விச்சா ஆபிசிலிருந்து கிளம்பி இடது பக்கம் வண்டியைத் திருப்பினான். அந்த சாலையின் கோடியில் உள்ள டிரைவ் இன்னுக்கு பப்லுவும் நானாவும் வருகிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள். மாரிஸ் அருகே இருந்த பஸ் ஸ்டாப்பைக் கடக்கும் போது அவன் சுவலட்சுமி அங்கே நின்று கொண்டிருப்பதைப் பார்த்தான். அதே சமயம் அவளும் அவனைப் பார்த்தது தெரிந்தது. அவன் சற்றுத் தள்ளி வண்டியை நிறுத்தி விட்டு அவளருகே வந்தான். “நீ கரைக்டா ஆபிஸ் விட்ட உடனே வந்தா பஸ் கிடைக்கும். பத்து நிமிஷம் லேட்டானாலும் போச்சு. ஒண்ணு நடந்து வீட்டுக்குப் போகணும். இல்லாட்டா அம்பது அறுபது ரூபா ஆட்டோக்கு அழுதே தீரணும்” என்று சிரித்தான்.
பிறகு சற்றுத் தள்ளி இருந்த ஆட்டோ ஸ்டாண்டிலிருந்து ஆட்டோ கொண்டு வந்தான். அவனுக்கு நன்றி தெரிவித்து விட்டு சுவலட்சுமி சென்றாள்.
சுவலட்சுமி அவன் அலுவலகத்தில் சேர்ந்து ஒரு மாதம்தான் ஆகியிருந்தது. அவளை அவனுக்குக் கீழே பணியாற்றும்படி ஆபீசில் சொல்லியிருந்தார்கள். அவனுக்குப் பகல் பூராவும் வெளி வேலை. சேர்மனுக்காக அப்படி ஒரு அலைச்சல் வேலை. அதனால் அவனது அக்கவுண்ட்ஸ் வேலைக்கு அவன் மாலையில் லேட்டாக உட்கார வேண்டியிருந்தது. ஞாயிற்றுக் கிழமை வந்து பெண்டிங் ஒர்க்கைப் பார்க்க வேண்டும். இந்த சமயத்தில் சுவலட்சுமி வேலைக்கு வந்ததால், ஆபீசுக்குள் அவன் செய்ய வேண்டிய வேலைகளை சுவலட்சுமியிடம் தள்ளி விட்டான். இப்போதெல்லாம் அவன் பாஸ் யக்யநாராயணன் – சேர்மனை நினைத்துக் கொண்டே – அவனிடம் பவ்யமாக ‘இந்த வாரம் அந்த வேலை முடிஞ்சிடுமா?’ ‘பி.எஃப் ஆபீஸ்ல ஏன் போன வருஷ ஸ்டேட்மென்ட் கொடுக்கலேன்னு நாலைஞ்சு தடவை போன் பண்ணிட்டாம்பா. நீ அவனைக் கொஞ்சம் கவனிக்கிறாயா?’ என்கிற கேள்விகளையெல்லாம் தவிர்த்து விட்டார்.
மறுநாள் லஞ்ச் டயத்தில் அவள் அவனைப் பார்த்ததும் புன்னகை செய்தாள் இருவரும் எதிரெதிரே உட்கார்ந்து கொண்டார்கள்
சுவலட்சுமி அவனிடம் “நேத்துலேந்து எனக்கு ஒரு சந்தேகம்” என்றாள்.
“என்ன?”
“நீங்க ஸ்கூட்டர வச்சிட்டு எதுக்கு எனக்கு ஆட்டோ தேடினீங்க? ஒரு லிப்ட் குடுக்கணும்னு தோணல பாருங்க உங்களுக்கு” என்று சிரித்தாள்.
“வம்பை விலைக்கு வாங்க வேணாமேன்னுதான்.”
“என்னது?”
“நான் அது மாதிரி கேட்டு இவன் பெரிய ஜொள்ளு பார்ட்டியோன்னு நீ தப்பா நினைக்க எதுக்கு எடம் குடுக்கணும்னுதான்.”
“என்னைப் பாத்தா ஜொள்ளு பார்ட்டிக்கும் ஜென்டில்மேனுக்கும் வித்தியாசம் தெரியாதவ மாதிரியா இருக்கேன்?”
வீழ்த்தி விட்டாள். கெட்டிக்காரி.
“வாபஸ் வாங்கிக்கிறேன்” என்றான் விச்சா. “நான் இனிமே ஆபீஸ் விடற நேரத்துல வெளியே எங்கேயும் போகலேன்னா உனக்கு லிப்ட் தரேன்.”
