குண்டலகேசியின் கதை -6 – தில்லைவேந்தன்

Tamil Kundalakesi for Android - APK Download

 

 

முன் கதைச் சுருக்கம்:

பூம்புகார் நகரத்துப் பெருங்குடி வணிகனின் அருமை மகள் பத்திரை.
கொலைத் தண்டனை விதிக்கப்பட்ட காளன் என்ற கொடிய கள்வன் மேல் காதல் கொண்டாள்.
மகளின் மனதை மாற்ற முடியாத வணிகன்,மன்னனிடம் நயமாகப் பேசி மன்றாடி அவனை விடுவித்தான்.
இனி, அவர்களின் திருமணத்தைக் காண்போம்……..

 

 

கதிரவன் தோற்றம்

பேரெழில் பத்தி ரையாள்
பெட்புடன் காளன் தன்னைச்
சீருடன் மணக்கும் காட்சிச்
சிறப்பினைக் காண்ப தற்குத்
தேரினில் குதிரை ஏழு
செலுத்தியே கிழக்கு வானில்
காரிருள் பகைவி ரட்டிக்
கதிரவன் வந்தான் மாதோ!

திருமண ஊர்வலம்

ஈர்ந்தண் முழவு ததும்பிடவும்
யாழும் குழலும் விளங்கிடவும்
ஆர்ந்து முரசம் அதிர்ந்திடவும்
ஆழி சங்கம் முழங்கிடவும்
சேர்ந்து முத்து வெண்குடைகள்
திசைகள் தோறும் எழுந்திடவும்
ஊர்ந்து மணநாள் ஊர்வலமும்
ஊரே வியக்கச் சென்றதம்மா

மணவிழாவிற்கு வந்த பல்வகை மக்கள்

பெடையன நடையார் வந்தார்
பேரிளம் பெண்கள் வந்தார்
விடையன இளையோர் வந்தார்
மெய்தளர் முதியோர் வந்தார்
உடைப்பெரும் செல்வர் வந்தார்
உயர்நிலை இருப்போர் வந்தார்
நடைமெலி நல்கூர்ந் தாரும்
நாட்டமே மிக்கு வந்தார்
( பெடையனம்- பெண்அன்னம் )

( பேரிளம் பெண்கள் — வயது முதிர்ந்த பெண்கள்)
( நல்கூர்ந்தார் — வறியவர்)

திருமண விருந்து

காலை வந்த ஊர்மக்கள்
களித்துப் பொங்கல், வெண்சோறு,
சாலச் சிறந்த கறிவகைகள்,
தயிர்சேர் இனிய புளிப்பாகர்
ஞாலம் விரும்பும் நறுங்கனிகள்,
நாவை மயக்கும் நல்லினிப்பு
மேலும் மேலும் கேட்டுண்டு
மேவும் விருந்தின் சுவைபுகழ்ந்தார்!

(தயிர்சேர் இனிய புளிப்பாகர் — தயிர் கலந்து செய்த , இனிய புளிப்பையுடைய மோர்க்குழம்பு)

மணவிழா மண்டபம்

மண்டபத்தின் வாயிலிலே இரும ருங்கும்
வாழையுடன் கமுகுமரம் தலைவ ணங்கும்
கண்டவர்கள் மனமயங்கும் நீலப் பட்டின்
கவின்மிகுந்த விதானத்தில் முத்துத் தொங்கும்
வண்டினங்கள் மொய்க்கின்ற மணக்கும் பூக்கள்
வண்ணவண்ண மாலைகளாம் இங்கும் அங்கும்.
பண்டையர்தம் முறையினிலே அலங்க ரித்த
பாங்கினுயர் மணவறையில் மகிழ்ச்சி பொங்கும்.

மணமக்கள் மண்டபம் வந்தடைதல்

வெண்புரவி மீதேறித் திண்தோள் காளன்
மேன்மைமிகு மண்டபத்தை வந்த டைந்தான்
மண்புகுந்த நிலவனைய பத்தி ரையாள்
மகிழ்ச்சியுடன் மணிச்சிவிகை ஊர்ந்து வந்தாள்
பண்புகுந்த இன்னியங்கள் முழங்க மேளம்
பருவரைமேல் இடியொலிபோல் அதிர ஆங்குக்
கண்புகுந்த மணக்கோலக் காட்சி யாலே
கண்பெற்ற பயனடைந்தார் நகர மாந்தர்

( இன்னியங்கள் — இசைக்கருவிகள்)
( பருவரை — பெரிய மலை)

திருமணம்

வெள்ளி முளைக்கும் வைகறையில்
வேள்வித் தீயை வலம்வரவும்
அள்ளிப் பூக்கள் அவர்மேலே
ஆன்றோர், பெரியோர் சொரிந்திடவும்
கள்ளி ருக்கும் மலர்க்கூந்தல்
காதல் மங்கை பத்திரைக்கும்
துள்ளும் இளமைக் காளனுக்கும்
தூய மணம்தான் சிறந்ததுவே!

(தொடரும்)

 

கம்பன் கவிநயம் – தங்க தனசேகரன்

Ramayanam story in tamil | Kamba ramayanam in tamil | கோசல நாட்டின் செழிப்பு | Part -1. - YouTube

ஒரு நாட்டில் இயற்கை மரணங்கள் தவிர்த்து செயற்கை மரணங்கள் இல்லாமலிருந்தால் எப்படி இருக்கும்?

நமது நாட்டில் விதிமுறைகளை மீறுவதால் நிகழும் விபத்து மரணங்கள் ஏராளம்.

மதவேற்றுமைகளை மையமாக வைத்து நடக்கும் வன்முறை மரணங்கள் ஏராளம்.

அமைதி போராட்டங்களினூடே ஊடுருவி சமூக விரோதிகளால் ஏற்படும் வன்முறை மரணங்கள் ஏராளம்.

கல்லூரி, பல்கலைக்கழக வளாகங்களில் உருவாகும் கோஷ்டி மோதல்களில் நடைபெறும் வன்முறை மரணங்கள் ஏராளம்.

மதுபோதையில் நண்பர்களிடையே ஏற்படும் சண்டைகளால் ஏற்படும் துர்மரணங்கள்.

பெண்களை போகப்பொருளாக எண்ணி பாலியல் வன்கொடுமையால் ஏற்படும் மரணங்கள்.

இப்படி அடுக்கி கொண்டே போகலாம். குற்றங்கள் பெருகும் ஒரு நாட்டில் இத்தகைய துர்மரணங்களுக்குஅளவு இல்லை;முடிவும் இல்லை.

ஆள்வோர் யாராக இருந்தாலும் குற்ற செயல்களைத்  தடுக்கத்  தவறி விடுகின்றனர்.

அங்கே கூற்றுவனுக்கு இடையறாத கூடுதல் வேலை. எமதர்மனுக்கு அந்நாடு களிப்பு களமாக திகழ்கிறது. குற்றங்கள் குறைந்து விட்டால் அல்லது குற்றச்செயல்களே இல்லாத ஒரு நாட்டில் எமனுக்கு அதிக வேலை கிடையாது. அவன் நன்கு ஓய்வெடுக்கலாம்.

நாடு என்பது நாட்டில் உள்ள இடங்களையும் இயற்கை வளங்களையும் மட்டும் குறிப்பதன்று. நாட்டு மக்களையும் உள்ளடக்கியே நாடு எனப்படும். மக்களின் தகைமை கொண்டே நாட்டின் தன்மை தீர்மானிக்கப்படும். செழுமையான சிந்தனை மற்றும் நேர்மையான எண்ணங்களை உடைய மக்களைக் கொண்ட நாடு நல்ல நாடு என்று பகிரப்படும். அங்கு அமைதி தவழும். சகோதர உணர்வு மிளிரும். சகிப்புத்  தன்மைக்கு குறைவிருக்காது. எனவே மகிழ்ச்சி நிறைந்திருக்கும். சுருங்கக் கூறின் அதுவே பாருக்குள்ளே நல்ல நாடாக இருக்கும்.

அத்தகைய சிறப்பு மிக்க நாட்டை தசரதன் ஆண்டு வந்தான்.

கோசல நாட்டின் சிறப்பை கம்பன் கீழ்க்கண்ட பாடலில் விவரிக்கிறான்:

கூற்றம் இல்லை, ஓர் குற்றம் இல்லாமையால்
சீற்றம் இல்லை, தம் சிந்தனையின் செம்மையால்
ஆற்றல் நல்அறம் அல்லது இல்லாமையால்
ஏற்றம் அல்லது இழித்தகவு இலையே. (பாடல் 70)

கோசல நாடு:

குற்றங்கள் இல்லை — எமனுக்கு வேலையில்லை
நற்சிந்தனையுடை மக்கள் — மகிழ்ச்சியான வாழ்க்கை
அறவழி செயல்கள் — சிறப்பு மிக்க நாடு

மேலும் கம்பன் சொல்வான்:

வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால்
திண்மை இல்லை நேர்செறுநர் இன்மையால்
உண்மை இல்லை பொய்யுரை இலாமையால்
வண்மை இல்லை பல்கேள்வி மேவலால். (பாடல் 84)

தாராள மனப்பான்மை கொண்டு தானம் செய்வோர் அங்கில்லை. ஈகை நெஞ்சம் கொண்டோர் யாருமில்லை என்ற பொருள் இல்லை.  அந்நாட்டில் வறுமை இல்லை. வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் வறியவர் இல்லை. கையேந்திப் பிழைப்போர் எவருமில்லை. அதனால் வாரி வழங்கும் வள்ளல்களுக்கு வேலையில்லை.

குடிமக்கள் பலசாலிகளாக இல்லை. சுகவாசிகளாக வாழும் மக்கள் உடற்பலம் மிக்கவர்களாக இருப்பதில்லை என்பது உலக இயல்பு. கோசல நாட்டை எதிர்க்கும் துணிவுடைய பகைவர்கள் இல்லாததால், அந்நாட்டு மக்கள் பதட்டமற்ற இனிதான வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். உடல் வலிமையை அதிகரிக்க வேண்டிய சூழல் எழவில்லை.

மேலும் உண்மை பேசுவோர் இவர்கள் என்று குறிப்பிட்டு சிறப்புற சொல்வதற்கான தேவை கோசல நாட்டில் எழவில்லை . ஏனென்றால் பொய் பேசுவோர் எவரும் இல்லை .

இறுதியாக, அந்நாட்டு மக்கள் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கியதால் “நான் மட்டுமே அனைத்தும் அறிந்தவன்” எனும் அறியாமை இருள் இல்லை. இதனால் யாரும் யாருக்கும் அடிமையில்லை எனும் சமத்துவமும் சமதர்மமும் தழைத்தோங்கியது.

கம்பன் கண்ட கோசலநாட்டின் சிறப்புகளை மீட்டெடுத்து இந்நாளில்  ‘பாருக்குள்ளே நல்ல நாடு பாரத நாடு’ என்கிற பெருமை சேர்க்க நாமனைவரும் அவரவர் வழியில் முயற்சிப்போம்.

 

 

 

 

 

குமார சம்பவம் – எஸ் எஸ்

ஏழாம் சர்க்கம்

நன்றாக வந்திருக்கிறது 'நண்பன்' ! : ஷங்கர் | Lord ganesha paintings, Hindu art, Shiva parvati images

