பல்லவப்பாண்டியர்
இது என்னடா இது – கிணறு வெட்டப் பூதம் புறப்பட்டது போல?
பல்லவப்பாண்டியர்?
பல்லவர் கதை சொல்லும்போது நாம் பாண்டியர்களைப் பற்றி சிறிது மட்டும் சொன்னோம். பல பாண்டியர்களைப் பற்றி சுருக்கமாகக் கூடச் சொல்லவில்லை. அந்தக் குறை எதற்கு? மேலும், சரித்திரப்பாடத்தில் ‘பல்லவர் ஆட்சிக்காலத்தில் ஆட்சி செய்த பாண்டியர்களைப் பற்றி ஒரு கட்டுரை வரைக” என்று கேள்வி வந்தால் நீங்கள் ‘ஞே’ என்று முழிக்கலாகுமா?. உங்களுக்காகவே அந்த பல்லவப்பாண்டியர் பற்றி இந்த இதழில் சுருக்கமாகச் சொல்வோம்.
இவர்களை இடைக்காலப் பாண்டியர் என்றும் சொல்லலாம்.
- கடுங்கோன் கி.பி. 575-600
- அவனி சூளாமணி கி.பி. 600-625
- செழியன் சேந்தன் கி.பி. 625-640
- அரிகேசரி கி.பி. 640-670
- ரணதீரன் கி.பி. 670-710
- பராங்குசன் கி.பி. 710-765
- பராந்தகன் கி.பி. 765-790
- இரண்டாம் இராசசிம்மன் கி.பி. 790-792
- வரகுணன் கி.பி. 792-835
- சீவல்லபன் கி.பி. 835-862
- வரகுண வர்மன் கி.பி. 862-880
- பராந்தகப் பாண்டியன்கி.பி. 880-900
பாண்டிய நாட்டின் சிற்றரசனாகப் பதவியேற்ற பாண்டிய மன்னன் கடுங்கோன் களப்பிரர் ஆட்சியிலிருந்து பாண்டிய நாட்டை மீட்டெடுத்தான். கி.பி. 575 ஆம் ஆண்டில் மதுரையைத் தலைநகராக்கி முடிசூட்டிக் கொண்டான். சற்றேறக்குறைய 400 ஆண்டுகளாய் தமிழகத்தை ஆண்டுவந்த களப்பிரர்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது. கடுங்கோன் ஆட்சி கி.பி 600 வரை நீடித்ததது.
பாண்டிய மன்னன் கடுங்கோனுக்குப் பிறகு அவரது மகன் மாறவர்மன் அவனி சூளாமணி பாண்டிய நாட்டின் மன்னனானான். அவன் கி.பி. 600ம் ஆண்டு முதல் கி.பி.625ம் ஆண்டு வரையில் ஆட்சி செய்தான். இவன் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தின் வட பகுதியில் சிம்ம விஷ்ணு பல்லவ நாட்டை ஆட்சி புரிந்தான். பல்லவ மன்னன் சிம்ம விஷ்ணுவிற்கும் பாண்டிய மன்னன் மாறவர்மன் அவனி சூளாமணிக்கும் போர் நடைபெற்றது. இந்தப் போரில் பல்லவ மன்னர் சிம்ம விஷ்ணு வெற்றி பெற்றான்.
