மூலம் : லலிதாம்பிகா அந்தர்ஜனம் [1909—1989 ]
ஆங்கிலம் : ஜே. தேவிகா
தமிழில் : தி. இரா. மீனா
நவீன மலையாள இலக்கியத்தின் முதல் பெண் எழுத்தாளர் என்று அடை
யாளப்படுத்தப்படும் லலிதாம்பிகா அந்தர்ஜனத்தின் படைப்புக்கள் சமூக
சீர்திருத்தப் பார்வை கொண்டவை. ’அக்னிசாட்சி ’நாவலுக்காக சாகித்ய
அகாதெமி விருது பெற்றவர்.
எழுத்தாளர்,அரசியல் செயல்பாட்டாளர் போன்ற புறவய பொதுப் பணிக
ளைச் செய்ய பெண்கள் போராட வேண்டியிருந்ததான நிலையை ஆழமான
விமர்சனமாக கதை முன்வைக்கிறது.
பெண் எழுத்தாளரிடமிருந்து கடிதம்
என் அன்பிற்குரிய தங்கையே,
நீண்ட நாட்களாகவே உனக்குக் கடிதம் எழுத வேண்டுமென்று நினைத்துக்
கொண்டிருந்தேன். உண்மையைச் சொல்லப் போனால்,உன் முதல் கதை பிரசுரமான போதே நான் உனக்கு எழுதத் தயாராகி விட்டேன்.
ஆனால்,அது உனது முதல் கதை,பெண் எழுத்தாளர் பெயரில் ஒரு கவிதை
அல்லது ஒரு கதை பிரசுரமானால் அதற்கான பாராட்டு வெள்ளம்தொடரும் அது உன்னை போதைக்குள்ளாக்கியிருக்கும் போது—அது மாதிரியான தருணத்தில் ,என்னுடைய பணிவான குறிப்பை உன்னால் ஏற்றுக் கொள்ள முடியுமா?அதனால் நான் காத்திருக்க முடிவு செய்தேன். புகழென்னும் கவசம் உன்னை விட்டு விலகும் காலம் உனக்கும் வரும்; குற்றம் சொல்கிற கூர்மையான முட்களாக விமர்சனங்களை நீ எதிர்கொள்ள வேண்டியிருக்கும். நீ தொடர்ந்து எழுத விரும்பினால். . . உன் உணர்வுகள்,எண்ணங்கள்,இலக்கியம் பற்றிய அபிப்பிராயங்கள் ஆகியவற்றை தொடர்ந்து வெளிப்படுத்தினால், அப்படி ஒரு நேரம் விரைவில் வரும். உன் மனம் முட்களால் கிழிபடும். உன் தைரியம் சறுக்கி விழும். உன் வாழ்க்கை. . . அதை விட்டுவிடலாம் என்ற வெறுப்பு நிலைக்குக் கூட நீ வரலாம். . . உன் திறமையும்,கற்பனையும் இவை எல்லாவற்றையும் சகித்துக் கொள்ளுமானால் நீ தொடர்ந்து எழுதலாம். இன்று, புகழுக்காக எழுதும் நீ, பின்னாளில்,எழுத்தின் மேலான விருப்பத்தில் எழுதலாம். அதற்குப் பிறகு,நீ புகழைத் தூக்கி எறிவாய். உன் ஆன்மாவிலிருந்து வெளிப்படும் உண்மை இலக்கியம் ,புகழ், பிரசுரிக்கும் ஆசை ஆகியவை பற்றிக் கவலைப்படாது். . .
இந்தக் கடிதம் அந்த நேரத்தில் நீ படிப்பதற்காகத்தான்.
புகழில் விருப்பம் குறைந்த ஒரு நேரத்தில்,இந்தக் கடிதத்தை எழுதியவரின் பெயரைக் கூட தெரிந்து கொள்ள வேண்டுமென்ற வேகம் உனக்கு இருக்காது. நான், முகம் தெரியாத பெண் சிநேகிதி—-சிறிது இலக்கியஆளுமையும், தன்னளவிலான பெருமையும் கொண்டவள் என்ற அளவில் தெரிந்தால்போதும். ஒரு காலத்தில் எனக்குள்ளும் நம்பிக்கைகளிருந்தன. நிறைய எழுத வேண்டும்,என் பெயர் பெரிய அச்சிலும், என் புகைப்படம் செய்தித்தாள்களிலும் வரவேண்டுமென்று கனவு கண்டேன். என்னைப் பார்ப்பதில் எனக்கு அப்படி ஓர் ஆனந்தம்—அவைதான் என் நம்பிக்கைகளும்,ஆசைகளும்.