குறித்த நான்காம்நாளில் பூர்வாங்க காரியம் செய்திட இமவான் துவங்கினன்

நகரமாந்தர் தம் பெண்ணின் மணவிழா போல் மங்கள காரியம் செய்தனர்

பட்டுவிதானம் அமைத்து வாயிலில் தோரணம் கட்டி  பூக்களையும்  தூவினர்

பார்வதியை உயிரெனக் கருதிய இமவான்  வேண்டியதனைத்தும் செய்தனன்

உறவினப்பெண்டிர் பார்வதிக்கு அணிகலன் பூட்டி  ஆசி வழங்கி அருளினர்    

சுமங்கலிப்பெண்கள் நல்ல நேரத்தில்  அலங்காரம் செய்யத் துவங்கினர்

எண்ணெய்  ஸ்நானம் செய்திட வேண்டி தக்க உடையும் பாணமும் தந்தனர்

குளிப்பதற்கு முன்னரும்  வளர்பிறை மதியம்போல் அழகுடன் கொழித்தாள்

வாசனைப் பொடி தடவி கஸ்தூரி மஞ்சள் பூசி  நீராட அழைத்துச் சென்றனர்   

ரத்தினக் குளியலறையில் தங்கக்குடநீர் பெய்து மங்கள ஸ்நானம் புரிந்தனர்

மங்களக் குளியலுக்குப்பின் வெண்பட்டு அணிந்து பொலிவுடன் இருந்தாள்    

மணிகள் பதித்த அலங்கார மண்டபத்துக்கு அவளை அழைத்துச் சென்றனர்

அலங்காரம்  புரியவந்த பெண்கள் பார்வதியின் எழிலில் மயங்கி நின்றனர்  

அகிற்புகையிட்டு மலர்செருகி  பூச்சரம் தொடுத்து கூந்தலை முடிந்தனர்

மேனியெங்கும் வெண்சாந்து பூசி அழகு வரிகளையும் ஆங்காங்கே எழுதினர்

மேகக்கூந்தலில் அழகுமுகம் சந்திரபிம்பமோ வண்டு குவிந்த தாமரையோ

சாந்து பூசிய கன்னம் பூக்கள் பதித்த செவிகள் பார்த்த கண்கள் மயங்கின   

செம்பஞ்சுண்ட இதழ்கள் தேன்மெழுகிட்டதும் அசைந்து அசைந்து துடித்தன

செம்பாதத்தில் சிவன்சிரசு படும்போது சந்திரகலையை எட்டி உதைப்பாளோ

கண்ணே இத்தனை கருத்திருக்க மேலும்  அதற்கு மையிடல் தேவையோ

ஆபரணங்களை அவள் மேனி அணிவது நட்சத்திரங்கள்  உதிக்கும் வானமோ

தன்எழிலை ஆழியில் கண்டதும் அதனை ரசிக்கவரும் சிவனை நினைத்தாள்

முடிவில் மேனை பார்வதிக்கு தந்தக் காதணி அணிவித்து உச்சி முகர்ந்தாள்

நல்லவரன் அமைந்ததென  மகளை ஆனந்தக் கண்ணீரால் அலங்கரித்தாள்

மங்கலநூலை மகள்கையில் கட்டும்போது  கண்ணீர் பெருகத் தடுமாறினாள்   

வெண்பட்டு உடுத்திய பார்வதி பாற்கடல் புரளும் நுரைபோல் பொங்கினாள்

அலங்காரம் முடிந்த பார்வதி தெய்வத்தையும் பெண்டிரையும் வணங்கினாள்

பதிவிரதைப் பெண்டிர் பார்வதிக்குக் குறைவின்றி ஆசிகள் வழங்கினர்

பெண்ணை மணமகளாய்க் கண்ட இமவான் மணமகன் வரக் காத்திருந்தான்

hinducosmos | Lord shiva painting, Lord shiva, Shiva parvati images

சிவனுக்கும் அதே சமயம் அலங்காரம் செய்விக்க ஆடை அணிகலன் வந்தன

சிவனின் உடலைத் தழுவிய பொருட்கள் தாமே அணிகலன்களாய் மாறின

விபூதி சந்தனமாக கபாலம் தலையணியாக  தோலாடை பட்டாயிற்று   

நெற்றிக்கண் ஹரிதாள திலகமாய் மாறி முகத்திற்கு அழகு சேர்த்தது    

கழுத்தில் கையில் தோளில் இடுப்பில் இருந்த பாம்புகள் ஆபரணங்களாயின

ஒளிவீசும் சந்திரகலை சிரசை அலங்கரிக்க வேறொரு ரத்தினம் எதற்கு ?

தன் சக்தியால் அழகு பெற்ற சிவபிரான் கத்தியில் தம் அழகைக் கண்டார்

நந்திகேஸ்வரர் கைபிடித்து ரிஷப வாகனத்தின் மீதேறி சிவனும் புறப்பட்டார்

தாய்மார்கள் எழுவர்  சிவபிரான் பின் தத்தம் வாகனத்தில் உடன் சென்றனர்

பொன்னிறத் தாய்மார்கள்பின் கருத்த மேகம் போன்று பத்ரகாளி சென்றாள்

சிவசேவகர் பிரானுக்கு முன் வாத்யம் முழங்கி தேவர்புடைசூழ சென்றனர்   

விஷ்வகர்மா குடைவடிக்க சூரியன் பிடித்திருக்க சிவபெருமான் சென்றார்

கங்கையும் யமுனையும் தேவவடிவம் கொண்டு வெண்சாமரம் வீசி வந்தனர்

பிரும்மரும் விஷ்ணுவும் சிவபிரானை எதிர் கொண்டு வரவேற்கச் சென்றனர்

வேதநாயகன் விவாக சுபதினத்தில் மும்மூர்த்திகளும் பேதமின்றி  இருந்தனர்

இந்திராதி தேவரும் நந்திதேவர் அருள்பெற்று சிவபெருமானை வணங்கினர்

பிரும்மருக்குத் தலையசைப்பு விஷ்ணுவுடன் உரை சிவனின் சபைகௌரவம்

வந்திருந்த சப்தரிஷிக்களிடம் விவாகம் நடத்தித்தர   சிவனும் வேண்டினார்  

கந்தவர்கள் பிரானைப் பாடித்துதிக்க  சிவனும் செவிமடுத்து மேலேசென்றார்

சிவபிரான் இவர்ந்த ரிஷபவாகனம் அசைந்துஅசைந்து அழகாய்ச் சென்றது

ஔஷதிப்ரஸ்தம் சென்ற பிரான் பொன்னகரைப்  புன்னகையுடன் பார்த்தார்

 திரிபுர வதையின்  பாணமென சிவன் விண்ணிலிருந்து கீழே இறங்கினார்

இமவானும்   வாசலில் வந்த சிவனை வரவேற்க சுற்றம் சூழச்  சென்றான்

சிவசேவகரும்  இமவான் உறவும் நீரோடு நீர் கலந்தார்போல கலந்தனர்

உலகே வணங்கும் சிவன் தன்னை வணங்கக் கண்டு வெட்கினான் இமவான்

மருகனாய்வந்த பிரானை மலரிட்ட பாதையில் தானே அழைத்துச்சென்றான்   

 

உலாவரும் சிவனைக் கண்ணால்காண பெண்களின் துடிதுடிப்பு அம்மம்மா

அவிழ்ந்த கூந்தலை முடியாமல் விரைந்து சன்னலருகு சென்றாள் ஒருத்தி

காலில் செம்பஞ்சு பூசிடும்போது பூச்சு வழிய  ஓடினாள் மற்றொருத்தி

ஒரு கண்ணுக்கு மையிட்டு மறு கண்ணை மறந்து ஓடினாள் இன்னொருத்தி

அவிழ்ந்த ஆடையை இழுத்துச் சொருகாமல் அப்படியே ஓடினாள் ஒருத்தி

நூலில் ரத்தினம் கோர்ப்பவள் அவை சிதறுவது அறியாமல் சாடினாள் ஒருத்தி

ஜன்னலில் பூத்த மலர் போல் அழகுப் பெண்கள் சிவனைப் பார்த்து நின்றனர்

அனைவரும் ஆவலாய்ப் பார்த்திருக்க தோரண வீதியில் சிவனும் வந்தார்

பிரானின் திருவுருவைப் பார்த்த பெண்டிர் பார்த்த வண்ணமே நின்றனர்

அழகியசிவனை அடைய பார்வதியின் தவம் நியாயமே எனப் பகர்ந்தனர்  

அழகும் அழகும் இணையாவிடில் அழகுக்கே  பொருளில்லை என்றனர் சிலர்

சிவன் எழில் கண்ட மதன்  நாணித்  தானே சாம்பலானான் என்றனர் சிலர்

உயர்ந்தஇமவான் சிவன் மருகனானபின்  இன்னும்உயர்வான் என்றனர் சிலர் 

 

பெண்டிர் சொல்கேட்ட  சிவன் புன்னகையுடன் இமவான்இல்லம் அடைந்தார்

விஷ்ணு கைகொடுக்க பிரும்மன் வழிகாட்ட சிவன் மணவறை  சென்றார்

தேவரும் ரிஷிக்களும் சேவகரும் மற்றையோரும் அவர் பின் தொடர்ந்தனர்

இமவான் சிவபிரானை சாஸ்திரப்படி பட்டாடை கொடுத்து வரவேற்றான்   

 

புத்தாடை உடுத்திய சிவபிரானை மணமேடைக்கு அழைத்துச் சென்றனர்

பூத்திருக்கும் பார்வதியைக்  கண்ட சிவனின் கண்கள் மகிழ்வில் மலர்ந்தன

காணத்துடித்த இருவர் கண்களும்   பிறர் காணாதபோது கண்டு மகிழ்ந்தன     

பார்வதிகரத்தை இமவான்  தந்திட சிவனும் பற்றிட இன்பம் அங்கே பிறந்தது 

பார்வதி மயிர்க்கூச்செறிய சிவன் கைவியர்க்க கரஸ்பரிசம் காரணமாயிற்று

அழகே உருவான இருவரும் தங்கள்  மணநாளில் அழகுக்கு அழகு சேர்த்தனர்

தம்பதிகள் இருவரும் மற்றவர் கைபற்றி மின்னும்  அக்னியை வலம் வந்தனர்     

உணர்ச்சியில் துடித்த இருவரும் அக்னியில் பொரியிட்டு ஹோமம் செய்தனர்

 புரோகிதர் ஆணைப்படி ஓமப்புகை கையெடுத்து முகர்ந்தனள் பார்வதி

பார்வதி கண்மை புகையில் கரைய சூடிய மலர்களும் புகையில் வாடின

விவாகம் முடித்த புரோகிதர் சிவபார்வதி இருவருக்கும் ஆசி வழங்கினர்

புரோகிதர் கூறிய  ஆசி வார்த்தைகளை மனதினில் பதித்தாள் பார்வதிதேவி

துருவநட்சத்திரம் பாரென சிவன்கூற  பார்த்தேன் என பார்வதி உரைத்தாள்       

உலகின் தாய்தந்தை  சிவபார்வதி பாட்டன் பிரும்மமரை வணங்கினர்

பார்வதிக்கு ஆசி வழங்கிய பிரும்மர் சிவனிடம் சொல்வதறியாது நின்றார்

சிவ பார்வதி இருவரும் பொன்மணை அமர்ந்து அட்சதை ஆசிகள் ஏற்றனர் 

லட்சுமிதேவி வெண்தாமரை மலரெடுத்து தம்பதியர்க்குக் குடை பிடித்தாள்

சரஸ்வதிதேவி சிவ பார்வதியரை  தனித்தனி மொழியில் வாழ்த்தினாள்

தம்பதியர் இருவரும்  தேவமகளிர் நடித்த நாடகம் பார்த்து மகிழ்தனர்

தேவர்கள் அனைவரும் தம்பதியரிடம் மன்மத சேவையை ஏற்க வேண்டினர்

சிவனும் உளம் மகிழ்ந்து  மன்மத பாணங்கள் தம்மிடம் வருவதை ஏற்றார்

பார்வதி கரம்பற்றிய சிவன்  அலங்கார சயனஅறைக்கு அழைத்துச்சென்றார்   

வெட்கத்தில் தவித்த பார்வதிக்கு ஹாஸ்யரசம் தந்து வெட்கம் விடச் செய்தார்

 

நமப்  பார்வதி பதையே !   ஹர ஹர மகாதேவா !   

 

