வங்கியில் ஆடிட்

ஆடிட்டர்கள் ஆக்கவும் அழிக்கவும் கூடியவர்களே.
நான் பணி துவங்கிய நாளிலிருந்து இந்நாள் வரை ஆடிட்டர்கள் என் தொழிலில் தவிர்க்க முடியாத தேவதூதர்களாகி விட்டனர். ஆம் தங்களை அனைத்தையும் சரி படுத்த வந்த தேவதூதர்களாக மனதில் நிறுத்திதான் பேச்சை துவக்குவார்கள். பின்னர் நம்மை சாத்தானாக்குவதும் அவர்கள்தான்.
வங்கி ஆடிட்டர்கள் சற்று வித்தியாசமானவர்கள். அவர்களுக்கு என்றும் தாம் நக்கீரர் பரம்பரையில் தோன்றியவர்கள் என்ற எண்ணம் அவர்கள் மனதில் ஓடிக் கொண்டே இருக்கும். குற்றம் கண்டு பிடிப்பது ஒன்றுதான் தம் பிறவிப் பயன் என்று எண்ணுவர். அவர்களும் அறிந்த ஒரு இரகசியம், மற்ற பணிகளில் தம் திறமையை காட்ட முடியாதவர்களின் புகழிடம் ஆடிட் என்று.
காலை வங்கி திறக்கும் முன் வந்து திறந்தவுடன் திபு திபுவென வங்கியுள் நுழைந்தால் அவர்களை ஆடிட்டர் என அறியலாம். முந்தைய தினமே வந்து அறையெடுத்து தங்கியிருந்தாலும் கிளையில் யாருக்கும் சொல்லாமல் இரகசியம் காப்பார்கள்.
கிளையில் அனைவரும் வந்தவுடன் முதலில் பணம் கையிருப்பு, நகைப் பைகள் சரி பார்ப்பார்கள்.
வங்கியில் நான் சந்தித்த ஓரிரு ஆடிட்டர்கள் பற்றிய செய்திகளை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன்.
யூனியன் வங்கியின் குன்னூர் கிளை. நிறைய டீ எஸ்டேட்கள் தங்கள் வங்கிக் கணக்குகள் வைத்திருந்த பெருமை பெற்றது. அக்காலத்தில் எஸ்டேட் ஊழியர்கள் சம்பளத்திற்காக வார துவக்கத்தில் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் பண்டில்கள் கோவையிலிருந்து வரவழைத்து வைத்திருப்போம். அவைகளை எண்ணி வைக்கும் பழக்கம் கிடையாது, முடியவும் முடியாது. பழைய நோட்டுகள் கைகளில் பசையாக ஒட்டும்.
அச்சமயம் ஒரு ஆடிட் டீம் மும்பை தலமை அலுவளகத்திலிருந்து வந்தது. அனைத்து பண்டில்களையும் எண்ண வேண்டியது அவர்கள் கடமை. ஒரு பீரோ நிறைய ஒற்றை ரூபாய் கட்டுகளை பார்த்து மலைத்தனர். ஆடிட் டீம் தலைவர் சற்று புத்திசாலி. சுற்றும் முற்றும் பார்த்தார். அப்பொழுது புதிதாக சேர்ந்திருந்த நான், மஞ்சள் நீர் தெளித்து கழுத்தில் மாலை போட்டு கழுவேற்றவிருந்த ஆடு போல அவர் கண்களில் பட்டேன் போலும். ஒரு பியூனை அழைத்து கட்டுகளை உடைத்தார். நூறு நோட்டுகள் கொண்ட ஒவ்வொரு செக்ஷனிலும் குத்து மதிப்பாக இரண்டு மூன்று நோட்டுகளை மடித்து வைத்து என்னை அழைத்தார். மீதி உள்ள நோட்டுகளை எண்ணி பென்சிலில் குறித்து வைக்க சொல்லி விட்டு மற்ற வேலைகளை பார்க்கச்சென்றார்.
