அவனுக்கு ஒரே ஆச்சர்யம். கொஞ்சம் நிம்மதியும் கூட. வாடகைக்கு ஒரு வீடு பார்த்து அது மனைவிக்கு பிடித்துப்போய் அங்கு குடி போவதும் நாடு விட்டு நாடு புலம் பெயர்ந்து போவதும் அவனைப் பொறுத்த வரை ஒன்றுதான். எவ்வளவு அலைச்சல். வீடு நல்லாயிருந்தா ரோடு சந்து மாதிரி இருக்கிறது. வேண்டாம். எல்லாம் சரியாயிருந்தா வாடகை ரொம்ப அதிகம், வேண்டாமே என்பாள்.
என்னமோ அவளுக்கு இந்த வீடு மிகவும் பிடித்து போனது. கேட்டை திறந்து முன்னாடி உள்ள வீட்டின் பக்கவாட்டின் வழியே பின்பக்கம் சென்றால் அதுதான் அவர்கள் பார்த்திருக்கும் வீடு. சின்ன சின்னதாய் இரண்டு படுக்கை அறைகள். ஹாலும் சின்னதே. சமயலறை ரொம்ப சுமார். வாசலில் குட்டி வராண்டா. “500, 1000 மேல போனாலும் பரவாயில்லை. இந்த வீட்டை பேசி முடிச்சுடுங்க” என்று சொல்லிவிட்டாள். என்ன காரணமென்று தெரியாமலேயே அவனும் வீட்டு உரிமையாளரிடம் பேசி சம்மதம் பெற்று அந்த வீட்டிற்கு குடித்தனம் வந்து ஒரு வாரம் ஆயிற்று.
அவனது வாழ்க்கை அவனது கடைதான். மாம்பலத்தில் சின்ன துணிக்கடை. புடவை ரவிக்கை மற்றும் டெய்லர்களுடைய தேவைக்கான அத்தியாவசிய பொருள்கள். (துணிக்கடை வைத்திருந்ததால் எழுத்தாளர்களில் சுந்தர ராமசாமியை அவனுக்கு ரொம்ப பிடிக்கும்)
போதுமான வருமானம். காலையில் 9 மணிக்கு கடையை திறந்தால் மூடுவதற்கு இரவு 10 மணி ஆயிடும். வீட்டிற்கு வந்து சாப்பிட்டு சிறிது நேரம் டி வி பார்த்து படுக்க எப்படியும் 12 மணி ஆகிறது. எதாவது ஒரு நாள் கடைக்கு சீக்கிரமாக 8 மணிக்கு சென்றால் காத்திருந்தார்போல சாலையில் குப்பை பெருக்குபவள் ‘சார் டீ குடிக்க எதாவது காசு’ கேட்பாள். அவனும் அவள் பேரை ( சரஸ்வதிங்க, சரசுன்னு கூப்பிடுவாங்க ஒரு பையன் சார், கண்ணாலம் கட்டிகிட்டு தனியா போய்ட்டான். நானும் அம்மாவும்தாங்க. அவ சீக்காளிங்க. ) கேட்டுவிட்டு 20 ரூபாய் கொடுப்பான். ஒரு வெளுத்த நீல புடவை, வெள்ளை ரவிக்கை, ஒரு கையில் நீண்ட கொம்பு. அதன் முனையில் குப்பை கூட்ட கணிசமான அகலத்தில் பிளாஸ்டிக் பிரஷ்.அந்த கோலத்தில் அவளை பார்த்தால் பாவம், எவ்வளவு வேணா உதவி செய்யலாம் என தோணும்.
இது வாரா வாரம் தொடர்ந்தது. அவனிடம் பணம் கேட்பதனாலோ என்னமோ அவன் கடை வாசல் எப்போதும் சுத்தமாக இருக்கும். பக்கத்து கடை அடகு கடை. பழக்கத்தில் நண்பராகி விட்டார்.
அடகு வைப்பவர்கள் முக்கால்வாசி பேர் அனாவசிய செலவுப் பண்ணத்தான் பணம் கேட்டு அவரிடம் வருகிறார்களாம் இவனிடம் வந்து வருத்தப்படுவார். அந்த வருத்தம் உண்மையானதா என இன்று வரை அவனுக்கு சந்தேகம்தான்.
ஒரு நாள் அவன் மனைவியின் தங்கை முதன்முதலாக அந்த வீட்டிற்கு வந்தாள். வந்தவள் ‘பிரமாதமான வீடு. உனக்கு பிடித்த மாதிரியே இருக்கே. கேட்லேருந்து உள்ளே வர எவ்ளோ தூரம்.’ என்று வியந்தாள். பகல் முழுவதும் இருந்துவிட்டு அவள் போன பிறகு அன்றுதான் முதன்முதலாக வாசலில் நின்று கொண்டு அவன் மெயின் கேட்டைப் பார்த்தான்.
இவனுடைய வீட்டிற்கும் வாசலுக்கும் 100 அடி தூர இடைவெளி. இடது பக்கம் பின்னாடி பெரிய வேப்ப மரம். கொஞ்சம் வெட்ட வெளி. அதை ஒட்டின வீடு. சொந்தக்காரருடையது.
