
முன்கதைச் சுருக்கம்:
பூம்புகார் வணிகன் மகள் பத்திரை, கொலைத் தண்டனை விதிக்கப்பட்ட காளன் என்ற கொடிய கள்வன் மேல் காதல் கொண்டாள்.
தந்தையின் செல்வாக்கால் அவனை விடுதலை பெறச் செய்து மணந்தாள்.
மண வாழ்க்கை மகிழ்ச்சியாகத் தொடங்கியது .
விதியும் பின் தொடர்ந்தது
மணமக்கள் சோலைக்குச் செல்லுதல்
கடிமணம் முடிந்த பின்னர்க்
காணவே வந்தோர் வாழ்த்தி
விடைபெற, ஓய்வெ டுக்க
விரும்பியே கணவ னோடு
மடமயில் பத்தி ரையாள்
மலர்விரி சோலை புக்காள்.
கடமையும் முடிந்த தென்று
கருதினான் அன்புத் தந்தை
மலர்ப்படுக்கை கண்டு வியத்தல்
தேனைப் பொழியும் நறுமலர்கள்
தென்றல் வீசத் தாமுதிர்ந்து
வானின் மீன்கள் கீழிறங்கி
வயங்கும் அழகோ எனவிளங்கத்
தானும் அவனும் உறங்குதற்குத்
தரையில் வண்ண மலர்ப்படுக்கை
ஏனோ இயற்கை விரித்ததென
எண்ணி மங்கை மனம்வியக்கும்!
சோலைக் காட்சிகள் கண்டு இல்லம் சேர்தல்
மலரினை வண்டு மருவுதல் கண்டும்,
மடநடை அனமொடு சேவல்
உலவிடக் கண்டும், உயர்கிளை மேலே
உலகினை மறந்திரு கிளிகள்
குலவிடக் கண்டும், வரியுடல் அணில்கள்
கொஞ்சியே குதித்திடக் கண்டும்,
நிலவெனும் முகத்தாள் நெஞ்சினில் இன்பம்
நிறைந்திட மனைதனைச் சேர்ந்தாள்.
விதியின் நாடகம்
இல்லற வாழ்வில் இன்பமே கண்டார்
இருவரும் ஒருவராய் வாழ்ந்தார்
அல்லொடு பகலும் அன்பினில் மூழ்கி
அன்றிலின் இணையெனத் திகழ்ந்தார்.
கல்லெனும் நெஞ்சக் காளனும் காதல்
களிப்பினில் தன்னிலை விட்டு
நல்லவ னாக மாறிட, விதியின்
நாடகம் தொடங்கிய தம்மா!
பாலென ஒளியைப் பாரினில் நிலவு
பாங்குடன் பொழிந்தவோர் இரவில்
சேலெனும் விழியாள் நாயக னுடனே
சென்றனள் மேனிலை மாடம்
கோலமார் எழிலில் மனங்களில் மையல்
கொழித்திடத் தென்றலும் தழுவச்
சாலவும் தம்மை மறந்தவர் இடையே
சட்டென விளைந்ததே ஊடல்
கள்ளும் கள்ளமும்
கள்ளினை விரும்பி மாந்திக்
காளனும் நிலைம றந்தான்.
கள்ளமும், சூதும், உள்ளக்
கதவுகள் திறந்து கொண்டு
துள்ளியே வெளியே பாயச்
சொல்லிய தீய சொற்கள்
அள்ளியே வீழும் தீயின்
அருவியாய் ஆன தந்தோ
காளனின் கடுஞ்சொல்
“காளையாம் என்னைக் காதலித் திடவே
கருவிழி மங்கையர் பலரும்
நீளமாய் வந்து வரிசையில் நிற்க,
நீயதில் முந்தியே நின்றாய்.
ஆளையும், உருவ அழகையும் விரும்பி
அடைந்திட நாணமும் விடுத்தாய்”,
தேளெனக் கொட்டிய கொடுஞ்சொலைக் கேட்டுத்
திகைத்தவள் மறுமொழி இறுத்தாள்.
பத்திரையின் உறுத்தும் விடை
“நாடியே பொருளைத் திருடிடும் திறமை
நாயக, என்னிடம் காட்டி,
வாடிய பெண்ணின் உளத்தினைக் கவர்ந்தாய்
மறக்கிலை உன்தொழில் இன்னும்”-
ஊடலில் மங்கை உளறிய சொற்கள்
உறுத்தவே கறுவினான் சினத்தால்.
ஆடவன் அவனும் ஆத்திரம் அடைந்தும்
அவளறி யாவணம் மறைத்தான்
(தொடரும்)
சொற் ஜாலங்கள் நன்றாகவே உள்ளது.
LikeLike
அருமை அண்ணா!
…நாடிய பொருளைத் திருடிடும் திறமை நாயக என்னிடம் காட்டி…
அவன்தான் திருடன் என்றிருந்தேன் அவனை நானே திருடிவிட்டேன்
எனும் கண்ணதாசன் வரிகளை நினைவூட்டுகிறது!
LikeLike
மிக அருமை வாழ்த்துக்கள்
LikeLike
அருமையான வார்த்தைகள்!! வர்ணிப்புகள்!! அழகிய சொல்லழுகு!!! பிரமாதம்,!!!
LikeLike