உயிர்த்திருக்கும் உற்ற தொண்டன்
பாரதிராஜாவின் ‘ என் உயிர்த் தோழன் ‘

அரசியல் கதைகள் அதற்குமுன்பும் திரையில் பார்த்ததுண்டு. அதற்குப் பிறகும் நிறைய. அப்பாவிகளின் வாழ்க்கையை அப்பட்டமாக சித்தரிக்கும் படங்கள் அதற்கு முன்பும் பின்பும் பார்க்கவே செய்ததுண்டு. உள்ளத்தை உருக்கி விடுகிற படங்கள் இதை விடவும் வலுவான திரைக்கதையில் வேறு எத்தனையோ பார்ப்பது உண்டு தான். ஆனால், என் உயிர்த் தோழன் நெஞ்சை விட்டு அகலாது உள்ளேயே உட்கார்ந்திருக்கிறான். பாரதிராஜா படைப்புகளில் பேசப்பட வேண்டிய முக்கியமான கதைக்களம் இந்தப் படம்.
கட்சிக்காக உயிர் கொடுக்கும் வெகுளியான ஒரு தொண்டனின் தியாக வாழ்க்கை என்று ஒற்றை வரியில் எழுதிப் படித்தால், அதில் எந்த நியாயமும் இல்லை. அரை மணி நேரத்தில் ஒரு கோட்டையைச் சுற்றிப் பார்த்துவிட்டு வெளியேறுவது போன்றது தான் அது.
அண்மையில் தேசம் என்றால் என்ன என்ற வரையறை பற்றி ஒரு பொருளாதார நிபுணரின் அசத்தலான கட்டுரை வாசித்தது நினைவுக்கு வருகிறது. பதினேழாம் நூற்றாண்டு போல ஐரோப்பிய கண்டத்தில் புழக்கத்தில் வந்த அந்தச் சொல், உடைமை வர்க்க மக்களைக் குறிப்பதாக பொருளில் தான் பொதுவான சொல்லாக தேசம் உருவாக்கப்பட்டது. அது, பின்னர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் நிதி மூலதனத்தின் ஆளுகை வேகமாகப் பரவத் தொடங்கிய பொழுதில், அதன் நலன் சார்ந்த கடமைகளுக்கே தேசம் என்ற அடையாளம். ஆனால், மூன்றாம் உலக நாடுகளில் காலனியாதிக்கத்திற்கு எதிராகத் திரண்ட போராட்ட காலத்தில், தேசம் என்பது மறு வரையறைக்கு உட்பட்டது. தேசம் என்றால் மக்கள். உழைப்பாளி மக்கள். ஆனால், நவீன பொருளாதார இந்தியாவில் மீண்டும், தேசம் என்றால் பெருந்தனக்காரர்கள், பெருந்தொழில் இல்லங்கள் இவர்களே என்று விதி மீண்டும் நிறுவப்பட்டுவிட்டது என்கிறார் பேராசிரியர் பிரபாத் பட்நாயக்.
கட்சி என்றால் தலைவர், தலைவர் என்றால் கட்சி என்று புரிந்து கொண்டிருக்கும் எண்ணற்ற தொண்டர்களில் ஒருவன் தருமன். அவர் சிறையில் இருந்தால் இவன் நிம்மதி இழக்கிறான். தனக்காக யாராவது தீக்குளிக்க வேண்டும் என்று அவர் உள்ளே விரும்பினால், இவன் கெரசீன் டின்னோடு காந்தி சிலை நோக்கிப் போய் நின்றுவிடுகிறான். அவர் விடுதலை ஆனது தன்னால் தான் என்று உளமார நம்புகிறான். குயிலு குப்ப மக்களுக்குத் தனது நற்பணிகளால், நன்னடத்தையால், அன்றாடங்காய்ச்சிகளுக்கு ஆதரவான இன்னோர் அன்றாடங்காய்ச்சி என்றாலும் அவர்களுக்கான தாதாவாகக் காத்து வரும் சேவையால் மொத்த 15,000 வாக்குகளையும் அவனறியாமல் அவன் இடுப்பில் சரியாமல் அள்ளிச் செருகிக் கொடுத்திருக்கிறது வாழ்க்கை. கட்சிக்கு, அதாவது, தலைவருக்குக் கண்ணாக தருமன் உருமாறுவது அந்த வாக்குகளுக்காகத் தான் என்பது அறியாமல் அவருக்காக உழைக்கிறான், அலைந்து திரிகிறான், இறுதியில் மரிக்கிறான்.
