தேர்தல் களம்
சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்னர், ஆம் 1962 ம் ஆண்டு . நான் படித்த கிராம பஞ்சாயத்து நடு நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பறையில் ஒரு சில மாணவர்களைத் தவிர மற்றவரைக் காண வில்லை. ஐந்தாம் வகுப்பிலும் அப்படியே. இரண்டு வகுப்புகளுக்கும் ஒரே ஆசிரியர், இரண்டு வகுப்பிலும் சேர்த்து 25 மாணவர்களுக்கு மேல் இருக்காது. என்னையும் சேர்த்து இரண்டு – மூன்று மாணவர்கள் மட்டுமே அமர்ந்து இருந்தோம்.
என்னவாயிற்று ?. ஒலி பெருக்கியில் பலத்த சத்தத்துடன் ஒருவர் பேசிக் கொண்டிருக்கிறார். வண்டி மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கிறது. வண்டியின் பின்னால் ஓ என்ற இரைச்சலுடன் மாணவர் கூட்டம் ஓடுகிறது. கிராமத்திற்கு ஒலி பெருக்கி வருவதே திருவிழா காலத்திலும் தேர்தல் காலத்திலும்தான். கடையில் அமர்ந்திருந்தவர்களும், சற்று தள்ளி நின்று கொண்டிருந்தவர்களும் வண்டியின் அருகில் வந்து செவி கொடுக்கிறார்கள்.
நீங்கள் நினைப்பது சரியே. அது தேர்தல் திருவிழா காலம். சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் வரை கூட தேர்தல் ஒரு திருவிழாவாகத்தான் நடந்து முடியும்,
திரு. சேஷன் கொண்டுவந்த தேர்தல் விதி முறைகளும் நடை முறைகளும் அன்றில்லை. எனக்கு நினைவு தெரிந்து பெப்ரவரி மாதம்,1962 ல் நடந்தது மூன்றாவது பொதுத்தேர்தலாகும்.
தமிழகத்தைப் பொருத்தவரை பிளவு படாத காங்கிரஸ் காமராசர் தலைமையில் ஆளும் கட்சியாகவும் வளர்ந்து வந்த தி. மு. க சற்று வீரியம் குறைந்த ஆனால் பிரதான எதிர்க் கட்சியாக அண்ணாதுரை தலைமையிலும் மோதிக் கொண்டன. முதல் பொதுத் தேர்தலில் 62 இடங்களைப் பெற்று எதிர்க் கட்சியாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சி தேய்ந்து மெலிந்து இரண்டாவது பொதுத்தேர்தலில் 4 இடங்களையும் மூன்றாவது பொதுத்தேர்தலில் தி.மு.க வுடன் கூட்டணி அமைத்து தட்டுத் தடுமாறி இரண்டு இடங்களில் வெற்றி வாகை சூடியது. இன்றும் நிலைமை மாற வில்லை. ஆனால் கொள்கைப் பிடிப்பிற்காக எதையும் இழக்கத் துணியும் கம்யூனிஸ்டுகள் இன்றும் உள்ளனர்.
தேர்தலைச் சந்திக்கும் முன் அன்றைய தேர்தல் களத்தைப் பார்ப்போம்
இன்று போல் அல்லாது ஊரில் சுவர் கண்ட இடங்களில் எல்லாம் காங்கிரஸின் காளை மாட்டுச் சின்னமும் தி.மு.க வின் உதய சூரியன் சின்னமும் வேட்பாளரின் பெயருடன் எழுதப் பட்டிருக்கும். மீதமுள்ள இடத்தில் சுவரொட்டிகள் ஒட்டப் பட்டிருக்கும். இளைஞர்களும், நடுத்தர வயதினரும் தேர்தலைப் பற்றிப் பேசி தம் பொது அறிவை ஆங்காங்கே காட்டிக் கொண்டிருப்பார்கள்.
காலை வரும் தினத் தந்தி ஒன்றுதான் தேர்தல் குறித்த நாட்டு நடப்பை எங்கள் கிராமத்திற்குக் கொண்டு வரும். காலையில் டீ கடையில் அமர்ந்து ஒருவர் உரத்த குரலில் பேப்பரைப் படிக்கச் சுற்றி நான்கு பேராவது கேட்டுக் கொண்டிருப்பார்கள். பின்னர் செய்தி குறித்து விவாதம் நடக்கும். மின்சாரம் இல்லாததால் காலையும், மாலையும் 15 நிமிடங்கள் ஒலி பரப்பாகும் தமிழ் செய்தி அறிக்கை கேட்கும் கொடுப்பினை கிராமத்தினர்க்கு கிடையாது.
குடும்பத் தலைவன் எந்த கட்சியோ, வீட்டில் மனைவி மக்கள் அனைவரும் அக்கட்சியே மாற்றுக் கருத்து இருக்காது.
