வரம் – தீபா மகேஷ்

A father is often known as a son's first hero and a daughter's first love. Give the special man in your … | Portrait drawing, Father's day drawings, Pencil portrait

 

அமுதாவின் ஃபோன் ஒலித்தது. அகிலா என்று பெயர் பார்த்ததும் ஆர்வமுடன் ஆன் செய்து “சொல்லு அகில்” என்றாள்.

ஆனால் அகிலா சொன்ன விஷயத்தைக் கேட்டதும் அந்த ஆர்வம் எல்லாம் நொடியில் அடங்கி அவளுடைய படபடப்பு அதிகமாகியது.

“அச்சச்சோ… எப்போ? எங்கே? எந்த ஹாஸ்பிடல்? என்று அடுத்தடுத்து கேள்விகள்.

ஹாலில் ந்யூஸ்‌பேப்பர் படித்துக்கொண்டிருந்த சங்கரன் அவள் பதட்டத்தைக் கவனித்து அருகில் சென்றான்.

“நாங்க உடனே கிளம்பி வரோம்” என்று போனை வைத்தவள், சங்கரனைப் பார்த்து “அகிலா ஃபோன் பண்ணாங்க. மாப்பிள்ளைக்கு ஆக்ஸிடெண்ட்டாம் . வாக்கிங் போற போது ஒரு ப்ளைன்ட் டர்ன்ல கார் வந்து இடிச்சு, கீழ விழுந்துட்டனாம் , தலைல அடிபட்டிருக்காம்.”

அவள் கண்களில் கண்ணீர் ததும்பி எந்நேரமும் வழிந்து விழுவதற்குத் தயாராக இருந்தது.  பேச முடியாமல் தொண்டை அடைத்தது.

அவள் சொன்னதைக் கேட்டு சங்கரனுக்கு சப்த நாடியும் ஒடுங்கியது. கடவுளே, இது என்ன சோதனை. நெஞ்சில் ஒரு பெரிய கல்லை ஏற்றி வைத்தது போல் பெரும் பாரம் அழுத்தியது .

ஆனாலும் சமாளித்து, “அமுதா, இந்தா கொஞ்சம் தண்ணி குடி. நம்ம போய் முதல்ல அகிலாவைப் பார்க்கலாம். பாவம், குழந்தைப் பயந்து போயிருப்பா . அருணுக்கு ஒண்ணும் ஆகாது. நம்ப யாருக்கும் எந்த கெடுதலும் செய்யல. நம்ப வேண்டுற தெய்வம் நம்பள கைவிடாது” என்றான்.

அமுதாவை சமாதானம் செய்தானே தவிர சங்கரன் மனதில் ஒரு பெரிய எரிமலையே குமுறிக் கொண்டிருந்தது.

ஹாஸ்பிடல் செல்லும் வழியெல்லாம் ஏதேதோ எண்ணங்கள், யோசைனைகள் .

பாவம், சின்னப்பெண். கல்யாணமாகி ஒரு வருடம் கூட முடியவில்லை. அதற்குள் இப்படி ஒரு சோதனையா. நாங்கள் யாருக்கு எந்த ஜென்மத்தில் என்ன தீங்கு செய்தோம்?

அமுதாவுக்கும் சங்கரனுக்கும் திருமணமாகி கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் கழித்துப் பிறந்த பெண் அகிலா.

 ஒரு குழந்தை வரம் வேண்டி அவர்கள் போகாத கோவில் இல்லை, வேண்டாத தெய்வம் இல்லை. ஒரு நவராத்திரி சமயம் திருச்சியில் தங்கி திருவானைக்காவல் அகிலாண்டேச்வரியைத் தரிசனம் செய்தார்கள். அதற்குப் பின் பிறந்த பெண் குழந்தை என்பதால் அந்த அகிலாண்டேச்வரியின் பெயரையே அவளுக்கு வைத்தார்கள்.

அவள் பிறந்த வேளை எல்லா சந்தோஷமும் அவர்களைத் தேடி வந்தது. சங்கரனுக்கு ஒரு பெரிய மல்ட்டி நேஷனல் பாங்க்கில் வேலை கிடைத்தது. திருவான்மியூரில் கொஞ்சம் நிலம் வாங்கி அழகாக ஒரு வீடு கட்டினார்கள்.

பத்து நிமிட நடையில் மருந்தீஸ்வரர் கோவில். இந்தப் பக்கம் நடந்தால் கடற்கரை

இயல்பாகவே அப்பாக்களுக்கு மகள்களின் மீது இருக்கும் பாசத்தையும் ஒட்டுதலையும் தாண்டி, சங்கரனுக்கு அகிலாவின் மீது உயிர். அகிலாவும் அப்பா செல்லம்தான்.

