‘கல்யாணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது’ ஆனால் நடப்பது பூலோகத்தில்தானே! இப்போது எல்லோருக்கும் தெரிந்ததுதான் இந்த ஸூம் மேரேஜூம் (ZOOM MARRIAGE) . ஐந்து நாள் கல்யாணம், மூணு நாள் கல்யாணம், காதல் கல்யாணம், பதிவுத்திருமணம் மாதிரி இந்தக் கொரோனா காலத்தில் இதுவும் இப்போது ஒரு வித கல்யாணம்தான்.
வாட்சப்பில் ஒரு செய்தி வந்தது மேரேஜ் முடிந்து எல்லோர் வீட்டுக்கும் கேரியரில் சாப்பாடு என்று. அது எப்படி!
கல்யாண அழைப்பிதழை வாட்சப்பில் அனுப்பிவிட்டு அத்துடன் 100 ஜீபி டாடா பேக்கையும் இணைத்து திருமணத்திற்கு இரண்டு நாள் முன்னதாகவே பிக்பாஸ் வீடு மாதிரி ஸூமில் லைவ் ரிலேவில் கலந்து கொண்டு சிறப்பிக்கவும் என்று அழைத்தார்கள் சுமதி தம்பதியினர்.
சம்பந்தி ஆத்துக்கு தனி ஸூம் மீட்டிங் பெண்ணாத்துக்கு தனி ஸூம் மீட்டிங். ஆஹா என்ன ஒரு திட்டம்! நம்மாத்து கொணஷ்டை, மொகறைல இடிச்சுக்கறைதையெல்லாம் பிள்ளை ஆத்துக்காரா பார்க்க வேண்டாம். கல்யாணத்தை ஆன்லைன்லே அட்டெண்ட் பண்றதாக இருந்தாலும் டிரஸ்சை எல்லோரும் பார்ப்பார்களே! எனவே முதலில் சாரி செலக்ட் செய்ய ஆரம்பித்தோம். இது நேரில் போறதை விட கஷ்டமாக இருந்தது. இந்தப் புடவை நல்லா தெரியுமா ? இராமர் பச்சை, நீலம் என்று கண்டுபிடிப்பார்களா என்று ரொம்பவும் யோசிக்க வேண்டி இருந்தது. பச்சை எத்தனை பச்சையடி! ‘ஸூம் மீட்டிங்கில் அவ்ளோதான் வரும் மாமி. சம்பந்தி மாமி புடவை கரு நீலமா நாவல் பழக்கலரா என்று கேட்கிறேளே நியாயமா’ என்று நீலா கல்யாணி மாமியிடம் அங்கலாயித்தது பின்னால் தெரிய வந்தது.
கல்யாணம் ஆரம்பித்தாகிவிட்டது. மாலைகளும் பூவும் ஆன்லைனில் மிகவும் அழகாக ஜொலித்தன. மாப்பிள்ளை பெண்ணின் கையை அழுத்தமாகப் பிடித்து விட்டார் போலும் அவள் முகச்சுளிப்புக் கூட துல்லியமாகத் தெரிந்தது. பெண் புடவை மாத்திண்டு வர நேரம் ஆனதைப் பார்த்த கோகிலா மாமி ‘அம்புஜம் அவ மேடைக்கு வந்தான்னா பிங்க் பண்ணு, நான் அரிசியை ஊற வைச்சுட்டு வந்துடறேன்’ என்று சமையல் கட்டிற்குள் ஓடினாள். இது ஒரு சௌகரியம்தான். ஆனாலும் மாமிகளெல்லாம் டெக் ப்ரிண்டலிதான். சந்திரா மாமியோ ஒரு படி மேலே போய் ‘சாப்பாடோட ஊஞ்சல்ல சுத்தறத்துக்கு பச்சபுடியும் டோர் டெலிவரி செஞ்சுட்டா நேரில் கலந்துண்ட திருப்தி இருக்கும்’ என்று நொடித்தாள்.