அப்படித்தான் அவர்களுக்குள் நெருங்கிய தோழமை ஏற்பட்டது. விச்சா அவளைத் தன் மற்ற இரு நெருங்கிய நண்பர்களான பப்லுவுக்கும் நானாவுக்கும் அறிமுகப்படுத்தினான். பப்லுவுக்கு மவுண்ட்ரோடில் ஆபீஸ். அவன் சேல்ஸில் இருக்கிறேன் பேர்வழி என்று பாதி நேரம் அலுவலகத்தில் இருக்க மாட்டான். தி.நகரில் இருக்கும் ஒரு நாடக சபாவில் முக்கிய மெம்பராக இருந்தான். மவுண்ட்ரோடுகாரனிடம் சம்பளம் வாங்கிக் கொண்டு தி நகரில் உழைத்தபடி ஒரு நாள் பிரபல நாடக டைரக்டராக வருவேன் என்று எல்லோரையும் அச்சுறுத்திக் கொண்டிருந்தான்.
நானா வேலைக்குப் போகவில்லை. அவன் தகப்பனார் மாயவரத்தில் நிலபுலன்களோடு இருந்தார். அவர் வேலை எதற்கும் போகாமல் அழித்த சொத்து போக நானா அழிப்பதற்கு வேண்டிய சொத்தும் அவன் குடும்பத்தில் இருந்தது. அவன் மாம்பலத்தில் தனியாக அறை எடுத்துக் கொண்டு ஓவியம் மற்றும் சிற்பக் கலை விமரிசகனாகப் போகிறேன் என்று சோழமண்டலம் ஓவியர் ஒருவரோடு அலைந்து திரிவான். இந்த வேலை, மாதத்தில் பத்துப் பனிரெண்டு நாள்கள் இருக்கும். அதற்கப்புறம் நடுவே ஊருக்குப் போய் விட்டு வருவான். மீதநாள்களில் விச்சாவுடனும் பப்லுவுடனும் அலைந்து திரிவதுதான் அவனது வேலையாக இருந்தது.
பப்லுவும் நானாவும் முதல் சந்திப்பிலேயே சுவலட்சுமியைப் பார்த்து மயங்கி விட்டார்கள். விச்சாவின் அலுவலகத்துக்கு அருகே இருந்த ஓட்டலில் சந்தித்தார்கள்.
அவள் பப்லுவிடம் “நான் உங்களை ஏற்கனவே பாத்திருக்கேன்” என்றாள்.
“என்னது?” என்று ஆச்சரியப்பட்டான் பப்லு.
“போன வாரம் ஞாயத்துக்கிழமை காலம்பற பத்து மணி வாக்கிலே டி நகர் நாரதகான சபா வாசல்லே நின்னுண்டு இருந்தேள் இல்லியா?” என்றாள் அவள்.
“ஓ, உங்களுக்கு நாடகத்துலே இன்ட்ரெஸ்ட் உண்டா?” என்று ஆவலுடன் கேட்டான் பப்லு.
“இல்லே. அப்போ என் பிரெண்டை பஸ் ஏத்தி விட அந்த ரோடு வழியாப் போனேன்” என்றாள் சுவலட்சுமி.
விச்சா பப்லுவை அனுதாபத்துடன் பார்த்தான்.
சுவலட்சுமி “என்னை நீங்கன்னுல்லாம் கூப்பிட வேணாம். டீ போட்டுக் கூடக் கூப்பிடலாம்” என்று இடைவெளியை அழித்தாள்.
“நாங்க வழக்கமா அப்படிதான்கூப்பிடறது கொஞ்சநாள்உன்கிட்டே ஜென்டில்மேனா காமிச்சுக்கலாம்னுதான்” என்று நானா சிரித்தான்
சுவலட்சுமி அவனிடம் “அதேமேரி நானும் டா போட்டுக் கூப்பிடுவேன்” என்றாள்.
“டேய் விச்சா! இவளை நம்பக் கூடாதுடா” என்றான் பப்லு
விச்சா முகத்தில் கேள்விக்குறியுடன் அவனை நோக்கினான்.
“நைசா பாஸையே வாடா போடான்னு கூப்பிடப் பாக்கறா!” என்றான் பப்லு.
விச்சா நானாவை அறிமுகப்படுத்திய போது “மாயவரமா உங்களுக்கு?” என்று கேட்டாள். “நான் பொறந்த ஊர் ஆக்கூர்” என்றாள் .