இரவில் அப்பாவோடு தான் சாப்பிட வேண்டும். கடைக்குப் போனால் அப்பாதான் ட்ரெஸ் செலெக்ட் செய்ய வேண்டும். அவன் எங்கு போனாலும் வால் போல பின்னாலேயே ஒட்டிக் கொண்டு அவளும் போவாள்.

ஆபீஸிலிருந்து சீக்கிரம் வரும் நாட்களில் எல்லாம் அப்பாவும் மகளும் தவறாமல் கோவிலுக்குக் கிளம்பி விடுவார்கள். சனி, ஞாயிறுகளில் பீச்.

சங்கரன், கோவிலில் மாலை வேலைகளில் நடக்கும் திருவாசகப் பாராயணத்தில் கலந்து கொள்வான். அகிலாவும், அப்பாவிற்கு அருகில் அமர்ந்து மழலை மாறாமல் தனக்குத் தெரிந்தபடி “நமசிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க” என்று பாடுவாள்.  மற்றவர்கள் அவளை ஆச்சிரியமாகப் பார்க்க சங்கரன் மனம் பெருமிதத்தால் நிறையும்.

எல்லாம் நேற்று நடந்தது போல இருக்கிறது.

அகிலா படிப்பில் படு சுட்டி. பள்ளி நாட்களில் எல்லா முக்கிய ஃபைனல் பரீட்சைகளுக்கும்  சங்கரன் தான் கொண்டு போய் விட வேண்டும்.அவன் தான் ரிஸல்ட்  பார்க்க வேண்டும். அப்படி ஒரு சென்டிமெண்ட்.

அவளுக்காக எத்தனையோ முறை மீட்டிங்குகளை , வெளியூர் பிரயாணங்களை தள்ளிப் போட்டிருக்கிறான்

அவளுடைய நண்பர்கள் பலரும் என்ஜினீயர், டாக்டர் என்று கனவு கண்டு  சயன்ஸ் க்ரூப் எடுக்க, அவள் சி ஏ படிக்க வேண்டும் என்றாள்.  

‘காலேஜ் போனா சி. ஏ எக்ஸாம்க்கு ஃபோகஸ் பண்ண முடியாது. ஆர்ட்டிகல்ஷிப் வேற பண்ண வேண்டியிருக்கும். நான் பி.காம் கரெஸ்பான்டென்ஸ்லே படிக்கறேன்பா, ‘என்றாள்.

ஒவ்வொரு விஷத்திலும் ஆழ்ந்து யோசித்து முடிவு எடுக்கும் தன் மகளை நினைத்து சங்கரனுக்குப் பெருமையாக இருக்கும்.

படிப்பு, வேலை என்று வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் அவளே யோசித்து முடிவெடுக்க அவளுக்கேற்ற துணையையும் அவள் சரியாகத்தான் தேர்ந்தெடுப்பாள் என்று அவன் நம்பினான்.

ஆனால் அங்குதான் பிரச்சனை ஆரம்பமாகியது.

அருணைத் தான் விரும்புவதாக அவள் சொல்லிய போது, சங்கரனால் அதை ஒத்துக்கொள்ள முடியவில்லை.

அருண் அவளுக்குக் கொஞ்சமும் பொருத்தமானவன் இல்லை என்று அவன் நினைத்தான். அவனும் சி ஏ, அவளுக்கு சீ னியர், அது மட்டும் போதுமா?

அவளுடைய வருங்கால கணவனைப் பற்றியும் திருமண வாழ்க்கையைப் பற்றியும் சங்கரன் செய்து வைத்திருந்த கற்பனைகளில் அருண் கொஞ்சமும் பொருந்தவில்லை.

ஏன் என்று கேட்டால் சரியான காரணம் சொல்லத் தெரியவில்லை.

‘ஹாய்  அங்கிள்’, என்ற ஒற்றை விசாரிப்பில் அவன் தன்னை  கடந்து போகும் போதெல்லாம், தன் மருமகன் தனக்கு மகனாகவும் இருக்க வேண்டும் என்று அவன் ஆசை ஆட்டம் கண்டது.    

தானே வலிய போய் பேசிய சந்தர்ப்பங்களும் ஏமாற்றத்தையே கொடுத்தன.

ஒரு சமயம் பத்திரிகையில் வந்த ஒரு ஜோக்கைப் படித்து ரசித்து, சிரித்துத் கொண்டே அவனிடம் காட்டினான்.

“ஐ காண்ட்  ரீட் தமிழ், சாரி அங்கிள்,”  என்று சிரித்தான். டெல்லியில் படித்தானாம். சி ஏ படிக்கும் போதுதான் சென்னை வந்தானாம்.

