தூண்டுதலும் வேண்டுதலும் தோண்டுதலும்

மகன் நந்தாவோடு தற்செயலாகப் பார்த்தது தான் முதல் முறை. சொல்வது இந்தப் படத்தை அல்ல. கோடம்பாக்கம் லிபர்ட்டி எதிரில் ஒரு ஓட்டலுக்கு ஒரு மாலை நேரத்தில் இருவரும் சென்றிருந்த போது, மிக தற்செயலாக எதிரே வந்து அமர்ந்தனர் அவர்கள் இருவரும்.
பேச இருக்கும் படத்தோடு சம்பந்தப்பட்டவர்கள் அல்ல. சிற்றுண்டி உண்ண அங்கே வந்திருந்தவர்கள்.
அவர்கள் என்னை (இப்போதும்!) அறிய மாட்டார்கள். எப்படி அவர்களிடம் அறிமுகப் படுத்திக் கொள்ள என்றே துடித்திருக்க, அவர்கள் இருவரும் ஏதோ சாப்பிட ஆர்டர் கொடுத்துவிட்டு, ‘பேரு தான் அது, அந்த ஊருல எடுத்ததில்ல’ என்று அவர்களுக்குள் பேச ஆரம்பித்திருந்தனர். கணவனும் மனைவியும் ! மிகவும் ரசித்து அடுத்து அவர்களது பேச்சு போன திசையில், நாங்கள் கண்டுகொண்டோம், அவர்கள் அப்போதுதான் பார்த்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருக்கின்றனர் என்று – பாபநாசம் படத்தைப் பார்த்துவிட்டு வீடு திரும்பும் வழியில் தான் ஓட்டலுக்குள் நுழைந்திருந்தனர்!
எழுத்தாளர் வண்ண நிலவனும் அவருடைய வாழ்க்கை இணையரும் !
படத்தின் வசனத்தில் தழைத்த வட்டார வழக்கு, கதையின் போக்கு குறித்த கிறக்கத்தை அப்படியே உள்வாங்கிக் கொண்டோம்.
அந்த க்ளைமாக்ஸ் காட்சியை எத்தனை தடவை பின்னர் வீட்டில் வைத்து நந்தாவோடு கண்ணீர் மல்க ரசித்தாயிற்று.
நல்ல சினிமாவுக்கான நகர்வுகளில் நம் காலத்திய பாடங்களில் இது முக்கியமானது என்று தோன்றும். எத்தனையோ முறை ஆர்வம் உள்ளே விசிறி விட்டுக்கொண்டிருந்தாலும், இன்னும் மூலப்படமான திருஷ்யம் பார்த்ததில்லை. இத்தனைக்கும் மோகன்லால் உள்ளத்திற்கு நெருக்கமான திரைக்கலைஞர். கமல் இந்தப் படத்திற்கு வழங்கியிருக்கும் நடிப்பு உண்மையில் அசாத்திய ரசனைக்குரியது. கவுதமி போன்ற முக்கிய பாத்திரங்களில், துணை பாத்திரங்களில் நடித்தவர்கள் உள்பட ஒட்டு மொத்தக் குழுவும் செய்திருக்கும் பங்களிப்பு சிறப்பானது.
எழுத்தாளர் மதன், ஒரு தொலைக்காட்சி சானலுக்காக ( https://www.youtube.com/watch?v=4_UXnRuWwzc ), இந்தப் படத்தைப் பற்றிய சில முக்கிய அம்சங்கள் குறித்து, கமல்ஹாசனோடு நடத்தும் உரையாடலை மிக அண்மையில் பார்க்க நேர்ந்தது. அதில், கவுதமி நடிப்பை மிகவும் பாராட்டும் கமல், ‘தேவர் மகன் படத்திலிருந்து பாபநாசம் படத்திற்கு கவுதமி நிறைய பயணம் செய்து வந்திருக்கிறார்’ என்பது போல குறிப்பிடுகிறார். எனக்கு சகல கலா வல்லவன் கமல் நினைவுக்கு வந்தார்.
மிக எளிய கதை. ஆனால், நுட்பமாக அமைக்கப்பட்ட கதை.. படம் பார்ப்பவர்களுக்கு கிட்டத்தட்ட தெரிந்து விடுகிற, பின்னர் திடீர் என்று புதிராகிற, இறுதி வரை பார்க்க வைக்கிற த்ரில்லர் கதை.