“ஆக்கூரா, அங்க என் சித்தப்பா பாங்க் மேனேஜரா இருக்கறப்போ நான் அடிக்கடி வருவேன்” என்றான் நானா. நானாவுக்குப் பத்து வயதாகும் போது அவன் சித்தப்பா ரிட்டையர் ஆகி விட்டார்.
“அது என்னோட பிறந்த ஊர்னுதான் பேர். நான் போய்ப் பாத்ததே இல்லே
எங்கப்பா திருச்சிலே செட்டில் ஆகி ரொம்ப வருஷம் ஆச்சு. நான் படிச்ச தெல்லாம் திருச்சிலேதான். ஹோலிக்ராஸ்” என்றாள்.
ஹோலி கிராஸ் காலேஜில் தன் ஒன்று விட்ட அக்கா லெக்சரராக இருப்பதை விச்சா சுவலட்சுமியிடம் சொல்லவில்லை.
அவர்கள் பேசிக் கொண்டே டிபன் சாப்பிட்டார்கள். முடிந்ததும் நண்பர்களை அங்கேயே இருக்கச் சொல்லி விட்டு விச்சா சுவலட்சுமியை அவள் வீட்டில் கொண்டு போய் விட்டு விட்டு வந்தான்.
விச்சாவிடம் “மகாலக்ஷ்மி மாதிரி இருக்கா” என்றான் பப்லு ஏதோ முந்திய மாலையில்தான் மகாலக்ஷ்மியைப் போய்ப் பாற்கடலில் பார்த்து விட்டு வந்த மாதிரி.
“யாரு?”என்று கேட்டான் விச்சா.
“சுமிதான்.”
“சுமியா?”
“ஆமா சுவலட்சுமிங்கறது ரொம்ப நீளமா இருக்கில்ல? என்றான் பப்லு.
“சூன்னு கூப்பிட்டா இன்னும் ஷார்ட்டா இருக்குமே?” என்றான் நானா.
விச்சா வாய் விட்டுச் சிரித்தான். பப்லு காயமுற்றவன் போல முகத்தை வைத்துக் கொண்டான்.
“சரி, சுமின்னே கூப்பிடலாம். ஸ்டைலாவும் இருக்கு” என்றான் விச்சா.
“மகாலட்சுமி மாதிரி இருக்காளா? அப்ப சரி, தினமும் வந்து பாத்து வேண்டிண்டு நமஸ்காரம் பண்ணிட்டுக் கிளம்பு” என்றான் நானா.
பப்லு விரோதமாக அவனைப் பார்த்தான்.
“தினமும் நீதான் அவளை வீட்டில் கொண்டு போய் விடறயா?” என்று நானா விச்சாவிடம் கேட்டான்
“ஆமா. ஆனா எனக்கு ஆபீஸ் விடற சமயத்தில வேற ஏதாவது வேலைன்னா அவ பஸ்லே போயிடுவா” என்றான் விச்சா.
“பாவம்” என்றான் நானா.
“எதுக்கு?” என்று கேட்டான் விச்சா.
“இந்த பஸ்க்கு வெயிட் பண்ணிண்டு ஏறி அப்புறம் பஸ்க்குள்ள இடிச்சிண்டு கசங்கிண்டு போகணுமே” என்றான் நானா.
“நீ பேசாம ஒரு கார் வாங்கிட்டேன்னா காலம்பறவும் சாயந்திரமும் நீயே அவளை அழைச்சுண்டு வந்துட்டு கொண்டு போய் விட்றலாமே” என்று சிரித்தான் பப்லு .
ஒரு நிமிஷம் பேசாமலிருந்து விட்டு “அது கூட நல்ல ஐடியாதான்” என்றான் நானா.
“என்னது, கார் வாங்கப் போறியா?” என்று அதிர்ச்சியுடன் விச்சா கேட்டான்.
“இல்லே. நீ என்னிக்கெல்லாம் அவளைக் கூட்டிண்டு போக முடியலையோ, அன்னிக்கி நான் உன்னோட ஸ்கூட்டரை எடுத்துண்டு போய் அவ வீட்டுலே விட்டுடறேன்” என்றான் நானா.
“அடேய் நானா, எங்க வீட்டுக்குப் பக்கத்திலே கொஞ்சம் கால் சரியில்லாம ஒரு பொண் டெய்லி பஸ்ல ஆபீசுக்குப் போய்ட்டு வந்திண்டு இருக்காடா. அவளுக்குக் கொஞ்சம் ஹெல்ப் பண்ணேன்” என்றான் பப்லு
“திமிருடா” என்று சிரித்தான் நானா.
