மலையாள இலக்கிய உலகின் மிகச் சிறந்த படைப்பாளியான வைக்கம் முகமது பஷீர் பால்யகால சகி, பாத்திமாவின் ஆடு,சப்தங்கள்,மதிலுக்குள், அனர்க்க நிமிஷம் உள்ளிட்ட அற்புதமான படைப்புக்களுக்குச் சொந்தக்காரர்
தன் கதை குறித்து அவர் :
நீல வெளிச்சம் என்ற இச்சிறுகதை என் வாழ்க்கையின் விளக்க முடியாத அனுபவங்களில் ஒன்றாகும்.அனுபவம் என்பது மிகச் சரியான வார்த்தையில்லை.ஒன்றொன்றாக,அடுத்தடுத்து விரைவாக மாறுகிற,ஒரு கனவில் நிகழ்கிற உண்மை அல்லது கற்பனைத் தோற்றங்களின் தொகுதி என்று வேண்டுமானால் சொல்லலாம். இதை அறிவியல் அணுகுமுறை என்ற ஊசியால் குடைய முயன்றேன். வெற்றி யில்லை.விளக்க முடியாத அனுபவம் என்ற வார்த்தையில் தஞ்சமடைவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை.
சென்றமாதத் தொடர்ச்சி!
முன்கதை
கதை சொல்லி ஒரு தனி வீட்டுக்குக் குடி போகிறார். போன பிறகுதான் நண்பர்கள் கூறினார்கள். அந்தவீட்டில் பார்கவி என்ற பெண் தற்கொலை செய்துகொண்டாளாம் . அதனால் அவள் அங்கே ஆவியாகிய இருக்கிறாளாம் . எனக்கு பேயெல்லாம் பயமில்லை என்று வெளியில் தைரியமாகச் சொன்னாலும் உள்ளூர அவருக்கு ஒரு உதறல். அதனால் அவள் கூட உரையாடத் துவங்குகிறார்.
இனி பஷிரின் வரிகளில் ..
நான் சந்தித்தேயிராத பார்கவி இருபத்தியோரு வயதான இளம்பெண். ஒருவனை ஆழமாகக் காதலித்தவள். அவன் மனைவியாகத் ,துணை யாக இருக்கக் கனவு கண்டவள். ஆனால் கனவு ..ஆமாம் கனவாகவே நின்றுவிட்டது. அவளுக்கு மனச்சோர்வு ஏற்பட்டது.அவமானமும் கூட..
“பார்கவி, நீ அதைச் செய்தேயிருக்கக் கூடாது.நான் உன்னைக் குற்றம் சொல்கிறேன் என்று நினைக்காதே. நீ காதலித்த மனிதன் அந்த அளவிற்கு உன்னைக் காதலிக்கவில்லை.உன்னைவிட அதிகமாக இன்னொரு பெண்ணைக் காதலித்தான்.வாழ்க்கை உனக்குக் கசந்து விட்டது,
உண்மை.ஆனால் வாழ்க்கை அவ்வளவு கசப்பானதில்லை.மறந்து விடு. உன்னைப் பொறுத்த வரை, சரித்திரம் திரும்பப் போவதில்லை.
“பார்கவி,நான் உன் தவறைச் சுட்டிக் காட்டுகிறேன் என்று நினைக்காதே. நீ உண்மையிலேயே காதலுக்காகத்தான் இறந்தாயா? நித்திய வாழ்க்கையின் வைகறைதான் காதல்.எதுவுமே தெரியாத ஓர் அப்பாவி நீ. ஆண்களை நீ வெறுக்கும் விதம் அதை உறுதி செய்கிறது. உனக்கு ஒரே ஒரு ஆணைத்தான் தெரியும்.ஒரு பேச்சுக்காக அவன் உன்னை மோசமாக நடத்தினான் என்றே வைத்துக் கொண்டாலும் அதே பார்வையில் அத்தனை ஆண்களையும் பார்ப்பது சரியா? நீ தற்கொலை செய்து கொள்ளாமல் இன்னும் சிலகாலம் வாழ்ந்திருந்தால் உன்னுடைய ஊகம் எவ்வளவு தவறென்று தெரிந்திருக்கும். உன்னைக் காதலித்து,வழிபடும் ஒருவன் இருந்திருப்பான். உன்னை ’என் தேவதையே ’என்று அழைத்திருப்பான்.”