அன்றும் சாதிப் பற்று அதிகம். வேட்பாளர்களே கவுண்டர், நாயக்கர், ரெட்டியார், முதலியார் என்ற இணை பெயர்களுடன்தான் அதிகம் காணப்படுவர்.
இளைஞர்கள் கொடி பிடித்து சைக்கிளிலும் , நடந்தும் நாள் முழுதும் ஓட்டு கேட்பர்.
ஒருகட்சி ஒரு தெருவில் ஓட்டு கேட்டால் மற்ற கட்சி வேறு ஒரு தெருவில் . இடையே சந்தித்தால் வெறுப்பு தெரியாது. நட்பும் மாமன், மச்சான் உறவும்தான் தெரியும்.
வீதியெங்கும் வைக்கோல் பிரி தோரணங்கள் ஊடே கட்சிக் கொடியுடன் களை கட்டும். தேர்தலுக்கு முதல்நாள் இளைஞர்கள் உறங்காது அடுத்த நாளுக்கான திட்டம் தீட்டுவர்.
வாகனம் வைத்து வாக்காளர்களை அழைத்து வந்து ஓட்டுச் சாவடி உள் விடுவது குற்றமில்லை. வரும் வழியிலேயே ஊர் பெரியவர் தான் சார்ந்த கட்சிக்கு ஒட்டு போட வெற்றிலையில் சத்தியம் வாங்கி இருப்பார். ஓட்டு மாறி விழாது.
காங்கிரஸ் வேட்பாளர் பெரும்பாலும் ஏரியாவில் பெரிய பெரிய மனிதராக இருப்பார். சில இடங்களில் இறங்கி வந்து ஒட்டு கேட்பதே அவருக்குக் கௌரவ குறைச்சலாக இருக்கும்.
ஓட்டு கேட்கும் பொழுது காலில் விழும் பழக்கம் வந்தது தி.மு.க வினரால்.
காங்கிரஸ் காரர்கள் பெரும் பாலும் சற்று வயதானவர்களாய் , முழங்கை வரை வரும் கதர் சட்டையணிந்து , டிரவுசர் தெரியுமளவிற்கு மெலிதான நான்கு முழ கதர் வேஷ்டியுடன் வலம் வருவர்.
பென்சிலால் கோடிலுக்கப் பட்ட மீசை வெள்ளை கைத்தறி சட்டை வாயல் வேஷ்டி என்றால் அது பெரும்பாலும் தி.மு.க வினர். காங்கிரஸின் பெரிய மனிதர்கள் அதட்டி, உருட்டி, ஓட்டு சேகரிப்பார்கள். அதற்கு எதிர்க் குரல் கொடுத்து ஓட்டு கேட்பார்கள் தி.மு.க வை சேர்ந்த இளவட்டங்கள். தேர்தல் தினத்திற்குப் பின்னர் ஒரு பெரிய திருவிழா நடந்து முடிந்த களை ஊரில் தெரியும். ஓட்டு எண்ணுதலும் தேர்தல் முடிவு தெரிந்து கொள்ளுதலும் ஒரு குட்டி திருவிழா.
எண்ணிக்கையின் முன்னேற்றத்தை டவுனிலிருந்நு வரும் பஸ் பயணிகள் கண், காது மூக்கு வைத்துச் சொல்லிச் செல்வார்கள். சரியான முடிவைத் தெரிந்து கொள்ள அடுத்த நாளைய தினசரிக்குக் காத்திருக்க வேண்டும். பின் நாட்களில் வானொலி இரவு முழுதும் தேர்தல் அறிக்கை கூற ஆரம்பித்து. கூடவே கொசுறாக இடையே திரை இசை. குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே கேட்கும் திரைப்படப் பாடல் இரவு முழுதும் கேட்பதே தனி சுகம். சில முடிவுகள் தெரிந்து கொள்ள இரண்டு நாட்களுக்கு மேலும் ஆகும்.
நாம் தொலைத்த சுகங்களில் அன்றைய தேர்தலும் ஒன்று.
அடுத்த மாதம் கூட தேர்தலாமே? தேதி என்றைக்கு எனப் பார்க்க வேண்டும். இன்று வரை வேட்பாளர் யார் என தெரியாது. சுவர் சித்திரங்களோ, சுவரொட்டிகளோ கண்களில் பட வில்லை, பொதுக்கூட்டம் எங்கும் இல்லை. ஒலி பெருக்கியின் சத்தம் காதில் விழ வில்லை. ஓட்டுப் போட அரை மணி நேரம் செலவழிக்க வேண்டும். எண்ண ஆரம்பித்தால் அரை மணி நேரத்தில் யார் முதல்வர் எனத் தெரிந்து விடும்.
உப்புச் சப்பில்லாத தேர்தல்.
சுவையான பிளாஷ்பேக்
LikeLike