அது கூட பரவாயில்லை. ஐ பி எல் பார்க்காத ஒருவன் இருப்பானா? கிரிக்கெட் பிடிக்காதாம். தலையில் அடித்துக்  கொள்ள வேண்டும் போல இருந்தது.

அப்படி என்னதான் கண்டாள் அவனிடம்? அகிலா மீது கோபம் கோபமாக வந்தது.

ஆனால் இதெல்லாம் ஒரு காரணம் என்று சொல்லி அவள் தேர்ந்தெடுத்தவனை எப்படி வேண்டாம் என்று சொல்வது. இது அவள் வாழ்க்கை அல்லவா?

எவ்வளவோ சமாதானம் சொன்னாலும் மனம் ஒப்புக் கொள்ளாமல் தவித்தது.  ஆனாலும், மகளின் விருப்பத்தை மதித்து திருமணம் செய்து வைத்தான்.

 சந்தோஷமாக போய்க் கொண்டிருந்த அவர்கள் வாழ்க்கையில் சற்றும் எதிர்ப்பார்க்காமல் இந்த பேரிடி.

ஹாஸ்பிடல் வந்து எமர்ஜென்ஸ்சி வார்ட் விசாரித்துக் கொண்டு உள்ளே சென்றார்கள்.

அவனைப் பார்த்ததுமே ‘அப்பா’ என்று வந்துக் கட்டிக் கொண்டாள், அகிலா.

தன் மகளின் கண்ணீரைப் போல ஒரு ஆண் மகனைப் பலவீனப்படுத்தக் கூடியது இந்த உலகில் எதுவும் இல்லை.

சங்கரன் கண்களில் துளிர்த்த கண்ணீரை மறைத்துக் கொண்டான்.

“தலைல அடிப்பட்ட ஷாக்ல, பிரைன்ல க்ளாட் ஆகியிருக்கு. இப்போ கோமால இருக்கார். கொஞ்ச நாள் அப்ஸர்வ் பண்ணிட்டு தான் சர்ஜரி தேவையான்னு டிஸைட் பண்ணனும்” என்றனர் டாக்டர்கள்.

அதன் பின் ஹாஸ்பிடல் இன்னொரு வீடாகி போனது.

பகல் இரவு பாராமல் அருணுடன் இருந்தான்.

அவன் கைகளைப் பற்றிக் கொண்டு பேசினான். நம்பிக்கைக் கொடுத்தான். கந்த சஷ்டி கவசம் சொன்னான்.

இப்படி ஒன்றல்ல இரண்டல்ல இருபத்தியோறு நாட்கள் ஒரு தவம் போல அவன் அருகில் அமர்ந்திருந்தான்.

மனதில் அன்பு பெருகும் போது  அதிசயங்கள் நிகழ்கின்றன.

அவை நடக்கும் போது அதன் வீரியத்தை நாம் பல சமயம் உணர்வதில்லை. பெரும்பாலும் அதை ஒரு சாதாரண நிகழ்வாகவே கடந்து போகிறோம்.

பின்னோக்கிப் பார்க்கும் போதுதான் அது ஒரு பூ மலருவது போல எவ்வளவு அழகாக நிகழ்ந்திருக்கிறது என்பது புரிகிறது.

மூன்று வாரங்கள் கழித்து டாக்டர்கள் சர்ஜரி தேவையில்லை என்றார்கள். ஆனாலும் அருண் நினைவில்லாமல் கோமாவில் தான் இருந்தான்.

இன்னும் எத்தனை நாட்கள் இப்படி ? ஒன்றும் புரியவில்லை.

ஏதாவது ஒரு அதிசயம் நடக்காதா, அவன் கண் விழித்துப் பார்க்க மாட்டானா என்று மனம் ஏங்கியது.

கோவிலுக்குப் போனால் தேவலை என்று தோன்றியது.

மருந்தீஸ்வரரை தரிசனம் செய்து விட்டு திரிபுர சுந்தரி அன்னையின் சந்நிதியில் வந்து அமர்ந்தான்.

யாரோ ஒரு பெண்மணி அழகாக அபிராமி அந்தாதி பாடிக் கொண்டிருந்தாள் . அதில் மெய் மறந்து கண்கள் மூடினான்.

மணியே மணியின் ஒளியே….

ஒளிரும் மணி புனைந்த அணியே

அணியும் அணிக்கு அழகே

அணுகாதவர்க்குப் பிணியே, பிணிக்கு மருந்தே..

என்று கேட்டதும் அவன் அறியாமல் அவன் கண்களில் கண்ணீர் வழிந்தது. நீதான் இந்த நோய்க்கு மருந்தாக வர வேண்டும் என்று மனம் அன்னையிடம் மன்றாடியது.