“ஆனால்.. நான் சொன்னது போல சரித்திரம் திரும்பாது. உன் சரித்திரத்தை எப்படியறிவது ? இன்றிரவு நீ என் கழுத்தை நெரித்தால் கூட எனக் காக பழிக்குப்பழி வாங்க யாரும் வரமாட்டார்கள், ஏனெனில் எனக்கென்று யாருமில்லை. என்னை நீ தாக்காதே. இது என் மெய்யான சமர்ப்பணம்.”
என் நிலை உனக்குப் புரிந்திருக்கும்.நாம் இங்கு வாழப் போகிறோம். சட்டரீதியாகச் சொன்னால் இந்த வீடும் ,கிணறும் என்னுடையது. கீழேயுள்ள நான்கு அறைகளையும், கிணற்றையும் நீ பயன்படுத்திக் கொள். குளியலறையையும், சமையலறையையும் நாம் பகிர்ந்து கொள்வோம். நீ இதற்கு உடன்படுகிறாயா?”
இரவு வந்துவிட்டது.சாப்பிட்டுவிட்டு ,பிளாஸ்கில் தேநீருடன் வந்தேன். ஹரிக்கேன் விளக்கை ஏற்றினேன். அறையில் மஞ்சள் வெளிச்சம் நிறைந்தது.
டார்ச்சுடன் கீழே போன நான் இருட்டில் நின்றேன். குழாய்களைப்பூட்ட நினைத்தேன். ஜன்னல்களை முழுவதுமாகத் திறந்து விட்டு,கிணற்றைப் பார்த்துவிட்டுச் சமையலறைக்குப் போனேன். குழாய்களைப் பூட்டக்கூடாதென்று நினைத்தேன். கதவைப் பூட்டிவிட்டு மாடிக்குப் போய் தேநீர் குடித்தேன்.பீடியைப் பற்ற வைத்துக் கொண்டு எழுதத் தொடங்கினேன். திடீரென்று பார்கவி என் நாற்காலிக்குப் பின்னால் நிற்பது போலுணர்ந்தேன்.
“நான் எழுதும்போது யாரும் பார்ப்பது எனக்குப் பிடிக்காது” சொல்லி விட்டுத் திரும்பினேன். யாருமில்லை. ஏனோ திரும்ப எழுதத் தோன்ற வில்லை.நாற்காலியை என்னருகே இழுத்தேன்.
“பார்கவிக் குட்டி, உட்கார்ந்து கொள்”காலியான நாற்காலி.அறைகளினி டையே உலவினேன். காற்றில்லை. இலைகளில் அசைவில்லை. ஜன்னலினூடே ஒரு விளக்கு வெளிச்சத்தைப் பார்த்தேன்.அது நீலமா, சிவப்பு அல்லது மஞ்சளா?ஊகிக்க முடியவில்லை. கண நேரக் கண்ணோட்டம்தான்.
அது என் கற்பனைதான் என்று சொல்லிக் கொண்டேன்.பார்த்தது ஒளிதானென்று சத்தியம் செய்யமுடியாது. எதையும் பார்க்காமல் எப்படி வெளிச்சமென்றுணர்ந்தேன். அது மின்மினிப் பூச்சியா ?
ஜன்னலையே பார்த்துக் கொண்டிருந்தேன் .அது வீண்தான்.படிக்க முயன்றேன். முடியவில்லை. நாற்காலி காலியாக இருந்தது. சீக்கிரம் தூங்க நினைத்து விளக்கை அணைத்தேன். பாட்டுக் கேட்கலாமென்று தோன்றியது.
விளக்கை ஏற்றிவிட்டு கிராம்போனை வைத்தேன்.