முற்றும் 

திரை ரசனை வேட்கை 3 – என் உயிர்த் தோழன் – எஸ் வி வேணுகோபாலன் 

உயிர்த்திருக்கும் உற்ற தொண்டன் 
பாரதிராஜாவின் ‘ என் உயிர்த் தோழன் ‘ 
En Uyir Thozhan Video Jukebox | Ilayaraja | Malaysia Vasudevan | Chithra | Pyramid Glitz Music - YouTube
ரசியல் கதைகள் அதற்குமுன்பும் திரையில் பார்த்ததுண்டு. அதற்குப் பிறகும் நிறைய. அப்பாவிகளின் வாழ்க்கையை அப்பட்டமாக சித்தரிக்கும் படங்கள் அதற்கு முன்பும் பின்பும் பார்க்கவே செய்ததுண்டு. உள்ளத்தை உருக்கி விடுகிற படங்கள் இதை விடவும் வலுவான திரைக்கதையில் வேறு எத்தனையோ பார்ப்பது உண்டு தான். ஆனால், என் உயிர்த் தோழன் நெஞ்சை விட்டு அகலாது உள்ளேயே உட்கார்ந்திருக்கிறான். பாரதிராஜா படைப்புகளில் பேசப்பட வேண்டிய முக்கியமான கதைக்களம் இந்தப் படம்.
கட்சிக்காக உயிர் கொடுக்கும் வெகுளியான ஒரு தொண்டனின் தியாக வாழ்க்கை என்று ஒற்றை வரியில் எழுதிப் படித்தால், அதில் எந்த நியாயமும் இல்லை. அரை மணி நேரத்தில் ஒரு கோட்டையைச் சுற்றிப் பார்த்துவிட்டு வெளியேறுவது போன்றது தான் அது. 
ண்மையில் தேசம் என்றால் என்ன என்ற வரையறை பற்றி ஒரு பொருளாதார நிபுணரின் அசத்தலான கட்டுரை வாசித்தது நினைவுக்கு வருகிறது. பதினேழாம் நூற்றாண்டு போல ஐரோப்பிய கண்டத்தில் புழக்கத்தில் வந்த அந்தச் சொல், உடைமை வர்க்க மக்களைக் குறிப்பதாக பொருளில் தான் பொதுவான சொல்லாக தேசம் உருவாக்கப்பட்டது. அது, பின்னர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் நிதி மூலதனத்தின் ஆளுகை வேகமாகப் பரவத் தொடங்கிய பொழுதில், அதன் நலன் சார்ந்த கடமைகளுக்கே தேசம் என்ற அடையாளம். ஆனால், மூன்றாம் உலக நாடுகளில் காலனியாதிக்கத்திற்கு எதிராகத் திரண்ட போராட்ட காலத்தில், தேசம் என்பது மறு வரையறைக்கு உட்பட்டது. தேசம் என்றால் மக்கள். உழைப்பாளி மக்கள். ஆனால், நவீன பொருளாதார இந்தியாவில் மீண்டும், தேசம் என்றால் பெருந்தனக்காரர்கள், பெருந்தொழில் இல்லங்கள் இவர்களே என்று விதி மீண்டும் நிறுவப்பட்டுவிட்டது என்கிறார் பேராசிரியர் பிரபாத் பட்நாயக்.
ட்சி என்றால் தலைவர், தலைவர் என்றால் கட்சி என்று புரிந்து கொண்டிருக்கும் எண்ணற்ற தொண்டர்களில் ஒருவன் தருமன். அவர் சிறையில் இருந்தால் இவன் நிம்மதி இழக்கிறான். தனக்காக யாராவது தீக்குளிக்க வேண்டும் என்று அவர் உள்ளே விரும்பினால், இவன் கெரசீன்   டின்னோடு காந்தி சிலை நோக்கிப் போய் நின்றுவிடுகிறான். அவர் விடுதலை ஆனது தன்னால் தான் என்று உளமார நம்புகிறான். குயிலு குப்ப மக்களுக்குத் தனது நற்பணிகளால், நன்னடத்தையால், அன்றாடங்காய்ச்சிகளுக்கு ஆதரவான இன்னோர் அன்றாடங்காய்ச்சி என்றாலும் அவர்களுக்கான தாதாவாகக் காத்து வரும் சேவையால் மொத்த 15,000 வாக்குகளையும் அவனறியாமல் அவன் இடுப்பில் சரியாமல் அள்ளிச் செருகிக் கொடுத்திருக்கிறது வாழ்க்கை. கட்சிக்கு, அதாவது, தலைவருக்குக் கண்ணாக தருமன் உருமாறுவது அந்த வாக்குகளுக்காகத் தான் என்பது அறியாமல் அவருக்காக உழைக்கிறான், அலைந்து திரிகிறான், இறுதியில் மரிக்கிறான்.
நாடகக் கதாநாயகனை நிஜ நாயகனாக நம்பி, சிற்றூரில் இருந்து ரயிலில் புறப்பட்டு வந்து பாதிவழியில் அவனால் கைவிடப்பட்டுச் சென்னை வந்து இறங்குகிற கதாநாயகி, ரிக்ஷா ஓட்டி தருமனிடம் அடைக்கலமாகி குயிலு குப்பம் வந்து சேருவது முக்கியமான இடம்.  அந்த நாடக நடிகன் திரையில் ஜொலித்து நட்சத்திரமாகி  தருமனின் கட்சி தலைவரது ஆசியோடு அரசியலுக்குக் குடிபெயர்ந்து வேட்பாளராகி, வாக்கு சேகரிக்க அதே குயிலு குப்பத்தில் நுழைவது அடுத்த முக்கியமான கட்டம். அவனது துரோகத்தால் எரிகிற நாயகியின் உள்ளத்து நெருப்பில் 15,000 வாக்குகள் சாம்பலாகி விடக்கூடாது என்ற எச்சரிக்கையோடு கட்சி தலைவர் ‘என் உயிர்த் தோழா’ என்று தருமனை விளித்து அவனுக்குள் அவர் ஏற்றி வைக்கும் நெருப்பு, கூடுதல் வெம்மையாக இருக்கிறது. வாக்குகள் பத்திரம் காக்கப்பட்டுவிடுகிறது, ஆனாலும், தலைவருக்கு வேறு சில தொகுதிகளில் இருக்கும் ஊசலாட்டம் கடைசி கட்ட உயிர்ப்பலி கேட்கிறது, தருமனைத் தவிர அதை யாரிடம் கேட்பார் தலைவர், ஆனா ல், அதையும் கூடக் கேட்காமலே பறித்துக் கொள்கிறது அரசியல்.  
இயற்கைத் தூரிகை தீட்டிய ரம்மியங்களில் திளைத்து இருந்த நான், ஒரு பொது மனிதனாக ஜன்னல் வழி தரிசித்தேன், சமூகத்தில் ஒரு கலைஞனுக்கு உள்ள தார்மீகக் கடமை என்ன என்று யோசித்தேன், அது தான் இந்தக் கதை என்று நுழைவாயிலில் பேசுகிறார் பாரதிராஜா.
இப்படி ஓர் உயிர்த் தோழன், கட்சித் தலைவருக்குக் கிடைத்தாலும் கிடைப்பான், தருமன் பாத்திரத்திற்கு, பாபு மாதிரி ஒரு நடிகர் கிடைப்பது அரிது.  சென்னை குப்பத்து வாலிபனாக அவரது உடல் மொழியும், குரலும், நடிப்பும் அமர்க்களமாக இருக்கும். குயிலு குப்பத்தின் அசாத்திய உருவாக்கம், சென்னை மாநகரின் ஒடுக்கப்பட்டோர் குடியிருப்பின் அச்சு அசலான பிரதி. 
சாலையோரத்தில் இட்லிக் கடை, வட்டிக்கு கடன் கொடுத்தல், அலைச்சலுக்கு இளைப்பாறுதலாகக் கொஞ்சம் போல சாராயம், தம்பி தருமனுக்கான முரட்டுப் பாசம் என்ற எளிய வாழ்க்கையை ஒரு நடுத்தர வயது பெண்மணியாக வடிவுக்கரசி கலக்கி இருப்பது அவரது திரை வாழ்க்கையில் முதல் மரியாதை படத்தில்  வாய்த்ததை விடவும் கூடுதல் பெருமை கொள்ளத் தக்க நடிப்பு. 
பாபுவும், வடிவுக்கரசியும் சென்னைத் தமிழில் மிக இயல்பான உடல் மொழியோடு  தோன்றி இருப்பது படத்தின் ஆகச் சிறந்த வலு. ‘யெக்கா’ என்ற தருமனின் விளிப்பு, குடிக்கறதை விட்டுவிட்டால் செத்துவிடுவேன் என்று சொல்லும் அக்காவிடம், ‘சாராயத்தைக் குடிச்சு சாவறத விட அத குடிக்காம சாவு’ என்று சொல்ல, அவள் அதைத் தாங்க மாட்டாது ‘குடிக்க மாட்டேன்’ என்று சத்தியம் செய்யும் இடம், அடுத்த நாள் காலை, தேநீர்க் கடையிலிருந்து  தனக்காக வரும் பாலில் நஞ்சு கலக்கப்பட்டிருப்பது அறியாமல், ‘சாராயத்தை விட்டுட்டே, இந்தப் பாலைக் கொஞ்சம் குடி’ என்று சொல்லிக் கொடுக்க, அவள் செத்து விழும்போது கதறி அழும் தருணம் நெகிழ வைப்பது.
நாயகி ரமா (சிட்டு), புது முகம். கொடுக்கப்பட்ட வாய்ப்புக்கு மேலதிகம்  வழங்கியிருக்கக் கூடிய சாத்தியங்கள் அவருக்கு ஏனோ கை கூடவில்லை. அளவோடு நிற்கிறது அவர் பங்களிப்பு. நடிகர் அரசியல்வாதி தென்னவனும் அப்படியே. அவருக்கு டப்பிங் குரலைத் தான் தந்திருப்பதை அவசியம் தவிர்த்திருக்க வேண்டும், பாரதிராஜா.  நாடகத்தனம், போலி வாக்குறுதி, ஏமாற்று அரசியல் இவற்றை குரல் ரீதியாக உருவகப்படுத்த அதை அவர் கையாண்டிருக்கக் கூடும். 
பாலியல் தொழிலில் மாமா பாத்திரம், அரசியலில் இடைத்தரகர் என லிவிங்ஸ்டன் அசத்தல் நடிப்பை வழங்கி இருப்பார். அவரது முகபாவம், வசன உச்சரிப்பு, உடல் மொழி எல்லாம் செதுக்கி வைத்தது மாதிரி அமைந்திருக்கும். காவல் நிலையத்தில், குப்பத்தில், கட்சி தலைவர் அலுவலகத்தில் அவரது ராவடிகள் அத்தனை அசாத்திய நம்பகத் தன்மை வாய்ந்தவை. காரியவாதியாக காசுக்கு எதையும் செய்யும் பாத்திரத்தில் சார்லி. உற்ற நண்பன் தருமனின் உயிரை மாய்க்கும் பொறுப்பைக் கூட காசு ஏற்க வைக்கிறது. இந்தக் காட்சிகள் யாவும் இயல்பாக சித்தரிக்கப்பட்டிருப்பவை.
இளையராஜா இசையில் இடம் பெற்றுள்ள பாடல்களில்  ஏ ராசாத்தி, குயிலு குப்பம் பாடல்கள் அமர்க்களமானவை.   இரண்டுமே மலேசியா வாசுதேவன், இரண்டாவதில் சித்ராவுடன் இணைந்து. ஏ ராசாத்தி பாடலில் ஒயிலும், தாளக்கட்டும், இசையும் இழைக்க மலேசியா குரல் சிறந்து ஒலிக்கும். குயிலு குப்பம், ராஜாவின் தனி முத்திரையோடு ததும்பும் காதல் பாடல். கோரஸ் சகிதம் இனிமையாக அமைந்திருக்கும்.
தருமன் கையில் இருந்து பாட்டில் பறந்தால் எதிரிகள் பறந்தோடுவது, தருமன் இல்லாம உள்ளே நுழையாதே என்று குப்பத்து மக்கள் கட்சி ஆட்களை விரட்டி அனுப்புவது, மக்கள் சக்தி வலுவாக இருந்தால் இடைத்தரகர்கள் ஜகா வாங்குவது, வேறு வழி கண்டுபிடித்து மீண்டும் நுழைவது எல்லாமே நிஜ நிகழ்வுகளுக்கு நெருக்கமான புனைவுகள்.
நம்பகத் தன்மை உள்ள ஏராளமான காட்சி அமைப்புகளின் தொகுப்பில், நம்ப முடியாத இறுதிக் காட்சி கூட, திரைப்படம் அவ்வளவாக மக்களை அதிகம் சென்று சேர முடியாமல் போனதற்கு ஒருவேளை காரணமாக இருந்திருக்கலாம். திரைக்கதையை இன்னும் கூடுதல் நேரம் எடுத்து விவாதித்து அமைத்திருந்தால், படம் வேறொரு தளத்திற்குப் போயிருக்க அதிகம் சாத்தியங்கள் உண்டு.  
இன்னொரு வருத்தம், கதாநாயகனாக நடித்த பாபு, பின்னர் வேறு ஒரு படத்திற்காகத் தானே ஸ்டண்ட் காட்சியில் நடிக்கையில் ஏற்பட்ட விபத்தில் கடுமையான காயங்களோடு பெரும்பாதிப்புக்கு உள்ளாகிப் படுத்த படுக்கையாக இருப்பது. 
‘கட்சின்றது ஆலமரம் மாதிரி..அதுல ஒரு குருவி வந்து அசிங்கம் பண்ணிச்சின்னு மரத்தை வெட்டக்கூடாதுன்னு தலைவரு சொன்னாரு சிட்டு. வரலாற்றுல விழுந்த கீறலை வரலாற்றை வச்சே சரி செய்யலாம்னாரு சிட்டு …நான் கெலிச்சா கட்சி கெலிக்கும்னு தலைவரே சொன்னாரு சிட்டு ‘ என்ற வசனம், செயற்கையற்று படத்தில் ஒலிப்பது, இப்போதும், இன்றும் பொருத்தமாக எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.
(ரசனை பரவும்…) 

நாட்டிய மங்கையின் வழிபாடு-5 கவியரசர் தாகூர்- தமிழில் மீனாக்ஷி பாலகணேஷ்  

Tagore paintings | Silhouette art, Dark art drawings, Amazing art painting

          முன்கதைச்சுருக்கம்: மகத நாட்டரசன் பிம்பிசாரன் புத்தரின் உபதேசங்களில் ஈடுபட்டவன்; தனது அரண்மனைத் தோட்டத்து அசோகமரத்தடியில் புத்தர்பிரான் அமர்ந்து உபதேசம் செய்த இடத்தில் ஒரு வழிபாட்டு மேடையை அமைத்திருக்கிறான்.

          பிம்பிசாரன், இளவரசன் அஜாதசத்ருவிற்கு அரசைக் கொடுத்துவிட்டு நகரிலிருந்து சிறிது தொலைவில் வசித்துவந்தான். இதனை விரும்பாத அரசி லோகேஸ்வரி  மிகவும் மனக்கசப்பிற்குள்ளாகி இருந்தாள். அவளுடைய மகன் சித்ராவும் பிட்சுவாகிவிட்டதில் மனம்நொந்து போயிருக்கிறாள்.

          மாலதி என்றொரு கிராமத்துப்பெண் அரண்மனை நாட்டியமங்கையான ஸ்ரீமதியிடம் வந்து சேர்கிறாள். அவள் தன் அனுபவங்களை ஸ்ரீமதியிடம் விளக்கிக்கொண்டிருக்கும்போது இளவரசிகள் வந்து இருவரையும் கேலி செய்து துன்புறுத்துகின்றனர். அப்போது உள்ளே வரும் அரசி லோகேஸ்வரி தனது துயரங்களைக் கூறிப் புலம்புகிறாள். ஒரு சேவகன் வந்து இளவரசன் சித்ரா அவளைக்காண வந்திருப்பதைத் தெரிவிக்க அவள் விரைகிறாள். அங்குவரும் பிட்சுணி உத்பலா அன்றுமாலை வழிபாட்டிற்கான காணிக்கைகளை ஸ்ரீமதியே செலுத்துவாள் எனக்கூற, இளவரசிகள் திகைக்கின்றனர்.

          இனித் தொடர்ந்து படிக்கவும்:  

                                         

Searching for Srimoti- Tagore's Heroine Today | Pulse Connects

பிட்சுணி: ஆமாம். இந்த நாட்டிய மங்கையேதான்.

ரத்னாவளி: பெரியவர்களிடமிருந்து உமக்கு இந்தக் கட்டளை வந்ததோ?

