ஆரஞ்சு கலர் சான்யோ டிரான்சிஸ்டர்!
நான் வேலைக்குச் சேர்ந்த புதிது. அங்கு வரும் நோயாளிகள் மிகவும் மனது உடைந்து, வாழ்க்கையில் நம்பிக்கை இழந்து வருகின்றவர்கள்.
தனக்கிருப்பது புற்று நோய்தான் என்பதை அறிந்தவர்கள், ஒரு வித தயக்கத்துடன், ‘மேலே என்ன’ என்பதைப் போல வருவார்கள். சந்தேகத்தில், வருபவர்கள் முகத்தில் ஒரு எதிர்பார்ப்பு – ‘அதுவாக இருக்கக் கூடாதே’ – அச்சத்துடன் கூடிய ஒரு முக பாவத்துடன் வருவார்கள். வந்து, சிகிச்சை எடுத்துக்கொண்டிருப்பவர்கள், ஒரு வித சினேக பாவத்துடன், முகத்தில் ஒரு நம்பிக்கையுடன் வருவார்கள்.
அது, எதற்கும் அடங்காமல், தன் கொடூர முகத்தைக் காட்டும் நேரம், அவர்கள் முகம் காட்டும் வலி, விட்டுப்போகின்ற வேதனை, அப்போதும் டாக்டரைப் பார்த்து வலிந்து காட்டும் சிறிய புன்னகை மனதைக் கலக்குவது, பாறையாய் அழுத்துவது.
அவன் பெயர் ரஹீம் – பதினாலு வயது. ஆந்திராவின் ஒரு மிகச் சிறிய கிராமத்திலிருந்து வருகிறான். வயதிற்குச் சிறிது உயரம் கூடத் தான். முகத்தில் ஒரு புன்சிரிப்பு. அக்குளைத் தாங்கி இரண்டு பக்கமும் ஊன்று கோல்கள் – வலது கால் தொடையின் கீழ்ப் பாதியிலிருந்து ஆம்புடேட் செய்யப்பட்டிருந்தது. வெள்ளை முண்டாசு தலைகீழாகக் கட்டியதைப் போல, வெட்டி எடுக்கப்பட்ட இடத்தில் போட்டிருந்த பாண்டேஜில் இன்னும் காய்ந்த பச்சை இரத்தத்தின் சுவடுகள் – சமீபத்திய அறுவைச் சிகிச்சையின் சின்னங்கள். கையில் ஃபைலுடன் இரு பக்கமும் அவன் பெற்றோர் – முகம் முழுக்க சோகம் அப்பியிருந்தது.
அந்தப் பையனுக்கு இருந்தது எலும்பில் வரும் கேன்சர் – Osteogenic sarcoma – வேறெங்கும் பரவாததினால், கட்டிக்கு மேல் கொஞ்சம் விட்டு, பாதித் தொடையில் ஆம்புடேட் செய்திருந்தார்கள். மேல் சிகிச்சைக்காக – ரேடியேஷன் மற்றும் கீமோதெரபி – எங்களிடம் அனுப்பப் பட்டிருந்தான். வழக்கமான கேள்விகள், பதில்கள், அறிவுரைகள், சிகிச்சை சம்பந்தமான சந்தேகங்கள், பதிலே சொல்லமுடியாத “நல்லாய்டுவானா சார்?” – எல்லாம் முடிந்து அட்மிட் ஆனான். அவனுக்குத் தமிழ் தெரியாது – எனக்குத் தெரிந்த தெலுங்கு அவனுக்குப் புரியாது! ஒவ்வொரு முறையும் தெலுங்கும் தமிழும் நன்கறிந்த ஒருவர் எங்கள் உரையாடலுக்கு உதவுவார்.