யார் பாடலைக் கேட்கலாம்.உலகம் அமைதியாக இருந்ததெனினும் என் காதுகளுக்குள் ஒலி ஊடுருவிக் கொண்டிருந்தது. அது திகிலா? பின் முடி குத்திட்டு நின்றது.கொடூரமான அந்த அமைதியைத் துண்டுகளாகச் சிதறடிக்க விரும்பினேன். அதற்கு யாருடைய பாடலை வைப்பது?பால்ராப் சன்..’ஜோஸுவா பிட் தி பாட்டில”..அது முடிந்தது.பின் பங்கஜ் மாலிக்கின் ’து டர் ந ஜராபி’ பிறகு எம்.எஸ்ஸின் ’காற்றினிலே வரும் கீதம் ’பாடல்களைக் கேட்டு முடித்த பிறகு சிறிது அமைதி வந்தது. பிறகு சைகலைக் கேட்டேன்.’சோ ஜா ராஜ்குமாரி ’இளவரசியே தூங்கு ,கனவுகளுடன்..
இன்றைக்குப் போதும்,நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம். முணுமுணுத்துக்கொண்டே விளக்கை அணைத்து விட்டு பீடியை பற்றவைத்துக் கொண்டு கட்டிலில் சாய்ந்தேன். அருகில் டார்ச்,கைக்கடிகாரம்,கத்தி, காலியான நாற்காலி.
முகப்பிற்குப் போகும் கதவைச் சாத்தினேன்.மணி பத்திருக்கும். கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தேன்.கடிகாரத்தின் ’டிக் ,டிக் ஒலி தவிர வேறெதுவும் கேட்கவில்லை.நிமிடங்கள் பல மணி நேரங்களாகின.மனதில் பயமில்லை. குளிர்..தூக்கம் வரவில்லை. இது எனக்குப் புதிய அனுபவ மில்லை.பல இடங்கள்,நாடுகள்…இருபது வருடத் தனிமை.. புரிந்து கொள்ள முடியாத பல அனுபவங்கள் எனக்கு.அதனால் என் கவனம் இறப்பிலும், நிகழ்விலும் படர்ந்தது. இடையே சந்தேகங்கள்.யாராவது கதவைத் தட்டி னார்களா?குழாய் திறந்திருக்கிறதா?என்னை மூச்சுத் திணற வைக்க முயற் சியா?காலை மூன்று மணிவரை விழித்திருந்தேன்.
எதுவும் நடக்கவில்லை’.”வணக்கம்,பார்கவி மிக்க நன்றி. எனக்கு ஒரு விஷயம் தெளிவாகி விட்டது!ஜனங்கள் உன்னைப் பற்றி புரளி கிளப்பி விடுகிறார்கள். போகட்டும் விடு.”
நாட்கள் கடந்தன. பார்கவி,அவள் பெற்றோர்,சகோதர சகோதரிகள்.. எனக்குத் தெரியாத பல கதைகள் இருக்கலாம் அவற்றைப் பற்றி யோசிப்பேன். எழுதிக் களைப்படைந்த பிறகு எல்லா இரவுகளிலும் கிராம்போனில் பாடல்கள் கேட்பேன்.ஒவ்வொரு பாடலுக்கு முன்பும் பாடகர் பெயர் பொருள் சொல்லுவேன்
“குஜார் கயா வோ ஜமானா” இது சோகத்தையும், ஞாபகங்களையும் நினைவுக்குக் கொண்டு வரும் பங்கஜ் மாலிக்கின் பாடல்..கவனமாகக் கேள்’ என்பேன்.அல்லது’ இது பிங் கிராஸ் பையின் ’இன் தி மூன் லைட்’ பாடல. பொருள் என்னவென்றால் ஒளியில்.. ஐயோ மறந்துவிட்டேன்! நீ பி.ஏ. படித்தவள் ! ஸாரி.. “என்பேன்.
இந்த நிலையில் இரண்டு மாதங்கள் கடந்தன. தோட்டம் போட்டேன். பூக்கள் மலர்ந்த போது அவளுக்காகத்தான் என்றேன். இதற்கிடையில் ஒரு நாவலை எழுதி முடித்தேன்.என் நண்பர்கள் இரவில் வந்து தங்குவார்கள்.அவர்கள் தூங்குவதற்கு முன்னால்,அவர்களுக்குத் தெரியா மல் கீழே போய் இருட்டில் நின்று கொண்டு “ பார்கவி, என் ஆண் நண்பர்கள் இரவில் தங்குவதற்காக இங்கு வந்திருக்கிறார்கள்.நீ யார் குரல்வளையை யும் நெறித்து விடக்கூடாது.அப்படி ஏதாவது நடந்து விட்டால் போலீஸ் என்னைப் பிடித்து விடும்.தயவுசெய்து ஜாக்கிரதை.. குட்நைட்!” என்பேன்.