நீ கொடுத்த குழந்தை அவள். இனியும் அவள் கண்ணீர் சிந்துவதைப் பார்க்கும் படி வைக்காதே. அவள் ஆசைப்பட்ட வாழ்க்கையை அவளுக்குக் கொடுத்துவிடு. அருணும் என் மகன் அல்லவா? உனக்கு உயிர்தான் வேண்டும் என்றால் என்னை எடுத்துக் கொள்.  அவனைத் திருப்பிக் கொடுத்துவிடு.

வேதனையில் மனம் ஏதேதோ பிதற்றியது . வேண்டியது.

தனம் தரும், கல்வி தரும்.

ஒரு நாளும் தளர்வறியா மனம் தரும்

தெய்வ  வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சமில்லா இனம் தரும்

…. நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே..

அந்தப் பெண் பாடிக் கொண்டிருந்தாள். மூடிய கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தபடி  இருந்தது

அன்னையிடம் அழுதானா, தொழுதானா , சண்டை போட்டானா, தெரியவில்லை.

ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை ..

அண்டமெல்லாம் பூத்தாளை…

…..முக்கண்ணியை தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே..

என்று பாடி முடிக்கும் வரை அவன் அந்த இடத்தை விட்டு அசையவில்லை.   

அடுத்து வந்த நாட்களில்  அருணின் உடல் நலம் வேகமாக முன்னேறியது. அவன் உடலும் மனமும் நன்றாகத் தேறிய பிறகு வேலைக்குப் போக ஆரம்பித்தான்.

அன்று அருணுக்குப் பிறந்த நாள். அமுதா அவர்கள் இருவரையும் சாப்பிட அழைத்து தடபுடலாக விருந்து தயாரித்திருந்தாள் .

சாப்பிட்டு முடித்து மற்றவர்கள் தூங்கப் போக சங்கரன் புத்தகம் படித்துக் கொண்டிருந்தான்.

சற்று நேரத்திற்கெல்லாம் தன் அருகில் வந்தமர்ந்த அருணை ஆச்சரியமாகப் பார்த்தான். “தூங்கலியா அருண்” ?

“தூக்கம் வரல”, என்று சிரித்தான்.

‘நான் ஹாஸ்பிடல்ல இருந்த போது நீங்க எப்பவும் என் கூடவே  இருந்து என்னை எப்படி பாத்துக்கிட்டீங்கனு அகிலா சொன்னா’ .

பேசிக் கொண்டிருந்தவன், சட்டென்று அவன் கைகளைப் பற்றி “தாங்க் யூ அப்பா”. என்றான்.

 

சங்கரனுக்கு தன்னுள் அழுத்திக் கொண்டிருந்த ஏதோ ஒன்று உடைந்து மனம் லேசானது போல இருந்தது.

அவனை அப்படியே தழுவிக் கொண்டான்.

அவர்கள் சென்ற பிறகு கூட மனம் அந்த ஆனந்தத்திலேயே லயித்திருந்தது.

மறுநாள் சிவராத்திரி. காலையில் மார்க்கெட் போய் பூஜைக்குத் தேவையானதெல்லாம் வாங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே தூங்கச் சென்றான்.

அகிலாவின் செல் ஃபோன் ஒலித்தது.

யார் காத்தால ஃபோன் பண்றாங்க என்று யோசித்தபடி  எடுத்தாள்.

அம்மாதான். இன்று சிவராத்திரி என்று நினைவுபடுத்தத்தான் இருக்கும்.

அப்பா சாயங்காலம் பூஜை பண்ணுவார். நீங்க ரெண்டு பேரும் சீக்கிரம் வந்திடுங்க. அம்மா சொல்லப் போவதையெல்லாம் மனதில் சொல்லிப் பார்த்துக்  கொண்டே ஃபோனை காதில் வைத்தாள்.

‘அப்பா நம்ம விட்டுட்டு போய்ட்டாரு, அகில். தூக்கத்திலேயே உயிர் போயிருக்கு.

டாக்டர் வந்துப் பாத்துட்டு மூளைல ரத்தக் கசிவுனால மரணம்னு சொல்றாரு. ‘

தான் கேட்பதை நம்ப முடியாமல் “அப்பா” என்று அலறினாள் அகிலா.

2 responses to “வரம் – தீபா மகேஷ்

  1. எளிய வார்த்தைகள் கொண்டு யதார்த்த நிலை கொண்ட சம்பந்தப்பட்ட நிகழ்வுகளை கதையாக அளித்துள்ள மணியான தீபா மகேஷ் என்ற மங்கையருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்…

    சேஷாத்திரி… மயிலை.. சென்னை.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.