எதிரே குவிக்கப்பட்ட ஒற்றை ரூபாய் நோட்டுக் கட்டுகள், இவ்வளவு நாட்கள் அவைகளை தவிர்தமைக்காக கைகொட்டி சிரித்தன. இள இரத்தம், ஈகோ என அனைத்தும் ஒன்று சேர நோட்டுகளிடம் தோற்க மனம் மறுத்தது.
மறுத்ததோடல்லாது, மூளைக்கு இரகசிய கட்டளையிட்டது. அதன்படி மடித்து வைத்திருந்த நோட்டுகளை மற்றும் எண்ணி மீதம் உள்ளவை 98 என்றோ 97 என்றோ குறித்து வைத்தது. நேரத்தை போக்க கட்டுகளை புரட்டி எல்லா நோட்டுகளிலும் நிதித் துறை செயலர் கையெழுத்து இட்டுள்ளாரா என சரி பார்த்துக் கொண்டிருந்தேன்.
ஆடிட்டர் களை அழைத்துக் கொண்டு டீ எஸ்டேட் இன்ஸ்பெக்ஷனுக்கு சென்ற பொழுது ஒற்றை யானை வழி மறித்த கதையை முன்பே கூறியுள்ளேன்.
பின்னர் யூனியன் வங்கியில் புதிதாக துவக்கப்பட்ட கிராம கிளையின் மேலாளராக நியமிக்கப்பட்டேன்.
கிளைக்கு புதியதாக ஜாவா பைக்கின் மரு பிறப்பானYezdi bike வாங்கிக் கொள்ள அனுமதிக்கப் பட்டேன்.
சொல்லாமல் கொல்லாமல் ஆடிட் டீம் வந்தது. புதிய கிளை அதிக தவறுகளுக்கு வழியில்லை. வேலை அதிகம் செய்தால் தவறுகளுக்கு வாய்ப்புண்டு. தவறுகள் நடந்தால் ஆடிட்டர்களுக்கு வேலையுண்டு . வேலையே செய்ய வில்லையென்றால் ஆடிட்டர்பளுக்கும் வேலையில்லை.
ஆடிட்டர் ஏதாவது கண்டு பிடித்தாக வேண்டுமே.
பைக் வாங்கிய இரசீதை கையில் எடுத்தாதார். மேலும் கீழும் பார்த்தார். எழுத ஆரம்பித்தார். பைக்கிற்கு அனுமதியில்லாத saree guard ரூபாய் 150 க்கு வாங்கியுள்ளாக இரசீது காட்டியது. மேலாளரிடமிருந்து அத்தொகையை பிடிக்க சிபாரிசு செய்து எழுதினார். பிடித்தம் சம்பந்தமாக கிளைக்கும், தலமை அலுவளகத்திற்கும், ஆடிட் அலுவளகத்திற்கு காப்பியுடன் கடிதப்போக்கு வரத்து தொடர்ந்தன. தபால் சிலவு ரூபாய் 300 ஆகியிருக்கும்.
கடைசியில் ஒரு கடிதம் எழுதினேன். அதில் நிலங்களை மேற் பார்க்க சம்பந்த பட்ட விவசாயியையும், கணக்கு துவக்க வாகண வசதியற்ற விவசாயிகளையும் என் பைக்கில் அமர வைத்து அழைத்து செல்கிறேன். அவர்கள் அனைவரும் தமிழ்நாட்டு பாணியில் தளர்ந்த வேட்டி கட்டி வருகிறார்கள். அவர்கள் வேட்டி சக்கரத்தில் மாட்டி விடும் என பயப்படுகிறேன். தேவையில்லையெனில் வாங்கிய இடத்தில் saree guard ஐ கொடுத்து விட்டு பணத்தை கட்டி விடுகிறேன் என்ற வகையில் இருந்தது அக்கடிதம்.
அடுத்த வாரமே அப்ரூவல் வந்தது.
பெரிய தவறுகள் பெரும்பாலும் ஆடிட்டர் கண்களில் படாது. ஆனால் ஆடிட்டர்கள் தவிற்க முடியாத தேவைகள்.