வீட்டை விட்டு வெளியே போகும் போது “பார்கவி ,வீட்டைப் பார்த்துக் கொள்,யாராவது நுழைந்து விட்டால் குரல்வளையை நெறித்துவிடு. சவத்தை மூன்று மைல் தள்ளிப் போட்டுவிடு, இல்லையெனில் நாம் சிக்கலுக்குள்ளாவோம். ”இரண்டாவது ஆட்டம் சினிமா முடிந்து வரும்போது ’நான்தான்’ என்று சொல்வேன்.
அப்படித்தான் தொடங்கியது. காலப் போக்கில் பார்கவியை மறந்தேன்.தீவிர உரையாடலில்லை.எப்போதாவது ஞாபகம்,அவ்வளவுதான். நினைவை இப்படிச் சொல்வேன்..உலகம் தொடங்கிய நாளிலிருந்து எத்தனையோ பேர் தோன்றி மறைந்திருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் தண்ணீர் ,தூசு,புகை என்று உலகின் ஒரு பகுதி என்று நமக்குத் தெரியும். பார்கவியும் அப்படி ஒரு நினைவுதான்.
அதற்குப் பிறகுதான் இந்தச் சம்பவம் நடந்தது. அதைச் சொல்கிறேன்.
ஒரு நாளிரவு பத்துமணியிருக்கும். தொடங்கியதை முடித்து விட வேண்டுமென்ற மும்முரத்தில் எழுதிக் கொண்டிருந்த போது விளக்கொளி மங்குவதாக உணர்ந்தேன்.ஹரிக்கேன் விளக்கைத் தூக்கி லேசாக ஆட்டினேன். மண்ணெண்ணைய் காலியாகும் நிலைக்கு வந்த போதும், ஒரேயொரு பக்கத்தை எழுதிமுடித்து விடச் சிறிது பாதுகாத்து வைத்திருந்தேன். எழுதத் தொடங்கிய போது மீண்டும் விளக்கு மங்கியது. எழுதுவதைத் தொடர்வ தற்கு முன்னால் திரியைத் தூண்டி விட்டேன்.சிறிது நேரத்தில் திரி குறுகிச், சிவந்த நெருப்பு வர விளக்கை அணைத்தேன்.
என்ன செய்வது ?எனக்கு மண்ணெண்ணைய்வேண்டும். அருகிலுள்ள விடுதிகளில் தங்கியிருக்கும் நண்பர்களிடம் எண்ணெய் வாங்கி வருவதற்காக டார்ச்சையும் ,பாட்டிலையும் எடுத்துக் கொண்டு,கதவைப் பூட்டிவிட்டு ஆளரவமற்ற சாலையில் மிக மெலிதான நிலாவொளியில் வேகமாக நடந்தேன்.கருமேகங்கள் கூடியிருந்தன வெளியிலிருந்து கூப்பிட ஒரு நண்பன் வந்தான்.பின்பக்க வழியாக விடுதியில் நுழைந்தோம்.மற்ற மூவர் சீட்டாடிக் கொண்டிருந்தனர்.
நான் மண்ணெண்ணைய் கேட்ட போது ஒருவன் சிரித்துக்கொண்டே “நீ ஏன் பார்கவியிடம் கேட்கக் கூடாது?அவள் கதையை எழுதி முடித்து விட்டாயா ?” என்று கேட்டான்.நான் பதில் சொல்லவில்லை.பார்கவி கதையை எழுதவேண்டும்.பாட்டிலை நிரப்பிக் கொண்டு வெளியே வந்தபோது மழை ஆரம்பித்திருந்தது.
