‘அம்மோவ் துணி போடும்மா, பாத்திரம் எல்லாம் கழுவிட்டேன்’ அஞ்சலையின் குரல் அமுதமாகக் காதில் பாய்ந்தது. கோரனாக் கால லாக் டவுனுக்குப் பிறகு அஞ்சலை இப்போதுதான் வேலைக்கு வர அரம்பித்துள்ளாள். நம்பிக்கையான, உண்மையான வேலையாள் கிடைப்பது பூர்வ ஜன்ம புண்யம். அந்தப் புண்யம் சாவித்திரிக்கு அஞ்சலை ரூபத்தில் கிடைத்துள்ளது.
வேலை எல்லாம் முடித்தப்பிறகு மெதுவாக ‘அம்மோவ், இரண்டு நாள் லீவு குடும்மா, பெண்ணையும், பேத்தியையும் பார்த்து ரொம்ப நாள் ஆகிறதம்மா. இந்த கணேச சதுர்த்தி ஒட்டி ஒரு எட்டு போய்ட்டு வந்துடரேன்மா’ என்றாள். இதைக் கேட்ட சாவித்திரி பேப்பரைத் தலைகீழாக புரட்டிக்கொண்டிருந்த கணவர் சுந்தரத்திடம் ‘நாளை இரண்டு நாட்கள் துணி அதிகம் போடாதீர்கள். அஞ்சலை லீவு கேட்கிறாள்’ என்று தொடர்ந்து மெதுவாக ‘அவள் பெண்ணையும் பேத்தியையும் பார்த்து வரணும் என்கிறாள். ஒரு ஐநூறு ரூபாய் தரட்டுமா’ என்று சுந்தரத்தின் முகத்தையேப் பார்த்து நின்றாள். சாவித்திரிக்கு இரக்க குணம் கொஞ்சம் ஜாஸ்திதான்.
உடனே சுந்தரம் ‘சரி துணி அதிகம் போடவில்லை. ஆனால் இப்ப தீபாவளி வருகிறதே, அப்ப போனஸ் கொடுத்தா பத்தாதா, இப்ப வேற தரணுமா’ என்று கணக்குப் பேசினான். சாவித்திரியும் விடாமல் ‘பாவம் அவள், “இந்தக் கோரனாக் காலத்தில் அவளது வருமானம் மிகவும் குறைந்து விட்டது, ரொம்பவும் வறுமையில் இருக்கிறாள், விலைவாசியும் ஏறிப் போயுள்ளன, அவள் தன் பெண்ணையும், பேத்தியையும் பார்க்கப் போகிறாள், இந்தப் பண்டிகையை கொண்டாட வேண்டாமா, நாம் பணம் கொடுத்தால் அவளுக்கும் சந்தோஷமாக இருக்கும்” என்று ஒரு குட்டி லெக்சர் அடித்தாள்.
‘ஏன் இப்படி மண்டூகமாக இருக்கிறாய்’ என்று கடிந்து கொண்டான் சுந்தரம். அப்படியும் அவள் மெதுவாக ‘கவலைப்படாதீர்கள், இன்று பிட்சா ஆர்டர் செய்வதாக உள்ளோம், அந்த எட்டு பாகமுள்ள பழைய பிரட்டை வாங்குவதை நிறுத்திவிடலாம். ஏன் அனாவசிய செலவு? அதற்காகும் ஐநூறு ரூபாயை இவளுக்குத் தரலாம்’ என்று நீதி வழங்கினாள். கோவத்தில் பற்களை கடித்தவாறே “ஒ, நல்லது, எங்களிடமிருந்து பிட்சாவைப் பிடுங்கி அந்தப் பணத்தை அவளுக்குத் தரப் போகிறயாக்கும் நல்ல நியாயம்’ என்ற சுந்தரம் விடுவிடுவென்று சட்டையை மாட்டி கோவத்துடன் வெளியில் சென்று விட்டான்.
