கில்காமேஷின் காவியம் இது வரைக்கும் கண்டுபடிக்கப்பட்ட அகழ்வுகளின் படி இது தான் மிகவும் பழமையான எழுத்து வடிவிலுள்ள கதை அல்லது இலக்கியம் என்பதாகப் பல வரலாற்றுக் குறிப்புகள் பதிவாகி வருகின்றன.
சுமேரியாவிலுள்ள “உருக்” தேசத்தை ஆட்சி செய்த அரசன் கில்காமேஷ் பற்றியும், அவன் வாழ்ந்த நாட்களில் நடந்த வெள்ளப்பெருக்கைப்பற்றியும் பேசுகிற அந்நவீனம் உண்மையில் இப்படி ஒரு அரசன் இருந்ததற்கான எந்த ஆதாரங்களையும் தரவில்லை. ஆனாலும் மிகப்பெரிய புகழ் பூத்த சுமேரிய அரசர்கள் வரிசையில் கில்காமேஷ்ஷையும் சேர்த்திருக்கிறார்கள்.
கில்காமேஷின் கதை 12 களி மண்தகடுகளில் எழுதப்பட்டிருந்தது. . இன்றைய ஈராக் நாட்டோடு சிரியா, துருக்கி, இரான் ஆகிய நாடுகளின் பகுதிகளை இணைத்த நிலப்பரப்பே மெசபடோமியா. கிரேக்க மொழியில் மெசபடோமியா என்றால் இரண்டு நதிகளுக்கு இடையே உள்ள இடம் என்று பொருள். அந்த இரு நதிகள், யூப்ரட்டீஸ் மற்றும் டைக்ரிஸ். உலகத்தில் எல்லா நாகரிகங்களும் தோன்றுவதும் வளர்வதும் நதிக்கரைகளில் தான். இந்த வகையில் மொசப்படோமியாவின் “உருக்” கை ஆண்ட மன்னர்களுள் முக்கியமானவர் கில்காமேஷ் (Gilgamesh) .
கில்காமேஷின் கதையைச் சுருக்கமாகச் சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம்.
அதன் இலக்கிய நயத்துடன் கூடிய முழுக்கதையைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.
கில்காமேஷ் தான் உலகின் முதல் சூப்பர் ஹீரோ!
அவனது தாய் தேவ உலகில் அறிவின் தெய்வம்! அழகும் ஆற்றலும் நிறைந்த பேரரசி. அவனது தந்தையோ சுமேரியாவின் உருக் என்ற நாட்டின் பேரரசன். அதனால் அவன் மனித இனமும் தேவ இனமும் கலந்து அமைந்தவன். மூன்றில் இரண்டு பங்கு தேவன். ஒரு பங்குதான் மனிதன்.
( கிட்டத்தட்ட நம் பீஷ்மர் போல – அவர் சந்துனு மகாராஜாவிற்கும் கங்கைக்கும் பிறந்தவரல்லவா? அதுபோலத்தான் கில்காமேஷும்!)
தேவர்கள் அவனுக்கு ஒரு லட்சிய உடலைக் கொடுத்தார்கள். சூரிய தேவன் அபாரமான அழகைக் கொடுத்தான். புயல் தேவன் அவனுக்கு யாருக்குமில்லாத தைரியத்தைக் கொடுத்தான். அவன் பலம் பயங்கரமாக இருந்தது. காட்டுக் காளை போல அவன் பலம் அனைவருக்கும் பயத்தை உண்டு பண்ணியது.
கில்காமேஷ் உலகெங்கும் சுற்றி வந்தான். அவனை எதிர்க்கும் துணிவு எந்த நாட்டு மன்னனுக்கும் இல்லை. உருக் தேசத்து மன்னனாக உருவெடுத்ததும் தன் நாட்டை உலகிலேயே மிகச் சிறந்த நகரமாக மாற்றினான். நகரைச் சுற்றி அதிசயம் என்று போற்றக்கூடிய நீண்ட மதில் சுவர்களை அமைத்தான். அனு, இஷ்டார், இயன்னா போன்ற தேவதைகளுக்கு மாபெரும் கோவில்களைக் கட்டினான்.
அவனது போர்க்குணம் அவனை மாபெரும் போர் வெறியனாக மாற்றியது. நாட்டில் உள்ள அத்தனை இளைஞர்களையும் தன் படையில் சேரவேண்டும் என்று கட்டாயப் படுத்தினான். குழந்தைகளைக் கூட விட்டு வைக்கவில்லை.
அதைவிடக் கொடுமை என்னவென்றால் நாட்டில் உள்ள அத்தனைப் பெண்களும் தனக்கே சொந்தம் என்று இருந்தான். கன்னிப் பெண்கள் தங்கள் கன்னிமைகளை அவனுக்குக் காணிக்கையாகக் கொடுக்கவேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாக்கப்பட்டனர். திருமணமான பெண்களையும் அவன் விட்டுவிடவில்லை. அவனைத் தட்டிக் கேட்க யாருமில்லை! எதிர்த்துப் போரிட யாருக்கும் துணிச்சல் இல்லை . அந்த ஆணவத்தால் எதையும் தன்னிச்சையாகச் செய்யும் அகங்காரம் பிடித்த அரக்கனாக இருந்தான் கில்காமேஷ்.