வலது பக்கம் ஒரு தென்னை மரம். பக்கத்தில் வேப்ப மரம். அடுத்தாற்போல எலுமிச்சை மரமும் அதை சேர்ந்தார்போல் காம்பவுண்ட் வரை பவழமல்லி மரம். நடுவே எங்களுக்கென்று நடைபாதை.
ஆனால் அவன் கண்ணில் பட்டது பாதை முழுவதும் குவிந்திருக்கும் குப்பைதான். மனைவியை கூப்பிட்டு “யார் இந்த குப்பையெல்லாம் தினமும் அள்றா” என்று கேட்டான்.
“யார் வருவா, நான்தான் ரெண்டு வேளையும் பெருக்கி தள்றேன்”
“கஷ்டமாயில்லையா? ஆனா நீதானே இந்த வீட்டிற்காக பிடிவாதம் பிடிச்சே?”
“தெரியும், இப்படி சொல்வீங்கன்னு தெரியும். பரவால்ல, எங்க ஊர்ல எங்க வீட்ல இருக்கறா மாதிரி இருக்குங்க, என் தங்கையும் அதாங்க சொன்னா, வெய்யில் தெரியல பாருங்க”
அன்று மாலையில் அவள் பெருக்க ஆரம்பித்தபோது துடப்பத்தை வாங்கி அவன் பெருக்கினான். எலுமிச்சை மர குப்பைதான் அதிகம். அவ்வளவு தூரம் குனிந்து பெருக்கி முடிக்க முதுகு லேசாக வலித்தது.
மறு நாளே கடைக்கு சென்று சரசுவின் கையில் பார்த்தது போல நீண்ட குப்பை பெருக்கும் கொம்பை வாங்கி வீட்டில் வைத்ததோடு இல்லாமல் அவனே காலையில் ஐந்து மணிக்கு எழுந்து நடைபாதையை பெருக்க ஆரம்பித்தான். குனியாமல் பெருக்கினதால் முதுகு வலிக்கவில்லை.
அவன் மனைவிக்கு ரொம்ப சந்தோஷம். தங்கைக்கு ஃபோன் போட்டு அவன் செய்யற காரியத்தை சொல்லி மகிழ்கிறாள். அவனுக்கு அந்த கொம்பை கொண்டு குப்பையை கூட்டுற ஒவ்வொரு முறையும் டீ காசு கேட்கும் சரசுவின் ஞாபகம்தான் வருகிறது. இதை அவன் மனைவியிடமும் சொல்லி விட்டான்
“தோ பாருங்க முதல்ல டீ காசு கேட்பா. அப்புறம் புடவை கேட்பா நீங்க பாட்டுக்கு கடைலேருந்து ஒண்ணும் கொடுக்காதீங்க. வேணும்னா எம்புடவை ஒண்ணு பீரோலேருந்து குடுக்கறேன்” என்றாள். ஆனால் அப்படி ஒண்ணும் நடக்கவேயில்லை.
ஒரு வாரம் ஆயிற்று. அன்று மதியம் திடீரென்று சரசு வந்தாள். பதட்டமாக இருந்தாள். இரண்டு நாளாக சாப்பாடு தூக்கம் இல்லாத மாதிரி இருந்தாள்.
“சார் நல்லதா ஒரு புடவை சீக்கிரமா கொடுங்க 500, 600 ரூவா வரைக்கும் போகலாம் பரவால்ல “ என்றாள்.
மனைவி சொன்னது நினைவில் வர புடவைகளை எடுத்துப் போட்டான். அதில் ஒன்றை எடுத்து விலை லேபிளை பார்த்தாள் ₹660/- என்று போட்டிருந்தது. அவனே முந்திக்கொண்டு “600 ரூபா கொடு போறும்” என்றான்
பணத்தை கொடுத்து விட்டு புடவையை எடுத்துக் கொண்டு ஒரே ஓட்டமாக ஓடி விட்டாள்
அவள் போன சற்று நேரத்திற்கெல்லாம் பக்கத்து மார்வாடி உள்ளே வந்து
“பாவம் அந்த குப்பை கூட்றவ அவ அம்மா காலேல இறந்து விட்டாளாம் தாலிய அடகு வெச்சு 8000 ரூபா வாங்கிண்டு போறா” என்றார்
அவன் மேஜையின் மீது இருந்த புடவைகளப் பார்த்தவர் “ஓ புடவை வாங்கிண்டு போணாளா. அவ அம்மா மேல போடறத்துக்காக இருக்கும்” என்றார்
சற்று நேரம் அவனுக்கு பேச்சே வரவில்லை. அன்று காலையில் வீட்டைப் பெருக்கும்போது குப்பையின் நடுவே ஒரு எலுமிச்சைப்பழத்தை பார்த்தது நினைவுக்கு வந்தது. குப்பை அகற்றும் சரசு வாங்கின புடவை நிறமும் எலுமிச்சை மஞ்சள்தான். மாலை வெய்யிலில் கடைக்கு வெளியே நின்று அவள் போன தெருவின் கடைசி முனையைப் பார்த்துக் கொண்டே இருந்தான்.