மலையாளத்து ஜார்ஜ் குட்டி என்கிற நடுத்தர வயது பாத்திரம், இங்கே சுயம்புலிங்கம் என்று ஆனது. படத்தில் அசல் நெல்லை வட்டார வழக்கில், ச்சுயம்பு என்று எம் எஸ் பாஸ்கர் (சிறிய ஓட்டல் நடத்தும் சுலைமான் பாய் வேடம், அவரது நடிப்பு வரிசையில் குறிப்பிடத்தக்கது) அருமையாக விளிப்பார். தனியார் தொலைகாட்சி சானல்கள் வராத காலத்தில் முக்கிய தொழில்களில் ஒன்றான, அதுவும் சிற்றூர் மற்றும் சிறு நகரங்களில், டிவி ஆபரேட்டர் தொழிலில் இருப்பவர் தான் இந்த சுயம்புலிங்கம். அன்பின் அன்பான குடும்பம். காதல் மனைவி, உயிரின் கண்மணிகளாக கல்லூரிப் பெண், பள்ளிக்கூடச் சிறுமி என இரண்டு பெண் குழந்தைகள்.
பொழுதெல்லாம் கடையில், பார்ப்பதெல்லாம் பல மொழி திரைப்படங்கள், பேச்செல்லாம் சினிமா, இரவில் நேரம் கடந்த ஒரு கணத்தில் பார்த்த படம் ஒன்றின் உணர்வு தூண்டுதலில் இணைசேரும் ஜோரில் கூட்டை நோக்கிப் பறந்தோடிச் செல்லும் திரைப்பறவை சுயம்புலிங்கம்.
சிக்கனச் செட்டான அவரது குடும்ப பொருளாதாரத்தை அவ்வப்பொழுது தங்களது எளிய ஆசைகளை எடுத்துவைத்து அசைத்து நகர்த்தி மறுக்கிற அவரையும் கொண்டாட வைத்து குதூகலமாக போய்க் கொண்டிருக்கும் சராசரி வாழ்க்கை, தினசரி ஏடுகளில் பேசப்படும் எல்லைக்கு அவர்களை எது தள்ளுகிறது, பின் அவர்கள் வாழ்க்கை என்ன தள்ளாட்டத்திற்கு உட்படுகிறது என்பது தான் பாபநாசம்.
கல்லூரியில் சுற்றுப்பயணம் செல்லும் இடத்தில், அந்த இளம்பெண்ணைக் குளியலறையில் அவளறியாமல் மொபைலில் படமெடுக்கும் வெளியூர் கல்லூரி மாணவன் அவளைத் தேடி வந்துவிடுகிறான், பிறிதொரு நாளில். அவனது இச்சையைத் தீர்க்க மிரட்டும் அவனிடமிருந்து பெண்ணைக் காக்கக் குறுக்கே வரும் தாயையும் தகாத ஆசைக்கு அழைக்கும் அவனிடமிருந்து மொபைலைக் கைப்பற்ற அடிக்கும் தாக்குதலில் அவன் ஆவி போய்விடுகிறது.
முன் திட்டமிடுதல் அற்ற கொலை. பின்னர் வீடு திரும்பும் சுயம்புலிங்கம், பிணத்தையும், அந்த நிகழ்வையும், அதற்கான காரணங்களையும் வீட்டுத் தோட்டத்தில் ஆழக்குழி வெட்டித் தோண்டிப் புதைத்துவிடுகிறார். சத்தம் கேட்டு விழிப்புறும் கடைக்குட்டி அதைப் படபடப்போடு பார்க்கிறாள். பிறகு குடும்ப உறுப்பினர்கள் உள்ளத்தில் இருக்கும் அச்சத்தையும், நடுக்கத்தையும் தோண்டி எடுத்து அவர்களை மெல்ல விடுவித்து, தனக்குள் அவற்றைப் புதைத்துக் கொண்டு நடமாடும் சுயம்புலிங்கத்தை கமல் அப்படியே கொண்டுவந்து விடுகிறார்.
