அறிவியல் கதை
தென்னம் பாளை வெடித்துப் பூப்பூத்து நிறைந்திருந்தது சில நாட்களுக்கு முன். குறும்பைகள் மஞ்சளில் மினுக்கின. மற்றொன்றில் மட்டைகள் அதன் குலைகளின் பாது காப்பிற்கென கவிழ்ந்து நின்றன. ஒரு மரத்தில் குலைகள் பருக்கத் தொடங்கிவிட்டன. கரம்பன் வந்து பறித்துப் போடுவான் அப்போதெல்லாம். கரு மேனி பளபளவென்றிருக்கும். வேட்டியை வரிந்து கட்டி இடையில் ஒரு துண்டு அதை இறுக்கி இருக்கும். இருபது வயதிலேயே வெற்றிலை மெல்லும் பழக்கம் அவனுக்கு. அதனால் சிவந்த உதடுகள், அவன் சிரிக்கும் போது தெரியும் கறை படிந்த பல் வரிசை, கண்களில் கொப்பளிக்கும் குறும்பு. மரத்திலிருத்து எதை இறக்குவது, எதை விட்டு வைப்பது என்பதெல்லாம் ஒரு பார்வையிலேயே அவனுக்குத் தெரிந்து விடும்.
“அம்மாட்டேந்து கொழந்தயைப் பிரிக்கற, பாவமில்லையா?” என்பாள் வசந்தா வேண்டுமென்றே.
அவன் சிரிப்பான். ‘நா பறிக்காங்காட்டியும் அவ விட்டுடுவா, நெலத் தாயீ ஏந்திக்கிடுவா.’
“அது பேசித்துன்னா, தாயும், கொழந்தையும் பதற்றது உனக்குக் கேக்கும்.”
‘அம்மணி, கொல தள்ளிச்சா விடுதல; பின்னாப்ல தள்ளோணுமில்ல; நாம ஆண்டோனுக்கு படக்கிறோம், ஆத்தாளுக்கும் படக்கிறோம், எப்ப செதர் விடுவாங்கன்னு தும்பிக்க நீட்டிக்கிட்டு தொந்தி சாமி வேற காக்கறாரு. அத்தயெல்லாம் விடுங்க, கரம்பனுக்கு வவுறு இருக்கில்ல, அம்மணி.’
“அது சரி, அம்மாட்டேந்து சிசு பிரியணும்தான். ஆனா, கண்ணெதர்க்க பாத்துண்டே இருக்கோமில்ல; தென்ன என்ன பண்ணும், பாவம்.” என்பாள் வசந்தாவின் அம்மா கிண்டலாக இவர்கள் பேச்சில் கலந்து கொண்டு.
‘சிரிப்பாணியா வருதுங்கோ, அம்மணி. மூளயில பத்திக்கிட அது மனுசப் பயலா? புல்லு, பூண்டு கணக்கில்ல.’
வசந்தா அதை நினத்துக் கொண்டு இப்போது வாய்விட்டு சிரித்தாள். அவளுக்கு சிறு வயதில் நல்ல பொழுது போக்கே கரம்பனின் வருகைதான். அவன் வாயைக் கிண்டுவதில் அவனது அறிவும், அறியாமையும் வெளிப்படும் விசித்திரம்.
இன்று அவள் நகரின் தலை சிறந்த மருத்துவர் மற்றும் ஆராய்சியாளர். நாளை ஐந்து சிசேரியன்கள் இருக்கின்றன; அதிலும் ஒரு பெண்ணின் நிலை கவலைக்கிடம். மிகக் குட்டை அவள், முதல் பிள்ளைப் பெற்றுப் பதினோரு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தாயாகி இருக்கிறாள். உடல் எடையும் 43 கிலோதான். அவளுக்கு வலியை வரவழைத்துப் பிள்ளைப் பெறச் செய்வது நல்லது. அவள் சிசேரியனைத் தாங்க மாட்டாள் எனத் தோன்றினாலும், அவள் நிர்வாகம் அதை ஒத்துக்கொள்ளப் போவதில்லை.
