திரை ரசனை வாழ்க்கை 5 – எஸ் வி வேணுகோபாலன் 

                                                              பேராண்மை 
RIP Director S. P. Jananathan | Iyargai | Peranmai | Labam | #RIPJANANATHAN - YouTube
                   அசாத்திய வாசிப்பு அனுபவத்தின் திரைமொழி 

நல்ல கதை அல்லது கட்டுரை வாசித்தால், எப்படியாவது எழுதியவர் மின்னஞ்சல் முகவரி அல்லது அலைபேசி எண் தேடிப்பெற்று எண்ணங்களை அவர்களுக்கு உடனடி தெரிவிப்பது உண்டு, அது வழக்கமானது.

திரைப்படங்களில் ஆழ்ந்து ரசித்துப் பார்த்துவிட்டு, இயக்குநருக்கு உடனே கருத்தைத் தெரிவிக்கத் துடிப்பு இருந்தபோதும், அழைத்துப் பேசவோ, பிரதிபலிப்புகளைப் பகிர்ந்து கொள்ளவோ அத்தனை வாய்ப்பு கிடைத்தது இல்லை. மிகச் சில இயக்குநர்களிடம் பேசியது உண்டு. அந்த வரிசையில் 45 நிமிடங்களுக்குமேல் உரையாடலும், கருத்து பரிமாற்றமும் சாத்தியமான தருணம் மறக்க முடியாதது,  அறிமுகம் அற்ற ஓர் எளிய ரசிகரின் குரலை எத்தனை மதித்துக் கேட்டுக் கொண்டிருந்த காதுகளும் உள்ளமும் அவருடையவை! 

எஸ் பி ஜனநாதன் அவர்கள் அண்மையில் மறைந்தது பேரிழப்பு, இனி எப்போது எப்படி அவரோடு பேச…

பேராண்மை திரைப்படம் பார்த்துவிட்டு வந்தது உண்மையில் உள்ளக் கிளர்ச்சியை வழங்கி இருந்தது. 

தத்துவ தரிசனங்கள், மிக அதிகம் எம் ஜி ராமச்சந்திரன் படங்களில் பார்த்திருக்கிறோம். அதற்கேற்ற திரைப்பாடல்கள் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அள்ளியள்ளிக் கொடுத்தது அவரது படத்திற்கு அதிகம். ‘வறுமை நிலைக்கு பயந்து விடாதே, திறமை இருக்கு மறந்து விடாதே, திருடாதே’  என்ற பல்லவியை சிந்தித்தால் மட்டுமே பல நூறு திறப்புகள் கிடைக்கும். அதிகம் திரையில் பார்த்தறியாத வித்தியாசமான கதைக்களத்தில் நுட்பமான தத்துவப் பார்வையைத் துணிந்து முன்வைத்த முக்கியமான படங்கள் வரிசையில் என்றென்றும் பேசப்படும் ஒன்றாக அமைந்தது பேராண்மை. 

பரீஸ் வஸீலியெவ் அவர்களது அற்புதமான ‘அதிகாலையின் அமைதியில்’ நாவல், எண்பதுகளின் புதிய வாசிப்பு அனுபவத்தில் அசர வைத்த படைப்பு. கமாண்டர் வஸ்கோவ், இராணுவ விதிமுறைகளை இலக்கண சுத்தமாகக் கடைப்பிடிக்கத் துடிக்கும் ஒரு முரட்டு செயல்வீரர். அவரது உள்ளத்தில் தாய்நாடு காத்தல் எனும் இலட்சியத்தைக் காட்டிலும் முன்னுரிமை வேறு எதற்கும் கிடையாது. தாறுமாறான குடிப்பழக்கம், ஒழுங்கீனம் கொண்ட ஆட்களையே தொடர்ந்து அனுப்பும் மேலதிகாரிகளிடம் வெறுத்துப் போய் அவன் எழுப்பும் புகார்களின் எரிச்சலில், அவன் உறக்கத்தைக் கெடுக்கும்படியான ‘நல்லெண்ணத்தோடு’ வித்தியாசமான குடும்பப்பின்னணி, வாழ்க்கை போக்கு உள்ள பெண்கள் சிலரை உள்ளடக்கிய படையை வழி நடத்துமாறு பணிக்கப்படுகிறான் வஸ்கோவ். 