முதல் அட்மிஷன் மூன்று வாரங்கள் – தினமும் ரேடியேஷன், வாரத்தில் ஒன்று என மூன்று கீமோதெரபி (மருந்துகள் – ஊசி மூலமாகவும், வாய் வழியும்). புதிதாய்த் திறக்கப்பட்டிருந்த அந்தக் கட்டிடத்தின் தரை தளத்தில் மூன்றாவது கட்டில் அவனுடையது. பக்கத்திலிருந்த வெங்கட்ராமி ரெட்டி – அவனுக்கு ப்ளட் கேன்சர் – மாதா மாதம் வந்து கீமோதெரபி எடுத்துக்கொள்பவன். ரஹீம் வந்த அன்றிலிருந்தே இருவரும் நண்பர்கள் ஆனார்கள். இணைத்தது வியாதியோ, மொழியோ அல்ல – இருவருடைய மகிழ்ச்சியும், வயதும்தான்! தெலுங்கில் பேசிச் சிரித்தபடியே இருப்பார்கள்! இருவரையும் எனக்கு எவ்வளவு பிடிக்குமோ, அவ்வளவு அவர்களுக்கும் என்னைப் பிடிக்கும். வந்தவுடனே ‘குட் மார்னிங்’ – புன்னகை! சில நாட்களிலேயா என் அரைகுறைத் தெலுங்கை ரஹீம் புரிந்து கொண்டான் – சில ஆங்கில, தமிழ் வார்த்தைகளுடன் என்னுடன் பேசுவான்.
சில மருத்துவக் காரணங்களுக்காக ரஹீம் இரண்டு வாரங்கள் கூடுதலாகத் தங்க நேரிட்டது. அதற்குள் ராமி ரெட்டி இரண்டாம் முறையும் வந்து கீமோ எடுத்துச் சென்றுவிட்டான்.

(அந்தப் பாடலைக்கேட்க மேலே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் )
அன்று இரவு எனக்கு டியூட்டி – இரவு ரவுண்ட்ஸ் வரும்போது, இனிமையான இந்திப் பாடல் – ஜிந்தகியோங் குச் பி நஹீங் – மூன்றாவது பெட்டில் இருந்து கசிந்து கொண்டிருந்தது. மங்கிய இரவு விளக்கின் ஒளியில், சுழன்றுகொண்டிருந்த ஃபேனைப் பார்த்தவாறு, ‘வாழ்க்கையில் ஒன்றும் இல்லை’ என்றவாறு படுத்திருந்தான் ரஹீம். தலைமாட்டில் ஆரஞ்சு கலர் சான்யோ டிரான்சிஸ்டர். சப்தமில்லாமல் சுவற்றோரமாக நின்று கொண்டு முழுப் பாடலையும் கேட்டேன். இன்றுவரை அந்த அமைதியை நான் அனுபவிக்கவில்லை. ரஹீமைத் தொந்திரவு செய்யாமல் ரவுண்ட்ஸ் முடித்து என் அறைக்குச் சென்று விட்டேன்.
பிரச்சனைகள் ஏதுமின்றி, ரஹீம் ஐந்தாம் வாரம் முடிவில் டிஸ்சார்ஜ் ஆனான். சிரித்தபடி, கையில் துணிப் பையுடன், ‘ஒஸ்த்தாம் ஸார்’……. புய்ட்டு வரன் ஸார்’ என்றபடி படியிறங்கினவனைப் பார்த்தபடி நான் நின்றேன்.
நான்காம் கீமோவுக்கு ரஹீம் வந்த போது ராமி ரெட்டியைப் பற்றிக் கேட்டான். அவன் இந்த மாதம் வந்திருக்க வேண்டியவன். திடீரென்று நோய் அதிகமாகி, சிறுநீரகம் வேலை செய்ய முரண்டு பிடிக்க, ஒரு வாரகாலப் போராட்டத்துக்குப் பின் மறைந்துபோனான் ராமி ரெட்டி என்பதை நான் எப்படி இந்தக் குழந்தையிடம் சொல்வேன்? செயற்கையாகச் சிரித்து, ‘அவனது வீட்டில் விசேஷம் இருப்பதால் அடுத்த வாரம்தான் வருகிறான்’ என்று பொய் சொன்னேன். ‘ஓ. அல்லாகா..’ என்றவன் முகத்தில் ஒரு நிம்மதி. என்னால் கொடுக்க முடிந்த நிம்மதி!