பிட்சுணி: ஆம்! அவர்களே இவ்வாணையைப் பிறப்பித்தது.

ரத்னாவளி: யார் அவர்கள்? அவர்கள் பெயர்களைக் கூறுங்கள்.

பிட்சுணி: ஒருவர் உபாலி.

ரத்னாவளி: அவர் நாவிதர் ஜாதியைச் சேர்ந்தவர்!

பிட்சுணி: மற்றொருவர் பெயர் சுனந்தா.

ரத்னாவளி: அவர் மாடுமேய்ப்பவரின் மகன்!

பிட்சுணி: ஆ! இளவரசி! அவர்கள் ஜாதி அனைத்தும் ஒன்றே. பெருந்தன்மை மிக்கவர்களின் பதவி என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?

ரத்னாவளி: ஒன்றும் இல்லை! வேண்டுமானால் இந்த நாட்டியக்காரி அதனை அறிந்திருக்கலாம். அவர்கள் அவளுடைய ஜாதியைச் சேர்ந்தவர்களோ என்னவோ, அதனால்தான் அவர்களுக்கிடையே இந்தவிதமாக நட்புரிமை கொண்டாடுகிறார்கள்.

பிட்சுணி: இருக்கட்டும். நமது தந்தையான அரசர் பிம்பிசாரர் இன்று தனது ஏகாந்தமான தனியிடத்தைவிட்டு நமது வழிபாட்டில் கலந்துகொள்ள இருக்கிறார். நான் சென்று அவரை வரவேற்க வேண்டும். (பிட்சுணி செல்கிறாள்)

அஜிதா: ஸ்ரீமதி, நீ எங்கே செல்கிறாய்?

ஸ்ரீமதி: அசோக மரத்தடியே உள்ள வழிபாட்டு மேடையைக் கழுவி சுத்தம் செய்யச் செல்கிறேன்.

மாலதி: சகோதரி,உங்கள் சேவையில் உதவி புரிவதற்காக என்னையும் உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள்.

நந்தா: நான் உன்னுடன் வருகிறேன்.

அஜிதா: நானும் கூட ஒருவேளை உன்னுடன் சேர்ந்து கொள்வேன்.

வாசவி: அதனைக் காண நானும் ஆவலாக இருக்கிறேன்.

ரத்னாவளி: எத்தனை அழகாக இருக்கிறது இது! ஸ்ரீமதி வழிபாட்டைச் செய்வாள், விசுவாசமுள்ள உதவியாளர்களாகிய நீங்கள் அச்சமயம் அவளுக்கு விசிறியால் விசிறிவிடுவீர்கள்!

வாசவி: அச்சமயம் நீ விடும் மூச்சுக்காற்று உஷ்ணமான சாபங்களை இங்கிருந்து எங்கள்மீது வாரியிறைக்கும்! ஆனால் அது அசோக மரக்காட்டை எரித்துவிட முடியாது; ஏன் ஸ்ரீமதியின் உள்ளத்து அமைதியையும்கூடக் குலைக்க இயலாது…

          (ரத்னாவளியையும் மல்லிகாவையும் தவிர அனைவரும் செல்கின்றனர்).

ரத்னாவளி: இது தொடர முடியாது; தொடரவே முடியாது.  இது இயற்கைக்குப் புறம்பானது. ஓ, மல்லிகா, நான் ஏன் ஒரு ஆணாகப் பிறக்கவில்லை? சீ! இந்தக் கங்கணங்களுக்குப் பதிலாக என் கையில் ஒரு வாள் மட்டுமிருந்தால்…! நீயுந்தான் மல்லிகா, ஏன் ஒரு வார்த்தை கூடக் கூறவில்லை? நீயும் அந்த நாட்டியக்காரியின் பணியாளாவதற்காக ஏங்குகின்றாயா?

மல்லிகா: நான் வேண்டினால்கூட அது எனக்குக் கிடைக்காது.  அவள் என்னை நன்கு அறிவாள்!      

ரத்னாவளி: நீ மௌனமாக இந்தக் கொடுமையை அனுபவிப்பது ஏன் என்று எனக்குப் புரியவில்லை. பொறுமை என்பது இழிவானவர்களுக்கும் உதவியற்றவர்களுக்குமேயான ஆயுதம்; அரசகுடும்பத்து வாரிசுகளுக்கு அல்ல.

மல்லிகா: நம் செய்கைகளின் பலன்களை அனுபவிக்கும் வேளை நெருங்கிக் கொண்டிருக்கிறது; ஆகவே நான் எனது பலத்தை வீணடிக்கப் போவதில்லை.

ரத்னாவளி: உனக்கு நிச்சயமாகத் தெரியுமா? 

மல்லிகா: ஆம்; உண்மையாகவே நிச்சயமாக.

ரத்னாவளி: அது ரகசியமாக இருக்க வேண்டுமானால் என்னிடமிருந்து அதனை மறைத்துவிடு. எனக்குத் தெரிய வேண்டியதெல்லாம், அந்தக் கேடுகெட்ட நாட்டியக்காரி சந்நிதியில் வழிபாட்டை நடத்தும்போது நாம் எல்லா இளவரசிகளும் கூப்பிய கரங்களுடன் நிற்கவேண்டுமா என்பதுதான்.  

மல்லிகா: இல்லை, அப்படி இருக்காது, அதை மாத்திரம் என்னால் சத்தியமாகக் கூற முடியும்.

ரத்னாவளி: நமது அரச குடும்பத்தைக் காக்கும் கடவுள் உனது சொற்களை உண்மையாக்கட்டும்.     

                                       

 

                                                                  அங்கம்- 2

              காட்சி: மாற்றமில்லை.

          அரசி லோகேஸ்வரியும் மல்லிகாவும் உள்ளே நுழைகின்றனர்.

மல்லிகா: மகாராணி, தாங்கள் தங்கள் மகனைப் பார்த்து விட்டீர்களே, இன்னும் ஏன்.. ?

அரசி: மகனைப் பார்த்தேனா? எங்கே இருந்தான் அவன்? ஓ, இது சாவை விடக் கொடுமையானது. நான் இதனை எதிர்பார்க்கவேயில்லை.

மல்லிகா: என்ன சொல்கிறீர்கள்?

அரசி: இதனை விடக் கொடுமையானது என்ன இருக்க முடியும்? ஒரு தாயிடம் மகன் வருகிறான், ஆனால் மகனாக அல்ல. ஆ, அந்தக் கண்களில் நான் கண்டது, அவனுடைய தாய் ஒரு சிறு அடையாளத்தைக்கூட விடாமல் மறைந்து போய்விட்டாள் என்பதனைத்தான். உருத்தெரியாமல் முற்றிலுமாக அழிக்கப்பட்ட எனது இத்தகையதொரு பேரழிவை நான் கனவிலும் எண்ணிக்கூடப் பார்க்கவியலாது.       

மல்லிகா: நற்குணங்கள் நிரம்பிய வாழ்வைத் தான் ஏற்றுக்கொள்வதற்காக, தசையும் குருதியுமான தனது வாழ்வை ஒரு பிட்சு தாழ்மைப்படுத்திக் கொள்கிறார்.        

அரசி: ஐயோ பாவம்! பரிதாபத்துக்குரிய தசையும் குருதியும்! பாவம்! வலிமிகுந்த பசியுடனான பொறுக்கமுடியாத வேதனை! தசை, குருதியுடனான நமது போராட்டம், வெறுமையைத் தேடும் அவர்களது தேடலைவிடக் குறைவான சிரமம் படைத்ததா?

மல்லிகா: இருந்தால் என்ன? எத்தகையதொரு அழகை (தேஜஸை) அவன் (இளவரசன்) அடைந்திருக்கிறான் என எண்ணிப் பாருங்கள். அவன் ஒரு தெய்வீக ஒளியின் வடிவாகக் காணப்பட்டான்!

அரசி: ஆம்; அது அவனது தாயை, அவளது தாய்மையை அவமானத்திற்குள்ளாக்கிய வடிவு – அவனுக்கு நான் அளித்த பிறப்பிற்கும் அவனது தற்போதைய பிறப்பிற்கும் இடையேயான ஆழ்ந்ததொரு பிளவு! மல்லிகா, இது ஆண்களுக்கு மட்டுமேயான மதமென்று நான் இன்று உணர்ந்துகொண்டேன். இதில் பெண்களே எங்கும் இல்லை!- மகனுக்குத் தாய் தேவையில்லை, கணவனுக்கு மனைவி தேவையில்லை. இருப்பினும், இரந்துகொண்டு வரும் இந்த பிட்சுக்களுக்கு- மகனல்லாத, கணவரல்லாத, சகோதரர்களல்லாத, வீட்டைத் துறந்தவர்களுக்கு- தர்மம் கொடுப்பதற்காக நாம் நமது வெறிச்சிட்ட வீடுகளில் சருகாகிப்போன வாழ்க்கையை வாழ வேண்டும்! இந்த ஆண்களின் மதம் நம்மைப் பாழடித்து விட்டது, மல்லிகா! நாம் இப்போது அதனை அழிக்க வேண்டும்.

மல்லிகா: ஆனாலும், மகாராணி! நாள்தோறும் திரள்திரளாகப் பெண்கள் எவ்வாறு புத்தபிரானுக்குத் தங்கள் வழிபாட்டைச் செய்கிறார்கள் என்று நீங்களே பார்க்கிறீர்கள் அல்லவா?

அரசி: முட்டாள்கள்! அவர்களுடைய பக்திப்பசிக்கு எல்லையே இல்லை. எது அவர்களை மிகவும் ஆழமாக வருத்துகிறதோ அதனையே வழிபடுவார்கள்! அவர்களுடைய தவறுகளை ஆதரிக்க நான் மறுக்கிறேன்.

மல்லிகா: நிச்சயமாக நீங்கள் இதை மனப்பூர்வமாகக் கூறவில்லை, மகாராணி! உங்களுடைய வீட்டைவிட்டுச் சென்ற உங்கள் மகன் உங்கள் உள்ளக்கோவிலில் குடியேறிவிட்டான் என்று எனக்குத் தெரியும்.

அரசி: நிறுத்து! இனியும் இவ்வாறு பேசாதே! ஒரே ஒரு இரவை தன் தாயின் அறையில் கழிக்குமாறு நான் அவனிடம் கெஞ்சினேன்; அவனுடைய அன்னையின் கூரை திறந்த வானமே என்று அவன் கூறினான். நீ ஒரு தாயாக இருந்தால், மல்லிகா, அவனுடைய இந்தச் சொற்கள் எத்துணை கொடூரமானவை எனப் புரிந்து கொள்வாய். இடியும் மின்னலும் கடவுளின் கையினின்றும் வந்தால்தானா, எப்படியானாலும் அது இடியும் மின்னலும் தானே! அது என் இதயத்தைப் பிளக்கவில்லையா? அந்தக் காயத்தின் மூலம் தெருக்களில் திரிந்தலையும் பிட்சுக்களின் குரல்கள் எனது உள்ளத்தினுள் புகுந்து எனது விலா எலும்புகளின் வெற்றிடத்தில் எதிரொலிக்கிறதே:

                     எனது அடைக்கலம் புத்தபிரானிடமே!

                     எனது அடைக்கலம் தர்மத்திடமே!

                     எனது அடைக்கலம் சங்கத்திடமே!

மல்லிகா: என்ன இது மகாராணி, தாங்கள் இப்போதும் இச்சொற்களைக் கூறும்போது தலையைத் தாழ்த்துகிறீர்கள்?

அரசி: அங்குதான் ஆபத்து உள்ளது. தீனமானவர்களின் மதம் மற்ற மனிதர்களையும் தீனமாக்குகிறது. அதன் குறிக்கோளே ஆத்மாவை பலவீனப்படுத்துவதாகும்; ஒருகாலத்தில் உயர்ந்திருந்த தலைகளைத் தாழச் செய்வதாகும்; பிராமணனுக்கு அடிபணியவும், க்ஷத்திரியனுக்கு பிச்சையெடுக்கவும் சொல்லிக் கொடுப்பது அதுதான். இந்தக்கொள்கையை நீண்ட நாட்களாக நான் எனது ரத்தத்தில் வளர்த்துக் கொண்டிருக்கிறேன், அதனால் அதனைக்கண்டு மிகவும் பயப்படுகிறேன்.

அட! யார் இங்கு வருவது?

மல்லிகா: இளவரசி வாசவிதான். அவள் வழிபாட்டுக்குச் செல்லும் வழியில் இங்கு வந்துள்ளாள்.

          (வாசவி உள்ளே நுழைகிறாள்)

அரசி: (அவளிடம்) நீ வழிபாட்டிற்குச் செல்கிறாயா?

வாசவி: ஆம்.

அரசி: ஆனால் நீ இன்னும் குழந்தையல்ல!

வாசவி: என்ன குழந்தைத்தனத்தை நீங்கள் என்னிடம் காண்கிறீர்கள்?

 

                                                                                  (தொடரும்)

 

                    

 

 

 

 

 

 

 

 

 

இன்னும் சில படைப்பாளிகள் – எஸ் கே என்

கி. ராஜநாராயணன்

பேசும் புத்தகம் | கி. ராஜநாராயணன் சிறுகதைகள் *பேதை* | வாசித்தவர்: ப.காளீஸ்வரி - Bookday

 

ராயங்குல ஸ்ரீ கிருஷ்ண ராஜ நாராயணப் பெருமாள் ராமானுஜ நாயக்கர் என்னும் இயற்பெயர் கொண்ட கி.ரா கோவில்பட்டி அருகிலுள்ள இடைச்சேவல் கிராமத்தைச் சேர்ந்தவர். 1923ல் பிறந்தவர். அண்டை வீட்டுக்காரரான கு.அழகிரிசாமி இவரது பால்ய சிநேகிதர். இருவரும் சாகித்ய அகதமி விருது பெற்றவர்கள்.