ஆனால் அதற்கு ஒரு பெரிய தடையிருந்தது. என் பெற்றோர் மிகவும் பழமைவாதிகள். தன் மகள் ஓர் எழுத்தாளராக அல்லது ஒரு நடிகையாக வரலாமென்ற சிந்தனை சிறிதுமில்லை. பாட்டி–கொள்ளுப் பாட்டி –அவளுடையபாட்டிக்குப் பாட்டி என்று தன் மகளுக்கு ஒரு மிகப் பழைய பெயரை வைத்தனர். நிச்சயமாக,புதுமை ,இனிமை என்று எந்தப் பரவசமுமின்றி, கொஞ்சம்கூச்சம் தருவதாக என் பெயர் இருந்தது! என்தோற்றம், வீட்டில் இருக்கும்சிறிய கண்ணாடியில் கூட நீண்ட நேரம் பார்க்க முடியாதது. ஆனாலும்நான் எழுதவேண்டுமென்று விரும்பினேன். . . புகழ் பெற. . . என் புகைப்படத்தை அச்சில் பார்க்க . . .
என்ன வகையான நோய் இது. கற்பனை செய்து பார். வசதியான வீட்டு எஜமானியாக இருப்பவள், இந்த இலக்கிய மூட்டைப் பூச்சியை சாவதானமாக உட்கார்ந்து ரசிப்பது பொருத்தமாக இருக்கும். பொதுவாக இது நகர்ப்புறத் தொற்றுநோய் ;பெரும்பாலும் கிராமப் பகுதிகள் இதிலிருந்து விலக்கப்பட்டவை. அங்குள்ள ஒளியும்,காற்றும் அதைக் கடத்திவிடும். ஆனால்,மஞ்சள் காமாலையைப் போல, ஒருவன் இலக்கிய மூட்டைப்பூச்சியைப் பிடித்து விட்டால் பார்ப்பதெல்லாம் ஒரே நிறத்தில்தான் தெரியும். கேட்பதெல்லாம் அதே தொனியாகத்தான் இருக்கும். . . இலக்கியம். . இலக்கியம். . .
இந்தத் தீரா நோய்க்கு ஒரே ஒரு தீர்வுதானுண்டு. மனதில் தோன்றும் எல்லாவற்றையும் தாளில் எழுதி வைத்துவிடவேண்டும். நாம்–பெண்கள்–மருத்துவ விளம்பரதாரர்கள் ரகசியம் என்று நினைக்கிற நோய்களையும் கூடப்பொதுவில் அறிவிக்க விரும்புவோம். ஆனால் நம்மில் மிகச் சிலருக்கு மட்டுமே நம்மைப் பிடித்திருக்கிற இலக்கியப் பூச்சியை தைரியமாக வெளிப்படையாக அறிவிக்க முடியும்.
சகோதரியே!நாள் முழுவதும் நூற்றுக்கணக்கான எண்ணங்களோடு உழன்று கொண்டிருக்கும் ஒரு குடும்பத்தலைவி நான். சமையலறையில் மட்டும் கணக்கற்ற வேலைகள். எனினும்,இந்த நாட்களில் சொல்வது போல,’துடிக்கும் வல்லமையான ஒரு படைப்பாக்கப் புரட்சி’ எல்லா நேரங்களிலும்,என் மனதில் ஓடிக் கொண்டிருக்கும் நான் அரிசியைக் கழுவும் போதும், பொரியலைக் கிளறும்போதும், தொட்டிலை ஆட்டும்போதும் அதே எண்ணம்தான்
நான் எழுத,எழுத விரும்புகிறேன். நான் எழுத வேண்டும்! அதனால் ,சமையலறை அலமாரியில்,உப்பு, மஞ்சள்,மிளகாய்க்கும் இடையே ஒரு சிறியதாளும், பென்சிலும் இடம் கண்டுபிடித்திருக்கின்றன.
நான் எழுதிய முதல் கவிதை. . நீ அதைப் படிக்க விரும்புகிறாயா?உனக்குக் கவிதை பிடிக்குமா என்றெனக்குத் தெரியவில்லை. கவிதையில் ஒருவரின்உணர்வுகளும்,எண்ணங்களும் வெளிப்படுவது அவசியமற்றது என்று சிலர் இன்று சொல்கின்றனர். அது மொழியை அடிமைப்படுத்தி விடுகிறது. இது விதிகளை உருவாக்கி படைப்புச் சுதந்திரத்தில் தடைகளை ஏற்படுத்துவதற் காகத்தான். முதலாளி வர்க்கத்தின் அதிகாரம். அவர்கள் சொல்வது சரியாகஇருக்கலாம். ஆனால் என் மனதிற்குள் முதலில் வருவது ஒரு கவிதைதான். நான் உன்னைச் சோர்வாக்க விரும்பவில்லை. என் கவிதை இதோ!
“புதிய வாழ்க்கையைப் பெற விரும்புபவன்,முதலில் சாவின்
கதவைத் தட்டவேண்டும். வலியிலிருந்துதான் வசந்தம் மலர்கிறது.
இது தாய் பாடும் பாட்டு. ஆனால்,என் கற்பனைக் குழந்தையே !
என் கருப்பையில் நீ எடையிடப்படவில்லை. நீ நகர்ந்த போதும்,
அசைந்த போதும்,வளர்ந்த போதும், விருத்தியானபோதும்
மகிழ்ச்சியைத் தவிர எனக்கு வேறெதுவுமில்லை,நிறைவான மகிழ்ச்சி.