காலம் நிற்காமல் ஓடிக்கொண்டேதானே இருக்கிறது? ரஹீம் ஆறு கீமோ முடித்து, இனி ஆறு மாதத்துக்கொரு முறை வந்தால் போதும் என்ற நிலை. காலுக்கு அளவெடுத்து, செயற்கையான லெதர் கால் பொருத்தப் பட்டது. கொஞ்சம் நடை பழகி, வீட்டுக்குப் போகும் போது ரஹீம் என்னிடம் வந்தான். “சால தாங்க்ஸ் ஸார்” என்றவன் பையிலிருந்து ஒரு புதிய சான்யோ டிரான்சிஸ்டரை எடுத்து என்னிடம் கொடுத்தான்! துபாயிலிருக்கும் அவன் மாமாவிடம் சொல்லி, எனக்காக வாங்கியதாகச் சொன்னான் (நர்ஸ் மொழிபெயர்த்தது). நான் மறுத்ததை அவன் பொருட்படுத்தவில்லை – அதற்குமேல் மறுக்க எனக்கு மனமில்லை.
தினமும் ஏதாவதொரு ஸ்டேஷனில் – இந்திப் பாடல்கள் வரும் ஸ்டேஷனில் – ‘ஜின்ந்தஹியோங் குச் பி’ பாடல் வருமா என்று காத்திருந்த எனக்கு ஏமாற்றமே. ஆரஞ்சு சான்யோ வைப் பார்க்குந்தோறும், மேலே சுழலும் ஃபேனைப் பார்த்தவாறு படுத்திருந்த ரஹீமே என் மனதில் நிழலாடினான்.
ஒரு திங்கட் கிழமை அதிகாலை ரஹீம் வந்து அட்மிட் ஆனான். சிகிச்சைகளை நிராகரித்தது பரவிய நோய். மாரில் நீர், மூச்சு முட்டல், அவஸ்தை – என் கண்னெதிரிலேயே விழிகள் நிலை குத்தி நிற்க, சிரித்தபடி விடை பெற்றான் ரஹீம். தலை மாட்டில் ஆரஞ்சு கலர் சான்யோ இரண்டு ஆப்பிள்களுக்கிடையே இருந்தது. அதிலிருந்து எந்த சப்தமும் இல்லை. ஜிந்தகியோ குச்…… பாட்டு வந்தால் ஒரு வேளை கேட்பதற்கு உயிர்ப்பானோ?
வாழ்க்கையில் என்ன இருக்கிறது? நான் அதற்குப் பிறகு ‘ஜிந்தகியோ’ பாடலுக்காக ஆரஞ்சு கலர் சான்யோவை ஆன் செய்யவே இல்லை. ரொம்ப நாட்களுக்கு என் ஷோ கேஸில் ஆரஞ்ச் கலர் சான்யோ ரஹீமைச் சுமந்து கொண்டிருந்தது.
ரஹீமுக்கு அவன் முடிவு முன்னமேயே தெரிந்திருக்கலாம். அவன் காட்டிய தைரியமும், விவேகமும், வாழ்க்கையையும், மனிதர்களையும் நேசித்த நேயமும் வேறு எந்த மனிதரிடமும் நான் காணாதவை.
சமீபத்தில் மறைந்த டாக்டர் சாந்தா மேடம் மூலம் எனக்குக் கிடைத்த அரிய பல நல்ல விஷயங்களில், ரஹீமுக்குத் தனியிடம் உண்டு. ஞானம் இப்படித்தான் வரவேண்டுமெனில், ரஹீம், நான் ஞானமற்றவனாகவே வாழ ஆசைப்படுகிறேன்!
ஜெ.பாஸ்கரன்.
Sent from my iPhone
அருமையான பதிவு.
LikeLike