி விழுந்தாள்.
ஆலயத்தில் தவமாற்றிக் கொண்டிருந்த மன்னருக்கு செய்தி சென்றடைந்தது.
மன்னன் பதைபதைப்புடன் அரசியிடம் விரைந்தான்.
கண்ட காட்சியில் அவன் உறைந்து போனான்.
“அஞ்சாமல் இந்தக் கொடிய செயலைச் செய்தது யாரோ?” – மன்னன் கண்ணில் தீப்பொறி பறந்தது.
“அந்த யாரோ.. நான் தான்“ – என்று அமைதியாகக் கூறினார் நாயனார்.
சைவத்திருக்கோலத்துடன் இருந்த சிவனடியாரைப் பார்த்த மன்னன்:
“என்ன காரணத்துக்காக இந்த காரியம் செய்யத் துணிந்தீர்” – என்றான்.
நாயனார் : “இறைவனுக்குச் சாத்துவதற்கான மலரை மாதேவி மோந்து விட்டார்”
“என்ன?” – ஒரு நொடியில் .. மன்னன் கோபத்தின் வசமானான்.
உடைவாளை உருவிக்கொண்டான்.
தொண்டர்கள் அனைவரும் நடுங்கினர்.
நாயனார் உறைந்து போய் “சிவனே” என்று ஓலமிட்டார்.
மன்னன்: “நாயனாரே! குற்றத்தை சரியாக ஆராயாமல் முறைப்படி நடக்காமல் தண்டனை கொடுத்தது உம் தவறு.” என்றான்.
நாயனார் ஒன்றும் பேசவில்லை.
அரசன்: “எம்பெருமான் மலரைப் பறித்த கையல்லவா முதல் குற்றம் செய்தது. அதற்கல்லவா முதலில் தண்டனை கொடுத்திருக்க வேண்டும்” என்று கூறி
சொன்னது மட்டும் இல்லாது அரசியின் மலர்க்கரத்தை வெட்டினான்.
( பாகுபலி இதன் காப்பியா? )
நாயனார் – மன்னரின் உயர்ந்த பக்தியைக் கண்டு தலைவணங்கினார்.
இந்தக் காட்சி சுபமாக முடிந்தது!
அது எப்படி என்று தானே அப்பாவித்தனமாக கேட்கிறீர்கள்?
சிவபெருமான் உமையோடு – காளையில் தோன்றி – அரசியின்
துயர் தீர்த்து – அருள் புரிந்து மறைந்தார்.
சுபம்!!
மன்னனுடைய சிவத்தொண்டு காரணமாக, மன்னனை நாயன்மார் கூட்டத்தில் ஒருவனாக கழற்சிங்க நாயனாராகச் சமய குரவர்கள் ஏற்று வழிபட்டார்கள்.
வாசகர்களே! எரியும் விளக்கு அணையுமுன்பு சற்றுப் பிரகாசமாக எரிந்து அணையும் என்று சொல்வார்கள். பல்லவரது ஜோதியில் நந்திவர்மன் தான் அந்த பிரகாசமான விளக்கு.
பல்லவர்களது ராஜ்யம் மூன்றாம் நூற்றாண்டிலிருந்து பத்தாம் நூற்றாண்டு வரை காஞ்சியில் கோலோச்சியது.
வெற்றி தோல்வி எல்லாமே மாறி மாறி வந்தது.
வெற்றி பெறும் போது .. கல்லிலே கலை வண்ணம் கண்டு . கோவிலை வடித்தனர்.
தோல்வி பெறும் போதும் துவளாமல் போராடினர்.
அந்த ஆட்சியும் ஒரு முடிவுக்கு வரப்போகிறது.
மூன்றாம் நந்திவர்மன் அதன் கடைசிப் பேரரசன்.
பல்லவர்களைப் பிரியும் நேரம் விரைவில் வருகிறது என்று நினைக்கும் போது நெஞ்சு சற்றே கனக்கிறது.
பல்லவர்களது இறுதிச்சுற்று பல திருப்பங்கள் கொண்டது.
அதை விரைவில் காணலாம்.