சண்டை இல்லாத கல்யாணமா அது எப்படி! பாச்சு மாமா வரது அத்தையைப் பற்றி சேகர் மாமா கிட்ட சொல்றதா நினைச்சு அன்ம்யூட்ல சொன்னதைக் கேட்டு வரது அத்தை கோச்சுண்டு லாகாஃப் செய்துட்டாள். ஒரு ஜோக்கும் நடந்தது. கேமிராமேன் லைவ் ஆன்ல வெச்சுண்டே சமையல் இடத்துக்குப் போய் நாலைந்து லட்டு ஒருசேர சாப்பிட்டதை எல்லோரும் பார்த்து சிரித்தனர்.
மாங்கல்ய தாரணம் ஆயிடுத்து. கெட்டி மேளம் வாசிக்கும்போது வாத்தியக்காரர் ம்யூட்ல போய்ட்டார், பயிஞ்சாயிரம் தண்டம் என்று அங்கலாயிற்றார் பெண்ணைப் பெற்றவர். அவர் கவலை அவருக்கு. கல்யாணி மாமியோட ஹஸ்பண்ட் ‘கல்யாணி, மானிட்டருக்கு அட்சதை போட்டயே, ஓரளவுக்கு நியாயம், ஆனா, ஹோமம் செஞ்ச எஃபக்ட் வரணும்னு வரட்டியெல்லாம் கொளுத்தறியே, இதெல்லாம் அடுக்குமா?’ என்றார். தாலி செயினோட டிசைனைப் பற்றி எல்லா மாமிகளும் ஒரு கலந்துரையாடல் பண்ணினார்கள். நல்ல வேளை அங்கே நீயா நானா கோபிநாத் இல்லை.
தாலி முடிஞ்சதுக்கு நாத்தனாருக்கு தங்கசெயின் போட்டதுக்கு எல்லோரும் வாய்ப்பிளந்தார்கள். பொரி போட்டதுக்கு பிள்ளை வீட்டுக்காரர்களும் அவள் தம்பிக்கு வைரமோதிரம் போட்டது எல்லோருக்கும் சந்தோஷத்தைக் கொடுத்தது. சப்தபதி முடியும் வரை வாத்தியார் மாப்பிள்ளையை ம்யூட்ல போடச் சொல்லிட்டார். மாங்கல்ய தாரணம் ஆனதினால் பாக்கி எல்லோரும் அன்ம்யூட் பண்ணி ‘மாப்பிள்ளை வந்தாரா, மாட்டுப்பெண் வந்தாச்சா’ என்று கேட்டுக்கலாம் என்றார். நடுவில் ஒரு குட்டி அநௌஸ்மெண்ட் ‘சம்பந்தி சண்டை தனி ஸூம் மீட்டிங்க்ல நடக்கிறது. விருப்பப்பட்டவா இந்த லின்க்ல கிளிக் செஞ்சு கலந்துக்கலாம்’। இதற்குள் கனெக்க்ஷன் டெர்மிநேட் ஆனதைப் பார்த்து சண்டையினால் கல்யாணம் நின்று போவதாக வருத்தப்பட்ட காமு பாட்டிக்கு இன்டர்நெட் வேலை செய்யவில்லை, கல்யாணம் நடந்துண்டுதான் இருக்கு என்று புரிய வெக்கப் போராட வேண்டி இருந்தது.
