புஜ்ஜியின்றி அந்த வீட்டில் ஓரணுவும் அசையாது.
இந்த நான்கு நாட்களில் நான் தெரிந்துக் கொண்ட உலக மகா உண்மை இது.
காய் வாங்குவதிலிருந்து, சமையல் பண்ணுவதிலிருந்து, வீட்டை சுத்தப் படுத்துவதிலிருந்து, பேங்க் வேலை, ஈபி பில்.. இவ்வளவு ஏன் மஹாவுக்கு பூஜைக்கு ஏற்பாடு பண்ணுவது வரை எல்லாம் புஜ்ஜி தான்..
பொதுவாக எல்லா வீடுகளிலும் விஷ்ணு சகஸ்ரநாமம் தான் ஒலிக்கும். ஆனால் அந்த வீட்டில் சதா சர்வ காலமும் புஜ்ஜி நாமம் தான்.
“புஜ்ஜி என் ஷர்ட் எங்க?”
“புஜ்ஜி காரைக் கொஞ்சம் கராஜுலேர்ந்து எடு.. சீக்கிரம்”
”புஜ்ஜி.. நைட் சப்பாத்தியும் குர்மாவும் பண்ணிரு.. மறந்துராதே”
“புஜ்ஜி.. டெய்லர் கிட்டேர்ந்து என் டிரெஸ் வாங்கிட்டு வந்துரு”
”புஜ்ஜி.. கௌன் பனேக கரோர்பதி ரெகார்ட் பண்ணணும்.. மறந்துராதே”
புஜ்ஜியும் சளைக்காமல். அந்த வீட்டில் ஒவ்வொருவர் இடும் கட்டளைகளுக்கு ஏற்ப ஓடிக் கொண்டே இருந்தான். சளைப்பு, அலுப்பு போன்ற வார்த்தைகள் அவன் அகராதியில் இல்லவே இல்லையோ என்று எனக்குப் பட்டது.
மஹா என் பால்ய சிநேகிதி. பள்ளியிலிருந்து கல்லூரி வரை ஒன்றாக விளையாடி, ஒன்றாகப் படித்து, ஒன்றாக ஊர் சுற்றி, ஒன்றாக அரட்டை அடித்து..
உண்மையில் நாங்கள் தான் முதல் உடன் பிறவா சகோதரிகள்.. அதன் பிறகு தான்… …
எங்கள் நட்பைப் பார்த்து மதுரையில் நிறைய பேருக்கு பொறாமை உண்டு.. அந்தக் கண், இந்தக் கண் என்று பல கண்கள் எங்கள் நட்பைத் தாக்கியதன் விளைவு.. திருமணத்திற்குப் பிறகு இருவரும் வெவ்வேறு திக்கில் பிரிந்து விட்டோம்.. நான் கல்கத்தா வாசியானேன்.. மஹா ஜெய் பூரில் வாழ்க்கைப் பட்டாள். தொடர்பு விட்டுப் போனது..
அவரவர் குடும்பம், குழந்தைகள் என்று கடந்து கடமைகள் முடிவதற்குள் நாற்பது வருடங்கள் ஓடி விட்டன. எதேச்சையாக முக நூலில் மஹாவின் பக்கத்தைப் பார்க்க.. பழைய நட்பு மீண்டும் துளிர் விட்டது..
மஹா கட்டாயப் படுத்தியதன் பேரில்.. இதோ ஜெய்பூர் வந்து நான்கு நாட்கள் ஓடிவிட்டன..
இந்த நான்கு நாட்களும் எங்களுடைய மலரும் நினைவுகளை விட என்னை ரொம்பவேக் கவர்ந்தது புஜ்ஜி தான்.. சுமார் இருபத்தி ரெண்டு வயது இருக்கலாம்.. சுமாரான உயரம்.. வெள்ளைக் காரர்களுக்கு சவாலான நிறம்.. எப்போதும் சிரித்த பிரகாசமான முகம்..
”புஜ்ஜி இந்த ஊர் காரன் தான்.. ஆனா நான் கொடுத்த டிரெய்னிங்ல.. பிரமாதமா தமிழ் பேசுவான்.. அதோட நம்ம சமையல், பழக்க வழக்கங்கள்.. எல்லாம் கத்துக் கொடுத்திருக்கேன்”
இதைச் சொல்லும் போதே மஹாவின் முகத்தில் பெருமிதம்..
புஜ்ஜியின் சமையலைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். அவன் கையில் அன்னபூரணி பர்மனெண்டாக டேரா அடித்து விட்டாளோ என்று கூட எனக்கு சந்தேகம் வந்து விட்டது.. நளபாகம் என்று நாம் சொல்வதெல்லாம் பழைய கதை.. இனிமேல் புஜ்ஜி பாகமாகத் தான் இருக்க வேண்டும்..
நம் அவியல், பொறியல், கூட்டு (பூசணி, கடலை பருப்பு கூட்டின் ருசி இன்னமும் என் நாக்கை விட்டு அகலவில்லை.. எல்லாம் என் டிரெய்னிங் தான் என்று மஹாவின் ஜம்பம் வேறு), சாம்பார்.. எனக்கு இந்தக் கைப் பக்குவம் இல்லையே என்று வெட்கிப் போனேன்..
