கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்

நன்றியறிதல்!
‘நன்றி மறப்பது நன்றன்று’ என்றே நமக்கெல்லாம் சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். ஒருவர் செய்த உதவியை மறக்காமல் இருப்பதே நன்றியறிதல். நன்றியறிதலின் சிறப்பு குறித்தே திருவள்ளுவரும், ‘செய்ந்நன்றி அறிதல்’ என்னும் அதிகாரத்தில் பத்துக் குறட்பாக்களைச் சொல்கிறார். நன்றியறிதல் என்பது வாழ்வின் மிக முக்கியமான அறங்களுள் ஒன்று என்றால் அது சற்றும் மிகையல்ல.
‘நன்றி’ – “ஒருவர் செய்த நன்மைக்காக, உதவிக்காக அல்லது செலுத்திய அன்பு போன்றவற்றுக்காக அவரிடம் காட்டும் உணர்வு; விசுவாசம்; (gratitude). இந்த மரியாதை உணர்வையும், விசுவாசத்தையும் வெளிப்படுத்துவதற்கான சொல் – ‘நன்றி’ என்கிறது க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி. ஒருவர் செய்த உதவியை முன்னிட்டு, அவரிடம் கொள்ளும் கடமை உணர்வு, ‘நன்றிக் கடன்’!
நம் பெற்றோரிடம் தொடங்குகிறது நம் நன்றிக்கடன். நம்மை வளர்த்து, ஆளாக்கி ஒரு நல்ல நிலையிலே வைத்திருக்கும் பெற்றோருக்கு நாம் செய்யும் நன்றிக்கடன், அவர்கள் வயோதிகத்தில் நாம் அவர்களை அன்புடன் அரவணைத்துக் காப்பது! அறிவுக்கண்ணைத் திறந்த ‘குரு’ விற்கு செய்யும் நன்றிக் கடன், அவர் காட்டிய நல்வழிப்பாதையில் ஒழுக்கத்துடன் நடந்து, அறம் காப்பது! வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும், நமக்கு உதவி, அன்புடன் கைதூக்கி விட்டவர்களை மறக்காமல், நம்மால் ஆன ‘நன்றி கடனை’ செய்வது மிகவும் உயர்வானது.
செய்ந்நன்றியறிதல் நம் சங்க இலக்கியங்களிலும் பேசப்படுகிறது. ஆலத்தூர் கிழார் என்னும் புலவர், கிள்ளிவளவனைப் புகழ்ந்து பாடும் பாடலில் இப்பண்பு சிறப்பாகச் சொல்லப்படுகிறது.
“ஆன்முலைஅறுத்த அறனிலோர்க்கும்
மாண்இழை மகளிர் கருச்சிதைத்தோர்க்கும்
பார்பார்த் தப்பிய கொடுமை யோர்க்கும்
வழுவாய் மருங்கின் கழுவாயும் உளவே
நிலம்புடை பெயர்வது ஆயினும், ஒருவன்
செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்என
அறம்பா டிற்றே ஆயிழை கணவ!”. (புறம் 34).
(செய்தி – செய்த நன்றி)
பசுவின் பால்தரும் மடியை அறுத்த அறனில்லாதவர்க்கும், மகளிரின் கருவைச் சிதைத்தவர்க்கும், பார்ப்பாரிடம் தவறிழைத்த கொடுமையோர்க்கும், தீமைகளை உண்டாக்கியவர்கள் அத்தீமைகளில் இருந்து தப்பிப் பிழைக்க வழிகள் உண்டு. ஆனால், உலகமே தலைகீழாக மாறினாலும், செய்ந்நன்றி மறந்தவர்களுக்கு, அதிலிருந்து தப்பிப் பிழைக்க வழியில்லை என்று அறநூல்கள் வலியுறுத்தியுள்ளன – என்பது இப்பாடலின் பொருள்.
“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு”. (குறள் எண் 110)
என்று அறம் பாடும் திருக்குறள் இச்செய்தியையே வலியுறுத்துகிறது!
கர்ணனிடம், கண்ணன் சொல்கின்றான்: “கர்ணா! நீ குந்தியின் மைந்தன். ஆதித்த பகவானால் உதித்தவன். ஆதலால் பாண்டவர்கள் உன் சகோதரர்கள். அவர்களுடன் வந்து சேர்ந்துவிடு. மூத்தவனான உன்னை அவர்களும் வணங்கி ஏற்றுக் கொள்ள, இந்த அகிலத்தையே ஒரு குடைக்கீழ் நீ ஆளலாம். துரியோதனன் மூடன். தீயவருடன் சேர்ந்திருப்பது பிழை. தூயவர்களுடன் சென்று சேர்ந்து விடு”
‘ஆரென் றறியத் தகாதஎனை
அரசு மாக்கி முடிசூட்டிச்
சீருந் திறமும் தனதுபெருந்
திருவும் எனக்கே தெரிந்தளித்தான்
பாரின் றறிய நூற்றுவர்க்கும்
பழிதீர் வென்றிப் பாண்டவர்க்கும்
போரென் றறிந்தும் செய்ந்நன்றி
போற்றா தவரில் போவேனோ’
ஊர் பெயர் தெரியா என்னை, அரசனாக்கி, அண்ணா என்றழைத்து சீரும், சிறப்பும் தந்தான் துரியோதனன். அந்த செய்ந்நன்றியை ஒருபோதும் நான் மறவேன் – என்று கூறி கர்ணன் மறுக்கிறான்.