அவளது ஆய்விற்குக் கணிசமான பங்கு அவள் செய்யும் சிசேரியனிலிருந்து வருகிறது. அதற்காக அவள் சிசுவைப் பிரிக்கத்தான் வேண்டும்-அதுவும் இலாபகரமான முறையில். அவள் கரம்பனைப் போல்தான்-பக்குவத்திற்குக் காத்திருந்துதான் எதையும் செய்வாள்.
அந்தப் பெண்ணின் பெயர் கௌமாரி; அதிகம் புழக்கத்தில் இல்லாத அந்தப் பெயர் அவளை நினைவில் நிறுத்தியது. சூசன் கவலையுடன் அவளைத் தியேட்டருக்குக் கொண்டு வந்தாள்-எப்போதும், எதிலும் நிதானம் இழக்காத சூசன்; வசந்தாவிற்கு ஏனோ முதுகில் சிலீரிட்டது. சிசு வயிற்றில் சலனத்தை நிறுத்தி விட்டது; அந்தப் பெண்ணின் முகமும் சிலையானதைப் போல் ஒரு தோற்றம்; அனைத்து மானிட்டர்களும் மரணம், மரணமென்று மௌனமாகக் கூவின.
அவள் கணவன் மிக அமைதியாக இந்தச் செய்தியை எதிர் கொண்டான். ‘அனாடமி பாடப் பிரிவிற்கோ, ஆய்விற்கோ அவளை, அந்த ஆண்மகவை எடுத்துக் கொள்ளலாமென எழுதிக் கொடுத்தான். அவளது முகத்தை ஒரு முறை வருடினான். போய்விட்டான். எத்தனை துரிதத்தில் இரு இறப்புகளும் ஒரு துறப்பும்.
கௌமாரியின் உடலின் பல பாகங்கள் படமெடுக்கப்பட்டன. பல கோணங்கள், முழு உடலாக, உள் உறுப்புகளாக, மொத்தமாகத், தனித்தனியாக ஆறுமுகப் பரிமாணங்களில் நிமிடத்திற்குள் அவள் ஒரு பாடத்திட்டமாகி விட்டாள். இனி கணினி அவளை அனாடமிக் அல்காரிதம்படி வடிவமைக்கும்-அவள் கண்கள் அதில் செயற்கையாகப் பார்க்கும், காதுகளில் ஒலி பயணிப்பதை, நாசி விரிவடைவதை, நா ஊறுவதை, முலைகள் விறைப்பதை, உந்திச் சுழியை, பெண் உறுப்பை, எல்லாவற்றையும் லைவ் ரிலே எனக் காட்டும்; தோலை உரித்து எலும்பை, நரம்புப் பின்னலை, சதையை, நுரையீரலை, நெஞ்சுக்கூட்டை, விலா அமைப்பை, கல்லீரலை, மண்ணீரலை, சிறுநீரகங்களை, மலக்குடலை, தண்டு வடத்தை…அது எதையும் விடப்போவதில்லை. கம்ப்யூடர் சிமுலேஷனில் செயற்கை உறுப்புகளைப் பார்த்துப் படித்தவர்கள்தான் இப்போதெல்லாம்; ஆனால், நிஜ மனித உடலை இப்படிப் பார்ப்பது மருத்துவப் படிப்பில் அரிதாகிவிட்டது.
கௌமாரியின் மூளையில் சில ஆய்வுகள் செய்வதற்காக அது தனியே புரதக் கரைசலில் வைக்கப்பட்டது. அளவில் சிறிய மூளை;ஆனால், அது எத்தனை எண்ணங்களைக் கொண்டிருந்ததோ?
‘ஆ, இதென்ன வசந்தா?’ என்று கிட்டத்தட்ட அலறினாள் மேகா.
வசந்தாவின் புருவங்கள் வளைந்து கேள்வி கேட்டன. ‘இதைப் பார், இதெப்படி இங்கே?’ இன்னமும் நடுக்கமும், ஆச்சர்யமும், கிறீச்சிடலுமாக அவள் குரல் ஒலித்தது. அந்த மூளையில் ‘வொய்’ குரோமசோம் இருந்தது.
