முன்கதைச்சுருக்கம்: மகத நாட்டரசன் பிம்பிசாரன் புத்தரின் உபதேசங்களில் ஈடுபட்டவன்; தனது அரண்மனைத் தோட்டத்து அசோகமரத்தடியில் புத்தர்பிரான் அமர்ந்து உபதேசம் செய்த இடத்தில் ஒரு வழிபாட்டு மேடையை அமைத்திருக்கிறான்.
பிம்பிசாரன், இளவரசன் அஜாதசத்ருவிற்கு அரசைக் கொடுத்துவிட்டு நகரிலிருந்து சிறிது தொலைவில் வசித்துவந்தான். இதனை விரும்பாத அரசி லோகேஸ்வரி மிகவும் மனக்கசப்பிற்குள்ளாகி இருந்தாள். அவளுடைய மகன் சித்ராவும் பிட்சுவாகிவிட்டதில் மனம்நொந்து போயிருக்கிறாள்.
மாலதி என்றொரு கிராமத்துப்பெண் அரண்மனை நாட்டியமங்கையான ஸ்ரீமதியிடம் வந்து சேர்கிறாள். அவள் தன் அனுபவங்களை ஸ்ரீமதியிடம் விளக்கிக்கொண்டிருக்கும்போது இளவரசிகள் வந்து இருவரையும் கேலி செய்து துன்புறுத்துகின்றனர். அப்போது உள்ளே வரும் அரசி லோகேஸ்வரி தனது துயரங்களைக் கூறிப் புலம்புகிறாள். ஒரு சேவகன் வந்து இளவரசன் சித்ரா அவளைக்காண வந்திருப்பதைத் தெரிவிக்க அவள் விரைகிறாள். அங்குவரும் பிட்சுணி உத்பலா அன்றுமாலை வழிபாட்டிற்கான காணிக்கைகளை ஸ்ரீமதியே செலுத்துவாள் எனக்கூற, இளவரசிகள் திகைக்கின்றனர்.
இனித் தொடர்ந்து படிக்கவும்:
பிட்சுணி: ஆமாம். இந்த நாட்டிய மங்கையேதான்.
ரத்னாவளி: பெரியவர்களிடமிருந்து உமக்கு இந்தக் கட்டளை வந்ததோ?
பிட்சுணி: ஆம்! அவர்களே இவ்வாணையைப் பிறப்பித்தது.
ரத்னாவளி: யார் அவர்கள்? அவர்கள் பெயர்களைக் கூறுங்கள்.
பிட்சுணி: ஒருவர் உபாலி.
ரத்னாவளி: அவர் நாவிதர் ஜாதியைச் சேர்ந்தவர்!
பிட்சுணி: மற்றொருவர் பெயர் சுனந்தா.
ரத்னாவளி: அவர் மாடுமேய்ப்பவரின் மகன்!
பிட்சுணி: ஆ! இளவரசி! அவர்கள் ஜாதி அனைத்தும் ஒன்றே. பெருந்தன்மை மிக்கவர்களின் பதவி என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?
ரத்னாவளி: ஒன்றும் இல்லை! வேண்டுமானால் இந்த நாட்டியக்காரி அதனை அறிந்திருக்கலாம். அவர்கள் அவளுடைய ஜாதியைச் சேர்ந்தவர்களோ என்னவோ, அதனால்தான் அவர்களுக்கிடையே இந்தவிதமாக நட்புரிமை கொண்டாடுகிறார்கள்.
பிட்சுணி: இருக்கட்டும். நமது தந்தையான அரசர் பிம்பிசாரர் இன்று தனது ஏகாந்தமான தனியிடத்தைவிட்டு நமது வழிபாட்டில் கலந்துகொள்ள இருக்கிறார். நான் சென்று அவரை வரவேற்க வேண்டும். (பிட்சுணி செல்கிறாள்)
அஜிதா: ஸ்ரீமதி, நீ எங்கே செல்கிறாய்?
ஸ்ரீமதி: அசோக மரத்தடியே உள்ள வழிபாட்டு மேடையைக் கழுவி சுத்தம் செய்யச் செல்கிறேன்.
மாலதி: சகோதரி,உங்கள் சேவையில் உதவி புரிவதற்காக என்னையும் உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள்.
நந்தா: நான் உன்னுடன் வருகிறேன்.
அஜிதா: நானும் கூட ஒருவேளை உன்னுடன் சேர்ந்து கொள்வேன்.
வாசவி: அதனைக் காண நானும் ஆவலாக இருக்கிறேன்.
ரத்னாவளி: எத்தனை அழகாக இருக்கிறது இது! ஸ்ரீமதி வழிபாட்டைச் செய்வாள், விசுவாசமுள்ள உதவியாளர்களாகிய நீங்கள் அச்சமயம் அவளுக்கு விசிறியால் விசிறிவிடுவீர்கள்!