கரிசல் வட்டாரத்து மக்களின் வாழ்க்கையைச் சொற்களால் படம் பிடித்துக் காட்டியவர். விவசாயக் குடும்பத்தில் பிறந்த, அதிகம் படிக்காத இவர்,  பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் சிறப்புப் பேராசிரியராகப் பணியாற்றியவர். எண்ணற்ற விருதுகள் பெற்ற இவர் பாண்டிச்சேரியில் வாழ்ந்துவருகிறார்.   

**  ** ***

Ki Raa காய்ச்ச மரம் - YouTubeஇவரது “காய்ச்ச மரம்” என்னும் கதை

நிம்மாண்டு நாயக்கர் பெரிய சம்சாரி. எம்பது ஏக்கர் கருசக்காடு,  நாலு சோடி உழவு மாடு. தொழு நிறைய கால்நடைச் செல்வங்கள். நிறைஞ்ச வெள்ளாமைக் குடியிருக்கும் வீடு. பூர்வீக வீடு போக மூணு கார வீடுகள்.

என்று தொடங்குகிறது.

நிம்மாண்டு நாயக்கரின் மனைவி பேரக்காள்.  நான்கு பெண் மக்களுக்கும்  நான்கு ஆண் பிள்ளைகளுக்கும் நல்ல குடும்பங்களில் சம்பந்தம் செய்து… பேரப்பிள்ளைகள் எடுத்து .. பெரிய ஆலமரம்தான் அவர் குடும்பம்.   பேரக்காள். கொண்டுவந்த 1௦௦ பவுன் நகைகள் பெண்களுக்கும் பேரக்குழந்தைகளுக்கும் போட்டாயிற்று    

சொத்தைப் பிரித்துத் தந்துவிடவேண்டும் என பிள்ளைகள் விரும்புகிறார்கள். நேரடியாகக் கேட்காவிட்டாலும் பெரியவர் காதிற்கு எட்டிவிடுகிறது. பருத்திக்காடு  சென்று திரும்பும்போது, ஒரு மரத்தடியில் பெரியவரும் அவர் மனைவியும் அமர்கிறார்கள். அப்போது பையன்கள் ஆசைப்படுகிறார்களே என்ன செய்யலாம் என மனைவிடம் கேட்கிறார் நிம்மாண்டு.

“இதிலே என்ன இருக்கு? எப்ப இருந்தாலும் அவங்ககிட்ட ஒப்படைக்க வேண்டிய பாரம்தானே, பிரிச்சுக் கொடுத்திட வேண்டியது தானே? நமக்கும் வயசாகிப் போச்சு. கிட்ணா, ராமான்னு உட்கார்ந்து சாப்பிட வேண்டிய காலத்திலே ஏன் இப்படி லோலோன்னு அலைஞ்சு திரியணும்” என்றாள் பேரக்காள்.

பையன்களை அழைத்து முடிவினைத் தெரிவிக்கிறார். ஒரு மத்யஸ்தரை அழைத்து வரச் சொல்கிறார். நீங்களே பிரித்துவிடுங்களேன் என்று பிள்ளைகள் சொல்ல கட்டாயம் மத்தியஸ்தர் வேண்டும்  என்று  சொல்லிவிடுக்ரர் நாயக்கர்.  

பையன்கள் நால்வரும் பாறைப்பட்டி கந்தச்சாமி நாயக்கரைக் கூட்டி வந்தார்கள். பாறைப்பட்டி நாயக்கர் எல்லோருக்கும் பொதுவானவர். ஊர்ப் பெரிய மனுசன். தெற்கு வடக்கு போய் வரும் மனுசன். விபரம் தெரிந்தவர்.

பாறைப்பட்டி நாயக்கர் வந்தார். “வாங்க பாறைப்பட்டி மாப்ள!” என்று சிரித்தபடி நிம்மாண்டு நாயக்கர் வரவேற்றார்

வெற்றிலை எச்சில் துப்ப வசதியாக் தொழுவத்திலேயே அமர்ந்துகொண்ட கந்தச்சாமி, பேரக்ககாள் கொடுத்த காப்பியைக் குடித்து விட்டு  விவரம் கேட்டுக்கொள்கிறார்.

வீட்டிலிருந்த பருத்தி, வத்தல், மல்லி, தானியங்கள் உட்பட மொத்த சொத்தும் நான்கு பாகங்களாகப் பிரிக்கப் பட்டன. எல்லாம் வாய்க்கணக்காகவே. சரி தானே என்று கேட்டார் பாறைப் பட்டி. பையன்கள் தங்கள் மனைவிமார்களிடம் சென்று கலந்து பேசினார்கள். பின்பு வந்து சரி என்றார்கள்.

நான்கு பாகங்களையும் நான்கு துண்டிச் சீட்டில் எழுதி குலுக்கிப் போடப்படுகிறது. ஒவ்வொரு பையனும்  எடுத்த சீட்டில் உள்ளது அந்தப் பையனுக்கு.  அதில் ஆளுக்கு ஒரு வீடு இருந்தது. ஒவ்வொரு வீட்டிலும் சில சௌகர்யங்களும் சில அசௌகர்யங்களும் இருந்தன. கிடைத்த வீட்டின் அசௌர்யங்கள்தான் அந்தந்த மருமகளின் கண்களில் பட்டன.   பூர்வீக வீடு அண்ணனுக்குக் கிடைத்ததில் தம்பிகளுக்கெல்லாம் வயத்தெரிச்சல்.

பாகப்பிரிவினை ஒருவழியாக முடிந்தது.  என்றாலும் நிம்மாண்டு பூர்வீக வீட்டுக்குள் சென்று பெரிய வெங்கலத் தவலையைத்  தூக்கி வந்தார். எல்லாம் வெள்ளைக்காரன் காலத்து வெள்ளிக் காசுகள் 2000 இருந்தன. அவற்றையும் சம பங்காக பிள்ளைகளுக்குக் கொடுத்தார். நிம்மாண்டு. (இந்த இடத்தில் ஒரு கணக்கு 12 வெள்ளிக்காசுகள் ஒரு பவுன் தங்கத்திற்கு சமமாம்.)

அந்தக் காலத்தில் 12 வெள்ளிக் காசுகளுக்கு ஒரு பவுன் தங்கம் வாங்கலாம். மொத்த‌ம் 2000 காசுகள் இருந்தன. காசுகளையும் சரிசமமாகப் பகிர்ந்தார்கள்.காசுகளை மகன்களுக்குப் பகிர்ந்து கொடுக்கும் போது நிம்மாண்டு நாயக்கரின் முகத்தைப் பார்க்கணுமே . மனுசன் முகத்திலே ஒரே சந்தோசம்.

மகன்களுக்கும் மகிழ்ச்சி. என்றாலும் ‘பொல்லாத கிழவரு’ மேலும் பணத்தை புதைத்து வைத்த்திருக்கலாம் என்கிற சந்தேகமும் இல்லாமலில்லை.  

பணத்தைப் பகிர்ந்தது சரியில்லையே  என்று பாறைப்பட்டி கவலைப்படுகிறார்.

“இப்போ இந்தக் கிழவர் பண்ணியது வம்பான வேலை. பையன்களுக்கு ஏற்கெனவே போதுமான அளவு கொடுத்திருக்கு. வத்தல், பருத்தி, உளுந்து, மல்லி முதல் கொண்டு அவ்வளவும் கொடுத்தாச்சு. இப்பப் போயி இவரு ஏன் பணத்தையும் பகிர்ந்து கொடுக்கணும். நோக்காடு, சாவுன்னா பிரயோசனப்படுமே” என்று பாறைப்பட்டி நினைத்துக் கொண்டார்.

நிம்மாண்டு, பாறைப்பட்டியைப் பார்த்து சொன்னார், “இத்தனை நாள் பிள்ளைகள் என் கையை எதிர்பார்த்து இருந்தாங்க . இனி நான் அவங்க கையை எதிர்பார்த்து இருக்கணும்” என்று சொன்னார்.

இருக்கிறது எல்லாத்தையும் கொடுத்தாகிவிட்டது. மூணு வேளைக் கஞ்சி, கட்டிக்கிடத் துணி, தலைக்கு எண்ணெய் இவைதான் இனி  தேவை என்று பிள்ளகளிடம் சொல்லிவிடுகிறார். மாதம் ஒரு பையனிடம் என்று முறை. முதல் சுற்று நல்ல கவனிப்போடு சந்தோஷமாகச் சென்றது. ஆனால், நாளாக நாளாக நிலைமை மோசமானது.

மூன்று வேளைச் சாப்பாடு இரண்டு வேளை ஆனது. இரண்டு வேளைக் காப்பி ஒரு வேளை ஆனது. பேரக்காள் பிரியமாய்ப் போடும் வெற்றிலையும்  நிறுத்தப்பட்டது. அடுத்த அடுத்த மாதங்களில் தலைக்கு எண்ணெயும் போச்சு, உடு மாத்துத் துணி குறைஞ்சாச்சு.

இருவரும்  வற்றி, மெலிந்து, சாயம் போன கந்தல் துணி போலாகிவிட்டார்கள்.  எண்ணெய் காணாத  தலை பிசுபிசுவென்று ஆகிப்போனது.

அப்பா அம்மாவைப் பார்த்துப் போக வந்த சின்ன மகள் நிலைமையைப் புரிந்து கொள்கிறாள். கோபத்தோடும் ஆங்காரத்தோடும் அண்ணன்களையும் மதினிகளையும் திட்டித் தீர்க்கிறாள். பெற்றோர் குனிந்த தலை நிமிராமல் கண்ணீர் வடிக்கிறார்கள்..

தன்னோடு வந்து விடும்படி மகள் சொல்ல  ‘சம்மந்தக்காரங்க’  வீட்டுல போய் இருக்கிறது சரியில்லை என்று சொல்லிவிடுகிறார் நிம்மாண்டு.

“எங்கேயாவது கண்காணாத இடத்துக்குப் போயிருவோமா?” என்று யோசிக்கிறார்கள். நடுவுள்ள மகள் வருகிறாள். அப்பா, அம்மாவுக்குப் பிடிச்ச பலகாரம் பண்டமெல்லாம் கொண்டு வருகிறாள். கொஞ்சம் பணமும் கொடுக்கிறாள்.

ஒரு நாள் அதிகாலை வயசாளிகள் இருவரும் கோவில்பட்டி புறப்பட்டுப் போனார்கள். தெரிந்தவர்கள் கண்ணில் படாமல் பயந்து பயந்து நடந்தார்கள். கம்மலையும், வெள்ளி அரணாக் கயித்தையும் விற்றார்கள். சாமியைக் கும்பிட்டு ரயிலேறி மதுரைக்குப் போனார்கள்.

மதுரை ரயில்வே ஸ்டேசனில் கணக்கு வழக்கில்லாத கூட்டம்.  என்ன செய்வது, எங்கே  போவதென்று  தெரியாமல் திண்டாடுகிறார்கள். பேரக்காவிடம்  ஒரு சின்ன குழந்தை வந்து ஒட்டிக்கிகொள்கிறது. குழந்தையின் குடும்பம் இராமேஸ்வரம் போகிறது.. இவர்களும் ராமேஸ்வரம் போகலாம்னு முடிவு செய்கிறார்கள்.

கண்காணாமல் போன சமாச்சாரம் முதலில் ஊருக்குத் தெரிந்து, பிறகுதான் பிள்ளைகளுக்குத் தெரிகிறது.  பிள்ளைகள் மனசு பதறுகிறது. மருமக்கமார்கள் ‘எங்கனயாவது கிடக்கும்’னு எரிச்சலோடு சொல்கிறார்கள்

கிணத்தில் ஒரு தாத்தாவும் பாட்டியும் பிணமாக மிதப்பதாகச் செய்தி வருகிறது. ஓடிப்போய் பார்த்ததில் வேறு யாரோ என்று தெரிகிறது. பிள்ளைகள் கொஞ்ச நாள் தாய் தகப்பனை ஓடி ஆடித் தேடுகிறார்கள். ஒரு தகவலும் கிடைக்கவில்லை. ஐந்து வருடங்கள்  கழிந்து விடுகின்றன. இவர்களை ஊரே மறந்து போய்விடுகிறது.

வேண்டுதலுக்காக ராமேஸ்வரம் போன பாறைப்பட்டி நாயக்கர் கோவில் வாயிலில் இரண்டு பக்கத்திலும் பிச்சைக்காரர்கள் இடையே நிம்மாண்டுவையும் பேரக்காளையும்  பாத்து திகைக்கிறார்.  பாறைப்பட்டி நாய்க்கர் தற்செயலாகத் திரும்பிப் பார்க்கிறார்.

ரெண்டு பேர் தலையும் மொட்டை போட்டிருக்கு. பாறைப்பட்டியால தாங்க முடியல. தலையில தலையில அடிச்சுக்கிட்டார். ‘கோன்னு’ அழுதார்.

வயசாளிகள் இருவரும் அழவில்லை. கண்ணில் இருந்து ஒரு பொட்டுக் கண்ணீர் வரலை. நிம்மாண்டு நாயக்கர் பாறைப்பட்டி நாயக்கரை முன்னப் பின்ன தெரியாத ஆளைப் பார்ப்பது போல் பார்த்தார்.