இதோடு வட நாட்டு வகையராக்கள்.. கேட்கவே வேண்டாம்.. அசத்தலோ அசத்தல்..
”புஜ்ஜி.. புதன் கிழமை ராகு காலம் எப்போடா?”
மஹாவுக்கு சின்ன வயதிலிருந்தே ராகுகால விஷயத்தில் குழப்பம் தான்.. நாற்பது வருடம் ஆகி இன்னமும் அது நீடிக்கிறது..
“ராகு காலம் பன்னெண்டு லேர்ந்து ஒண்ணரை.. எம கண்டம் காலைல ஏழரைலேர்ந்து ஒன்பதுக்கு முடிஞ்சாச்சு.. இன்னிக்கு சாயங்காலம் 6.40 வரை விசாக நட்சத்திரம்.. அப்புறம் அனுஷம்.. சதுர்த்தி திதி அஞ்சு ரெண்டு வரை.. அப்புறம் பஞ்சமி.. சித்த யோகம்”
திறந்த குழாயைப் போல் மட மடவென்று அடுக்கிக் கொண்டே போனான் புஜ்ஜி..
“டேய் டேய்.. மெதுவாடா.. இவ்வளவு வேகமாச் சொன்னா நான் எப்படிப் பிடிச்சுக்கறது?.. நானும் ஜானுவும் நகைக் கடைக்குப் போகணும்.. அதான் கேட்டேன்”
“இன்னிக்கு வேண்டாம்.. தங்கம் ரேட் இன்னிக்கு ரொம்ப அதிகமா இருக்கு.. இன்னும் ரெண்டு நாள் பொறுத்துக்குங்க”
நான் ஆச்சர்யப் பட்டுப் போனேன்.. இந்த சின்ன மண்டைக்குள் இத்தனை விஷயங்களா? இவனுக்குள் இருப்பது மூளையா இல்லை கம்ப்யூட்டரா?
மறுநாள் விநாயகர் சதுர்த்தி என்று திடீரென்று எனக்கு உரைத்தது.
“மஹா.. நாளைக்குப் பிள்ளையார் சதுர்த்தி.. மாவு அரைச்சு ஏற்பாடு பண்ண வேண்டாமா?”
“ஏன் கவலைப் படறே? நாளைக்குப் பிள்ளையார் சதுர்த்தின்னு போன வாரமே எனக்கு புஜ்ஜி ஞாபகப் படுத்திட்டான்.. எல்லாம் அவன் பார்த்துப்பான்”
எனக்கு சத்தியமாகப் புரியவில்லை.. மற்ற விஷயங்கள் சரி.. எப்படி கொழுக்கட்டை.. அதுவும் பூரணம் வைத்த மோதகம்?..
குழப்பத்துடனேயே அன்றிரவு தூங்கிப் போனேன்..
காலையில் எழுந்து குளித்து சமயலறைக்கு வந்த எனக்கு அதிர்ச்சி.
மடியாக இடுப்பில் வேஷ்டியும், துண்டும் அணிந்து அடுப்பில் பூரணம் கிண்டிக் கொண்டிருந்தான் புஜ்ஜி.. பக்கத்தில் மாவு கிளறி தயாராக இருந்தது..
“புஜ்ஜி.. இதெல்லாம் எப்போ?”
“காலைல எழுந்து குளிச்சு மடியாப் பண்ணிட்டேன்.. பூஜை காரியம்லியா?”
“நான் வேணும்னா மோதகம் பண்ணித் தரட்டுமா?”
”வேண்டாம் வேண்டாம்.. அதோ.. பால் சூடா இருக்கு.. பக்கத்துல டிகாக்ஷன் இருக்கு.. காப்பி மட்டும் கலந்துக்குங்க”
என்றவன் பூரணத்தை பதம் பார்த்து இறக்கி வைத்தான்..
நான் காப்பி குடித்தபடியே அவனை வியந்து பார்த்துக் கொண்டிருந்தேன்..
அழகாக.. ரொம்பவே நேர்த்தியாக.. அதே சமயத்தில் ரொம்பவே சுலபமாக புஜ்ஜி மாவை எடுத்து தட்டி அதில் பூரணம் வைத்து குவித்து.. மோதக வடிவம் கொடுத்து..
நமக்கெல்லாம் ஒவ்வொரு மோதகமும் ஒவ்வொரு வடிவில் வரும்.. ஆனால் அச்சில் செய்தது போல் புஜ்ஜி செய்த மோதகம் ஒவ்வொன்றும் ஒரே மாதிரி இருந்ததை நம்ப முடியாமல் பார்த்தேன்..
பிறகு அதை எடுத்து இட்லி தட்டில் வைத்து குக்கரில் வைத்து மூடி..
உடனே பூஜை அறைக்கு விரைந்தான்..