அசாத்திய குறும்பும், வம்பும், ஏளனமும், கேலி கிண்டலுமாக அவனை அலைக்கழித்துப் பின்னிப் பின்னி எடுக்கின்றனர் அந்த இளம் பெண்கள். ஆனால், அவனோ எல்லாவற்றையும் எச்சிலோடு சேர்த்து விழுங்கித் தனது இராணுவ சீருடைக்கு அர்ப்பணிக்கப்பட்டவனாக அவர்களைத் தலைமை தாங்கி முன்னே நடந்து கொண்டே இருக்கிறான். காலம் தான் எத்தனை முற்றிலும் வேறான அனுபவங்களை சுமந்து கொண்டு அவனுக்கு இரண்டடி முன்னே நடந்து போய்க்கொண்டிருக்கிறது என்று விரியும் அபாரமான கதையில், தாய் நாட்டுக்கு எதிரான அராஜக அயல்நாட்டு ஆட்கள் சிலரை அந்தக் காட்டில் அந்தப் பெண்களில் ஒருத்தி அடையாளம் கண்டு விழிப்புற வைப்பதும், அவளது அனுமானத்திற்கு அதிகமான மடங்கு ஆட்கள் ஆயுத பலத்தோடு பின்னர் மெல்ல மெல்ல அவர்கள் அறியக் கிடைப்பதும், துணிவுமிக்க அந்தப் பெண்களின் அளப்பரிய தியாகத்தில், அவர்களை அந்த உறுதிமிக்க கமாண்டர் முறியடிப்பதும், அதனிடையே அந்தப் பெண்களை ஒவ்வொருவராக பலிகொடுக்க நேரும் துயரத்தில் அவன் இதயம் வெடிக்கத் தன்னையும் அவர்களையும் வேறொரு தரிசனத்தில் கண்டெடுப்பதும் அசாத்திய வாசிப்பு அனுபவமாகும். உண்மைக்கு நெருக்கமான போர்க்களக் கதைகளை வாசிப்பது கல்லையும் நெகிழ்விப்பது.

ஜனநாதன், இப்பேற்பட்ட கதையை எப்படி தமிழ் ரசிகர்களுக்கான திரைக்கதையாக உருவாக்கிப் படமாகப் படைத்தார் என்பது எப்போது சிந்தித்தாலும் மலைப்புற வைப்பது. ஜெயம் ரவிக்கு அப்படியான படத்தின் நாயகனாக நடிக்கக் கிடைத்தது அவருக்கும் அரிய அனுபவமாகவே இருந்திருக்க வேண்டும். மாடு ஒன்று கன்றுபோடும் காட்சியில் மிகவும் தன்னியல்பாக நடித்திருப்பார் அவர். படத்தின் இறுதிக் காட்சிகளில் சாகசத் துடிப்பும் வெளிப்படுத்தி இருப்பார். பேராண்மை படத்தில் முக்கியமான பாத்திரங்களில் தோன்றிய பொன்வண்ணன், வடிவேலு, ஊர்வசி, அந்தக் கல்லூரிப் பெண்களாக வந்தவர்கள் உள்ளிட்டு திரைக்கலைஞர்கள் யாராக இருப்பினும்,வாழ்நாள் பெருமைக்குரிய பங்களிப்பாகவே அவர்களுக்கு அமைந்திருக்கும்.

துள்ளலும் எள்ளலும் ஆட்டமும் பாட்டமும் நிறைந்த இளமைப்பருவத்தில் என் எஸ் சி பயிற்சியின் பகுதியாக அந்த மலைப்புறப் பகுதிக்கு வரும் பெண்களில் மிகுந்த குறும்புக்குரிய சிலரும், அப்பாவிப் பெண் ஒருத்தியும் தனித்து நிற்கின்றனர். பயிற்சி கொடுக்கும் இளம் அதிகாரியைத் தங்களது சீண்டலில் சிக்கவைத்து, எல்லா விளைவுகளுக்கும் அவனையே பொறுப்பாக்கி அவமானத்திற்குரிய இடத்தில் நிற்க வைக்கும் அளவுக்கு முன்னேறும் அவர்களது விளையாட்டில், அவனோ அவர்களை வழிப்படுத்தும் நோக்கில் முக்கியமான பயிற்சி என அவர்களை மட்டுமே தேர்வு செய்து தனியே அழைத்துச் செல்லும் இடத்தில் கதையின் சுவாரசியம் தொடங்குகிறது.