பேர்க்காளுக்கு பாறைப்பட்டி நாயக்கரை அடையாளம் தெரிந்தது. வாயைத் திறந்து ஒரே ஒரு வார்த்தை மட்டும் பேசினாள்.

“எம்பிள்ளைக எல்லாரும் நல்லா இருக்காகளா?”

என்று முடிகிறது கதை.

** ** ** ** **

‘முதுமக்கள்’ என்று இன்னொரு கதையும் உண்டு. சொத்தை ஐந்தாகப் பிரித்து  ஒரு பங்கை தங்களிடமே வைத்துக்கொண்டு மற்ற நான்கு பாகங்களை நான்கு மகன்களுக்கும் பிரித்துக் கொடுத்து நிம்மதியாக வாழ்ந்த தம்பதியரின் கதை இது. தங்கள் வசமிருந்த தோட்டம் துறவு மற்றும் கால்நடைகள் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு எந்தக் குறையும் வராமல்  பார்த்துக் கொள்கின்றன. வந்திருந்த விருந்தாளிக்கு ஆட்டுப்பால் காப்பி கொடுத்து உபசரிக்கும் அளவுக்கு வசதியாக வாழ்கிறார்கள்.

கரிசல் வட்டார வழக்கில் இவரது பல படைப்புகள் இருந்தாலும்,  எளிய நேரடியான மொழியில் குறிப்பிடத்தக்க பல கதைகள் எழுதியிருக்கிறார். இவர் எழுதிய கதைகளில் ’இடக்கர் அடக்கல்’ அற்ற,  வட்டர வசைச் சொற்கள் விரவிய  கதைகளாகத் தேர்ந்தெடுத்துப் பிரசுரித்தது ஒரு பிரபல வாரப் பத்திரிகை. அதனால், கி ரா என்றாலே வட்டார வழக்கு, கொச்சையான படைப்புகள்  என்று மாயை நிலவி வருகிறது என்று சொல்லலாம்.

இவரது கோபல்ல கிராமம் கதையின் ஒரு அத்தியாயத்தைப் படித்துக்கொண்டே பேருந்தில் பயணம் செய்தேன். அப்போது,  பல முறை வாய்விட்டுச் சிரித்தததும், சக பயணிகள் கேலிப் பார்வைகளை என் முதுகில்  உணர்ந்ததும் … அது வேறு அனுபவம்.  

மெல்லிய நகைச்சுவையும் யதார்த்தமான கதை மாந்தர்களும் இவர் கதைகளின் சிறப்பம்சம்.

 

                                                                                        எஸ். கே என்.  

 

 

 

குப்பை – S L நாணு

Although today is education growth day ,,Still there are students picking up something in garbage| கல்வி வளர்ச்சி நாளான இன்றும் சிறுவர்கள் பள்ளிக்கு செல்லாமல் குப்பை பொறுக்கும் ...      

ரொம்பவே அவசரமாகக் குப்பையைத் துழாவித் துழாவிப் பொறுக்கினான் ஜனா.. அவனுக்குத் தெரியும்.. எவ்வளவு சீக்கிரம் கிடைத்ததை அள்ளிப் போட்டுக் கொண்டு போய் சிங்காரம் கடையில் கொட்டுகிறானோ.. அவ்வளவு சீக்கிரம் அவன் குடிசையில் அடுப்பு எறியும்.. விபத்தில் முதுகெலும்பு உடைந்து படுத்த படுக்கையாகக் கிடக்கும் அப்பா.. காச நோய் முற்றிய நிலையில் அம்மா.. இருவரையும் பார்த்துக் கொள்ளும் தங்கை.. சூழ்நிலைக் காரணமாக பள்ளிப் படிப்பை நிறுத்தி விட்டு வேறு வேலை கிடைக்காமல் சிங்காரத்தின் அறிவுரைப் படி இந்த குப்பைப் பொறுக்கும் வேலை.. கஷ்டமாக இருந்தாலும்.. தன் குடும்பத்தை நினைத்து விடாமல் குப்பையைக் கிளறினான்.. தினமும் நூறு நூற்றைம்பது தேறுகிறது.. அதிருஷ்டம் இருந்தால் சில நாட்கள் போனசாக மேலும் ஐம்பது நூறு கிடைக்கும்..

       இன்று நான்கு தெருக்கள் சுற்றியாகி விட்டது.. உருப்படியாக எதுவும் தேறவில்லை.. சில நாட்கள் இப்படியும் இருக்கும்.. இன்று கிடைத்ததை வைத்துப் பார்த்தால் ஐம்பது கூடத் தேறாது போலிருந்தது.. நான்கு பேர் சாப்பிட இது போதாதே..  மனதில் வேகம் ஏற ஏற.. கண்கள் இன்னும் வேகமாக அலைபாய்ந்தன.. அறுந்த செருப்பு.. அழுகின பழங்கள்.. காய்கள்.. ஈரத்தில் நனைந்த காகிதங்கள்.. கிழிந்த நாராகத் துணிகள்..

       “சே.. இன்னிக்கு ஏன் இப்படி ஒரு சோதனை?”

       அலுத்துக் கொண்டு நிமிர்ந்தான் ஜனா.. இந்த குப்பை மேட்டை விட்டால் பெரிதாக வேற எந்த குப்பைத் தொட்டியும் அவன் போகும் பாதையில் கிடையாது என்று அவனுக்குத் தெரியும்..

       என்ன செய்வது என்று புரியாமல் சில கணங்கள் சிலையாக நின்றான்.. வெயிலின் தாக்கத்தில் வியர்வை கசிந்து தொண்டை வரண்டது.. காலையிலிருந்து எதுவும் சாப்பிடாததால் கண்கள் இருட்டிக் கொண்டு மயக்கம் வருவது போலிருந்தது..

       தன்னையுமறியாமல் குப்பை மேட்டில் அப்படியே உட்கார்ந்தான்.. கீழே சாயாமல் இருக்க இரண்டு கைகளையும் ஊன்றியபடி கண்களை  மூடிக் கொண்டான்.. சிறிது நேரம் அப்படியே உட்கார்ந்திருந்தவனுக்கு சற்று ஆசுவாசப் பட்டது போல் இருந்தது..

       மெதுவாக எழுந்திருக்க முயன்றான்..

       குப்பையில் புதைந்திருந்த அவனுடைய இடது கையில் ஏதோ சிக்கியது.. எடுத்துப் பார்த்தான்..

       மணி பர்ஸ்..

       அவசரமாக அதைத் துழாவினான்.. உள்ளே பத்து இரண்டாயிரம் நோட்டுக்கள்.. நான்கு நூறு.. மூன்று ஐம்பது.. மிச்சபடி சில கசங்கிய காகிதங்கள்..

       இவ்வளவு பணத்தை ஒன்றாகப் பார்த்தவுடன் ஜனா முதலில் மிரண்டு போனான்.. நம்பாமல் அந்த நோட்டுக்களைக் கையில் எடுத்து மறுபடியும் மறுபடியும் தடவிப் பார்த்தான்.. எண்ணிப் பார்த்தான்..

       நிஜம் தான்..

       என்ன செய்யலாம்?

       மறுபடியும் பர்ஸை துழாவினான்.. அதில் சொந்தக் காரரின் பெயரோ விலாசமோ குறிக்கும் கார்ட் எதுவுமில்லை.. போட்டோ கூட இல்லை.. தவறுதலாக யாரோ இதைத் தொலைத்திருக்க வேண்டும்..

       ஜனா ஒரு முடிவுக்கு வந்தான்..

       தன் பிராத்தனைக்குக் கடவுள் கொடுத்த வரமாகவே அவனுக்குப் பட்டது..

       இந்தப் பணம்.. இன்னும் பல நாட்களுக்கு அவர்கள் குடிசையில் அடுப்பு எறிய உதவும்.. அவன் அப்பாவின் முதுகுத் தண்டுக்கு தைலம் வாங்க  உதவும்.. கிழிந்த பாவாடையை சுற்றிக் கொண்டு அலையும் தங்கைக்குப் புதுப் பாவாடை சட்டை வாங்கிக் கொடுக்க உதவும்.. அவனுக்கும் வேறு எங்காவது வேலை தேட கொஞ்சம் அவகாசம் கிடைக்கும்..

       பணம் கிடைத்தவுடன் அவனுடைய சோர்வெல்லாம் ஒரு நொடியில் விலகியது போலிருந்தது..

       சுற்று முற்றும் பார்த்தான்.. யாரும் அவனைக் கவனிக்கவில்லை என்பதை ஊர்ஜிதம் செய்த்துக் கொண்டான்.. பர்ஸை சட்டைக்குள் மறைத்துக் கொள்ள முயன்றவனின் மனதை ஏதோ குத்தியது..

       ”ஜனா.. நீ பண்றது சரியா?”

       ஒரு கணம் திடுக்கிட்டான்.. ஆனால் உடனே அவனுடைய புத்தி அவனுக்கு ஆதரவாக வந்தது..

       “என்ன தப்பு? நானா எடுத்தா திருட்டுன்னு சொல்லணும்.. இது எனக்கு எதிர்பாராத விதமாக் கிடைச்ச பணம்.. எடுத்துக்கறதுல என்ன தப்பு?”

       மனம் விட வில்லை.

       “இல்லை ஜனா.. எப்படி இருந்தாலும் நீ செய்யறது திருட்டு தான்.. இதை சொந்தக் காரர் கிட்ட சேர்க்க வேண்டியது உன் கடமை”

       ”ஏய்.. பைத்தியம் மாதிரி பேசாதே.. பர்ஸை துழாவியாச்சு.. இதோட சொந்தக் காரர் யாருங்கறதுக்கு எந்த அடையாளமும் இல்லை”

       “சரி.. அப்ப நேர போலீஸ் ஸ்டேஷன் போய் அவங்க கிட்டக் கொடு.. அவங்க சொந்தக் காரனைக் கண்டு பிடிச்சு அதைக் கொடுத்துருவாங்க”

       “வந்து.. “

       “யோசிக்காதே ஜனா.. இந்தப் பர்ஸை போலீஸ் கிட்ட ஒப்படைக்கறது தான் தர்மம்.. நியாயம்.. அவங்க கிட்ட இதை நீ ஒப்படைச்சா உன் நேர்மையைப் பாராட்டி அவங்க உனக்கு ஏதாவது பரிசு கொடுக்கலாம்.. அது தான் உனக்குப் பெருமை.. கௌரவம்..”

        “இல்லை.. வந்து..”

        ”உடனே எழுந்திரு.. போலீஸ் ஸ்டேஷனுக்குக் கிளம்பு”

        “சரி.. சரி.. கத்தாதே.. போலீஸ் ஸ்டேஷன் போறேன்”

         என்று எழுந்து குப்பைப் பையைச் சுமந்து கொண்டு நடக்க ஆரம்பித்தான் ஜனா..

          “நான் ஆசைப் பட்டது தப்பு தான்.. போலீஸ் கிட்டத் தான் பர்ஸைக் கொடுக்கணும்.. போலீஸ் கிட்டத் தான் கொடுக்கணும்.. அவங்க அதை சொந்தக் காரர் கிட்ட ஒப்படைச்சுருவாங்க.. போலீஸ் கிட்டத் தான் கொடுக்கணும்.. போலீஸ்..”

          ஜனாவின் மனதில் பரபரப்பு ஏறியது.. வேகமாக நடக்க ஆரம்பித்தான்..

          ஆனால் கால்கள் தன்னிச்சையாக அவன் குடிசையை நோக்கி நகர்ந்தன..

நடனமும்  மருத்துவமும் – சுரேஷ் ராஜகோபால்

Dance Medicine | Sports Medicine & Training Center

“அரிது அரிது, மானிடராய் பிறத்தல் அரிது

மானிடராய் பிறந்த காலையின்

கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறத்தல் அரிது” – ஔவையார்

 

நமது சுவாசம், குடிக்கும் நீர், உண்ணும் உணவு, சரியான தூக்கம், அமைதியான மனநிலை (தியானம்), உடல் பற்றிய அக்கறை, உடற்பயிற்சி முதலானவை நமது உடலைப் பராமரிக்கும் காரணிகள். 

இதில் உடற்பயிற்சியில் நடனம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. நடனம் பார்க்கும்  போதும் சரி  ஆடும் போதும் சரி பல உடல் நலம் பேணும் கருவியாக இருக்கிறது. 

நடனம் என்பது ஒரு கலை, உடலிலே அசைவு கொடுத்து தாளத்துக்கும் இசைக்கும் ஏற்ப ஆடுவது, அதில் சில நடனங்களில் நளினமிருக்கும் சில நடனங்களில் மூர்க்கமிருக்கும். உலகில் பல்வேறு பாகங்களில் பல்வேறு நடனங்கள் அவரவர் கலாச்சாரத்தை ஒட்டியும் பழக்க வழக்கங்களைச் சார்ந்திருக்கும்.

 சில செய்திகளைச் சொல்லவும், கருத்துக்களைப் பரிமாறவும் இந்தக் கலை பயன் பட்டிருக்கிறது  .நடனம் என்பது பலவற்றை உள்ளடக்கியது, குறிப்பாக சமூகம், பண்பாடு, அழகியல் , கலை அனைத்தையும் விளக்கவும் முடியும் .

