களிமண் தட்டில் எழுதப்பட்ட முதல் இதிகாச காவியம்)
(கில்காமேஷ்) (என்கிடு)
உலகக் காவியமான கில் காமேஷ் பற்றித் தெரிந்துகொள்ளுமுன் உலக வரலாற்றை விளக்கும் இந்த வீடியோவில் முதல் 15 மிமிடம் பாருங்கள். உங்களை உலுக்கிப் போட்டுவிடும்.
இன்றைய நாகரிக மனிதன் அவ்வப்பொழுது கேட்கும் ஒரு கேள்வி !
உலகத்தில் முதல் நாகரிகம் தோன்றிய இடம் எது?
தேசப்பற்றும் இனப்பற்றும் கொண்டவர் அனைவருக்கும் தங்கள் நாடு- தங்கள் மொழி – தங்கள் கலாசாரம் – தங்கள் நாகரிகம்தான் முதலில் தோன்றியிருக்கும் என்ற எண்ணம் இருக்கும். அப்படியிருந்தால் நன்றாக இருக்குமே என்ற என்ற விருப்பத்தில் விளையும் எண்ணம் . அதில் தவறில்லை.
இந்தியாவில் இருக்கும் நம் அனைவருக்கும் வேத காலம்தான் ஆதியில் தோன்றிய காலம் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு.
தமிழகத்தில் பிறந்த நமக்கு ‘கல் தோன்றி மண் தோன்றா காலத்து முன் தோன்றிய மூத்த குடி’ என்ற எண்ணமும் ஆழமாகப் பதிந்திருக்கிறது.
ஆனால் வரலாற்று ஆசிரியன் உண்மையான ஆராய்ச்சியின் அடிப்படையில்தான் செல்லவேண்டும்- சொல்லவேண்டும்.
கோர்டன் சைல்ட் (Gordon Childe) என்னும் இங்கிலாந்து நாட்டு வரலாற்று ஆசிரியர் பத்து அளவுகோல்களை முடிவு செய்தார். இவற்றின் அடிப்படையில்தான் நாகரிகங்களை அளக்கவும், ஒப்பிடவும் வேண்டும் என்று கூறினார்.
அவர் குறிப்பிடும் அம்சங்கள்:
1)நகரக் குடியிருப்புகள்
2)தேர்ந்தெடுத்த சில தொழில்களில் தொழிலாளர்கள் வித்தகர்கள் ஆதல்
3)தேவைக்கு அதிகமான உற்பத்தி
4)வரையறுக்கப்பட்ட சமுதாயப் பிரிவுகள்
5)அரசாங்க அமைப்பு
6)பொதுமக்கள் பயன்படுத்துவதற்கான பெரிய கட்டடங்கள்
7)தொலைதூர வாணிபம்
8)கலைப் பொருட்கள்
9)எழுத்துக்கள், இலக்கியம்
10)கணிதம், வடிவியல் (Geometry) வானியல் ஆகிய துறைகளில் தேர்ச்சி.
(நன்றி: விக்கிபீடியா – https://ta.wikipedia.org/wiki/)
உலகின் நாகரிகங்கள் நதிக் கரைகளில்தான் தோன்றின.
யூப்ரட்டீஸ், டைக்ரிஸ் என்ற இரண்டு பெரு நதிகளுக்கு நடுவே அமைந்துள்ள இன்றைய ஈராக்கின் பெரும்பகுதி அன்று சுமேரியா, மெசபடோமியா, பாபிலோனியா என்றெல்லாம் அறியப்பட்ட நாகரிகங்கள்.
இந்தியாவின் சிந்து நதிப் படுகைகளில் தோன்றியது சிந்து சமவெளி நாகரிகம் மொகஞ்சாதரோ , ஹாரப்பா போன்ற இடங்களில் நடந்த அகழ்வு ஆராய்ச்சிகள் இந்த நாகரிகத்தைப் பறை சாற்றுகின்றன.
எகிப்தின் நைல் நதியில் படர்ந்த நாகரிகமும் பழமையான நாகரிகங்களில் ஒன்று.