வாசவி: அச்சமயம் நீ விடும் மூச்சுக்காற்று உஷ்ணமான சாபங்களை இங்கிருந்து எங்கள்மீது வாரியிறைக்கும்! ஆனால் அது அசோக மரக்காட்டை எரித்துவிட முடியாது; ஏன் ஸ்ரீமதியின் உள்ளத்து அமைதியையும்கூடக் குலைக்க இயலாது…
(ரத்னாவளியையும் மல்லிகாவையும் தவிர அனைவரும் செல்கின்றனர்).
ரத்னாவளி: இது தொடர முடியாது; தொடரவே முடியாது. இது இயற்கைக்குப் புறம்பானது. ஓ, மல்லிகா, நான் ஏன் ஒரு ஆணாகப் பிறக்கவில்லை? சீ! இந்தக் கங்கணங்களுக்குப் பதிலாக என் கையில் ஒரு வாள் மட்டுமிருந்தால்…! நீயுந்தான் மல்லிகா, ஏன் ஒரு வார்த்தை கூடக் கூறவில்லை? நீயும் அந்த நாட்டியக்காரியின் பணியாளாவதற்காக ஏங்குகின்றாயா?
மல்லிகா: நான் வேண்டினால்கூட அது எனக்குக் கிடைக்காது. அவள் என்னை நன்கு அறிவாள்!
ரத்னாவளி: நீ மௌனமாக இந்தக் கொடுமையை அனுபவிப்பது ஏன் என்று எனக்குப் புரியவில்லை. பொறுமை என்பது இழிவானவர்களுக்கும் உதவியற்றவர்களுக்குமேயான ஆயுதம்; அரசகுடும்பத்து வாரிசுகளுக்கு அல்ல.
மல்லிகா: நம் செய்கைகளின் பலன்களை அனுபவிக்கும் வேளை நெருங்கிக் கொண்டிருக்கிறது; ஆகவே நான் எனது பலத்தை வீணடிக்கப் போவதில்லை.
ரத்னாவளி: உனக்கு நிச்சயமாகத் தெரியுமா?
மல்லிகா: ஆம்; உண்மையாகவே நிச்சயமாக.
ரத்னாவளி: அது ரகசியமாக இருக்க வேண்டுமானால் என்னிடமிருந்து அதனை மறைத்துவிடு. எனக்குத் தெரிய வேண்டியதெல்லாம், அந்தக் கேடுகெட்ட நாட்டியக்காரி சந்நிதியில் வழிபாட்டை நடத்தும்போது நாம் எல்லா இளவரசிகளும் கூப்பிய கரங்களுடன் நிற்கவேண்டுமா என்பதுதான்.
மல்லிகா: இல்லை, அப்படி இருக்காது, அதை மாத்திரம் என்னால் சத்தியமாகக் கூற முடியும்.
ரத்னாவளி: நமது அரச குடும்பத்தைக் காக்கும் கடவுள் உனது சொற்களை உண்மையாக்கட்டும்.
அங்கம்- 2
காட்சி: மாற்றமில்லை.
அரசி லோகேஸ்வரியும் மல்லிகாவும் உள்ளே நுழைகின்றனர்.
மல்லிகா: மகாராணி, தாங்கள் தங்கள் மகனைப் பார்த்து விட்டீர்களே, இன்னும் ஏன்.. ?
அரசி: மகனைப் பார்த்தேனா? எங்கே இருந்தான் அவன்? ஓ, இது சாவை விடக் கொடுமையானது. நான் இதனை எதிர்பார்க்கவேயில்லை.
மல்லிகா: என்ன சொல்கிறீர்கள்?
அரசி: இதனை விடக் கொடுமையானது என்ன இருக்க முடியும்? ஒரு தாயிடம் மகன் வருகிறான், ஆனால் மகனாக அல்ல. ஆ, அந்தக் கண்களில் நான் கண்டது, அவனுடைய தாய் ஒரு சிறு அடையாளத்தைக்கூட விடாமல் மறைந்து போய்விட்டாள் என்பதனைத்தான். உருத்தெரியாமல் முற்றிலுமாக அழிக்கப்பட்ட எனது இத்தகையதொரு பேரழிவை நான் கனவிலும் எண்ணிக்கூடப் பார்க்கவியலாது.
மல்லிகா: நற்குணங்கள் நிரம்பிய வாழ்வைத் தான் ஏற்றுக்கொள்வதற்காக, தசையும் குருதியுமான தனது வாழ்வை ஒரு பிட்சு தாழ்மைப்படுத்திக் கொள்கிறார்.
அரசி: ஐயோ பாவம்! பரிதாபத்துக்குரிய தசையும் குருதியும்! பாவம்! வலிமிகுந்த பசியுடனான பொறுக்கமுடியாத வேதனை! தசை, குருதியுடனான நமது போராட்டம், வெறுமையைத் தேடும் அவர்களது தேடலைவிடக் குறைவான சிரமம் படைத்ததா?
மல்லிகா: இருந்தால் என்ன? எத்தகையதொரு அழகை (தேஜஸை) அவன் (இளவரசன்) அடைந்திருக்கிறான் என எண்ணிப் பாருங்கள். அவன் ஒரு தெய்வீக ஒளியின் வடிவாகக் காணப்பட்டான்!
