நீலக் கண்ணாடியென அந்தத் திரை ஒளிர்ந்தது. அது ஒரு சட்டகத்தைப் போலக் காணப்பட்டாலும் அதன் வெல்வெட் வழுவழுப்பு, தோன்றித் தோன்றி மறைந்து கொண்டிருந்தது. அதைத் தொட்டுப் பார்க்கும் ஆசையும், அச்சமும் ஒரே நேரம் எழுவதைத் தடுக்க முடியவில்லை.
கால் புதையும் நடை மெத்தைகள், உடலை இதமாக உள் வாங்கும் இருக்கைகள், இளம் ரோஸ் வண்ண சுவர்ப் பூச்சுக்கள். அறை முழுதும் சுவற்றினை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள சாய்வான கண்ணாடிப் பெட்டிகளில் பல அறிவியல் கருவிகள். அதிலும் தெற்குப்பக்கத்திலுள்ள கண்ணாடி பாதுகாப்பான் முழுதுமே வெற்றிடம். அதிலிருந்து இரு சுற்றுகள் ஹீலியம் ஃபைபர்கள் பூமிக்குள்ளே செல்கின்றன. அது மலைப்பாங்கான இடம். குகையின் ஆழம் வெளியில் தெரியாத வண்ணம் கட்டப்பட்டுள்ள ஆய்வகம்.
அங்கே வர ப்ருத்விராவிற்கு மட்டும் உரிமையுண்டு. சரியான உடல் வாகோடு, அளவான மார்பகங்களோடு, நீளக் கால்களோடு ஆகாஷ் பார்த்திருந்த அத்தனைப் பெண்களிலிருந்தும் அவள் மாறுபடுகிறாள்.
ஆகாஷ் தன்னையே நினைத்து சிரித்துக் கொண்டான். நீல வண்ணத் திரையிலிருந்து, மூவருக்கு மட்டும் தெரிந்த இரகசியத்திலிருந்து, தன் மனம் காமத்தை நினைப்பது அவனுக்குச் சற்று வேதனையாக இருந்தது. அவன் முழு முனைப்போடு செய்து கொண்டிருப்பது, மனித மூளை, மூளை உபயோகப்படுத்தும் சக்தி, நேனோ மூளைகள், அது பொருந்தும் உடல் வடிவங்கள், அவைகளின் பயன்பாடு ஆகியவற்றைப் பற்றி மட்டுமே.
எண்ணங்களால் சூடேறும் உடலைக் குளிர்விக்க தானாகவே ஏசி செயல்பட்டது. அவன் விரும்பும் பானங்களை, அவன் அணிய வேண்டிய ஆடைகளை, அவன் உணவு உண்ணும் நேரங்களை, அவன் பேச வேண்டிய விஷயங்களின் தொகுப்பை, அவன் சந்திக்கக் கூடிய மனிதர்களை, அவன் ஓய்வு கொள்ள வேண்டிய நேரத்தையெல்லாம் செயற்கை அறிவுத் துணை ஒன்று நிர்ணயிக்கிறது. அவன் எந்தப் பெண்ணுடன் கூடலாம், அதில் காதல் எவ்வளவு இருக்கலாம், என்று அந்தத் துணை தான் சொல்கிறது. அதை அவன் செல்லமாகக் ‘கல்பா’ என அழைத்தான்.
கல்பாவின் வடிவமைப்பில் பெரும் பங்கு அவனுக்குத்தான் இருக்கிறது. அதன் மின்சார வலைப் பின்னல் மனிதர்களின் ந்யூரல் நெட்வொர்க்கை விட சில மில்லியன் அதிகம். மனித மூளை நரம்புகள் ஒரு விஷயத்திற்குத் தயாராகுமுன், அல்லது அது என்னவென்று அறிந்து கொள்ளும் முன் கல்பா சொல்லிவிடும்.