நாடகக் கதாநாயகனை நிஜ நாயகனாக நம்பி, சிற்றூரில் இருந்து ரயிலில் புறப்பட்டு வந்து பாதிவழியில் அவனால் கைவிடப்பட்டுச் சென்னை வந்து இறங்குகிற கதாநாயகி, ரிக்ஷா ஓட்டி தருமனிடம் அடைக்கலமாகி குயிலு குப்பம் வந்து சேருவது முக்கியமான இடம். அந்த நாடக நடிகன் திரையில் ஜொலித்து நட்சத்திரமாகி தருமனின் கட்சி தலைவரது ஆசியோடு அரசியலுக்குக் குடிபெயர்ந்து வேட்பாளராகி, வாக்கு சேகரிக்க அதே குயிலு குப்பத்தில் நுழைவது அடுத்த முக்கியமான கட்டம். அவனது துரோகத்தால் எரிகிற நாயகியின் உள்ளத்து நெருப்பில் 15,000 வாக்குகள் சாம்பலாகி விடக்கூடாது என்ற எச்சரிக்கையோடு கட்சி தலைவர் ‘என் உயிர்த் தோழா’ என்று தருமனை விளித்து அவனுக்குள் அவர் ஏற்றி வைக்கும் நெருப்பு, கூடுதல் வெம்மையாக இருக்கிறது. வாக்குகள் பத்திரம் காக்கப்பட்டுவிடுகிறது, ஆனாலும், தலைவருக்கு வேறு சில தொகுதிகளில் இருக்கும் ஊசலாட்டம் கடைசி கட்ட உயிர்ப்பலி கேட்கிறது, தருமனைத் தவிர அதை யாரிடம் கேட்பார் தலைவர், ஆனா ல், அதையும் கூடக் கேட்காமலே பறித்துக் கொள்கிறது அரசியல்.
இயற்கைத் தூரிகை தீட்டிய ரம்மியங்களில் திளைத்து இருந்த நான், ஒரு பொது மனிதனாக ஜன்னல் வழி தரிசித்தேன், சமூகத்தில் ஒரு கலைஞனுக்கு உள்ள தார்மீகக் கடமை என்ன என்று யோசித்தேன், அது தான் இந்தக் கதை என்று நுழைவாயிலில் பேசுகிறார் பாரதிராஜா.
இப்படி ஓர் உயிர்த் தோழன், கட்சித் தலைவருக்குக் கிடைத்தாலும் கிடைப்பான், தருமன் பாத்திரத்திற்கு, பாபு மாதிரி ஒரு நடிகர் கிடைப்பது அரிது. சென்னை குப்பத்து வாலிபனாக அவரது உடல் மொழியும், குரலும், நடிப்பும் அமர்க்களமாக இருக்கும். குயிலு குப்பத்தின் அசாத்திய உருவாக்கம், சென்னை மாநகரின் ஒடுக்கப்பட்டோர் குடியிருப்பின் அச்சு அசலான பிரதி.
சாலையோரத்தில் இட்லிக் கடை, வட்டிக்கு கடன் கொடுத்தல், அலைச்சலுக்கு இளைப்பாறுதலாகக் கொஞ்சம் போல சாராயம், தம்பி தருமனுக்கான முரட்டுப் பாசம் என்ற எளிய வாழ்க்கையை ஒரு நடுத்தர வயது பெண்மணியாக வடிவுக்கரசி கலக்கி இருப்பது அவரது திரை வாழ்க்கையில் முதல் மரியாதை படத்தில் வாய்த்ததை விடவும் கூடுதல் பெருமை கொள்ளத் தக்க நடிப்பு.
பாபுவும், வடிவுக்கரசியும் சென்னைத் தமிழில் மிக இயல்பான உடல் மொழியோடு தோன்றி இருப்பது படத்தின் ஆகச் சிறந்த வலு. ‘யெக்கா’ என்ற தருமனின் விளிப்பு, குடிக்கறதை விட்டுவிட்டால் செத்துவிடுவேன் என்று சொல்லும் அக்காவிடம், ‘சாராயத்தைக் குடிச்சு சாவறத விட அத குடிக்காம சாவு’ என்று சொல்ல, அவள் அதைத் தாங்க மாட்டாது ‘குடிக்க மாட்டேன்’ என்று சத்தியம் செய்யும் இடம், அடுத்த நாள் காலை, தேநீர்க் கடையிலிருந்து தனக்காக வரும் பாலில் நஞ்சு கலக்கப்பட்டிருப்பது அறியாமல், ‘சாராயத்தை விட்டுட்டே, இந்தப் பாலைக் கொஞ்சம் குடி’ என்று சொல்லிக் கொடுக்க, அவள் செத்து விழும்போது கதறி அழும் தருணம் நெகிழ வைப்பது.