படத்தின் கதையைவிட அது நிகழ்த்தப்படும் விதம் முக்கியமானது. கதைக்கான காரணிகள் மிக இயல்பான விதத்தில் முன் கூட்டியே சொல்லப்படுகின்றன. ஒவ்வொரு சிறிய காட்சியும், வசனமும், உரையாடலும் கூடப் பின்னர் நடக்கும் விஷயங்களோடு செயற்கையற்ற தன்மையில் போய்ப் பொருந்தி விடுகின்றன. மனத்தை இலேசானதாக ஆக்கும் நகைச்சுவை பொறிகள் படத்தின் மிக அழுத்தமும், அதிர்ச்சியும், திருப்பங்களும் நிறைந்த திசையில் நகர்வது அறியாமல் ரசிகரைப் பிடிக்குள் வைத்துக் கொள்கின்றன. வேட்டியை ரசித்து நுனியைப் பிடித்து மெதுவாக நடக்கும் சுயம்புவோடு நடக்கும் ரசிகருக்கு சுலைமான் பாய் பார்த்தால் சிரிக்கவும், போலீஸ்காரர் கலாபவன் மணியைக் கண்டால் முகம் சுளிக்கவும் பழகி விடுகிறது.
இறந்துவிடும் இளைஞனின் தாய் காவல் துறையின் முக்கிய அதிகாரியாக இருக்க நேர்வது தான், விசாரணையை அத்தனை கெடுபிடிகளாக ஆக்குவது. அது தான் கதை. மிக ரசனையும், நினைவாற்றலும் மிக்க சினிமா ரசிகரால் நடந்த கொலையின் தடயங்கள் சாதுரியமாக இல்லாததுபோல் ஆக்கப்பட்டிருப்பதை, அந்த அதிகாரி ஊகித்து விடும் கட்டத்தில், விசாரணையின் மறுவாசிப்பு நடக்கிறது. ரகசியங்கள் கட்டவிழ்ந்துவிடுமோ என்று நாம் பதைபதைக்கும் இடத்திற்கு, சுயம்புவின் கடைக்குட்டி வாய் திறப்பது கொண்டு நிறுத்துகிறது. புதைக்கப்பட்ட இடத்தில் நடக்கும் தோண்டுதல், அதிகாரி நிரூபிக்க விரும்பியதை வெளியே கொண்டுவருவதில்லை, தனது எளிய குடும்பத்தை எப்படியாவது காப்பாற்றத் துடிக்கும் ஒரு சராசரி மனிதரின் உள்ளார்ந்த பாடுகள் தான் அங்கே வெளிப்படுகின்றன.
எங்கோ தொலைத்ததை, எங்கோ தேடி அலைவுறும் மனித வாழ்க்கை தான் பாபநாசம் ! தங்களது மகன் குறித்த அக்கறையைத் தொலைக்கும் பெற்றோர், அவனே இல்லாது போகும் ஒரு கணத்தில் தான் அவனைத் தேடவே தொடங்குகின்றனர். தங்களது அதிகார பலம் அதற்கு உதவாது என்பது அவர்களுக்கு பிடிபடுவதற்குள், அப்பாவிக் குடும்பம் ஒன்றைத் தீயில் வாட்டி எடுக்கிறது அந்த அதிகாரம். தனது பதவியில் நேர்மையைத் தொலைக்கும் ஒரு காவல்காரர் ஊரில் அடுத்தவர்கள் எல்லாம் தன்னிடம் நேர்மையாக இருக்க வேண்டும் என்று எல்லோரையும் தோண்டித் துருவிக் கொண்டிருக்கிறார்.
உயர் அதிகாரியாக வரும் ஆஷா சரத், இதை விடவும் அந்த பாத்திரத்திற்கான உணர்ச்சிகளை வெளிப்படுத்தி இருக்க முடியாது. இறுக்கமான சீருடை, காவல் துறையினரின் மனங்களையும் இறுக்கி விடுகிறது. அதற்கு எதிரான சாதாரண மக்களின் குமுறல் அவர்களை மேலும் கோபமுற வைக்கிறது. உண்மையை நெருங்குவதை விட, பழி வாங்குவது தான் எளிய உபாயமாக, காலகாலமாகப் பயிற்றுவிக்கப்படுகிறது. சமூக கொந்தளிப்புகள் குறித்த அம்சத்தை, இந்தப் படம் ஆர்ப்பாட்டமின்றி காட்சிப்படுத்துகிறது. கலாபவன் மணி, அசாத்திய உழைப்பை, இந்தப் படத்திற்கு வழங்கி இருக்கிறார். சுயம்புவுக்கும் அவருக்குமான முன் விரோதம் என்பது ஒரு சமூக உளவியலாக உருப்பெற்றிருப்பது இந்தப் படத்தின் மிக மெல்லிய இழையால் நெய்யப்பட்டிருக்கும் அபார நுட்பம்.