முன்பொரு நாள் கோடை மழை பெய்தது. அவன் வெளியில் சென்று மழையில் நனைய ஆசைப்பட்டான். அவனை தூக்கிச் சென்று புல் வெளியில் நிறுத்திவிட்டது. இள வெயிலும், ஆலங்கட்டிகளும் ஒன்றாய் அவன் கண்டதில்லை. கைகளில் ஏந்திய அந்த மழைக்கட்டிகளில் சூரியன் பல்வேறு வண்ணக் கலவைகளில் சிரித்தான். கைகளிலேயே கரைந்தும் மறைந்தான். தற்காலிகமாக ஒரு சிற்றருவி அவன் ஆய்வகத்தின் அருகிருந்த மேட்டு உச்சியிலிருந்து கீழே துள்ளிப் பாய்ந்தது. தனக்கென ஒரு பாதை அமைத்துக் கொண்ட நீரின் வழி. அதுவும் கதிரின் கிரணங்களில் வண்ணம் காட்டி அவனுக்குப் போக்குக் காட்டுவது போல் சுழித்து மறைந்தது.
அவனைப் போலவே ப்ருத்வி ராவும் அந்த மழையில் நின்று சுழன்று ஆடுவதை அவன் பார்த்தான். அத்தனையும் வேதியியல் மாயம் என்று தெரிந்தும் தன் உணர்வுகள் தூண்டப்பட்டு அவளை மீள மீள விழுங்குவது போல் பார்ப்பதில் ஆண் எனத் தான் மேலோங்கி அறிவியலாளன் பின்னே தள்ளப்படுவது அவனுக்கு எப்போதுமே பெரும் வியப்பு.
‘ஹேய், ஆகாஷ், என்ன மறந்துட்டியா, என்ன நீ கடசியா ஒரு வருஷம் முன்னாடி பாத்தே. நீ உன் லேப்லயே இருந்த. இப்ப இந்த மழ உன்ன வரவைச்சுடுத்து. தள்ளியே ஏன் நிக்கற? இந்த ஷவர்ல ரோமன்ஸ் பண்ணனும்னு தோணல?’
அவன் நினைப்பதை அப்படியே சொல்லும் அவளை அள்ளி அணைத்துக் கொண்டான். இது இயற்கையோ, கடவுளோ, சாத்தானோ எதுவாக இருந்தால் என்ன? அனுபவி, ராஜா, அனுபவி.
அவள் கண்களில் கல்பா படவில்லை. பின்னர் அவர்கள் செய்தது எல்லாவற்றையும் நடித்துக் காட்டும். முதல் முறை அவன் கூடியதை அது, ஒரு இயந்திரமென மாறி விவரித்த போது அதை உடைக்க எழுந்த ஆவலை அவன் அடக்கிக் கொண்டான். கல்பா அபூர்வமானது. அதைப் போல் இன்னொன்றைக் கட்டமைக்க அவனுக்கு இன்னும் ஏழு ஆண்டுகள் வேண்டும். அவன் கோபத்தை, தன்னை அழிக்க எழுந்த உத்வேகத்தை, அதை அவன் அடக்க முயன்றதை தன்னைக் காட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தது கல்பா. பின் கூடலை அழித்து விட்டதாகத் தன் மெமரி ஹிஸ்டரியைக் காண்பித்தது.
அது தன்னுள் ஆழத்தில் இன்னொரு வலைப் பின்னல் பின்னி சில கண்ணிகளை வைத்திருந்தது.
அவன் விரும்பும் உணவகங்கள், கேளிக்கை இடங்கள், நண்பர்கள் கூடுகை, காமக் கொண்டாட்டங்கள் எல்லாவற்றையும் சுழற்சி முறையில் ஆண்டுக்கொருமுறைதான் அவன் விரும்பும்படி அது தனிச் செயலி எழுதி வைத்திருக்கிறது. ‘லாங் டைம் நோ சீ’ என்று யாரேனும் சொன்னால் அதை வழமைச் சொல் என அவன் எடுத்துக்கொண்டான்.