தமிழ் கூறும் நல்லுலகம் குமரிக்கண்டம் , லெமூரியா என்ற ஆஸ்திரேலியா முதல் இந்தியாவரை இருந்து பின்னர் அழிந்த மாபெரும் நிலப்பரப்பு பற்றி பேசுகிறது.
இன்கான், மாயன் ,கிரேக்க, ரோம சீன நாகரிகங்கள் போன்று எத்தனையோ நாகரிகங்கள் உலகில் தோன்றியிருக்கின்றன.
ஆனால் நாகரிக வளர்ச்சின் முதல் பங்கு மற்ற நாகரிகத்தை அழிப்பதுதான் போலும். இந்த ஆதிக்க எண்ணம் பழைய நாகரிகத்தை அழித்துப் புது நாகரிகத்தை உருவாக்குகிறது. கற்காலம் முதல் இன்றுவரை இது தொடர்ந்து வருகிறது.
இன்றைக்குக் கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் ‘நாகரிகத்தின் தொட்டில்’ ( Cradle of Civilisation) என்று வரலாற்று ஆசிரியர்கள் கருதுவது யூப்ரட்டீஸ், டைக்ரிஸ் என்ற இரண்டு பெரு நதிகளுக்கு நடுவே அமைந்த மெசபடோமியா நாகரிகத்தைத்தான்!
இங்குதான் உலகின் முதன்முதலில் நாகரிகம் தோன்றியற்கான வரலாற்றுச் சான்றுகள் உள்ளன.
சுமேரியா நாகரிகம் என்பதே அதன் பெயர். சுமேரியா என்ற மொழி பேசிய சுமேரியர்களே நாகரிகத்தின் முன்னோடிகள் என்று அழைக்கப்படுகின்றனர். .
தென் மெசபடோமியாவே சுமேரியா என்று கருதப்படுகிறது.
இந்த நாகரிகம் கிமு 4000 ஆண்டு முதல் கிமு 3000 ஆண்டு வரை எழுச்சியுடன் காணப்பட்டதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றார்கள்.
செப்புக் காலம் மற்றும் ஆரம்ப வெண்கல காலத்தில் சுமேரியா இருந்தது.
இங்கு வேளாண்மையும், பாசனமும் சிறந்து விளங்கின.
யூப்பிரட்டீஸ், டைகிரிசு என்னும் இரு ஆறுகளையும் நீர்பாசனத்திற்காக பயன்படுத்தினர்.
முதன் முதலில் கருத்து வடிவான எழுத்து முறையை உலகுக்கு அளித்த பெருமை சுமேரியர்களைச் சாரும். சுமேரியர்கள் நூல் நிலையங்களையும் உருவாக்கினர்.
சுழலும் சக்கரத்தைக் கண்டறிந்தனர்
காலத்தை 60 நொடிகளாகப் பிரித்ததும் சுமேரியர்களே.
இப்படிப்பட்ட சுமேரிய நாகரிகத்தின் பழமையான இதிகாசங்களில் கில்காமேஷ் (GILGAMESH) என்ற அரசனைப் பற்றிய கதைகள் மிகவும் பிரசித்தி பெற்றது. அவன் பாதி மனிதன் பாதி இறைவன். ! மெசபடாமியா நாட்டைக் காக்க வந்த தலைவன் ! இறப்பில்லாத தன்மை கிட்டவேண்டும் என்பதற்காகப் போராடியவன்.
( நம் அசுரர்கள் அனைவரும் இதைத்தானே விரும்பித் தவம் செய்தார்கள். சுமேரியாவிற்கு முன் அஸ்சிரியா என்ற ஒரு பிரதேசம் இருந்தது வடக்கு மெசபடாமியாவில். அங்கே அசுர் என்ற ஊரும் இருந்தது. அங்கேயிருந்த வந்தவர்கள்தான் நம் இதிகாசங்களில் வரும் அசுரர்களா புரியாத புதிர் .