சில நாட்டுப்புறக் கலைகளில் தனியாக ஒவ்வொரு காலத்துக்கும், இடத்துக்கும் ஏற்றார்போலப் பல வித்தியாசமாக நடன அசைவுகளிருக்கும். அவை கூத்து, ஆட்டம், பாட்டம் என்று அழைக்கப் படுகிறது ..

 நடனங்கள் பல்வேறு பாணிகளில் உருவாகியுள்ளன. எனினும் எல்லா நடனங்களுமே தம்முள் சில பொது இலக்கணங்களை , இயல்புகளைக் கொண்டுள்ளன. நடன அசைவுகளுக்கு ஏற்ப உடல் வளைந்து நெளிந்து கொடுக்கும் தன்மை கொண்டதாக இருப்பது மட்டுமன்றி, உடல் உறுதியும் முக்கியமானது. இதனாலேயே முறைப்படியாக நடனம் ஆடுபவர்கள் நல்ல நீண்டகாலப் பயிற்சி எடுத்துக் கொள்கிறார்கள்.

 தமிழ் கலாச்சாரத்தில் இயல் இசை நாடகம் எனப் பிரிக்கப்பட்ட ஆய கலை அறுபத்து நான்கினில், தென்னகத்தின் சிறப்புக் கூறும் பரதமும் ஒன்று  . இந்த நாட்டியம் உடலில் மனம் முதல் உடல் வரை அனைத்திற்கும் உத்வேகம் அளிக்கிறது. மருத்துவ ரீதியில் இது ஒரு உடல் பயிற்சி. உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவிடும். உளவியல் ரீதியாக .உள்ளத்திற்கும் பயிற்சி. ஆடல் கலையில் சிறப்புப் பெற்றது ரம்மியமான ஆடல், முகத்தில் நவரசமும் காட்டமுடியும், பாடலுக்கு ஏற்ற மாதிரி வளைவு சுளிவு நெளிவு வெளிப்படுத்த முடியும். .

 மிக மிகப் பழைய மனித நாகரிகங்கள் தோன்றுவதற்கு முன்னரே சடங்குகள்,  கொண்டாட்டங்கள், பொழுதுபோக்குகள் போன்ற பல காரணங்களுக்காக நடனங்கள் மனித வாழ்வில் மிக முக்கிய இடம் பெற்றிருக்க சான்றுகள் கிடைத்துள்ளன.. . சிந்துவெளி நாகரிகத்தைச் சேர்ந்த தொல்பொருட்களிலும் நடனம் ஆடும் உருவங்கள் காணப்படுகின்றன.

 மனிதன் தனக்குள்ளே  முதலில் சங்கேத முறையில் கருத்துக்கள் பரிமாறிக் கொண்டிருக்கலாம்  . பிறகு பேச்சு வழக்கு , பாட்டு, ஆட்டம், நடனம் என்று பரிணாம வளர்ச்சி பெற்று இருக்கிறது .  தற்போதைய காலகட்டத்தில் நடனம் பெரும்பாலும் பெண்களுக்கு உரித்தானதாகப் பார்க்கப் படுகிறது. முன்னொரு காலத்தில் இதை ஆண்களும் ஆடி வந்தது வரலாற்றில் தெரிய வருகிறது, ஆனால் அதிலும் ஆண்கள் பங்கு சொற்பமே.

மனித குலமட்டுமல்ல மற்ற மிருகங்கள், தேனீ போன்ற பூச்சிகள், பறவைகள் கூட நடனம் போன்ற அசைவுகளை வெளிப் படுத்துகின்றன.

தில்லை நடராசரின் பரதம் மிகவும் பிரபலம். “Cosmic Dance” என்று விஞ்ஞானிகளால்  விவரிக்கப்படும் தில்லை நடராசப் பெருமானின் ஆனந்த நடனமும், ருத்ர தாண்டவமும் குறிப்பிடத்தக்கவை. நடனத்திற்கென தமிழகத்தில் பொன்னம்பலம் சபை, வெள்ளி சபை, தாமிர சபை முதலான சபைகள் இருந்துள்ளன. அவைகளில் எல்லாம் ஆடல்வல்லான் ஆடிய அற்புத நடனங்கள் விவரித்துக் கூறப்படுகின்றது. அதன் அடிப்படையில் இந்த பரந்து விரிந்த இந்திய நாட்டில் பலவகையான நடனங்கள் ஆடப்பட்டு வருகின்றன.

 ஆடல் பாடல் என்பவை எல்லா இந்து தெய்வங்களும் தொடர்புப் படுத்தி, நடன சபாபதி,  கண்ணன் காளிங்க நர்த்தனம்  , பார்வதி தேவியின் நடனம் , நர்த்தக  விநாயகர், காளிதேவியின் கூத்து இப்படி கலாச்சாரத்தோடு கலந்த வருகிறது.  நடனம் சீமந்தமாகப் பல நூல்கள் தமிழில் எழுதப் பட்டுள்ளன, அதில் பரத சாஸ்திரம் என்ற நூல் பரத முனிவரால் எழுதப்பட்டது . சிலப்பதிகாரத்தில் பரதம் பற்றிய பாடல்கள் இருக்கின்றன.  

 தமிழ்நாட்டில் பரதம், கேரளாவில் கதகளி (ஆண்களுக்கானது), மோகினியாட்டம் (பெண்களுக்கானது)  ஆந்திராவில் குச்சுப்பிடி,ஒடிசாவில் ஒடிசி, மணிப்பூர் மணிப்புரி , வட இந்தியாவில்   கதக் , அசாமில் சத்ரியா இப்படி பல நடனங்கள் நமது நாட்டில் மட்டுமே ஒவ்வொரு பகுதிக்கும் என்று  வித்தியாசமாக ஆடப்படுகின்றன

எந்த வகை நடனமும் ஆடுவதற்கு, பார்ப்பதற்கும் உடலில் சில எழுச்சிதனை நிச்சயமாகக் கொடுக்கிறது. அந்தக் கலை எப்படி மருத்துவமாக பார்க்கப்படுகிறது என்று பார்ப்போம் .

நடனம் என்பது எல்லா வயதினருக்கும், வடிவங்களுக்கும், அளவிற்கும் பொருந்தக்கூடியதாக இருக்க ஒரு வழியாகும். இது உடல்நலம்  மற்றும் மனநலத்திற்கு என்று  பலவிதமான   நன்மைகளைச்  செய்யும் வல்லமை பெற்றது.

உடல் சார்ந்தது 

 

Seattle Dance Medicine - Home | Performance art, Art, Seattle-இதயம் மற்றும் நுரையீரலின் மேம்பட்ட நிலை, (சீரான இரத்த ஓட்டம்)

-அதிகரிக்கும்  தசை வலிமை,  சகிப்புத்தன்மை மற்றும் இயங்கு சக்தி (மோட்டார்) உடற்பயிற்சி

-அதிகரித்த ஏரோபிக் உடற்பயிற்சி

-மேம்பட்ட தசை தளர்வு மற்றும் வலிமை

-எடை மேலாண்மை

-வலுவான எலும்புகள் மற்றும் எலும்பு தேய்தல் (அல்லது) எலும்பு நொறுங்குதல்  (ஆஸ்டியோபோரோசிஸ்) அபாயத்தைக் குறைப்பது

-சிறந்த ஒருங்கிணைப்பு, சுறுசுறுப்பு மற்றும் நெகிழ்வுத்தன்மை

 

மனம் சார்ந்தது 

-மேம்பட்ட சமநிலை மற்றும்  விழிப்புணர்வு 

-அதிகரிக்கும்  உடல் மற்றும் மன  நம்பிக்கை

மனித மனங்களைப் பண்படுத்தும் கலைகள் | தமிழ்ஹிந்து | Mobile Version-மேம்பட்ட மன செயல்பாடு, மனோதைரியம்

-மேம்பட்ட பொது மற்றும் உளவியல் நல்வாழ்வு,  (மனோ தத்துவ ரீதியாக முன்னேற்றம்.)

–அதிக தன்னம்பிக்கை மற்றும் மனவளம்

-சிறந்த சமூக நோக்கம், செயல்பாடு, ஈடுபாடு ..

கிடைத்த நல்ல உடலைப் பேணி பாதுகாத்துக் கொள்வது நமது கடமையாகும்.  அந்த முயற்சியில் நடனத்தின் பங்கு மகத்தானது.  எல்லோருக்கும் கிட்டிவிடாது ஆனால் கிடைத்தவர்கள் பொன்போல பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லவேண்டும்.

 

உயர்ந்த அன்பளிப்பு – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்

ஆசிரியரை வாழ்த்துவது எவ்வளவு அசல். வசனத்தில் ஆசிரியர் தினத்தில் ஆசிரியருக்கு அழகான வாழ்த்துக்கள். தொடக்கப்பள்ளி ஆசிரியருக்கு ...

பள்ளி முதல்வருக்கு தன் பிறந்த நாள் வந்தாலே சங்கடம் தான். ஒவ்வொரு ஆசிரியரும் போட்டிப் போட்டுக் கொண்டு விலை மிகுந்த பொருட்களை வாங்கி, பரிசு அளித்து, கேக் வெட்டி, அமர்க்களப்  படுத்தி விடுவார்கள்.

ஆளுக்கு ஆள், இப்படியே… ஏதோ எதிர்பார்ப்பு. ரசிக்க முடியவில்லை.

இதற்கு நேர் மாறகப் பள்ளியின் ஸ்பான்சர்ஷிப் தேவதையும் உண்டு!

“மேடம், மன்னிக்கவும்”.   வெளியே ஸ்பான்சர்ஷிப் தேவதையின் குரல்.

“மிஸ்? உள்ளே வரலாமா?” அமைதியற்ற நிலையிலிருந்து திரும்பிப் பார்த்தார். அந்த சிறுமியைப் பார்த்ததுமே மனநிலை மாறியது. மாய வித்தைதான்!

“என் வகுப்பு அறையைக் கொஞ்சம் திறந்து தருவீர்களா?”

பள்ளி முதல்வருக்கு இது பரிச்சயமான வேண்டுகோள். அதே வேண்டுகோள், வருடத்தில் மூன்று நான்கு முறை. எப்பவும் போல! 

வகுப்பின் அறையைத் திறந்தார். வெகு கவனிப்புடன் அந்த சிறு கைகள் தன்னிடம் இருந்த பையின் உள்ளே கையை விட்டு, ஒவ்வொன்றாகத் தானே கையால் செய்த காகித பொம்மைகளை எடுத்து, அதன் மேல் இருந்த பெயர் பார்த்து, அதன் இடத்தில் வைத்து வந்தாள்.  கடுகு அளவும் கர்வமோ, பாசாங்கோ இல்லை.

ஆசிரியர் தன்னை மறந்து மகிழ்ந்தாள்.  ஸ்பான்சர்ஷிப்பில், யாருடைய ஆதரவிலோ படிக்கும் இந்த இளநெஞ்சுக்கு எத்தனை பெரிய உள்ளம்! இன்றைக்கு எந்த விசேஷமும் இல்லை. இது ஒரு “ஜஸ்ட் லைக் தட்” பகிர்தல்.

ஆசிரியருக்கு இவளுடைய பெற்றோரைப் பற்றித் தெரியும். வறுமையில் இருப்பவர்கள். எனினும், அக்கம் பக்கம் பசியில் வாடுவோருக்குக் கஞ்சி, கூழ், சோறு என்று ஏதோ போடுவதுண்டு. அங்கே தான் இவள் கற்றுக் கொண்டாளோ?

இப்படி எண்ணிக் கொண்டிருக்கையில், சிறுமி பொருட்களை வைத்து விட்டு, ஆசிரியருக்கு நன்றி கூறி சென்று விட்டாள். இருவருக்கும் இந்த தருணம்  மிகவும் பிடிக்கும். உள்ளுக்குள் அவ்வளவு பரவசம்!

பள்ளி மணி அடித்தது.  பிள்ளைகள் எல்லோரும் இறை வணக்கம் செய்து விட்டு வகுப்பிற்கு வந்தனர். 

இந்த மூன்றாம் வகுப்பின் ஒவ்வொரு பிள்ளையும் தன் இடம் வந்தவுடன், அங்கே தனக்காகக் காத்துக் கொண்டிருக்கும் ஆச்சரியத்தைக் கண்டனர்.   வண்ண வண்ணமான காகித பொம்மையைப் பார்த்து “ஆ”, “ஏ”, “ஓ” என்று ஒரே கூச்சல்!

வகுப்பு ஆசிரியர் சிறுமியைப் பார்த்து சமிக்ஞை செய்து கேட்டாள் “உனக்கு?” என்று. குழந்தையின் கண் மின்னியது. வகுப்பைச் சுற்றிப்ப் பார்த்து, அவர்கள் சந்தோஷத்தை உள் வாங்கியவள், “இதோ இவர்களின் சந்தோஷமே போதும்” என்பது போல் காட்சி அளித்தாள். தன்னுடைய “மௌனமான இன்பம்!”

அன்று முழு தினமும் பள்ளி முதல்வருக்கும் இவளைப் பற்றிய நினைவே.

வீடு வந்தாள்.  அவள் குழந்தை ஓடி வந்து பெருமையாக, “அம்மா, இதோ உனக்கு”.  கடையில் வாங்கிய அழகாக கிஃப்ட் ராப் செய்யப் பட்ட விலை உயர்ந்த அன்பளிப்பு!

 

கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்

எலியாயணம்!