சினிமா காட்சிகள், வசனங்களே வாழ்க்கையாக அனாயசமாக மேற்கோள் காட்டும் சில பேரை நினைவுறுத்தும் சுயம்புலிங்கத்தை நையாண்டி செய்தவாறு காதலிக்கும் – கொலை நிகழ்வுக்குப் பின் தத்தளிக்கும் – தடுமாற்றத்தினால் திண்டாடும் – காவல் துறை விசாரணையில் கண் முன்னே குழந்தைகள் படும் வேதனையும், கணவர் வாங்கிக்கொள்ளும் அடியும் உதையும் கண்டு செத்து செத்துப் பிழைக்கும் பாத்திரத்தை கவுதமி உயர்சிறப்பு நிலைக்கும் உயரே வைத்து செய்திருக்கிறார். பெரிய மகள் (நிவேதா) மிக மாறுபட்ட உணர்ச்சிகளை மிக இலகுவாக வெளிப்படுத்துகிறார் எனில், சிறுமி (எஸ்தர்) கண்களால் பேசிவிடுகிறார், உடல் நடுக்கத்தால் வெளிப்படுத்தி விடுகிறார். இன்னொரு காவல்காரர் பாத்திரத்தில் இளவரசு எப்போதும் போலவே சீரிய நடிப்பை வழங்கி இருக்கிறார்.
ஓட்டல் பையன், டிவி கடைப்பையன் உள்ளிட்டு கலக்கி எடுக்கும் காட்சிகள் உள்ளிட்டுப் படத்தின் நகைச்சுவை அம்சம், பாட்டிலும் வெளிப்படும் தன்மை அசலாக இருக்கிறது. படத்தின் பாடல்களுக்கான இசை மட்டுமல்ல, பின்னணி இசையும் இது போன்ற படத்திற்கு மிகவும் முக்கியமானது. ஜிப்ரான் அதை அருமையாகச் செய்திருக்கிறார். நா முத்துக்குமார் எழுதி இருக்கும் இரண்டு பாடல்களுமே அருமையானவை. ஏ கோட்டிக்காரா (சுந்தர் நாராயண ராவ் – மாளவிகா) பாடலின் சுவை அலாதியானது. அதன் வரிகளும் கவித்துவக் குறும்பானவை, சில இடங்களில் கண்ணீர் துளிர்க்க வைப்பவை. வினா வினா (ஹரிஹரன்) பாடல், மிக மிக நுட்பமாக எழுதப்பட்டிருப்பது. முத்துக்குமார் மரித்த சோகம், இவற்றைக் கேட்கையில் மீண்டும் சூழ்ந்துவிடுகிறது.
மதனோடு இந்தப் படத்தின் மீது நடக்கும் உரையாடலில், ஜீத்து ஜோசப் திரைக்கதை, இயக்கம் என்றாலும், தமிழ் வடிவத்திற்கு எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுதவேண்டும் என்ற தனது விருப்பத்தை அவர் ஏற்றுக் கொண்டது, அதையொட்டிய சில மாற்றங்களுக்கு உடன்பட்டது பெரிய விஷயம் என்கிறார் கமல். தாஸ்தாவ்ஸ்கி எழுதிய குற்றமும் தண்டனையும் பற்றி குறிப்பிடுகிறார். அறியாமல் நிகழ்ந்தாலும் குற்றம் குற்றம் தானே என்கிறார். அதை, எப்படி சுயம்புலிங்கம் இறுதிக் கட்டத்தில் இறந்து போனவரின் பெற்றோரிடத்தில் ஒப்புக் கொள்கிறார் என்ற இடத்தில் மூலத்திலிருந்து கொஞ்சம் மாறுபடுகிறது என்பதையும் விளக்குகிறார். ஒட்டுமொத்தக் கதையை, க்ளைமாக்ஸ் காட்சியில் சொல்லிவிடுகிறார், அதிலும் வசனத்தை ஒட்டித் தமது உணர்ச்சிகளை இயல்பாக வெளிப்படுத்திய விஷயத்தையும் கமல் பேசுகிறார். தான் உள்பட அதன் படமாக்கத்தின்போது கண்கள் கலங்கி விட்டதையும் சொல்கிறார்.