மூன்று நாட்கள் கழித்து வேலைக்கு வந்த அஞ்சலை தூசி தட்டி வீடு பெருக்கித் துடைப்பதில் மும்முரமாக இருந்தாள். ’லீவு எப்படி இருந்தது’ என்று அவளை மெதுவே வினவினான் சுந்தரம். கண்களில் சிறிது எட்டிப் பார்த்த கண்ணீர்த் துளிகளுடன் ‘ரொம்ப நன்றாக இருந்தது ஐயா. அம்மா ஐநூறு ரூபாய் கொடுத்தார்கள்’ என்று நன்றியுடன் கூறினாள்.’ நீ போய் பெண்ணோடும் பேத்தியோடும் ஜாலியாக இருந்தாயோ’ என்று சுந்தரம் சிறிது நக்கலோடு கேட்டான். ‘ஆமாம் சாரே, ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது. இரண்டு நாளில் ஐநூறு ரூபாயும் காலி’ என்று குதூகலத்துடன் கூறி அந்த நினைவில் கண்கள் சிறிது சொறிகினாள்.. ‘நிஜமாகவா! அப்படி என்னதான் செய்தாய் சொல் பார்க்கலாம்’ என்று அலட்சியமாகக் கேட்டான் சுந்தரம்.
யார் இப்படிக் கேட்பார்கள் என்று காத்திருந்த மாதிரி துடைப்பத்தைக் கீழே போட்டு விட்டு, தரையில் குந்தி உட்கார்ந்து, மலர்ந்த முகத்துடன், கைகளை விரித்து, விரல்களால் எண்ணிக் கொண்டே ‘60 ரூபாய் பஸ்சுக்கு, 25 பெண்ணுக்கு வளையல், 50 ரூபாய்க்கு பலகாரம், 50 ரூபாயில் அவள் வீட்டுக்காரருக்கு ஒரு நல்ல பெல்ட், 150 பேத்திக்கு புதுத் துணி, 40 ரூபாய் அவளுக்கு ஒரு தலையாட்டி பொம்மை, கோயில் உண்டியலில் 50 ரூபாய், மீதம் இருந்த 75 ரூபாயை பெண்ணிடம் கொடுத்து பேத்திக்கு நோட்புக், பென்சில் வாங்கச் சொல்லியுள்ளேன்’ என்று பூரா 500 ரூபாய்க்கும் பட்ஜெட் போட்டாள். இதைச் சொல்லிவிட்டு புடவைத் தலைப்பை உதறி விட்டுக் கொண்டே எழுந்து பாக்கி வேலைகளைத் தொடர்ந்தாள். ஆ, 500 ரூபாய்க்குள் இத்தனையா என்று சுந்தரம் ஆச்சரியத்துடன் யோசிக்க ஆரம்பித்தான்.
அப்போது அவன் கண் முன்னே பிட்சாவின் எட்டு தூண்டுகளும் தோன்றி ஒவ்வொன்றும் அவனது மனசாட்சியை சுத்தியல் போல அடித்தன. ஒரு பிட்சாவுடைய விலையையும் அஞ்சலை தன் மகளைப் பார்க்கப் போகும்போது செய்த செலவையும் ஒப்பிட்டுப் பார்க்கத் தொடங்கினான். முதல் துண்டு பஸ்சுக்கு, இரண்டாவது பெண்ணின் வளையலுக்கு, மூன்றாவது பலகாரத்துக்கு, நான்காவது மாப்பிள்ளையின் பெல்ட்டுக்கு, ஐந்தாவது பேத்தியின் துணிக்கு, ஆறாவது துண்டு அவளுக்கு பொம்மை, ஏழாவது கோயிலுக்கு, எட்டாவது நோட்புக், பென்சிலுக்கு. அடடா எப்படி இப்படி நினைக்கத் தோன்றியது!
திடீரென்று டாக்டர் அப்துல்கலாம் அவர்கள் ‘பிட்சா வட்டமாக இருக்கும், எட்டு கோண பெட்டியில் வரும், ஆனால் எடுத்தால் முக்கோணமாக இருக்கும் எப்படி!’ என்று சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. இப்போது சுந்தரத்துக்கு ‘இத்தனை நாள் நாம் ஒரே கோணத்தில்தானே பிட்சாவைப் பார்த்தோம். ஆனால் இப்போது அஞ்சலை பிட்சாவைத் தலைகீழாகப் புரட்டி அதன் இன்னொரு பக்கத்தையும் காட்டி விட்டாளே’ என்று எண்ணத் தோன்றியது. எட்டு பாகமுடைய பிட்சா சுந்தரத்திற்கு வாழ்க்கையின் உண்மை அர்த்தத்தைப் புரிய வைத்தது
“வாழ்க்கைக்காக பணத்தை செலவழிப்பதா அல்லது செலவழிப்பதற்காக வாழ்க்கையா!’
படிக்காத அஞ்சலை படித்த சுந்தரத்திற்கு வாழ்க்கைத் தத்துவத்தை எளிய முறையில் உணர்த்தி விட்டாள்!