அரசி: ஆம்; அது அவனது தாயை, அவளது தாய்மையை அவமானத்திற்குள்ளாக்கிய வடிவு – அவனுக்கு நான் அளித்த பிறப்பிற்கும் அவனது தற்போதைய பிறப்பிற்கும் இடையேயான ஆழ்ந்ததொரு பிளவு! மல்லிகா, இது ஆண்களுக்கு மட்டுமேயான மதமென்று நான் இன்று உணர்ந்துகொண்டேன். இதில் பெண்களே எங்கும் இல்லை!- மகனுக்குத் தாய் தேவையில்லை, கணவனுக்கு மனைவி தேவையில்லை. இருப்பினும், இரந்துகொண்டு வரும் இந்த பிட்சுக்களுக்கு- மகனல்லாத, கணவரல்லாத, சகோதரர்களல்லாத, வீட்டைத் துறந்தவர்களுக்கு- தர்மம் கொடுப்பதற்காக நாம் நமது வெறிச்சிட்ட வீடுகளில் சருகாகிப்போன வாழ்க்கையை வாழ வேண்டும்! இந்த ஆண்களின் மதம் நம்மைப் பாழடித்து விட்டது, மல்லிகா! நாம் இப்போது அதனை அழிக்க வேண்டும்.
மல்லிகா: ஆனாலும், மகாராணி! நாள்தோறும் திரள்திரளாகப் பெண்கள் எவ்வாறு புத்தபிரானுக்குத் தங்கள் வழிபாட்டைச் செய்கிறார்கள் என்று நீங்களே பார்க்கிறீர்கள் அல்லவா?
அரசி: முட்டாள்கள்! அவர்களுடைய பக்திப்பசிக்கு எல்லையே இல்லை. எது அவர்களை மிகவும் ஆழமாக வருத்துகிறதோ அதனையே வழிபடுவார்கள்! அவர்களுடைய தவறுகளை ஆதரிக்க நான் மறுக்கிறேன்.
மல்லிகா: நிச்சயமாக நீங்கள் இதை மனப்பூர்வமாகக் கூறவில்லை, மகாராணி! உங்களுடைய வீட்டைவிட்டுச் சென்ற உங்கள் மகன் உங்கள் உள்ளக்கோவிலில் குடியேறிவிட்டான் என்று எனக்குத் தெரியும்.
அரசி: நிறுத்து! இனியும் இவ்வாறு பேசாதே! ஒரே ஒரு இரவை தன் தாயின் அறையில் கழிக்குமாறு நான் அவனிடம் கெஞ்சினேன்; அவனுடைய அன்னையின் கூரை திறந்த வானமே என்று அவன் கூறினான். நீ ஒரு தாயாக இருந்தால், மல்லிகா, அவனுடைய இந்தச் சொற்கள் எத்துணை கொடூரமானவை எனப் புரிந்து கொள்வாய். இடியும் மின்னலும் கடவுளின் கையினின்றும் வந்தால்தானா, எப்படியானாலும் அது இடியும் மின்னலும் தானே! அது என் இதயத்தைப் பிளக்கவில்லையா? அந்தக் காயத்தின் மூலம் தெருக்களில் திரிந்தலையும் பிட்சுக்களின் குரல்கள் எனது உள்ளத்தினுள் புகுந்து எனது விலா எலும்புகளின் வெற்றிடத்தில் எதிரொலிக்கிறதே:
எனது அடைக்கலம் புத்தபிரானிடமே!
எனது அடைக்கலம் தர்மத்திடமே!
எனது அடைக்கலம் சங்கத்திடமே!
மல்லிகா: என்ன இது மகாராணி, தாங்கள் இப்போதும் இச்சொற்களைக் கூறும்போது தலையைத் தாழ்த்துகிறீர்கள்?
அரசி: அங்குதான் ஆபத்து உள்ளது. தீனமானவர்களின் மதம் மற்ற மனிதர்களையும் தீனமாக்குகிறது. அதன் குறிக்கோளே ஆத்மாவை பலவீனப்படுத்துவதாகும்; ஒருகாலத்தில் உயர்ந்திருந்த தலைகளைத் தாழச் செய்வதாகும்; பிராமணனுக்கு அடிபணியவும், க்ஷத்திரியனுக்கு பிச்சையெடுக்கவும் சொல்லிக் கொடுப்பது அதுதான். இந்தக்கொள்கையை நீண்ட நாட்களாக நான் எனது ரத்தத்தில் வளர்த்துக் கொண்டிருக்கிறேன், அதனால் அதனைக்கண்டு மிகவும் பயப்படுகிறேன்.
அட! யார் இங்கு வருவது?
மல்லிகா: இளவரசி வாசவிதான். அவள் வழிபாட்டுக்குச் செல்லும் வழியில் இங்கு வந்துள்ளாள்.
(வாசவி உள்ளே நுழைகிறாள்)
அரசி: (அவளிடம்) நீ வழிபாட்டிற்குச் செல்கிறாயா?
வாசவி: ஆம்.
அரசி: ஆனால் நீ இன்னும் குழந்தையல்ல!
வாசவி: என்ன குழந்தைத்தனத்தை நீங்கள் என்னிடம் காண்கிறீர்கள்?
(தொடரும்)