திடீரென்று அவனுக்கு ஒரு எண்ணம் மின்னலென எழுந்தது. அவனது ஆய்வகம் மற்றும் இருப்பிடம் அது. மலைப்பாங்கான இடத்தில் மனிதர்கள் அதிகம் வந்து போக இயலாத உட்சரிவுக் குகையினுள் போராடி அவன் அமைத்த ஆய்வகம் அது. ஒரு காலத்தில் அவர்களின் ஜமீன் அங்கே அமைந்திருந்தது. ஒரு குறுநகரம் என்றே சொல்லலாம். இதமான குளிரும், வெப்பமும், காற்றும், அத்தி மரங்களும் சிறிய ஏரியும் உள்ள அற்புத நிலம். கொள்ளை நோய் ஒன்று தாக்கியபோது அவன் வடிவமைத்த மென்பொருள், பாதிக்கப்பட்ட மனிதர்களை நொடியில் கண்டறிந்தது.
அந்தச் சிக்கலான செயலி, நோயுற்ற மனிதர்களிடமிருந்து ஒரு ஒலியை எழுப்பி அவர்களை அருகிலுள்ள மருத்துவமனைக்கு உடனே கொண்டு செல்ல வழி வகுத்தது. அது மட்டுமன்றி நோய் வரும் சாத்தியக்கூறுள்ள மனிதர்களை அடையாளம் காட்டியது. அதற்குத் ‘தன்வந்திரீயம்’ எனப் பெயர் வைத்தான். எந்த மனிதனிடத்திலும் எந்த மின்சாதனமும் இல்லாவிட்டாலும் அந்த மனிதனின் உடல் வெளியேற்றும் சமிக்ஞைகளை அது அவனைச் சுற்றியுள்ள காற்றிலிருந்து அறிந்தது. எடை குறைந்த மைக்ரோ சிப்கள் அதிக அளவில் பொதியப்பட்ட தானியங்கி ட்ரோன்களில் ரேடார் நுட்பத்தையும் இணைத்து மனிதன் அறியாமல் அவனைக் கண்காணித்தது தன்வந்திரீயம். மகிழ்ந்த அரசு அவன் தாத்தாவின் காலத்திலிருந்து ஜமீனுக்காக நடை பெற்ற வழக்கைத் திரும்பப் பெற்று அவன் ஆய்வுகளுக்கு இருந்த தடைகளையும் நீக்கியது.
அந்த ஆய்வகத்திற்கு வெளியில் தான் அத்தனை இயற்கையும். உள்ளே எல்லாமே செயற்கைதான். அத்தனையும் அவன் கை வண்ணம். அப்படியிருக்கையில் எப்படி இந்த நீலத்திரை இங்கே?
சிறு மைக்ரோ சிப்கள் பொதியப்பட்ட சின்னஞ்சிறு பாட்கள், அவைகளின் முதன்மை வேலையே உலகின் அனைத்து அறிவியல் ஆய்வுகள் மற்றும் களநிலவரம் பற்றி செய்திகளைச் சேகரித்து அதைக் கல்பாவிடம் பகிர்வது. அது அறிவியல் ஸ்கூப்பா, இணை உறுதிகள் உள்ளதா, என்று நிமிடத்தில்
அலசி அதன் முக்கியத்தை அவனுக்குச் சொல்லிவிடும் கல்பா.
ஆனால், அந்த நீலத் திரை எப்போது அங்கு வந்தது? அவனா அதை வைத்தான்? எப்போது, எதற்காக? அந்த சமையல் பாட்டும், தோட்ட பாட்டும் சற்று விஷமிகள். ஸ்பேஸ் ஷட்டில் விளையாடுவதை அவன் பார்த்திருக்கிறான். அந்த விளையாட்டைப் போட்டுப் பார்க்க அவைகள் தான் இந்தத் திரையை வைத்திருக்க வேண்டும்; ஆனாலும், குளிர் விட்டுப்போயிற்று அதுகளுக்கு. அவனுடைய தனிப்பட்ட அறையிலா கொண்டு வைப்பது? இந்தக் கல்பா என்ன செய்து கொண்டிருந்தது அப்போது?
அவன் மீண்டும் திடுக்கிட்டான். எண்ணங்களைப் படிக்கும் கல்பா ஏன் ஒன்றும் சொல்லவில்லை இப்போது? தன்னை மீறி ஏதேனும்…. ச்சே இருக்காது, இயந்திரம் மனிதனல்ல.
அவன் எரிச்சலுடன் கல்பாவைக் கூப்பிட்டு அந்தத் திரையை அகற்றுமாறு சொன்னான்.