இருவரும் பரபரப்பானார்கள். உடனடியாகக் கௌமாரியின் கேஸ் ஹிஸ்டரியைத் திரையில் படித்தார்கள். அவளுக்கு முதலில் பெண் பிறந்திருக்கிறாள்; பதினோரு வருடங்களுக்குப் பிறகு இப்போது ஆண்; அதுவும் இறந்துபோனக் குழந்தை; இவள் மூளையில் ஆணின் ‘வொய்’ எப்படி, எங்கிருந்து வந்திருக்கும், எப்படி இன்னமும் மூளையில் இருக்கிறது என எதுவும் புரியவில்லை.
இதை எப்படிப் பிரிப்பது, இதை எங்கே பாதுகாப்பது, இது சொல்லும் செய்திதானென்ன?
“பிரிக்கலாம் அந்த நிருவுருவை; ‘க்ளோனிங்’கில் அதைச் செய்கிறார்கள்; நம் ‘ஜெனொம் லைப்ரரி’யில் ‘க்ரோம் ஜம்பிங்’ செய்ய முடியும். ஆனால், இதை இரகசியமாகச் செய்ய வேண்டும்; மேலும், இப்போது திரவத்தாலும், மூளையின் சூடு இயல்பாக இருப்பதாலும் அதி உற்சாகமாக அந்தக் க்ரோம் இருக்கிறது.”
‘ஏன் இரகசியமாக?’
“வா, பின்னால்” என்ற வசந்தா அதி வேகமாக அந்த மூளைக்குடுவையை எடுத்துக் கொண்டு முழுதும் குளிரூட்டப்பட்ட நீண்ட வராந்தாவில் நடந்தாள். முக்கிய மருத்துவ மனை முடிந்து அதன் பின்னர் நீள் செவ்வகத்தில் சிறு தோட்டமிருந்தது.அதன் குறுக்கு நடைபாதையில் சென்ற அவள் வெற்று மனையை அடைந்தாள். அதையும் தாண்டிய பிறகு முழுதும் பெரும் மரங்களுள்ளே பொதிந்திருந்த ஒரு வளாகம் கண்களில் பட்டது. மூன்று வருடங்களாக வேலையில் இருக்கும் தனக்கு இப்படி ஒன்று இருப்பதே தெரியவில்லை என வியந்தாள் மேகா.
தானியங்கிக் கதவு வசந்தாவை படம் பிடித்து அவளை மட்டும் உள்ளே அனுமதித்தது; கதவின் மறுபுறம் வசந்தா ஏதோ குமிழைத் திருக மேகா உள்ளே இழுக்கப்பட்டாள். தெர்மல் சூட்டை அவர்களுக்கு உடனே ரோபோக்கள் அணிவித்தனர். ‘ரிவர்ஸ் ஜெனெடிக்ஸ்’ என்ற ஒரு பிரிவு மிகப் பெரிதாகத் தெரிந்தது. முழுதும் தானியங்கியான அதில் மானிடர்கள் முன் ரோபோக்கள் அமர்ந்து நிருவுருக்களை அமைத்துக் கொண்டிருந்தன-அதாவது அவைகள் ஒருவித கோர்க்கும் செயல்பாடுகளைச் செய்து காட்டிக் கொண்டிருந்தன. மேகா புரிந்து கொண்டாள்- அவை மிக மிகச் சிறுத் துண்டுகளாக க்ரோமின் ஒரு நுனியைப் பகுத்துப் பிரித்தன. அவை இணைய வேண்டிய பகுதிகளை மற்றொரு திரை சோதித்து க்ளோன் குழுக்களை அமைத்துக் கொண்டிருந்தது. பல அவற்றில் ‘ஏற்கப்படவில்லை’ என்று மறு சுற்றுக்குச் சென்றன. இதை வியப்போடு பார்த்துக் கொண்டிருந்த மேகா, வசந்தா அங்கே இல்லாததை அப்போது தான் உணர்ந்தாள். பயத்துடன் தயங்கியவாறு அவள் ‘ரிவர்ஸ் ஜெனெடிக்ஸ்’சிலிருந்து வெளியே வந்தாள்.