மக்கள் அவனைக் கண்டு பயந்தனர். அனைவரும் ஒன்று கூடி அரு என்ற தேவதையிடம் தங்கள் மன்னன் செய்யும் கொடுமைகளைத் தெரிவித்து தங்களுக்கு விடிவுகாலம் விரைவில் பிறக்க அருளுமாறு வேண்டிக்கொண்டனர். அரு என்ற அந்தத் தேவதை மற்றத் தேவதைகளையும் அழைத்துக் கொண்டு, சிருஷ்டி தேவதையான அருரு என்பவரிடம் கில்காமேஷின் கொடுமைகளைத் தெரிவித்தனர்.
தான் சிருஷ்டித்த ஒருவன் இவ்வளவு கொடுங்கோலனாக இருக்கின்றானே என்று யோசித்தாள் அருரு. மற்ற தேவதைகளே இதற்கு வழியையும் கூறின.
” நீ தானே இவனை இவ்வளவு பலசாலியாக சிருஷ்டித்தாய் ! அவனுக்கு ஈடாக இணையாக இன்னொரு பலசாலியை உற்பத்தி செய்து தா! அவன் உள்ளமும் இவன் உள்ளத்தைப் போலக் கொந்தளிப்பாக இருக்கவேண்டும். அவர்கள் இருவரும் போரிடட்டும் . அவர்கள் போர் உருக் நகரைக் காப்பாற்றுவதாக இருக்கட்டும்” என்று வேண்டினார்கள்.
தேவி அருரு தான் கற்பனையில் ஒரு உருவத்தைச் சிருஷ்டி செய்தாள். வானத்து வெளிச்சத்தைக் கொண்டு அந்த உருவத்தைச் செய்தாள். தண்ணீரில் தன் கை விரல்களை நனைத்து களிமண்ணை உருட்டிக் காட்டில் போட்டாள்.
என்கிடு என்ற மாபெரும் மனிதன் உருவானான். அவன் உடல் கரடு முரடானது. யுத்த தேவதைகளின் குணங்கள் அவனிடம் குடிபுகுந்தன. பெண்கள் கூந்தலைப் போல அவன் தலைமுடி காற்றில் பறந்தது. ஆடு மாடுகளின் தேவதை போல அவன் உடலில் ரோமங்கள் படர்ந்திருந்தன. மொத்தத்தில் அவன் மிகப் பலம் வாய்ந்த காட்டு விலங்காய்த் திகழ்ந்தான்.
எங்கிடு மான்களுடன் சேர்ந்து புல்லைத் தின்றான். காடு மிருகங்களுடன் ரகசியமாக இரவில் நீர் அருந்தப் போனான். மிருகங்களை வேட்டையாடும் மனிதர்களுக்கு அவன் சிம்ம சொப்பனமாக இருந்தான். அவனைப் பார்த்த வேட்டைக்காரர்கள் அவன் பலத்தைக் கண்டு பயந்து ஓடினர். அவர்களால் மிருகங்களை வேட்டையாட முடிவதில்லை. காட்டு மிருகங்கள் அனைத்தும் எங்கிடு சொற்படி கேட்டு நடந்தன.
வேட்டைக்காரர்கள் தங்கள் தந்தையிடம் எங்கிடுவின் வீரதீர பராக்கிரமங்களைப் பற்றிக் கூறினர். அவனை வெல்ல என்ன வழி என்றும் வினவினர்.அந்தப் பெரியவர், வேட்டைக்காரர்களை உருக் தேசத்து அரசன் கில்காமேஷிடம் முறையிடும்படிக் கூறினார். மிருகங்களுடன் மிருகமாக இருக்கும் எங்கிடுவை மனிதனாக மாற்ற ஒரு வழியையும் கூறினார்.
அதாவது கில்காமேஷின் ஊரிலிருந்து அவன் அனுமதியுடன் ஓர் அழகிய பெண்மணியை அழைத்து வந்து அவள் அழகுக்கு எங்கிடுவை அடிமையாக்கும்படி கூறினார். அது அவனை மனிதனாக்கிவிடும் என்றும் மிருகங்கள் அதன்பின் அவனைத் தங்கள் கூட்டத்திலிருந்து விலக்கிவிடும் என்றும் கூறினார். ( நம் ரிஷயசிருங்கர் கதை போல் இல்லை? )
வேட்டைக்காரர்களில் ஒருவன் கில்காமேஷிடம் சென்று எங்கிடுவின் மிருக பலத்தைப் பற்றிக் கூறி தன் தந்தை கூறியபடி ஓர் அழகியை அனுப்பும்படி வேண்டினான்.
கில்காமேஷ் அவன் வேண்டியபடி ஆலயத்திலிருந்த அழகு மங்கை ஒருத்தியை அவனுடன் அனுப்பினான். எங்கிடு வருவதற்காக அந்த அழகி காட்டில் காத்திருந்தாள்.
(தொடரும்)
நன்றி: கில்காமேஷ் – உலகத்தின் ஆதி காவியம் தமிழில் : க நா சு சந்தியா பதிப்பகம்
கதையின் இடையே வரும் உங்கள் கருத்துக்கள் சுவையாக உள்ளன நண்பரே. வாழ்த்துகள்.
LikeLike