அடுத்த சில மாதங்களுக்கு இந்த நால்வர் கூட்டணி செல்லாத இடமில்லை. “எனக்குக் கமலஹாசன் படம்னா உசிரு. முதல் நாள் முதல் ஷோ போகணும்” என்றாள் சுவலட்சுமி ஒருநாள்.
மறுநாள் தேவி பாரடைஸில் ‘வறுமையின் நிறம் சிவப்பு’ ரிலீஸ். விச்சா அவனது நண்பன் அலிடாலியா ராஜாராமனு க்குப் போன் பண்ணினான். தேவி பாரடைஸ் ஓனரின் அக்கா பையன் -அடிக்கடி வெளிநாடு போகிறவன் – ராஜாராமனின் நெருங்கிய நண்பன். மறுநாள் நான்கு பேரும் முதல் ஷோவில் சௌகரியமாக உட்கார்ந்து கொண்டு கமலஹாசன் வறுமையில் வாடுவதைப் பார்த்து ரசித்தார்கள்.
ஒரு தடவை பப்லுவின் செல்வாக்கில் பார்த்தசாரதி சபாவுக்குப் போனார்கள். கோமலின் பிரசித்திப் பெற்ற ‘தண்ணீர் தண்ணீர்’ நாடகம். இடைவேளையில் சுவலட்சுமி “செம ட்ராமா இல்லே?” என்றாள்.
விச்சா அவளிடம் “முந்தா நேத்தி சோழால எங்க பாஸ் ஒரு பார்ட்டி கொடுத்தார். அவர் மியூசிக் அகடெமிலே பிக் ஷாட் இல்லே. அவர் பிரெண்டு பிரெசிடென்ட் எலெக்ஷனுக்கு நிக்கறார்னு பார்ட்டி. அங்கே நான் அனந்துவைப் பாத்தேன். ஏதோ பேசிண்டு இருக்கறச்சே அவர் பாஸ் கே.பி. இந்த நாடகத்தை சினிமாவா எடுக்கறதுக்குக் கோமல் கிட்டே பேசிருக்கார்னு சொன்னார். இப்பவே சொல்றேன், நாடகத்தைப் போல அந்த சினிமாவும் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டுதான்” என்றான்.
அவர்கள் மாதந்தோறும் மாலையில் நடக்கும் இலக்கியச் சிந்தனைக் கூட்டங்களுக்குப் போனார்கள். கூட்டம் முடிந்த பின் வெளியே உள்ள புல்வெளியில் உட்கார்ந்து கொண்டு அன்றையக் கூட்டம் பற்றிக் கேலியாக, பாராட்டாக, கோபமாகப் பேசுவார்கள்.
“மொதல்லே இந்த குரூப்பிசம் ஒழியணும்டா நானா” என்பான் பப்லு. “இன்னிக்கிப் பாரேன், மூணு பேரா சேந்துக்கிட்டு பேச வந்தவனைப் பேசவே விடலே. ஒரே கூச்சல்.”
இன்னொரு நாள் “மனித நேயம், மனித குல சுதந்திரம்னு பேசி சாவடிச்சிட்டாங்க இன்னிக்கி. இங்க நின்னு நீ தோழரா பேசிகிட்டு இருக்கிறச்சே அவன் மாஸ்கோலேந்து ஆப்கானிஸ்தானை அடிச்சிப் புரட்டிப் போட்டுக்கிட்டு இருக்கான்” என்றான் நானா.
திடீரென்று நினைத்துக் கொண்டு பீச்சுக்குப் போவார்கள். “இன்னிக்கி ஹாலிடே தானே! நல்ல கலர்ஸ்லாம் வரும். வாங்கடா பீச்சுக்குப் போகலாம்” என்று விச்சா சொல்வான்.
“ஆமா. எனக்கும் மூணு மூஞ்சிகளையே பாத்துப் பாத்து ரொம்ப போரடிச்சிருச்சு. கண்ணுக்குக் குளிர்ச்சியா நல்லா நாலு இளம் சிங்கங்களைப் பாத்துட்டு வரலாம்” என்று சுவலட்சுமி எழுந்திருப்பாள்.
“இப்பிடியெல்லாம் எங்க ஊர்லே இருக்க முடியாது. மூணு பசங்களுடன் ஒரு பெண்ணான்னு அடுத்தாத்து மாமி எங்காத்து ஜன்னல் மேலே காதை வச்சிண்டிருப்பா. அவ ஆத்துக்காரர் கண்ணு எங்காத்து வாசல் மேலே இருக்கும்” என்று ஒரு நாள் சுவலட்சுமி சொன்னாள். “இதனாலதான் ஐ லவ் மெட்ராஸ்.”