அதன் நீட்சியில் அதிர்ச்சியாக விரியும் அனுபவங்களில், தேசத்தை சீர்குலைக்கும் நோக்கில் வெளிநாட்டு சதியின் மூலம் அந்த மலைக்காட்டுப் பகுதியின் இதயப்பகுதியில் ஊடுருவி இருக்கும் சிலரை இந்தப் பெண்களில் ஒருத்தி பார்த்துவிடுகிறாள். அந்த அதிகாலையின் அமைதி அப்படித்தான் குலையத் தொடங்குகிறது. அதற்குப்பின் அந்தப் பெண்கள், படிப்படியாகத் தங்களது சீண்டல்களை நழுவவிட்டுப் படிப்படியாக போராளிகளாக உயர்வதும், அவர்களில் இருவரை அயலநாட்டுக் கொடியவர்களுக்கு எதிரான போரில் இழக்க நேரும் துயரமும், அனுபவங்களற்ற ஒரு குறும்படையை வைத்துக் கொண்டு பெரும்பயிற்சியோடு வந்திறங்கி இறங்கியிருக்கும் அந்நிய வெறிக்கூட்டத்தை நாயகன் அழித்தொழிப்பதும் தான் திரைக்கதை.

ஆனால், இந்த நிகழ்வுகளை அப்படியே அவனுக்கு எதிராக சித்தரித்து, அவனை வில்லனாக நிறுத்த முனையும் பேராசையும், ஊழலும் மிகுந்த வனத்துறை உயர் அதிகாரி ஒருவரது அராஜக செயல்பாடும், நாயகனின் இலட்சிய தீரத்தில் விளைந்த தேச பக்த வெற்றியைத் தனதாக அவன் கூச்சமின்றி சுவீகரித்துக் கொண்டு நிற்க முனையும் கள்ளத்தனமும் பட்டவர்த்தனமாக சித்தரித்த இடத்தில் ஏராளமான நடப்புக்கால செய்திகளைச் சொல்லிவிட்டிருந்தார் ஜனநாதன். 

ஒரு பாவமும் அறியாத மலைவாசிகளின் நேர்மையும், தன்னலமற்ற சீரான வாழ்க்கையும், துணிவுமிக்க எதிர்வினைகளும் இயற்கை வளங்களைத் திருட்டுத் தனமாகச் சுரண்டி விற்கத் துடிக்கும் அதிகார வர்க்கத்தால் எப்படி பொறுத்துக் கொள்ள முடியாது என்பதை தமிழகத்தில் வாச்சாத்தி நிகழ்வு உள்ளிட்டு அறிந்திருக்கிறோம். தங்களுக்கு காட்டு பிராணிகளைப் பிடித்து அடித்துக் கொடுக்கத் தவறும் மலைக்குறவர் ஒருவர் மீது அபாண்டமாக பழி சுமத்தி நீதி மன்றத்தில் நிறுத்த, அந்த எளிய மனிதர் முன்வைக்கும் வாதங்களை ஆயிஷா இரா நடராசன் தமது சிறுகதை ஒன்றில் கண்ணில் நீர் வர சித்தரித்திருப்பார். 