“எனக்குக் குடை வேண்டும் “என்றேன்.”எங்களிடம் குடையில்லை. எங்களுடன் விளையாடு. மழை நின்றதும் போகலாம்.”
விளையாடினோம்.மூன்று முறை தோற்றுப் போனேன்.என் தவறு தான். பாதியாக நின்ற கதையிலேயே மனமிருந்தது.ஒரு மணிக்கு மழை நின்றது.நான் டார்ச்சையும் ,பாட்டிலையும் எடுத்துக் கொண்டு வெளியே வந்த போது விளக்கு அணைக்கப்பட்டு நண்பர்கள் படுக்கப் போய்விட்டனர்.
இருட்டில் தெரு அமைதியாக இருந்தது.வீட்டை நோக்கி நடந் தேன்.மிக மெலிதான் நிலவொளியில் முழு உலகமே மூடுபனியில் தழுவப்பட்டுக் கிடந்தது.என் மனதில் ஓடிக் கொண்டிருந்த நினைவுகளின் சலசலப்பு பற்றி நான் அறியவில்லை. அல்லது நான் எதைப் பற்றியுமே யோசிக்கவில்லை.வெறுமையான அந்த வழியில் டார்ச்சின் ஒளியோடு தனியனாக நடந்தேன்.அந்தப் பயணத்தில் ஒரு ஜந்துவைக் கூடப் பார்க்கவில்லை.
கதவைத் திறந்து உள்ளே போய் தாழிட்டுக் கொண்டேன். அசாதாரணமாக எதுவும் நடக்கும் என்ற சந்தேகம் அந்த நேரத்தில் மனதிலில்லை.
திடீரென்று காரணமின்றி மனதில் சொல்ல முடியாத துக்கம் வந்தது. அழ வேண்டும் போலிருந்தது.நான் சுலபமாகச் சிரித்து விடுவேன்; ஆனால் கண்ணீர் விடுவது கடினம். சில சமயங்களில் என் மனம் மிக நிச்சலனமாகிவிடும். அந்த வகையான மனவுணர்வில் மாடியேறினேன்.
நான் கதவைப் பூட்டிக் கொண்டு போனபோது,விளக்கணைந்து வீடு முழு இருளிலிருந்தது.மழை பெய்திருக்கிறது.இரண்டு,மூன்று மணி நேரம்கடந்திருக்கிறது. ஆனால் இப்போது அறை வெளிச்சமாக இருந்ததைக் கதவின் சட்டகம் வழியாக என்னால் பார்க்க முடிந்தது.
கண்கள் பார்த்த ஒளியை ஆழ்மனது ஒப்புக் கொண்டது.ஆனால் அந்தத் தெளிவின்மை என் உணர்வில் இன்னும் ஊடுருவவில்லை. அதனால் வழக்கம் போலச் சாவியையெடுத்து பூட்டின் மீது டார்ச் வெளிச்சத்தைக் காட்டினேன்.பூட்டு வெள்ளியைப் போல மின்னியது.அது என்னைப்பார்த்துச் சிரித்தது.கதவைத் திறந்து உள்ளே போனதும்,மனவுலைவு ஏற்பட, சுற்றியிருப்பது எல்லாம் தெரிந்தது.என் உடலின் ஒவ்வொரு அணுவும் அதை உணர்ந்த போதும் பயவுணர்வு வரவில்லை. எனக்குள் உணர்ச்சிகளின் பிரளயம் : இரக்கம்,அன்பு அல்லது இரண்டின் கலவை.வியர்வையில் நனைந்து ஊமையாக நின்றேன்.
நீல வெளிச்சம்!வெள்ளைச் சுவர்கள்,அறை—நீல வெளிச்சத்தில் பளபளத்தது. அந்த வெளிச்சம் ஹரிகேன் விளக்கிலிருந்து பிரதிபலித்தது.
இரண்டு இன்ச் திரியிலிருந்து ஒரு நீல ஜூவாலை.!
மண்ணெண்ணைய் இல்லாததால் அணைந்து போன ஹரிக்கேன் விளக்கு : யார் அதை ஏற்றியது ?பார்கவி நிலையத்திற்கு எங்கிருந்து அந்த வெளிச்சம் வந்தது?
*******************