பாண்டிய மன்னனான செழியன் சேந்தன் கி.பி. 625ம் ஆண்டு முதல் கி.பி. 640ம் ஆண்டு வரை பாண்டிய நாட்டை ஆண்டான். இவன் மாறவர்மன் அவனி சூளாமணியின் மகன். சடையவர்மன் (ஜடாவர்மன்) என்ற சிறப்பு பட்டத்தைப் பெற்றிருந்தான். இந்த படத்தைப் பெற்ற முதல் பாண்டிய மன்னன் இவன். சடையன் என்பது சிவபெருமானின் மற்றொரு பெயராகும். சேர மன்னனைப் போரில் வென்றதால் வானவன் என்ற பட்டப்பெயரும் இவன் பெற்றான். இவன் பெயரால் அமையப்பெற்ற ஊர் – இன்றைய நாளில் விளங்கும் ‘சேந்தமங்கலம்’ நாமக்கல் மாவட்டத்தில் உள்ளது. இவன் ஆட்சி காலத்தில் தமிழகத்திற்கு வந்த சீனநாட்டுப் பயணி யுவான் சுவாங் பாண்டிய நாட்டிற்குச் சென்றிருந்தார். ‘பாண்டிய மன்னன் செழியன் சேந்தன் இறந்து விட்டான். அதனால் பாண்டி நாடு பஞ்சத்தால் வாடுகிறது’ என்று தனது பயணக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
அரிகேசரி பராங்குசன் தன் தந்தை செழியன் சேந்தனுக்குப் பின் பாண்டிய மன்னனானான். அரிகேசரி கி.பி. 640ம் ஆண்டு முதல் 670ம் ஆண்டு வரையில் பாண்டிய நாட்டை ஆண்டான். அரிகேசரிக்கு திருவிளையாடல் புராணத்தில் சுந்தர பாண்டியன், கூன் பாண்டியன் என்ற பெயர்கள் உண்டு. இந்த கூன் பாண்டியனைப் பற்றி முன்பே நாம் விலாவாரியாக எழுதியிருக்கிறோம். ஆதலால் மறுபடியும் எழுதினால் நீங்கள் கடுங்கோபம் கொள்வீர்கள் என்று அறிவதனால் – அடுத்த பாண்டியனுக்குப் போவோம்.
அரிகேசரியின் மகன் கோச்சடையான் ரணதீரன். கோச்சடையான் என்றவுடன் ‘தலைவா’ என்று யாரும் எம்பிக் குதிக்கவேண்டாம்! இவன் தான் ஒரிஜினல் கோச்சடையான்! ரணதீரன் கி.பி. 670 முதல் 710 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்தான். ரணதீரன் – சேரர், சோழர், கொங்கர், கர்நாடர், ஆய்மன்னர் ஆகிய மன்னர்களைப் போரில் வென்றான். ரணதீரன் பெற்ற (சரி.. வைத்துக்கொண்ட) பட்டங்கள்: கோச்சடையான், செங்கோல் தென்னன், வானவன், செம்பியன், மதுரகருநாடகன், கொங்கர் கோமான், மன்னர் மன்னன் என்று பல.
பராங்குசன் கோச்சடையான் ரணதீரனின் மகன். இவன் கி.பி. 710 முதல் 765 வரை பாண்டிய நாட்டை ஆட்சி செய்தான். இவன் தனது பாட்டனின் பெயரான அரிகேசரியைப் பட்டமாகப் பெற்றிருந்தான். மேலும் முதலாம் இராசசிம்மன், தேர்மாறன், மாறவர்மன் எனவும் அழைக்கப்பட்டான். பராங்குசன் ஆட்சிக்காலத்தில் பல்லவ நாட்டை இரண்டாம் நந்திவர்மன் ஆண்டுவந்தான். பாண்டிய நாட்டின் வட எல்லையில் நடைபெற்ற போரில் பாண்டிய மன்னன் பராங்குசன் பல்லவ மன்னன் இரண்டாம் நந்திவர்மனைத் தோற்கடித்தான். நென்மேலி, மண்ணை ஆகிய இடங்களில் நடை பெற்ற போரில் பல்லவ மன்னன் இரண்டாம் நந்திவர்மன் பாண்டிய மன்னன் பராங்குசனைத் தோற்கடித்தான் என்று திருமங்கை ஆழ்வார் குறிப்பிட்டுள்ளார். பாண்டிய மன்னன் பராங்குசன் கங்க நாட்டின் மன்னனான சிறீபுருசனை போரில் வென்று அவன் மகள் பூதசுந்தரியை மணந்தான். பாண்டியன் பராங்குசன் வடக்கில் உள்ள மாளவ நாட்டை போரில் வென்றான். வெற்றியின் பரிசாக மாளவநாட்டு மன்னரின் மகளை மணந்து கொண்டான். (மன்னர்கள் சண்டைக்குச் செல்வது இதற்குத்தானோ? – சரி நமக்கு எதற்கு வம்பு!)