நாயகி ரமா (சிட்டு), புது முகம். கொடுக்கப்பட்ட வாய்ப்புக்கு மேலதிகம் வழங்கியிருக்கக் கூடிய சாத்தியங்கள் அவருக்கு ஏனோ கை கூடவில்லை. அளவோடு நிற்கிறது அவர் பங்களிப்பு. நடிகர் அரசியல்வாதி தென்னவனும் அப்படியே. அவருக்கு டப்பிங் குரலைத் தான் தந்திருப்பதை அவசியம் தவிர்த்திருக்க வேண்டும், பாரதிராஜா. நாடகத்தனம், போலி வாக்குறுதி, ஏமாற்று அரசியல் இவற்றை குரல் ரீதியாக உருவகப்படுத்த அதை அவர் கையாண்டிருக்கக் கூடும்.
பாலியல் தொழிலில் மாமா பாத்திரம், அரசியலில் இடைத்தரகர் என லிவிங்ஸ்டன் அசத்தல் நடிப்பை வழங்கி இருப்பார். அவரது முகபாவம், வசன உச்சரிப்பு, உடல் மொழி எல்லாம் செதுக்கி வைத்தது மாதிரி அமைந்திருக்கும். காவல் நிலையத்தில், குப்பத்தில், கட்சி தலைவர் அலுவலகத்தில் அவரது ராவடிகள் அத்தனை அசாத்திய நம்பகத் தன்மை வாய்ந்தவை. காரியவாதியாக காசுக்கு எதையும் செய்யும் பாத்திரத்தில் சார்லி. உற்ற நண்பன் தருமனின் உயிரை மாய்க்கும் பொறுப்பைக் கூட காசு ஏற்க வைக்கிறது. இந்தக் காட்சிகள் யாவும் இயல்பாக சித்தரிக்கப்பட்டிருப்பவை.
இளையராஜா இசையில் இடம் பெற்றுள்ள பாடல்களில் ஏ ராசாத்தி, குயிலு குப்பம் பாடல்கள் அமர்க்களமானவை. இரண்டுமே மலேசியா வாசுதேவன், இரண்டாவதில் சித்ராவுடன் இணைந்து. ஏ ராசாத்தி பாடலில் ஒயிலும், தாளக்கட்டும், இசையும் இழைக்க மலேசியா குரல் சிறந்து ஒலிக்கும். குயிலு குப்பம், ராஜாவின் தனி முத்திரையோடு ததும்பும் காதல் பாடல். கோரஸ் சகிதம் இனிமையாக அமைந்திருக்கும்.
தருமன் கையில் இருந்து பாட்டில் பறந்தால் எதிரிகள் பறந்தோடுவது, தருமன் இல்லாம உள்ளே நுழையாதே என்று குப்பத்து மக்கள் கட்சி ஆட்களை விரட்டி அனுப்புவது, மக்கள் சக்தி வலுவாக இருந்தால் இடைத்தரகர்கள் ஜகா வாங்குவது, வேறு வழி கண்டுபிடித்து மீண்டும் நுழைவது எல்லாமே நிஜ நிகழ்வுகளுக்கு நெருக்கமான புனைவுகள்.
நம்பகத் தன்மை உள்ள ஏராளமான காட்சி அமைப்புகளின் தொகுப்பில், நம்ப முடியாத இறுதிக் காட்சி கூட, திரைப்படம் அவ்வளவாக மக்களை அதிகம் சென்று சேர முடியாமல் போனதற்கு ஒருவேளை காரணமாக இருந்திருக்கலாம். திரைக்கதையை இன்னும் கூடுதல் நேரம் எடுத்து விவாதித்து அமைத்திருந்தால், படம் வேறொரு தளத்திற்குப் போயிருக்க அதிகம் சாத்தியங்கள் உண்டு.
இன்னொரு வருத்தம், கதாநாயகனாக நடித்த பாபு, பின்னர் வேறு ஒரு படத்திற்காகத் தானே ஸ்டண்ட் காட்சியில் நடிக்கையில் ஏற்பட்ட விபத்தில் கடுமையான காயங்களோடு பெரும்பாதிப்புக்கு உள்ளாகிப் படுத்த படுக்கையாக இருப்பது.
‘கட்சின்றது ஆலமரம் மாதிரி..அதுல ஒரு குருவி வந்து அசிங்கம் பண்ணிச்சின்னு மரத்தை வெட்டக்கூடாதுன்னு தலைவரு சொன்னாரு சிட்டு. வரலாற்றுல விழுந்த கீறலை வரலாற்றை வச்சே சரி செய்யலாம்னாரு சிட்டு …நான் கெலிச்சா கட்சி கெலிக்கும்னு தலைவரே சொன்னாரு சிட்டு ‘ என்ற வசனம், செயற்கையற்று படத்தில் ஒலிப்பது, இப்போதும், இன்றும் பொருத்தமாக எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.
(ரசனை பரவும்…)