அங்கே சுத்தம் செய்து தனி பீடம் ஒன்றை அமைத்தான்.. அதில் பொடிக் கோலம் போட்டு நாயகமாக பிள்ளையார் சிலை ஒன்றை வைத்தான்.. அலமாரியிலிருந்து ஒரு ஜரிகை துண்டை எடுத்து பிள்ளையார் இடுப்பில் கட்டினான்.. உண்மையிலேயே பிள்ளையாருக்கு பஞ்ச கச்சம் கட்டியது போலிருந்தது.. பிறகு பிள்ளையாருக்கு பூணூல் அணிவித்தான்.. ஏற்கனவே வாங்கி வைத்திருந்த அழகான காகிதக் குடையைப் பொருத்தினான்.. தோரணம் கட்டினான்.. எருக்க மாலை அணிவித்து அருகம் புல்லை இரண்டு பக்கமும் சாய்த்து வைத்து..
இதற்குள் சமயலறையிலிருந்து குக்கர் சத்தம் கேட்கவே உடனே ஓடி அடுப்பை அணைத்து விட்டு வந்து..
பிள்ளையாருக்கு முன்னால் கன்யா கோலம் போட்டு.. பூஜைக்குத் தேவையான பாத்திரங்கள், புஷ்பம், அட்சதை, குங்குமம், சந்தனம், பால், கற்பூரம் எல்லாம் தயாராக எடுத்து வைத்தான்.. விளக்கில் புதிதாக திரி போட்டு எண்ணை விட்டான். வத்திக் குச்சியை பக்கத்தில் வைத்தான்.
மஹாவின் கணவர் உட்கார்ந்து பூஜை செய்ய ஆசனம் எடுத்துப் போட்டான்.. அர்ச்சனை புத்தகத்தை எடுத்து வைத்தான்.
நான் வாயடைத்துப் போய் உட்கார்ந்திருந்தேன்.
பூஜை முடிந்து கற்பூர ஆரத்தி காட்டும் போது
”வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்
மாமலராள் நோக்குண்டாம்
மேனி நுடங்காது –பூக்கொண்டு
துப்பார் திருமேனித்
தும்பிக்கை யான்பாதம்
தப்பாமற் சார்வார் தமக்கு.”
கணீர் குரலில் பாடினான் புஜ்ஜி.
“மஹா.. போன ஜென்மத்துல நீ ரொம்ப புண்ணியம் பண்ணியிருக்கே.. இல்லைனா புஜ்ஜி மாதிரி..”
என்னை முடிக்க விடாமல் மஹா ஆரம்பித்தாள்.
“இங்கிவனை யான் பெறவே.. என்ன தவம் செய்து விட்டேன்.. புஜ்ஜி.. எங்கிருந்தோ வந்தான்..”
அழகாகப் பாடி முடித்தாள்..
அன்று வடை, பால் பாயசம் என்று சமையலில் அமர்களப் படுத்தி விட்டான் புஜ்ஜி.
அன்றிரவு கல்கத்தாவுக்கு போன் செய்து என் கணவரிடம் புஜ்ஜி புராணம் பாடினேன். கொஞ்சம் விட்டால் அவர் உடனே கிளம்பி புஜ்ஜியைப் பார்க்க ஜெய்பூர் வந்து விடுவார் போலிருந்தது.
மறு நாள் நானும் மஹாவும் எலிக் கோவிலுக்குப் போவதாக ஏற்பாடு. சாப்பிட்டு முடித்து தயாராக நினைத்த போது தான் என் டிரெஸ்ஸை இஸ்தரி பண்ண வில்லை என்ற நினைப்பு வந்தது. ஆபத் பாந்தவன்.. அநாத ரட்சகன் புஜ்ஜி தான் என் நினைவில் முதலில் வந்தான்..
“புஜ்ஜி.. புஜ்ஜி..”
வழக்கமாக கூப்பிட்ட அடுத்த கணம் புஜ்ஜி ஆஜர் ஆகி விடுவான். ஆனால் நான் அழைத்ததும் அதிசயமாக அவன் வரவில்லை.
மஹா தான் வந்தாள்.
“புஜ்ஜி இல்லையே.. என்ன வேணும் ஜானு?”
”டிரெஸ் இஸ்தரி பண்ணணும்.. புஜ்ஜி எங்க போயிருக்கான்?”
“இன்னிக்கு வெள்ளிக் கிழமையாச்சே.. மசூதிக்குப் போயிருக்கான்”
நான் புரியாமல் கேட்டேன்.
”மசூதிக்கா? எதுக்கு?”
“நமாசுக்குத் தான்..”
நான் அதிர்ந்து போனேன்.
”என்ன சொல்றே மஹா?”
“புஜ்ஜிங்கறது நாங்க செல்லமாக் கூப்பிடற பேர்.. அவனோட நிஜப் பேர் அக்மத்”
உண்மையிலேயே என்னுடைய அதிர்ச்சி அளவிட முடியாததாக இருந்தது..
புஜ்ஜி.. நமாஸ்.. அக்மத்..
சமத்துவம் பேசும் பலருக்கு மத்தியில்..
புஜ்ஜி.. என் கண் முன் விஸ்வரூபம் எடுத்து நின்றான்.