பேராண்மை படத்தில், கற்பழிப்பு என்ற விஷயமே எங்கள் மலைச்சாதி மக்கள் அறியமாட்டார்கள் என்று கதறுவார் வடிவேலு. தன்னை மோசமாக சித்தரித்த மேலதிகாரியைப் பழிவாங்கும் நோக்கம் கூட இராது, தனது கடமையில் வழக்கம்போல் நாயகன் இயங்கிக் கொண்டிருக்கும் இடத்தில் தான் கதை நிறைவு பெறுகிறது. ஆனால், அவன் இதயக் குமுறலும், பறிகொடுத்த தோழியரின் கண்ணீர் நினைவுகளோடு சொந்தவூர் நோக்கிய பயணத்தில் அங்கிருந்து புறப்படும் கல்லூரிப் பெண்கள் குழுவும், பொறுப்பாசிரியரும் தங்களது பெருந்துயரத்தை வெளிப்படுத்தும் முகங்களோடு ரசிகர்களுக்கு உறக்கமற்ற அடுத்த சில இரவுகளைப்  பரிசாக அளித்தே விடை பெறுவார்கள். 

‘ழேனியா, மன்னித்து விடு என் கண்ணே, உன்னை மிக மோசமாகத் தான் புதைக்கிறேன்’ என்று கண்ணீர் மல்க, கமாண்டர் வஸ்கோவ், கையில் கிடைத்த மரக்குச்சிகளைக் கொண்டு மண்ணைக் கீறி அந்த வீர மங்கைக்கு இறுதி மரியாதையை செலுத்திவிட்டுக் கண்ணிமைக்கும் நேரமும் சோர்வுறவோ, கண்ணயரவோ வாய்ப்பின்றி எதிரிகளை முறியடிக்க விரையும் இடம், அதிகாலையின் அமைதியில் நாவலில் மறக்க முடியாத பக்கங்களில் ஒன்று. கதையின் இறுதிப் பக்கங்களில், ஒருவன் விடாமல் எதிரிகள் எல்லோரையும் அழித்து முடித்த கணத்தில், தங்களது செம்படை தான் தன்னை நோக்கி வந்து கொண்டிருக்கிறது என்று காதுகளில் கேட்டு மூளைக்கு உறுதிப்படுத்தவும் தான் தன்னை மயக்கமுற்று வீழ அவன் அனுமதித்தான் என்று முடியும் வாக்கியம் இதயத்தை ஏதோ செய்துவிடும் ஆற்றல் கொண்டது. பேராண்மை படத்தின் நாயகன், தன்னை சிக்கவைக்கும் மேலதிகாரியிடமிருந்து விடுபட்டு சதிகாரர்களை அழித்தபின்தான் தன்னையே ஒப்புக்கொடுக்கவும் தயாராகும் இடம் இதயத்தை அரற்ற வைப்பது.

அதிகாலையின் அமைதி நாவலில் மனத்தை வருடும் மெல்லிய காதல் ஒன்று பரவுவதும், ஜனநாதன் சித்தரிப்பில் பேராண்மையில் பொலிவுற அமைந்திருக்கும். நகைச்சுவை காட்சிகளில் கூட மூல நாவலின் பிடிமானங்களை சிறப்பாகக் கொண்டுவந்திருப்பார் இயக்குநர். 

படத்தின் உயிர் நாடி, கல்லூரிப் பெண்களாக வருவோரின் பேசத்துடிக்கும் கண்களும், நாயகன் அவர்களோடு பேசும் பொதுவுடைமை அரசியலும். மிக சிக்கலான பொருளாதார கோட்பாடுகளை, உழைப்பின் மதிப்பை, உபரி மதிப்பை  மர நாற்காலி, சாக் பீஸ் வைத்து விளக்கும் வசனங்களும் என்று குறிப்பிட முடியும். ஆயுதங்கள் இல்லாது கூட ஓரு புரட்சி சாத்தியமாகலாம், ஆனால், புத்தகங்கள் இல்லாமல் அல்ல என்று சொல்லப்படுவதுண்டு. மலைப்புறமக்களின் எளிய குடியிருப்புகளில் வன்முறை ரெய்டு நடத்தும் அதிகார வர்க்கத்திற்கு, இளம் தலைமுறையினர் வைத்திருக்கும் புத்தகங்களே வெடி குண்டுகளாகக் கண்ணுக்குப் புலப்படுவது படத்தின் முக்கிய காட்சிப்படுத்தலில் ஒன்று. 

