கம்ப ராமாயணத்தில் இரு பாடல்களா?
ராம என்ற இரு எழுத்தை ஒதுவதால் ஏற்படும் பலனைக் கூறும் பாடலும் அனுமனின் சிறப்பைக் கூறும் பாடலும் இவை இரண்டும் போதுமே நம் ஜென்பம் சாபல்யமடைய !
ஜெய் ஸ்ரீ ராம் !
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராம என்ற இரண்டெழுத்தினால். –(பால. காப்பு 13)
பொருள்:
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே (எல்லா வித நன்மைகளையும், செல்வங்களையும் தந்தருளுமே)
திண்மையும் பாவமும் சிதைந்து தேயுமே (தீய செயல்களும், பாவங்களும் சிதைந்துத் தேய்ந்து ஒன்றும் இல்லாமல் போகுமே)
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே (இனி எடுக்க ஜென்மங்களும், அந்தந்த ஜென்மங்கள் எடுத்ததினால் வரவிருக்கும் மரணங்களும் என இவையிரண்டும் இல்லாமல் போய்விடுமே)
இம்மையே இராம என்று இரண்டு எழுத்தினால் (“ராமா” என்னும் இரண்டு எழுத்தினைப் பாராயணம் செய்வதினால் இவை எல்லாம் உடனே இப்போதே இந்தப் பிறவியிலேயே நடக்கும்)
அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு, அயலான் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான்
(பால காப்பு -2)
இதன் பொருள்:-
அஞ்சிலே ஒன்று பெற்றான் – ஐந்து பூதங்களில் ஒன்றான வாயு பகவான் பெற்ற மைந்தனான அனுமன்
அஞ்சிலே ஒன்றைத் தாவி – ஐந்து பூதங்களில் ஒன்றான நீர்ப்பரப்பான கடலைத் தாண்டி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆரியர்க்காக ஏகி – ஐந்து பூதங்களில் ஒன்றான ஆகாயத்தை வழியாகக் கொண்டு ஶ்ரீராமனுக்காக சென்று
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலாரூரில் –ஐந்து பூதங்களில் ஒன்றான பூமி பெற்றெடுத்த சீதாபிராட்டியை இலங்கையில் கண்டு
அஞ்சிலே ஒன்றை வைத்தான் – அங்கு ஐந்து பூதங்களில் ஒன்றான தீயை வைத்தான்
அவன் எம்மை அளித்துக் காப்பான் – அவன் எம்மை அனைத்து நலன்களும் அளித்துக் காப்பான்