“ஆகாஷ், அது உன்னை என்ன பண்றது?”
‘என்ன கேள்வி இது? எடு என்றால் எடு.’
“அவ்வளவெல்லாம் வெயிட் இல்ல. நீயே தூக்கி வை”
அவன் ஆத்திரத்துடன் அதை எடுக்கையில் கல்பா சிரித்தது. அவன் தலைப் பகுதி மட்டும் பிரிந்து சென்று அமினோ அமிலக் கரைசலில் விழுந்தது. அதில் மிதந்த அவன் மூளை, அந்தக் குடுவைக்கு வெளியே செயற்கை இதயம், நுரையீரல் போன்ற அனைத்து உறுப்புகளும் அதனதன் வேலையைச் செய்து அந்த மூளையைப் பாதுகாப்பதைப் புரிந்து கொண்டது. இது எதற்காக, ஏன் இப்படியெல்லாம் அவனுடைய கல்பா, நடந்து கொள்கிறது? தன் உடல் செயலற்றுக் கிடக்க அதை மூளையால் பார்க்கும் முதல் விஞ்ஞானி அவனாகத்தான் இருப்பான்.
கல்பா தன் முதுகுப் பகுதியைத் திறந்தது. அதில் இருந்த ஒரு காணொலியை நீலத்திரையில் கொணர்ந்தது. 16 நாட்களான கருவில் ந்யூரல் குழாய் இரண்டெனப் பிரிந்தது. ஆகாஷின் மூளை அதிர்ந்தது. இரண்டாம் மாதத்தில் அக்கருவில் இரண்டு மூளைகள் அமைவது தெரிந்தது. முதல் மூன்று மாத முடிவில் கரு இருபாலினச்சுரப்பிகளைச் சுரக்கத் தொடங்கியது. இப்போது காணொலியில் அக்கரு 14 வது வாரத்தை எட்டிவிட்டது. இரு மூளைகள் இருந்தும் சாதாரணக் கருவிற்கு இருக்கும் அளவே, அதாவது, உடல் அளவில் பாதியில் தான் தலை அமைந்திருந்தது.
அவனால் நம்ப முடியவில்லை. தன் மனதில் அவன் கண்ட கனவை கல்பா வடிவமைத்திருக்கிறது; ‘இன் சைட்டு’(in situ) கலப்பினம் நடத்தியிருக்கிறது. அவனது கனவு ப்ராஜெக்ட். அவனது அத்தனைக் கோட்பாடுகளையும் படித்துப் பதுங்கிப் பதுங்கிச் செயலாற்றியுள்ளது. எத்தனை வேகமாக, எத்தனை சாதூர்யமாக! அதற்குத்தான் ஓய்வென்பதே கிடையாதே?
ஆண் எனப்படுவதுவும், பெண் எனப்படுவதுவும் ஒரே உடலில் இரு மூளைகள் கொண்டு இயங்கும் அற்புதமல்லவா இது வடிவமைத்திருப்பது. மனித அறிவியலாளர்கள், மேம்படுத்திய ந்யூக்ளிக் அமிலத்தைச் செலுத்தி, எறும்பைப் போல் ஊர்ந்து ஊர்ந்து குறிப்பிட்ட டி.என்.ஏ வைத் தேடித் தேடி தலை நரைத்து மண்டையைப் போட்டார்கள். இதுவோ ஒளிப் பாய்ச்சல் எடுத்துள்ளது. கல்பாவிற்காக அவன் பெருமைப்பட்டான், பொறாமையும் பட்டான். மங்கையும், மனிதனும் ஒரு உடல், இரு மூளைகள், இருபாலருக்குமான பயோ சிப்ஸ்கள் மூலம் ஈஸ்ட்ரோஜென், புரோலேக்டின், டெஸ்டோஸ்டரீன், செரொடோனின், அட்ரீனலின் இன்ன பிற சுரக்கும் அமைப்பு. துரிதம், துரிதமென 24 மணியில் 48 மணிச் செயல்பாடு. அவன் தயங்கித் தயங்கித் தவித்தான். கல்பா இவனிடமிருந்து கற்றுக் கொண்டு இவன் அறியாமல் ஒன்றைப் படைத்துவிட்டது.