‘க்ரோம் ஜம்பிங், க்ரோம் வாக்கிங், ஹைபிரடைசெஷன்’ என்று லேசர் ஒளி சுட்டிய பகுதியில் வசந்தாவின் தெர்மல் உடை தெரிந்ததும் அவளுக்கு உயிர் வந்தது போல இருந்தது. வசந்தா அந்த மூளையிலிருந்து ‘வொய்’ க்ரோமைப் பிரித்துக் கொண்டிருந்தாள். நுண்நோக்கியுடன் இணைந்த வலை அமைப்பிலான கூரற்றக் கத்திக் கரண்டி அந்தக் க்ரோமை பிடிக்க முயன்று கொண்டிருந்தது. ஐந்தாம் முறை அது மாட்டிக்கொண்டது. வசந்தாவின் முகத்தில் அந்த முகமூடியையும் தாண்டி ஒரு புன்னகைக் கீற்று வந்து போனது மேகாவிற்குத் தெரிந்தது.
நஞ்சுக் கொடி போன்ற ஒரு வடிவமைப்பை அங்கிருந்து வசந்தா எடுத்தாள்; மேகா அதன் உயிர்ப்புச் சக்தியைச் சரி பார்க்க, அதனுள் ‘வொய்’ க்ரோமை வைத்தாள் வசந்தா.
‘வெல் டன், டாக்டர்ஸ்’ என்ற குரல் அவர்களை அதிரச் செய்தது. மேகா நம்பாமல் அந்த நஞ்சுக்கொடியை பார்த்தாள், அதுவா பேசியது என்று. மேற்கூரையிலிருந்து தன் ஆய்வக நோக்கி வழியாகப் பார்த்துக் கொண்டிருந்த மருத்துவர் எம் கே எஸ் லேசர் பாதையில் இறங்கி வந்தார். பச்சை நிறக் கண்களுடன், இள நீல நிறத்தில் ஒரு தவளை அவர் கைகளிலிருந்து தொங்கும் ஆய்வகப் பையில் இருப்பது தெரிந்தது.
அவரைப் பார்த்ததும்தான் வசந்தாவிற்குத் தெம்பே வந்தது. அவர் அருகே வந்து வசந்தாவின் முதுகில் தட்டிப் பாராட்டினார். ‘வா, வேகமா’ என்றவர் மிக மிகக் குளிரூட்டப்பட்ட அறைக்குள் சென்றார்.
மெலிதான மஞ்சள் வெளிச்சம் பரவியிருந்த அறை அது. எங்கும் ஃப்ரீஸர் இயந்திரங்கள் காணப்பட்டன. வைரக் கத்திகள், செயற்கையாக உருவாக்கப்பட்ட மனிதத் தோல்கள், உறையவைக்கப்பட்ட ப்ளாஸ்மாக்கள், முழுதும் வளராமல் ஆனால் துடித்துக் கொண்டிருந்த இதயங்கள், க்ரையோஜெனிக் முறையில் நைட்ரஜன் திரவத்தில் நீந்தும் உயிரிகள்.
அவர் அந்தத் தவளையை மெதுவே விடுவித்து அங்கிருந்த மேஜையில் கிடத்தினார். ‘இவள் கர்ப்பத்துள் மனித க்ரோம்கள் 22 ஜோடி செலுத்தப்பட்டுள்ளன. அத்தனையும் செயற்கையாக ‘ஜம்பிங்’ மற்றும் ‘வாக்கிங்’கில் வடிவமைகப்பட்டவை. மிகத் தூய்மையானவை- ஐ மீன், மரபணு குறைபாடில்லாதவை. அடுத்து என்னிடம் இரண்டு ‘எக்ஸ்’ க்ரோம்கள் தானிருந்தன. இப்போது உன் ‘வொய்’ கிடைத்திருக்கிறது. ஒரு செயற்கை ‘எக்ஸ்’, ஒரு மனித ‘வொய்’; வாட் அ வொன்டர்! இவள் கர்ப்பப் பை, குழாய்கள் எல்லாம் மனித இனத்தைப் போன்றவை. மிகச் சுலபமாக இந்தக் கருவை இவள், என் நீலி வளர்த்துத் தருவாள். ஆ! எ ஹிஸ்டரி மேட் டு டே.’