10 Years of Peranmai: 20 facts you probably didn't know about Jayam Ravi's  landmark action-drama- Cinema express

பழைய காலத்து சிமெண்ட் காரை பூசிய தரையில் கோரைப் பாய் மீது மீளா உறக்கத்தில் கிடத்தப்பட்டிருந்த ஜனநாதன் உடலும், அவரது உழைப்பை அலங்கரித்துக் கொண்டிருந்த ஓர் எளிய பூமாலையும் வாட்ஸ் அப் பகிர்வில் காணக் கிடைத்தது மதிப்பு மிக்க வணக்கத்தைக் கோருகின்றது.

பரீஸ் வஸீலியெவ் அவர்களது நாவலை வாசித்துப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. மீண்டும் எடுத்து வாசித்தே தீர வேண்டும் என்று அடிக்கடி தோன்றிக் கொண்டிருக்கும். கார்ல் மார்க்ஸ் நினைவு தினமான மார்ச் 14 அன்று ஒரு தற்செயல் ஒற்றுமையில் நம்மைப் பிரிந்து விட்ட ஜனநாதன் அவர்களது அர்ப்பணிப்பு மிக்க திரைக்கலை இலட்சிய வேட்கையின் நினைவில் பெருகும் கண்ணீரைத் தவிர்த்து அந்த வாசிப்பு நிகழ சாத்தியம் இல்லை.

 

5 responses to “திரை ரசனை வாழ்க்கை 5 – எஸ் வி வேணுகோபாலன் 

  1. வேணுகோபாலன் எழுதிய ஜனநாதன் பற்றிய கட்டுரை இணைய தளம் மூலம் படித்தேன்.நான்1975 முதல் மேற்கு மாம்பலத்தில் வசித்த காலத்தில் திரைப் பட கலைஞர்கள் மற்றும் திரை ப்படம் தொடர்பான தொழில் நுட்ப கலைஞர்கள் ,ஆகியோரை நேரில் சந்தித்து உரையாடி யது இன்னும் நினைவில் இருக்கிறது ‌எழுத்தாளர்களான லஷ்மி, சிவசங்கரி இந்துமதி, பாலகுமாரன், சுஜாதா போன்ற வர்களுடன் நிறைய முறை உரையாடி யது இன்னும் நினைவில் இருக்கிறது.இயக்குநர்களான பாலு மகேந்திரா, ரங்கராஜன்,கே.பாலச்சந்தர் பட்டியல் நீளும் .வழக்கு ஏண்28/7 என்ற திரைப்படம் வெளியானது அதை இயக்கிய பாலாஜி சக்திவேல் அவர்கள் மொபைல் எண் வாங்கி அவரிடம் அந்த திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள நிகழ்ச்சி அம்பத்தூரில் நடை பெற்றது என்று தெரிவித்தேன்.அவ்வளவு ஏன் ஏவிஎம் தயாரித்த சகலாகலாவல்லவன் திரைப்படம் பிரிமீயர் காட்சி பார்த்து விட்டு அதை பற்றிய விமர்சனம் ஏவிஎம் சரவணன் அவர்களிடமே தெரிவித்தேன்.

    Like

  2. பரீஸ் வஸீலியெவ், அவர்களையும் இணைத்து, ஆழமான, அருமையான, அஞ்சலி தோழர் ஜனனதனுக்கு …

    Like

  3. பேராண்மை திரைப்படத்தின் விமர்சனத்தோடு பரீஸ் வசீலியெவ் எழுதிய ‘அமைதியின் காலையில்’ நாவல் பற்றிய செய்தியையும் அருமையாகச் சொல்லியுள்ளீர்கள். அத்துடன் பேராண்மை’ படத்தின் இயக்குநர் ஜன நாதனுக்கு புகழஞ்சலி செலுத்தும் துயரம் நேர்ந்தது அவலமே.

    Like

  4. இயக்குனர் திரு ஜன நாதன் அவர்களுக்கு மனமார்ந்த சிறந்த அஞ்சலி.
    பேராண்மை திரைப்படத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரின் சார்பில் ஆசிரியர் திரு எஸ் வி வி அவர்களின் கட்டுரை மிகச்சிறப்பு.

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.