 

 

 

 

 

 

 

 

அசோகமித்திரனின் ‘எலி’ கதை வாசித்துக்கொண்டிருந்தேன் – சமையலறையில் ‘படார்’ என்ற சத்தம் கேட்டு, ‘விழுந்திருச்சு’ என்று கத்தியபடி புத்தகத்தைப் போட்டுவிட்டு ஓடினேன் – மர எலிப்பொறியின் கம்பிகளுக்குப் பின்னால், புதிதாய் ஜெயிலுக்கு வந்த கைதியைப் போல ’திரு திரு’ என முழித்தபடி ஓர் எலி தன் கூரிய மூக்கால் கம்பிகளைத் துழாவியவாறு நின்றிருந்தது. முகம் முழுதும் மரண பயம் அப்பியிருந்தது!

மேற்பக்கக் கம்பிகளின் வழியே ‘டாப் ஆங்கிள்’ வியூவில், சுமாரான பெரிய எலி, ஆசைப்பட்ட வடையை மறந்து, பரிதாபமாக வெளியேற வழியை முகர்ந்து பார்த்துக்கொண்டிருந்தது! யாரோ திருமணங்களை எலிப்பொறியுடன் ஒப்பிட்டது நினைவுக்கு வந்தது – வெளியிலிருக்கும் எலிக்கு உள்ளே வர ஆசை – வடையின் வசீகரம்!. உள்ளே மாட்டிக்கொண்ட எலிக்கோ வெளியே ஓடி விட ஆசை – ஆனால் வழியில்லை, வடை கூட தேவையில்லை!

வீட்டில் எலிகளின் லூட்டி இரவில்தான் அதிகமாயிருக்கும்! அந்தக் காலப் பரண்கள், நெல் பத்தாயம் என எல்லா இடங்களிலும் புழங்கும் எலிகள், இரவானால், இரையைத் தேடி, வீடு முழுவதும் வித விதமான ஓசைகள் எழுப்பியபடி, வலம் வருவது நம் தூக்கதைக் கெடுப்பது! எலிகள் சர்வ சுதந்திரத்துடன் ஓடியாடி விளையாடும்! இரவில் துணி உலர்த்தும் மூங்கில் கோல், பித்தளைத் தாம்பாளம், செய்தித்தாள்கள், பரண், பீரோ காலித் தகர டின்கள், எண்ணெய் ஜாடி என எலிகள் உருட்டும் சத்தம் எந்த ஒரு மர்மப் படத்தின் பின்னணி இசையையும் தோற்கடிக்கக் கூடியது!. மாவு டப்பாக்கள், ஊறுகாய் ஜாடிகள், எண்ணெய்த் தூக்குகள் என எல்லாவற்றையும் உருட்டித் தரை முழுதும் மாடர்ன் எண்ணெய்க் கோலங்கள்! விளக்குத் திரிகளை இழுத்துச் சென்று விடும் அபாயம் இருப்பதால், கிராமங்களில், இரவில் எண்ணெய் விளக்குகளை அணைத்து விடுவது பழக்கம்! ‘இரவினில் ஆட்டம், பகலினில் தூக்கம்’ என்று பாடாத குறைதான்!

சுண்டெலி, வெள்ளெலி (அடிப்பக்கம் மட்டும் வெள்ளையாக இருப்பது – சோதனைக் கூடங்களில் புதிய மருந்தையோ, வாக்ஸினையோ போட்டுக் கொள்ளும் தைரியசாலி – சில ஊர்களில் உணவாகவும் …..), ‘கீச் கீச்’ சென்று குரலெழுப்பும் வீட்டு எலி – மூஞ்சூறு, பெருச்சாளி (பெரிய சைஸ் எலி! சாக்கடை, டிரெய்னேஜ் வாசம், பெரிய மளிகைக் கடை, ஓட்டல்களில் ராவேட்டை!), வயல் எலி, கல்லெலி (தன் வளைகளைக் கற்களால் முடி வைக்கும் உஷாரு பார்ட்டி!) என எத்தனை வகை எலிகள்!

‘சரவெலி’ கொஞ்சம் சுவாரஸ்யமானது – பனை, தென்னை, ஈச்ச மர உச்சிகளில் கூடு கட்டி உயரே வாழ்பவை! இரவில் கீழே இறங்கி இரைக்கு அலையும்போது மட்டும் எல்லா எலிகளையும் போலத்தான் – சில மனிதர்கள் எவ்வளவு உயரம் போனாலும், வாழ்க்கை கீழேதான் என்பதை மறந்து விடுகிறார்கள், இந்த ‘சரவெலி’களைப் போல! (‘இன்னா, தத்துவமா?’ என்பவர்கள் ஜாக்கிரதையாக இருக்கவும் – தூக்கத்தில் பாதத்தைத் தேங்காய்ப் பத்தையைப் போல வருவும் எலிகள் ஏவிவிடப்படும்!).

சிறிய தலையும், நீண்ட வாலும், சற்றுப் பருத்த வயிறும் உள்ள ‘கொறி’ விலங்கு – பாலூட்டிகள் வகையில் அடங்கும் எலிகள்! உலகத்தின் எலிகளையெல்லாம் ‘கருப்பு எலி’, ‘மண்ணிற (பிரவுன்) எலி’ என்ற இரண்டு வகைக்குள் அடக்கிவிடலாம் என்கிறது கூகிளைக் க்ளிக்கும் ‘மவுஸ்’! எந்தப் பொறியிலும் மாட்டாவிட்டால், பிரவுன் எலி இரண்டு வருடங்களும், கருப்பு எலி ஒரு வருடமும் வாழும் சாத்தியம் உண்டாம்.

எலி பாஷாணம் – எலிகள் கொறிக்கும் உணவுப்பொருட்கள் போலவே இருக்கும் – ஆர்செனிக், சல்ஃபர், கொமாரின் போன்ற பல வகை ரஸாயனக் கலவை – கேக் மற்றும் பேஸ்ட் ஆகக் கிடைக்கின்றன. மனிதர்களுக்கும், நாய்களுக்கும் ஆபத்தானவை, மிக அதிகமான கவனம் தேவை. எலிகள் எங்கோ விஷத்தைத் தின்றுவிட்டு, வேறெங்கோ இறந்து கிடக்கும். உடல் நிலை சரியில்லை யென்றாலும், இறக்கும் தறுவாயில் இருந்தாலும், எலிகள் தங்கள் வளைக்குள் வந்து விடவே விரும்புமாம்.

‘கிரீச்’ எனக்கத்தும் எலிக்கு, வலி அல்லது பயம்தான் காரணமாம் – எதிர்பாராமல் நம் மீது பாயும் எலியைக் கண்டு நாம் கத்துவதற்கும் அதேதான் காரணம்! (வீட்லெ எலி, வெளீலெ புலி க்கும் இதற்கும் சம்பந்தம் கிடையாது!)

எலிப்பொறிகள் எண்ணெய்ப் பண்டங்களை வைத்து எலியைப் பிடிக்க உதவுபவை. மர எலிப்பொறிகளில் உயிருடன் மாட்டிக்கொள்ளும் எலிகள்! இரும்புப் பற்கள் (பீமன் பொறி), தடித்த இரும்பு வளையங்கள் கொண்டு எலிகளைப் பிடிப்பது மனதிற்கு வலியைத் தருவது – இரத்த வெள்ளத்தில் அல்லது இரும்பு வளையத்தில் இறந்துகிடக்கும் எலிகளைப் பார்த்தால் பாவமாயிருக்கும்.

பொறியிலிருந்து வெளியே விடப்படும் எலிகள் (சண்டை போடும் பக்கத்து வீட்டு அல்லது எதிர் வீட்டு வாசலில் விட்டு விடுவது பெரிய ராஜதந்திரம் – ‘யூ’ டர்ன் அடித்து, நம் கால்களுக்கிடையே ஓடி, திரும்பவும் நம் வீட்டுக்குள்ளேயே வராத வரையிலும் பெருமைப் பட்டுக் கொள்ளலாம்!), ஓடித் தப்பிக்கலாம்; நாய்களாலோ, பூனைய்களாலோ துரத்திப் பிடிக்கப் (கடிக்க!) படலாம்; செங்குத்தாகப் பறந்து வரும் காக்கையினால் கொத்திச்செல்லப்படலாம்! எலியின் விதியைப் பொருத்தது. வெளியே வரும் எலியை ஒரு சாக்கில் பிடித்து, கண நேரத்தில், துணி துவைப்பதைப் போல சாக்கைத் தரையில் அடித்துக் கொல்வது அராஜகமான கொலைக்குச் சமம்! வயல்களில் எலிகளுக்காகக் காத்திருக்கும் பாம்புகள், தப்பித்து வளைக்குள் ஓடும் எலிகள் – வாழ்க்கைப் போராட்டத்தின் குறியீடுதான்!

நாற்பது வகை வியாதிகளைப் பரப்ப வல்லவை எலிகள்! மழைநீர், உணவுப் பொருட்கள் இவற்றில் கலந்துவிடும் எலியின் சிறுநீர், எச்சல் போன்றவைகளால், எலிக் காய்ச்சல் (leptospirosis), ப்ளேக் போன்ற வியாதிகள் பரவலாக வரக்கூடும்.

ஒருமுறை என் காரில் வேலூர் செல்லும்போது, ஏசி வேலை செய்யவில்லை. சிறிது தூரம் சென்ற பிறகு, எஞ்சினில் கோளாறு என்று டேஷ் போர்ட் ஸ்க்ரீன் கண் சிமிட்டியது. ஸ்டீரிங் வீல் இறுகிப் போக, வண்டி, மாப்பிள்ளை ஊர்வலக் கார் போல, இஞ்ச் இஞ்சாக நகர்ந்தது. வண்டியை ஓரங்கட்டி, போனில் தொடர்பு கொண்ட சர்வீஸ் டீம், இரண்டு மணி நேரத்தில் வந்து, வலது முன் டயருக்கு உட்புறம் எஞ்சினின் அடிப்பக்கத்தில் சில ஒயர்களை எலி கடித்துத் துண்டாக்கியிருப்பது தெரிய வந்தது! வீட்டிற்கு வந்த பிறகுதான் தெரிந்தது, செக்யூரிடி, தேங்காய்த் துண்டுகளை காருக்கருகில் காயவைக்கிறார் என்று – பிறகு என்ன, காரின் அடிப்பக்கத்துக்கு எலி ஸ்ப்ரே, புகையிலைக் கட்டு, வலை என்று ஏக காபந்து!

‘எலிக்கு மரணவலியாம், பூனைக்குக் கொண்டாட்டமாம்’, ‘எலி வளையானாலும் தனி வளை தேவை’, ‘அறுப்பு காலத்தில் எலிக்கு ஏழு பொண்ணாட்டியாம்’, ‘சிங்கம் இளைச்சா, எலி மச்சான் முறை கொண்டாடுமாம்’ – இந்தப் பழமொழிகள் எலிகள் எப்படி நம் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்துள்ளன என்று சொல்கின்றன!

அசோகமித்திரனின் ‘எலி’ கதையைப் படித்ததால் வந்த எண்ண எலிகள் இந்தக் கட்டுரை – அவசியம் வாசிக்க வேண்டிய கதை ‘எலி’! தி.ஜா. வின் ‘சங்கீத சேவை’ – ஒரு சங்கீத எலியின் மேல் நாட்டு அனுபவத்தைப் பகடி செய்கிறது!

‘எலிப்பத்தாயம்’ (தமிழில் பத்தாயம் என்றால் எலிப் பொறியாம்) அடூர் கோபாலகிருஷ்ணனின் தேசீய விருது பெற்ற மலையாளப் படம்.

உலகின் எல்லா வயதினரும் சிரித்து மகிழும் கார்டூன் –

டாம் அண்ட் ஜெர்ரி’!  எலியும்பூனையும் அடிக்கும்கொட்டம் விலா நோக வைக்கும் சிரிப்பு – எலியின் சாமர்த்தியமும்சுறுசுறுப்பும்,புத்திசாலித்தனமும்அபாரமாயிருக்கும்இந்த அனிமேஷன் படத்தை உருவாக்கிய வில்லியம் ஹன்னாஜோசஃப் பார்பெராபாராட்டுக்குரியவர்கள்

“சுவாமியால் தான் வாகனத்துக்குக் கெளரவம் – அந்த கெளரவத்தைக் கொடுக்க, மூஞ்சூறுக்கேற்றபடி கனம் இல்லாமல் நெட்டியில் செய்த மாதிரி இருக்கிறாராம் பிள்ளையார். ‘பக்தர்கள் இருதயத்தில் கனக்காமல் லேசாக இருப்பேன்’ என்று காட்டுகிறாராம்!” – தெய்வத்தின் குரலில் மஹா பெரியவா.

பெருச்சாளி இருளை விரும்பும். கீழறுத்துச் சென்று கேடுதனை விளைவிக்கும். ஆதலின் அது அறியாமை அல்லது ஆணவ மலத்தைக் குறிக்கிறது. இவற்றை அடக்கி நம்மை ஆட்கொள்பவர் பிள்ளையார் என்பதைப் புலப்படுத்தவே தனது காலின் கீழ் பெருச்சாளியை வத்திருக்கிறார் என்ற ஒரு வியாக்கியானமும் உண்டு!

ஏதோ தம்ப்ளர் உருளுகிற சத்தம் வரவே, கிச்சன் பக்கம் தாவிச் சென்றேன் – டைனிங் டேபிள் மேல், கூடையில் இருந்த ஆப்பிளின் மேல் பக்கம் வருவியிருந்தது – நான் எழுதி முடிக்கும் வரை காத்திருந்ததோ என்னவோ!

ஜெ.பாஸ்கரன்