என்னதிது! கல்யாண சாப்பாடு வீட்டிற்கே வந்து விடுமா! ‘அப்ப மாப்பிள்ளை அழைப்பிலிருந்தே லாகின் செஞ்சுடறோம். எங்காத்து கீழ் போர்ஷன்லே வயசான மாமா இருக்கார். அவருக்கும் சேர்த்து அனுப்பிடுங்கோ’ என்று உரிமையாக சொன்னாள் அத்தைப்பாட்டி அகிலாண்டம். அதற்குள் பெரியப்பா சம்பத் ‘சாப்பாட்டை ஸ்விகில அனுப்பிச்சுட்டேள் கட்டுச்சாதக் கூடையும் டோர் டெலிவெரி செய்வீர்களா’ என்று மிளகாய்ப்பொடி தடவின இட்லியையும் புளியஞ் சாதத்தையும் எண்ணி சப்புக்கொட்டினார். ஸ்விகிக்காரனும் எட்டு மணிக்கே சப்பாடைக் கொடுத்து விட்டு ‘நீங்கள்தான் முதல் பந்தி’ என்று குசும்பாகச் சொல்கிறான். இந்த ஜெயந்தி சித்தி ரொம்ப மோசம். செலவானாலும் பரவாயில்லை என்று ஆத்துக்கே ஸ்விகில சாப்பாடு அனுப்பி வைச்சா டன்ஸோல ரெண்டு டிஃபன் கேரியர் அனுப்பி பிசிபேளாபாத்தும், ஸ்வீட் பச்சடியும், உருளைக்கிழங்கு கறியையும் ஃபில் செய்து அனுப்பச் சொல்கிறாள். பாகீரதி மாமி அதைவிட மோசம். பழக்க தோஷத்தில் வீட்டுக்கு வந்த சாப்பாட்டிலிருந்து பாதாம் அல்வாவை பொட்டலம் கட்டி முந்தானையில் முடிச்சு வைச்சுக்கறார். பத்மா மாமி எல்லோரையும் தூக்கி சாப்பிட மாதிரி ஸ்விகிகாரனையே பரிமாறச் சொல்கிறாள். அவனிடமே இலை நுனி எந்தப் பக்கம் போடணும்னு சந்தேகம் வேறு கேட்கிறாள். சாப்பாடு பிரமாதம் யார் கேட்டரிங்க்னு கேட்ட வாசு மாமாவிடம் ‘நீங்க எந்த ஏரியான்னு சொல்லுங்கோ அதுக்கேத்தமாதிரி கேட்டாரர் யாருன்னு சொல்றேங்’கறான். பெரிய இடத்து கல்யாணம்தான் போல! தாம்பூலப் பையையும் ஸ்விகி மூலமாக அனுப்பி இருக்கா! ஆனால் ‘ஆன்லைன் கல்யாணம், மொய் எழுத வேண்டாம்னு சந்தோஷப்பட்டால் ஈமெய்ல்ல பேமண்ட் லிங்க் அனுப்பறான் விடாக்கண்டனான பஞ்சாபகேசன்’ என்று அலுத்துக்கொண்டார் அலகேசன் மாமா. உஷா மாமி தன் குடும்பத்துடன் அமெரிக்காவிலிருந்து கண்டு களித்தது இந்த டெக்னிகல் சாதனத்தினால் என்றால் மிகையாகாது.
இதையெல்லாம் தூக்கிச்சாப்பிடுகிற மாதிரி கனகம் மாமி லலிதா மாமிக்குப் ஃபோன் பண்ணி ‘உனக்கு அரக்கு கலர் பார்டரா, உன்கிட்டேதான் இந்தக் கலர் இருக்கே, மாத்திப்போமா, என்னோடதை டன்ஸோல அனுப்பி வைக்கறேன், நீ உன்னோடதை அனுப்பி வை, புடவை வாங்கறப்ப கொஞ்சம் டேஸ்டோட வாங்கப்படாதோ!’ என்று அங்கலாயித்தாள். சரோஜா மாமி சச்சு மாமியிடம் ‘உன் பெண்ணுக்கு வரன் பார்க்கிறாயே, அதோ பார் அந்தப் பையன் களையாக, துறுதுறு என்று இருக்கிறான் அவனைப் பற்றி விசாரி’ என்று இன்னொரு கல்யாணத்திற்கு அங்கே அடி போட்டாள். இதுதான் கல்யாணம். எத்தனை இடர் வந்தாலும் இந்த சந்தோஷங்கள், சிணுங்கல்கள், எதிர்ப்பார்ப்புகள் இவையெல்லாம் சேர்ந்ததுதான் வாழ்க்கை.
எந்த மாதிரி கல்யாணமாக இருந்தாலும் அதனை ரசித்து மகிழ்வோமாக!