பாண்டிய மன்னன் பராங்குசன் மற்றும் கங்க அரசன் மகள் பூதசுந்தரி ஆகிய இருவருக்கும் பிறந்தவன் பராந்தகன்.
(இதைப் பாருங்கள்.. பராந்தகன் – பராங்குசன் இருவரும் வேறு வேறு. அவர்கள் மாறி மாறி வருவார்கள். இரண்டையும் போட்டுக் குழப்பிக்கொள்ளாதீர்கள்!) பராந்தகன் கி.பி 765 முதல் 790 வரை பாண்டிய நாட்டை ஆட்சி செய்தான். மன்னன் பராந்தகன் நெடுஞ்சடையன் மற்றும் சடையவர்மன் என்ற பட்டப்பெயர் பெற்றவன். கி.பி. 767 ஆம் ஆண்டு காவிரிக் கரையின் தெற்குப் பகுதியில் உள்ள பெண்ணாகடத்தில். பாண்டியன் பராந்தகன் பல்லவ நந்திவர்மனைத் தோற்கடித்தான். பராந்தகனின் ஆட்சிக் காலத்தில் பாண்டிய நாட்டில் பெரியாழ்வார் வாழ்ந்தார். பெரியாழ்வாரிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தான் மன்னன் பராந்தகன். ஆண்டாள் திருப்பாவை காலம் இதுவாகவே இருக்கக் கூடும்.
பாண்டிய மன்னன் பராந்தகனின் மகன் இரண்டாம் இராசசிம்மன் கி.பி. 790ம் ஆண்டு முதல் 792ம் ஆண்டு வரை பாண்டிய நாட்டை ஆட்சி செய்தான். இரண்டு ஆண்டுகளே ஆட்சி செய்த இம்மன்னன் ஆட்சியில் போர் எதுவும் நிகழவில்லை. போர் செய்யவில்லையென்றால் அந்த மன்னனைப் பற்றி நமக்குப் பேச்சு என்ன வேண்டிக்கிடக்கு?
இரண்டாம் இராசசிம்மனைத் தொடர்ந்து அவன் மகன் வரகுணன் பாண்டிய மன்னனாகப் பதவியேற்றான். பாண்டிய மன்னன் முதலாம் வரகுணன் கி.பி. 792ம் ஆண்டு முதல் கி.பி. 835ம் ஆண்டு வரை பாண்டிய நாட்டை ஆட்சி செய்தான். மாறன் சடையன் மற்றும் சடையவர்மன் என்ற பட்டப்பெயர்களாலும் இவன் அழைக்கப்பட்டான். சோழ நாடு தவிரத் தொண்டை நாட்டு மன்னன் தந்திவர்மனுடன் போர் செய்து வென்று தொண்டை நாட்டையும் பாண்டிய நாட்டின் அதிகாரத்தின் கீழ் வரகுணபாண்டியன் கொண்டுவந்தான்.
வரகுணபாண்டியனுக்குப் பிறகு அவன் மகன் சீவல்லபன் பாண்டிய நாட்டின் மன்னனாகப் பதவியேற்றான். சீவல்லபன் கி.பி.835 முதல் 862 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்தான். சீவல்லபன் பல்லவ, மற்றும் சிங்கள நாடுகளுடன் போர்புரிந்து வெற்றி/தோல்வி அடைந்தது அனைத்தையும் முன்பு விரிவாகக் கூறியிருப்பதால் இப்பொழுது அடக்கி வாசித்து அடுத்த பாண்டியனைப் பார்க்கப் போவோம்.