மேலும் சுமேரியாவிவில் ‘ஊர்’ என்ற பெயரில் ஒரு நகரம் இருந்தது. ஊர் என்பது தமிழ்ப் பெயர் அல்லவா ? அது எப்படி அங்கே? புரியாதபுதிர்) )
கில்காமேஷ் புராணம்
கில்காமேஷ் (சுமேரியா கி.மு 3000)
கில்காமேஷ் உலகத்திலே எழுதப்பட்ட புராதன கதைகளில் மிகவும் பழமை வாய்ந்தது.இது வரைக்கும் கண்டுபடிக்கப்பட்ட அகழ்வுகளின் படி இது தான் மிகவும் பழமையான எழுத்து வடிவிலுள்ள கதை.
சுமேரியாவிலுள்ள உருக் தேசத்தை ஆட்சி செய்த அரசன் கில்காமேஷ் பற்றியும், அவன் நாட்களில் நடந்த வெள்ளப்பெருக்கைப்பற்றியும் கவிதை வடிவில் எழுதப்பட்டுள்ளது.
(உண்மையில் இப்படி ஒரு அரசன் இருந்ததற்கான எந்த ஆதாரங்களும் இல்லாவிட்டாலும், இவனையும் சுமேரிய அரசர்கள் வரிசையில் சேர்த்திருக்கிறார்கள்.)
கில்காமேஷின் கதை 12 களி மண்தகடுகளில் எழுதப்பட்டிருக்கின்றது. எழுதப்பட்ட மொழி அக்காடியா. உருக் எனும் வார்த்தை தான் பிற்காலங்களில் ஈராக் என்று திரிபு பெற்றது.கில்காமேஷ் என்பவன் மூன்றில் இரு பங்கு கடவுள், ஒரு பங்கு மனிதன்.
நோவாவின் கதை ஜலப்பிரளயத்திற்கு பின்பு மக்கள் மத்தியில் பேச்சு வழக்கில் இருந்தது. அதுவே கில்காமேஷ் ஆக திரிபு பெற்று அக்காடிய மக்களின் ஆட்சியல் மொழியில் எழுதப்பட்டது. ஆனால் கில்காமேஷ் ஒரு சுமேரிய மன்னன்.
கில்காமேஷ் கவிதைகளில் மட்டுமல்ல உலகத்தின் சகலபுராதன மொழிகள் அனைத்திலும் உலகம் தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்ட கதைகள் உண்டு.
இதைத்தான் இந்தியாவில் பிரளயம் என்றும் சொல்கிறார்கள்.
தமிழில்கூட அப்படி கதை ஒன்று இருக்கின்றது. முதலாவது தமிழ்ச்சங்கம் மகா பிரளயத்தினால் குமரிக்கண்டத்தில் தண்ணீருக்குள் அமிழ்ந்ததென்றும், அதிலிருந்து தப்பிய மக்கள்கபாடபுரத்தைத் தலை நகராகக்கொண்டு இரண்டாவது தமிழ் சங்கத்தை தொடங்கினார்கள் என்றும், பின்பு குமரிக்கண்டத்தின் மற்றப்பகுதியும் மூழ்கையில், இளவரசன் திருமாறன் தமிழ் நாட்டிற்கு -தற்போது இருக்கும் மதுரைக்கு சில தமிழ் இலக்கியங்களை காப்பாற்றிக்கொண்டு, நீந்தி வந்தார் என்றும், தமிழில் உள்ள புராதான கதை சொல்கின்றது.
முதலில், கில்கேமேஷ் கொடூரமான ராட்சச குணம் கொண்ட அரசராக இருந்தான். உருக் மக்கள் தெய்வங்களின் வேண்டி போர்க்குணமிக்க கில்கேமேஷை சமாதானப்படுத்தச் சொன்னார்கள். தெய்வங்கள் மக்களது வேண்டுகோளை ஏற்று அவனைத் தோற்கடிக்க என்கிடு என்ற காட்டு மனிதனைப் படைத்தன. கில்காமேஷ் – என்கிடு இருவருகக்கும் இடையே சண்டை வெகுகாலம் நடந்தது. இருவரும் சமமான சக்தியைக் கொண்டிருப்பதை உணர்ந்தார்கள். அவர்கள் இருவரும் நண்பர்களாகி, பல புகழ்பெற்ற சாதனைகளை ஒன்றாகச் செய்தனர்.