நீ பிறந்த தருணத்தின் பரவசத்திற்கு இணை ஏதுமில்லை. ”
இதுபோன்ற எண்ணங்கள், நான் எழுதினேன். அடுத்து என்ன?இதைச் செய் தித்தாளுக்கு அனுப்புமளவிற்கு எனக்குத் தைரியமில்லை. காதல், மற்றும் புரட்சிக்கான காலகட்டம் அது. அவற்றைத் தவிர வேறெதைப் படிப்பார்கள்? இந்தச் சிறியதாள் அஞ்சறைப் பெட்டியில் சில காலமிருந்தது. அதற்குப்பிறகு காபி போட எரிக்கும் நெருப்பானது அல்லது பல்பொடி பொட்டலம் போட உதவியதென்று நினைக்கிறேன்.
இந்த ஏமாற்றம் என் ஆர்வத்தைக் கட்டுப்படுத்தி விடவில்லை. அதே சமயத்தில் பக்கத்து வீட்டில் ஏதோ நடந்தது. ஓர் இளைஞன்,இளம் பெண்ணைக் காதலிக்க வழக்கம்போல வீட்டில் எதிர்ப்புகள். சில நாட்கள் அழுதும் அரற்றியும்,கழித்து விட்டு ஓடிப்போனார்கள். அல்லது தற்கொலை செய்து கொண்டார்கள். வழக்கமாகக் கதைகள் இப்படித்தான் இல்லையா ?ஆனால் இது வித்தியாசமானது. ஓர் இளைஞன், இளம் பெண்ணைக் காதலித்தான். ஆனால் அவள் காதலிக்கவில்லை. வழக்கம்போலக் குடும்பம் வற்புறுத்த, வழக்கமற்று அவள் எதிர்த்தாள். . பிறகு சம்மதித்து. . கடைசியில். . கடைசியில் . . கோபப்படாதீர்கள். . திருமணத்தன்று அவள் குழந்தை பெற்றாள்.
என்ன வினோதமான கதை! நான் எழுதினேன் உண்மையைச் சொல்ல வேண்டுமெனில் என்னைப் பற்றி எனக்குப் பெருமையாக இருந்தது. அந்தஇளம்பெண்ணுக்கு முன்னாள் காதலனைத் தந்தேன். கதையின் உச்சமென்பது அவனுடைய துரோகத்தில்தானிருக்கிறது.
உலகத்திலேயே காதலும்,திருமணமும்தான் முக்கியமான நிகழ்வுகளா?—என்று நீ கேட்கலாம். இந்தப் பெரிய உலகில் ,பெரிய உலகில் நோய்,சாவு, தேவை ,செல்வம், அடிமை,முதலாளி என்று பல— இந்த அற்ப விஷயங்கள் எழுதப்பட வேண்டியவையா? நாம் ஒவ்வொருவரும் தனித்தன்மையானவர்கள். . இளைஞர் உலகம் தனக்கு நெருக்கமானதை மட்டுமே கவனிக்கிறது. .
தன்னைக் கவரும் விஷயங்களை மட்டுமே பார்க்கிறது;பேசுகிறது. அது அற்பமாகத் தெரியலாம். ஆனால் அதை பின்னாளில்தான் உணர்கிறோம்.என் பள்ளித் தோழி—ஜானகி அம்மா என்று வைத்துக் கொள்வோம்—என்னை அடிக்கடி வீட்டில் வந்து பார்ப்பார்கள். அப்போது நான் காபி கொடு்ப்பது வழக்கம். என் கவிதைகளை விட, நான் கொடுத்த காப்பியும்,நொறுக்கு தீனி யும்தான் அவர்களிடமிருந்து எனக்கு நற்சான்றிதழைத் பெற்றுத் தந்தன. என் கவிதைகளைக் கேட்பதற்காக அந்தச் செலவுகள்.
ஒரு நாள் பொறுக்க முடியாமல் கேட்டு விட்டேன். ”ஜானம்மே! ஆழமான எல்லா ரகசியங்களையும் பகிர்ந்து கொள்ள ஒரு பெண் இன்னொருபெண்ணை நம்பக் கூடாதென்று சொல்வது தவறா?”
ஜானகியம்மா என்னை அர்த்தத்தோடு பார்த்தார்,”உனக்கு அது பற்றி சந்தேகமா? நிச்சயமாக ,அது தவறுதான். ஒரு பெண் வேறு யாரை நம்ப முடியும்? ”
’அப்படியானால் ஒரு ரகசியம் சொல்கிறேன். அதை யாரிடமும் சொல்லமாட்டேன் என்று சபரிமலை கடவுள் மேல் அல்லது கொடுங்காளூர் பகவதி மேல் சத்தியம் செய்ய வேண்டும். ”
“சபரிமலைகடவுள், கொடுங்காளூரம்மன் மேல சத்தியம் நான் யாரிடமும். . ”ஜானகியம்மா மிக ஆர்வமாக இருந்தார். ”
(மீதி அடுத்த இதழில் )