தினேஷ் என்ற வாலிபர், கமல் வசனத்தைப் பின்னணியில் ஒலிக்கவைத்து, தாம் அதற்கு 100% உதட்டசைவு பொருத்தப்பாடு கொடுத்து உடல் மொழியும், முக பாவமும் முயற்சி செய்திருக்கும் யூ டியூப் காட்சி பாருங்கள், அந்தக் காட்சி எத்தனை ஈர்க்கத்தக்கதாக அமைந்திருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.
( https://www.youtube.com/watch?v=kyKVaOB8Sz8 ).
நடக்க இருந்த நாசத்தை ஓர் இளம் பெண்ணும், அவளுடைய தாயும் தடுக்கும் முயற்சியில் நிகழும் கொலை கூட பாவமாகிறது. அந்தப் பாவத்திலிருந்து வெளியேற பாபநாசம் குளத்து நீரைக் கும்பிட்டு கை தொழுது மன்றாடி நிற்கும் ஓர் எளிய மனிதனிடம் அந்தப் பெற்றோர் விடை பெறுகின்றனர். ஆனால், அந்த மனிதருக்கு விடுதலை, மரணத்திற்குமுன் இருக்கப் போவது இல்லை என்பது, புதைத்த பிணத்தை வேறெங்கே இடம் மாற்றி புதைத்தோம் என்பதைத் தமது மனைவிக்குக் கூட சொல்வதில்லை என்ற காட்சியில் பிடிபடுகிறது.
பாபநாச குளம், பாவத்தைத் தீர்க்க வேண்டிய தேவைக்காக, பாவம் செய்யாதோரின் கண்ணீரால் தான் வற்றாமல் நிரம்பிக் கொண்டிருக்கிறதோ என்று கூடத் தோன்றியது.
திருஷ்யம் இறுதிக் காட்சி
பாபநாசம் இறுதிக் காட்சி
நல்ல விமர்சனம். ஆனால் திரிஷ்யம் (பல மொழிகளில் வெளிவந்து வெற்றிபெற்ற படக்கதை) ஜார்ஜ்குட்டி (மோகன்லால்) இன்னும் நெருக்கமாக மனதில் இடம்பிடித்துள்ளார். திரிஷ்யம் 2 வருகிற பிப்ரவரி பத்தொன்பதாம் தேதி அமேசான் ஒ.டி.டி யில் வெளியாகிறது. ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்.
LikeLike
அருமை ..மூத்த பெண்ணை விசாரிக்கும் போது, வெளியூருக்கு சென்ற தேதியை தவறாக சொல்லி, இல்ல..இல்ல…என்று இரண்டு நாள் வித்தியாசத்தை சரியாக கூறும் இடம் வேற லெவல்.
ஐய்யையோ…தப்பாக சொல்லிவிட்டாளே, மனசுக்குள் உச்சுக் கொட்ட, உடனே சரியாக சொல்லி மூச்சு விட வைக்கும் காட்சியில் சிறுமியின் மறதியின் மேல் கோபம் எழுகிறது. ஆனால், எல்லாப் பதில்களுமே உடனடியாக வந்தால், ரிகர்சல் பதிலாக இருக்குமென சிந்தித்த சுயம்புலிங்கம் திக்கி, தப்பாக பதில் சொல்ல சொல்லி கொடுத்தது திறமை..
இறந்தது தன் மகன் தான் என்றாலும், மனைவியின் அதிகாரத்தில், அப்பாவி குடும்பம் கதறுவதை சகிக்காது, அமைதியாக “போதும்…விட்டு விடு” என மன்றாடும் இடத்தில், பெண்பிள்ளைகள்
கஷ்டப்படுவதை பார்க்க இயலாத தந்தை உள்ளமே தெரிகிறது..பார்ப்பவர் மனதிலும் ..
LikeLike
நான் முன்னர் பாபநாசம் படம் பார்த்திருக்கிறேன். அதை அப்படியே கண்முன் கொண்டுவந்துவிட்ட விமர்சனம். அற்புதமான நினைவாற்றல் உள்ள எஸ்விவிக்கும் வெளியிட்ட குவிகம் இதழுக்கும் பாராட்டுகள். கே.ராஜு, ஆசிரியர், புதிய ஆசிரியன் மாத இதழ்
LikeLike