இதைப் போலப் பேசிக் கொண்டும் ஏதாவது கொறித்துக் கொண்டும் போய் வந்து கொண்டும் மணி போவதே தெரியாது இருப்பார்கள். அவர்கள் கிளம்ப ஒன்பதுமணி, பத்து மணி ஆகி விட்டால், மூவரில் ஒருவர் அவளை வீட்டில் விட்டு விட்டுச் செல்லுவது வழக்கம்.
இந்த நட்பு ஆரம்பித்து ஒரு வருஷம் ஆகியிருக்கும். ஒரு சனிக்கிழமையன்று சுவலட்சுமி “எனக்கு மேரேஜ் நிச்சயமாயிருக்கு” என்று சொன்னாள். அப்போது அவள் கதைகளில் வரும், சினிமாவில் காண்பிக்கும் நாணத்தைத் தூக்கி எறிந்திருந்தாள். பிறகு கைப்பையில் இருந்து திருமணப் பத்திரிகைகளை எடுத்து அவர்களிடம் கொடுத்தாள்.
விச்சா “கங்கிராட்ஸ்” என்றான். பப்லு “ஒரு ஸ்வீட் கூடக் கொடுக்காம இப்படிச் சொன்னா எப்படி?” என்றான். “கிரேட்! நாளைக்கி சண்டே பாம்குரோவ்லே நீ லஞ்ச் கொடுக்கிறே” என்றான் நானா.
நானா அவளுக்குத் திருமணப் பரிசு என்று ஒரு சோனி வாக்மன்கொண்டுவந்தான். “என்னோட பிரெண்டும் அவங்க க்ரூப் ஆர்டிஸ்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து போய் ஜப்பானிலே எக்ஸிபிஷன் நடத்திட்டு வந்தாங்களாம். அவன் எனக்கு இதை வாங்கிட்டு வந்தான்” என்றான் பெருமையாக.
“நான்லாம் சாதாரணந்தாம்ப்பா. காஞ்சிபுரத்திலே சொல்லி ஒரு பட்டுப் புடவை வாங்கினேன்” என்று பப்லு ஒரு பையைப் பிரித்துக் காட்டினான். பூப்போட்ட லேசான சிவப்பு பார்டருடன் பளீர் மஞ்சளில் அழகாக இருந்தது அந்தப் புடவை.
விச்சா அதைப் பார்த்து விட்டு “சூப்பரா இருக்குடா. ஆனா இந்த டிசைனை எங்கியோ நான் பாத்திருக்கேனே !” என்றான். .
நானா “வறுமையின் நிறம் சிவப்பு!” என்றான். “சுவலட்சுமி இப்ப மகாலக்ஷ்மிலேந்து ஸ்ரீதேவியாயிட்டா.”
பப்லு சிநேகிதனின் வயிற்றில் குத்தினான்.
“அது சரி, நீ என்ன கொடுக்கப் போறே?” என்று பப்லு விச்சாவிடம் கேட்டான்.
“அவ கல்யாணத்துக்கு பதினஞ்சு நாள் லீவு கேட்டிருக்கா. கொடுத்துடலாம்னு இருக்கேன்” என்றான்.
“பாஸ் புத்தியக் காமிச்சிட்டியே” என்றான் நானா.
விச்சா சுவலட்சுமிக்காக வாங்கி வைத்திருந்த லேடீஸ் வாட்சைக் காட்டினான்.
நண்பர்கள் மூவரும் சுவலட்சுமியின் கல்யாணத்துக்குச் சென்றார்கள். திருமணம் முடிந்த பின் சாப்பிட்டு விட்டுத் திரும்பி வரும் போது மணமேடையில் இருந்த சோபாவில் உட்கார்ந்திருந்த தம்பதியின் அருகில் சென்றார்கள். மூன்று நண்பர்களும் தங்கள் பரிசுகளை சுவலட்சுமியிடம் கொடுத்து வாழ்த்தினார்கள். சுவலட்சுமி அவளது கணவனிடம் அவர்களைக் காட்டி “இவர் என் பாஸ் விஸ்வேஸ்வரன், இவங்க ரெண்டு பேரும் அவரோட பிரெண்ட்ஸ் நாராயணன், பாலசந்திரன்” என்று அறிமுகப்படுத்தினாள்.