தன்னை ஈன்ற அன்னை குந்திதேவிதான் என்பதை அறிகிறான் – இழிகுலத்தில் பிறந்தவன் என்று செல்லுமிடமெல்லாம் அவமானம் – தன் வீர பராக்கிரமங்களை அங்கீகரிக்காத அரசவைகள் – ஆச்சாரியர்கள். எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு – குந்தியின் மகனென்றால் கர்ணனுக்குக் கிடைக்கும் மரியாதை, அவனது வீரத்திற்கான பெருமை, பாண்டவர்களின் மூத்த சகோதரன் என்கிற பெரிய இடம்! எவ்வளவு பெருமை!!
பெட்டியில் வந்த பட்டுப் புடவையைப் போர்த்தியவுடன், கண்ணீர் துளிர்க்க, கொங்கையில் பால் சுரக்க, பாசத்தில் மடியில் கிடத்திய மகன் கர்ணனிடம் கேட்கிறாள் குந்திதேவி! “மகனே! நீ சிறிதும் தயங்காமல் பாண்டவர்களுடன் சேர்ந்து விடு”!
“அம்மா, நீங்கள் பழிக்கு அஞ்சி என்னை நதியினிலே விட்டீர்கள். துரியோதனன் என்னை அன்புடன் ஆதரித்து, நாட்டினையும் தந்தான் – எல்லோருக்கும் பொல்லாதவன், எனக்கு நல்லவன். சொக்கட்டான் ஆடும்போது, அவன் மனைவியின் ஆடையை இழுத்து ஆட்டத்தைத் தொடரச் சொன்னபோது, அவளது மேகலாபரணம் அறுந்து சிந்தியது.
அங்கு வந்த துரியோதனன், என் தலையை சீவியிருக்கவேண்டும் – அவன் என்ன செய்தான் தெரியுமா அம்மா? ‘பானுமதி, நீ அண்ணாவுடன் ஆடு. இந்த முத்துக்களை நான் எடுக்கவோ, கோக்கவோ?’ என்றான். அவனை எப்படி என்னால் விட்டு வரமுடியும்? செஞ்சோற்றுக் கடன் தீர்க்க, அவனுடன் போர்க்களம் சென்று அவனுக்காக என் உயிரையும் கொடுப்பேன். அதுவே என் புகழும், கருமமும், தருமமும் ஆகும்” என்கிறான் கர்ணன்.
அதற்கும் ஒரு படி மேலே செல்கிறான் கர்ணன். அன்னையால் கைவிடப்பட்ட, பரிதாபத்திற்குரிய பாத்திரம் கர்ணன். ஆனாலும், ஈன்ற அன்னைக்குச் செய்ய வேண்டிய செய்ந்நன்றிக் கடனையும் அவன் மறக்கவில்லை. கண்ணன் தந்திரமாகக் கேட்கச் சொல்லும் இரண்டு வரங்களை குந்தி கேட்க, “அம்மா, உனக்கு நான் எதுவும் செய்யவில்லை. வறியவர்க்கு வாரி வழங்கினேன். நீ கேட்கும் வரங்களை தர மறுப்பேனா?” என்று தன் உயிருக்கே ஆபத்தான அந்த வரங்களை அளிக்கிறான்!
அதற்கு அவன் அன்னையிடம் கேட்கும் வரம், எந்தக் கல்மனதையும் கரைய வைக்கும் வரம். “போரில் நான் மாண்டால், உன் கண்ணீர் என் மீது சிந்த அழுவாயா? அன்றாவது நான் குந்தியின் மைந்தன் என்று உலகம் அறியட்டும். என் பிறப்பு, குலம் மீதான களங்கம் மறையட்டும்”
செய்ந்நன்றிக் கடன் தீர்ப்பதில் கர்ணனுக்கிணை கர்ணன் மட்டுமே.
“எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தம்கண்
விழுமம் துடைத்தவர் நட்பு” (குறள் 107).
(நம்முடைய துன்பத்தைப் போக்கியவரின் நட்பை ஏழேழ் பிறவிகளிலும் மறவாது நினைந்து போற்றுவர் பெரியோர்).
செய்ந்நன்றியறிதலின் பெருமையை அறிவோம் – நன்றியறிதலை ஒரு விரதமாகக் கொள்வோம்!!
ஆதாரம்: சங்க இலக்கியம் – நெடுநல்வாடை (கங்கை புத்தக நிலையம்), மகாபாரதம் – தெய்வத்திரு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள், திருக்குறள் பி.எஸ். ஆச்சார்யா (நர்மதா பதிப்பகம்).

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.