ஒருமுறை அவர்கள் இருவரும் சிடார் நாட்டுக்குச் சென்றார்கள். அங்கே ஹுவாவா என்னும் கொடுமை வாய்ந்த ராட்சசகன் மக்களுக்கு நிறையத் தீங்குகள் செய்துவந்தான். கில்காமேஷும் என்கிடுவும் சேர்ந்து அந்த ராட்சதனைத் தோற்கடித்து அவன் தலையை வெட்டினர். இதனால் இந்நேன்னா என்ற தெய்வம் அவர்களிடம் கோபமடைந்து, ஒரு அற்புதமான காளையை உருக்கிற்கு அனுப்பின. கில்கேமேஷ், என்கிடுவுடன் சேர்ந்து, காளையையும் கொன்றுவிட்டார்கள். இது கடவுள்களை மேலும் கோபப்படுத்தியது. கில்காமேஷுவைப் பழிவாங்க அவன் உயிருக்கு உயிராய் நேசித்த நண்பன் என்கிடுவை அந்தத தெய்வங்கள் கொன்றனர்.
கில்காமேஷ் மனம் துடிதுடித்தது. இறப்பே இல்லாத வாழ்க்கையைக் கண்டுபிடிக்கவேண்டும் என்று அவனுக்குத் தோன்றியது. நாடு நகரத்தை விட்டு வாழ்வில் சாவு இல்லாத நித்தியத்தைப் பெற மிக நீண்ட பயணம் மேற்கொண்டான்.
பயணத்தின் முடிவில் உட்னாபிஷ்டிம் என்ற மகானைச் சந்திக்கிறான். அவர் இறப்பிலிருந்து தப்பியவர். மகா பிரளயத்தின்போது கடவுளர் அருளால் எப்படித் தப்பினார் என்பதை கில்காமேஷுக்கு விளக்கினார். நித்தியத்துவத்தைப் பெற இனி யாராலும் முடியாது என்ற தத்துவத்தையும் கில்காமேஷுக்கு எடுத்துரைத்தார்.
கில்காமேஷ் மனம் உடைந்துபோனான். உட்னாபிஷ்ட் அவர்களிடம் தான் உருக் மக்களுக்காகச் சேவைகளைப் பற்றியும் தான் கட்டிய நீண்ட சுவரைப் பற்றியும் விவரித்தான் .
உட்னாபிஷ்ட் மனம் இறங்கி கில்காமேஷுக்கு இறவாவரம் தரக் கூடிய அதிசயப் புற்களை கொடுத்தார்.
கில்காமேஷ் மிக மகிழ்ச்சியுடன் நாடு திரும்பினான். வழியில் ஒரு குளத்தில் குளிக்கும்போது அந்தப் புற்களை ஒரு வயதான பாம்பு தின்று இளமையான பாம்பாக மாறிவிடுகிறது.
விரக்தியின் எல்லைக்கே போகிறான் கில்காமேஷ்.
சோகத்துடன் வரும் கில்காமேஷ் உருக் தேசத்து மக்கள் தனக்கு அளிக்கும் மரியாதையைக் கண்டு மன மகிழ்ச்சி கொள்கிறான். இனி மக்களுக்காக உழைக்கவேண்டும் என்று தீர்மானிக்கிறான்.
கொடுங்கோலனாக போர் வெறியனாக முதலில் இருந்த கில்காமேஷ் இப்போது மக்களின் நலன் காக்கும் அரசனாக மாறிவிட்டான்.
தன் 126 வது வயதில் இறந்து போகிறான் கில்காமேஷ்.
அதன் பின் உருக் தேசத்து மக்கள் அவனைத் தெய்வமாக போற்றுகின்றனர்.
இது கில்காமேஷ் காவியத்தின் கதைச்சுருக்கம்.
இதன் இதிகாச வடிவையும் அதன் பெருமைகளையும் அடுத்தடுத்துப் பார்ப்போம்.
(தொடரும்)