‘எக்ஸ்’ மற்றும் ‘வொய்’ செலுத்த அந்தக் கத்திகளை அவர் திறமையாகக் கையாண்டார். பச்சைக் கண்ணழகி சுமக்கும் முதல் இயற்கை-செயற்கை மனித உயிர். நினைத்தாலே புல்லரித்தது.
‘பிறப்பு எப்போது நடை பெறும்?’ என்றாள் மேகா. ‘செல் ம்யூடேஷன் ஆரம்பிக்கும் நிலையில் இவளது கர்ப்பம் சோஃபிக்கு மாற்றப்படும்; அதிலிருந்து ஆறே மாதங்கள். வேக வளர்ச்சிக்கான அனைத்தும் சோஃபியிடம் உட்செலுத்தப்பட்டுள்ளது.’ என்றார் அவர்.
‘அதுவரை..’ என்றாள் மேகா; ‘இரகசியம், பரம இரகசியம்’ என்று சிரித்தார் அவர்.
“டாக்டர், இறந்த பெண்ணின் மூளையில் அந்த ‘வொய்’ க்ரோம் எப்படி?” என்றாள் வசந்தா.
‘மனிதக் கரு இருக்கே, பாலூட்டிகளில் மிகவும் பிடிவாதமுள்ளது அது. ஆக்ரமிக்கும் நஞ்சுக் கொடி, அதன் தனிப்பட்ட சிக்கல்கள், கருவறையின் சுவற்றில் ஆழமாக ஒட்டிக்கொண்டு மேலும் மேலும் எனக் கேட்கும் அதன் தன்மை, அதிலும் இந்த ‘வொய்’ க்ரோம் இருக்கே, அது அம்மாவின் இரத்தத்தில் கலப்பதுடன் நிற்பதில்லை, மூளையில், மண்ணீரலில், நுரையீரலில் 100% வரை பார்க்கலாம்-அதவது ஆண்மகனைப் பெறும் அம்மாக்களின் மூளைகளில்; உள் உறுப்புக்களில், குடலில் 95%, இதயத்தில் 29% எனவும் பார்க்கலாம்; உங்களுக்கு ஒரு வினோதம் சொல்லவா? 94 வயதான ஒரு அம்மா விபத்தில் இறந்தார்; அவரது பிரேதப் பரிசோதனையில் அவரது மூளையில் இந்த ‘வொய்’ உட்கார்ந்திருந்தது; அவரும் ஆண் குழந்தையைப் பெற்றிருந்தார். ஏன் இப்படி நடக்கிறதென்று மிகச் சரியாகச் சொல்வதற்கில்லை. ஆனால், கருப்பையின் உள்ளே புதைந்திருக்கும் கரு, தன் நலத்திற்காக, அது அன்னையைச் சார்ந்தது என்பதால், அம்மாவின் உடலை தனக்கெனக் கடத்துகிறது எனச் சொல்லலாம்.”
‘அப்போ, எக்ஸ்..?’
எம் கே எஸ் சிரித்தார்- ‘என்னை வம்பில் மாட்டுகிறாய்; இது வரை ‘வொய்’ தான் காணப்பட்டிருக்கிறது. எக்ஸ் இருக்கும், தன்னை அவ்வளவாகக் காட்டாமல் இருக்கும்.’
“கரம்பன் அன்று எவ்வளவு இயல்பாகச் சொன்னான்- ‘மூளைல பத்திக்கிட’ அர்த்தம் தெரிந்து சொன்னானா இல்லை கேள்வி ஞானமா?” திகைத்தாள் வசந்தா. அம்மா ஏன் சரத்தை அதிகம் வெளிப்படையாக நேசித்தாள் என மேகா யோசிக்கத் தொடங்கினாள். தவளையில் ‘வொய்’ செயலைத் தொடங்கியிருந்தது.
மிக அருமையான அறிவியல் கதை அம்மணி. வாழ்த்துகள்.
LikeLike