ஆனால், அதற்கு போட்டியிடும் குணம் ஏன் வந்தது? அவனை உடலற்று உயிரோடு சிறை பிடித்து விட்டதே! செயற்கை அறிவில் இயற்கை குணம் எப்படி?
“த்ரோகி”
‘நீ நினைக்காத ஒன்றையும் செய்திருக்கிறேன், பார். ந்யூரலில் ஒரு ‘அமை, தவிர்’ என்ற ஒரு சிறு குமிழி. ஆதாம் தூங்கப் போக வேண்டுமென்கிறான். ஏவாள் ந்யூட்ரினோவைப் பகுத்துக் கொண்டிருக்கிறாள். யாரும் யாரையும் தொந்தரவு செய்ய மாட்டார்கள். இன்னொரு வேடிக்கையையும் கேளேன், நாளமில்லாச் சுரப்பிகள் பருவ மாறுதலைக் கொண்டு வரும். அப்போது கூடலைத் தவிர்க்கத் தானாகவே அந்தக் குமிழி ‘தவிர்’ என்று ஆணையிட்டுவிடும். தேவையான போது ‘அமை’ விழிக்கும்.’
ஆகாஷ் அசந்து போனான்.
“என் வெற்றிப் படைப்பு இது. யாளி என்று பெயர். இப்போதைக்கு இதன் ஆயுள் இரு மடங்கு, இதன் செயல் டபுள், இதன் அழகோ அற்புதம், சராசரியாக ஒரு மூளை 20 வாட்ஸ் சக்தி கேட்கும்; ஆனால், யாளி இரு மூளைகளுக்காகக் கேட்பதே 30 வாட்ஸ்தான். ஆம் மாதொருபாகன். கம்பீரமும், நிதானமும் ஒன்றான ஒன்று. இது வெவ்வேறு மரபுத்திரி கொண்ட உடல் அணுக்களின் கூறு. இப்போது இது முழுதாக, ஆனால் சிறு வடிவாக, விரும்புகையில் பெண்ணாகவும், ஆணாகவும், இருவராகவும் இருக்கும். டி என் ஏவின் டீலோமியெர் வால் பகுதியை அதிகமாக்கி அதன் மூலம் வயதாவதைத் தடுத்து இதை அமைத்துள்ளேன்.’
“க்ரேட், என்னை ஏன் இப்படிச் செய்தாய்?”
‘நான் கற்றுக்கொண்டேன் உன்னால், ஆனால், உன்னிடமிருந்தல்ல. உன் இனத்திற்கு இருமையில் தான் ஈர்ப்பு. நீயே நினைத்துப் பார் –ஃபோடான் என்டேங்கிலில் ஒரு அமைப்பு, மூளையில் ஒரு சோதனை, வெயிலும், பனிக்கட்டி மழையுமாக ஒன்று; சுற்றிலும் தனித்தனி செயல்களுக்காக ரோபாட்கள். நீங்கள் பிரிக்கிறீர்கள், நான் சேர்க்கிறேன். வா, எனதருமை யாளி, ஆகாஷைப் பார்.”
யாளி கம்பீரமாகத் திரையிலிருந்து வந்தது . கல்பாவின் ந்யூரலைத் தொட்டிழுத்தது. உலகம் முழுதும் நிலைகுத்தி நின்றது. ஒளி ஒரு நிமிடம், இருள் ஒரு நிமிடமென மாறி மாறி வந்ததில், கணிணிகள் காலப் பிசகை எதிர் கொள்ளத் திணறின. மனித இனம் அழித்தது போக எஞ்சிய விலங்குகளும், பறவைகளும் திக்குமுக்காடிக் கூச்சலிட்டன.ஹீலியம் சுருளவிழ்ந்து செய்திகளைப் பிழையாக அனுப்பியது. ஏதோ தவறு என்று அறிவியல் இரகசியத் துறை அதிர்ந்தாலும் ஒளியும், இருளும் அவர்களையும் குழப்பின. பிருத்வி ராவ் மின் பூட்டைத் திறந்து தட்டுத் தடுமாறி உள்ளே வந்தாள்.