பாண்டிய மன்னன் சீவல்லபனின் முதல் மகனான வரகுண வர்மன் கி. பி. 862ம் ஆண்டு முதல் கி.பி.880ம் வரை ஆண்டான். வரகுண வர்மன் பல்லவ மன்னன் நிருபதுங்கவர்மனுடன் உறவு வைத்துக் கொண்டு இருந்தான். வரலாற்று சிறப்புமிக்க திருப்புறம்பியப் போரில் பாண்டிய மன்னன் வரகுணவர்மன் மற்றும் நிருபதுங்கவர்மன் படைகள் பெரும் தோல்வித் தழுவின. இந்தப்போரில் அபாராஜித பல்லவனும் ஆதித்த சோழனும் வென்றனர். இதைத்தான் சென்ற அத்தியாயத்தில் பார்த்தோமே!
பாண்டிய மன்னன் இரண்டாம் வரகுண பாண்டியன் திருப்புறம்பியம் போரில் ஆதித்த சோழனிடம் தோற்றதைத் தொடர்ந்து பாண்டிய நாட்டில் தொடர்ந்து உள்நாட்டுக் குழப்பங்கள் ஏற்படலாயின. இதைத் தொடர்ந்து கி.பி. 880ம் ஆண்டு பாண்டிய மன்னன் இரண்டாம் வரகுண பாண்டியன் ஆட்சியை அவன் தம்பி பராந்தகப் பாண்டியன் கைப்பற்றிக் கொண்டான். ‘தம்பி உடையான் படைக்கு அஞ்சான்’ என்ற காலம் போய் ‘தம்பி உடையான் தம்பிக்கு அஞ்சுவான்‘ – என்றாயிற்று. இரண்டாம் வரகுண பாண்டியன் துறவறம் பூண்டான். பராந்தகப் பாண்டியன் சேர மன்னனின் மகள் வானவன் மாதேவியை மணந்து கொண்டான். திருநெல்வேலி மாவட்டத்தில் சேரமாதேவி என்ற நகர் இவள் பேரில் அமைக்கப்பட்டது.
மூன்றாம் இராஜசிம்ம பாண்டியன் – பாண்டிய மன்னன் பராந்தக பாண்டியனுக்கும் சேர நாட்டு இளவரசி வானவன்மாதேவிக்கும் மகனாகப் பிறந்தவன். கி.பி. 900ம் ஆண்டு பாண்டிய மன்னனாகப் பதவியேற்றான்.
களப்பிரர் ஆட்சி தமிழகத்தில் முடிந்த பிறகு எழுந்த இரண்டு பேரரசுகளான பாண்டியர்களும் பல்லவர்களும் தங்களுக்கும் சுமார் 200 ஆண்டுகளுக்குள் 27 முறைப் போர் புரிந்தனர் என்பது வரலாறு மற்றும் சோழர்கள் ஆதிக்கம் செய்யும் காலம் வந்தது. ஒரு உறையில் பல கத்திகள் இருப்பது சாத்தியமில்லையல்லவா! சோழரின் சூரியன் பாண்டிய நிலவை அமாவாசையாக்கியது! (சோழர்கள் சூரிய குலம் – பாண்டியர்கள் சந்திர குலம் – என்பதை என்னமாக எழுதி விட்டோம்!)
பின்னொரு காலம் பாண்டிய நிலவு முழு நிலவாகும்.
அது வரை சோழரின் காட்டில் மழை!
தமிழகத்தின் ஒரு பொற்காலம் வருகிறது.. பராக்!.
அதைக் காண்போம் விரைவில்
(மூன்றாவது பாகம் முற்றும்)
அடுத்து வருவது பிற்காலச் சோழர்களின் வீர வரலாறு