வீடு -S L நாணு

Villa The Blue House ECR, Chennai, India - Booking.com

அந்த வீட்டு காம்பௌண்ட் சுவரை ஒட்டி தனது பி.எம்.டபிள்யுவை நிறுத்தினான் சுதாகர். எஞ்சினுக்கு ஓய்வு கொடுத்து காரை விட்டு இறங்கியவன் கதவை மூடி ரிமோட்டைத் தட்ட பிப் பீப் ஒலி எழுப்பி செண்ட்ரலைஸ்ட் லாக் தான் உயிர் பெற்றதை அறிவித்தது.

சுதாகர்..

வயது முப்பத்தைந்து. நல்ல உயரம். விளம்பர க்ரீம் பூசாமலே நல்ல நிறம். தூக்கி வாரப் பட்ட ஐ.எஸ்.ஐ முடி. பட்டையான மீசை. கழுத்தில் கொஞ்சம் கனமான செயின். வெளிர் நீல டீ-ஷர்ட். உசத்தி ரக ஜீன்ஸ்.. விரல்களில் ஏதேதோ கற்கள் டாலடிக்கும் மூன்று நான்கு மோதிரங்கள். விரல்கள் பிடித்திருக்கும் ஐ-போன்.. குறைந்தது பத்தாயிரமாவது விலை சொல்லும் கருப்பு கலர் பள பள ஷூ..

சுதாகருக்கு கிரானைட் பிஸ்னஸ்.. அதுவும் அதில் கொடி கட்டிப் பறப்பவன். சமீபத்தில் கூட வெளி நாட்டு காண்ட்ராக்ட் ஒன்றில் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு எக்கச்சக்க லாபம். நுங்கம்பாக்கத்தில் காதர் நவாஸ் கான் சாலையில் பெரிய பங்களா இருந்தாலும் ஈ.ஸி.ஆரில் கடலுக்கு அருகில் ஒரு பங்களா வாங்க வேண்டும் என்று அவன் மனதில் வெகு நாள் ஆசை. மனதில் புதைந்து கிடந்த ஆசையை தூசு தட்டி நேற்று நண்பன் ரவியிடம் எதேச்சையாகச் சொன்னான்.

“உடனே வாங்கறயா சொல்லு.. புரோக்கர் கிடையாது.. பார்ட்டி கூட நேரிடையான டீலிங்.. ஈ.ஸி.ஆர்ல புளூ பீச் ரோட்டுல கடைசி பங்களா.. மொத்தம் மூணு கிரௌண்ட்.. ஒரு கிரௌண்ட்ல பெரிய பங்களா.. சுத்தி தென்னை, வாழைன்னு நிறைய மரங்கள்.. முன்னால பெரிய தோட்டம்.. பாரின் பார்ட்டி.. உடனே டிஸ்போஸ் பண்ணணும்னு பார்க்கறாங்க.. பேரம் பேசலாம்”

ரவி சொன்னதுமே சுதாகர் குஷியாகி விட்டான்.

“நாளைக்கே போகலாம்”

“நாளைக்கு என்னால முடியாது.. பிஸ்னஸ் விஷயமா மும்பை போறேன்.. வர ஒரு வாரம் ஆகும்.. ஒண்ணு பண்ணேன்.. டீடெய்ல்ஸ் தரேன்.. போன் பண்ணிட்டு நீ போய்ப் பாரேன்..”

மறுநாள் ரவி கொடுத்த நம்பருக்குப் பல முறை போன் செய்தான் சுதாகர். நம்பர் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதையே தொடர்ந்து அறிவித்தது..

எதற்கும் நேரில் சென்று பார்த்து விடுவோம் என்று கிளம்பி வந்து விட்டான்.

காரை நிறுத்தி விட்டு பங்களாவுக்கு எதிர் பக்கம் போய் நின்று பார்த்தான் சுதாகர்.

பெரிய காம்பௌண்ட் சுவர்.. மத்தியில் கருப்பு கலர் கேட்.. அதன் பின்னணியில் பங்களாவின் மேல் முகப்பு தெரிந்தது.. என்னமோ தெரியவில்லை.. அதைப் பார்த்தவுடன் சுதாகருக்கு மனதில் ஒரு பரவசம்.. இது தான் நம் இடம் என்ற எண்ணம்..

மெதுவாக நடந்து கேட்டை அடைந்தான். செக்யூரிட்டிக்கான இருக்கை காலியாக இருந்தது. சுற்று முற்றும் பார்த்தான்.. யாரும் கண்ணில் படவில்லை.. பூட்டியிருக்கிறதா என்று அறிய கேட்டில் கை வைத்துத் தள்ளினான்.. கேட் திறந்துக் கொண்டது.. உள்ளே எட்டிப் பார்த்தான்.. அழகான தோட்டம் தெரிந்தது.. ஆனால் மனித நடமாட்டம் இல்லை.. திடீரென்று ஞாபகம் வந்தவனாக பின் வாங்கி கேட்டை மறுபடியும் பார்த்தான்.. நல்ல வேளையாக நாய்கள் ஜாக்ருதை போர்ட் இருக்கவில்லை..

ஒரு முடிவுக்கு வந்தவனாக உள்ளே நுழைந்து பங்களா வாசலை நோக்கி நடந்தான். உண்மையிலேயே அந்த இடத்தில் அவனுக்கு ஒரு பாஸிடிவ் வைப் கிடைத்தது.. மஞ்சள், சிவப்பு, ஊதா என்று வித விதமான நிறங்களில் மலர்கள் அவன் மனதில் சந்தோஷத்தைக் கிளப்பின.

பங்களாவின் கதவு மிகுந்த வேலைப் பாட்டுடன் செதுக்கப் பட்டிருந்தது.. அந்த கலை நுணுக்கங்களை ஆராயவே பல மணிநேரம் பிடிக்கும் போல் அவனுக்குப் பட்டது.

மெதுவாக காலிங் பெல்லைத் தட்டினான்.. இரண்டாவது முறையும்..

கதவு திறந்தது.

எழுபது எழுபத்தைந்து வயதில் ஒருவர் நின்றிருந்தார். தலையில் தர்மத்திற்கு ஒன்றிரண்டு ரோமங்கள் ஒட்டிக் கொண்டிருந்தன. துப்பறியும் சாம்புவை நினைவுப் படுத்தும் விளாம்பழ மண்டை.. நீண்ட மூக்கு.. அதில்  வழிந்துக் கொண்டிருந்த அரை கண்ணாடி. சிவப்பு நிற டீ-ஷர்ட்.. அதில் Do not Disturb என்ற வாசகம்.. கறுப்பு நிற ஷார்ட்ஸ்.. காலில் மிருதுவான ஹவாய் செறுப்பு..  

சுதாகரைப் பார்த்து லேசான சிரிப்பு.

“யெஸ்..?”

என்று வயதுக்கு சம்பந்தமில்லாத கணீர் குரலில் கேட்க..

“ஐ ஆம் சுதாகர்.. இந்த பிராபர்ட்டி விலைக்கு..”

“ஓ.. வாங்க வாங்க..”

சுதாகரை உள்ளே அழைத்துப் போனார்.

உள்ளே நுழைந்த சுதாகர் பிரமித்துப் போனான்.. அவ்வளவு நேத்தியாக அலங்கரைக்கப் பட்ட ஹால்.. சுவரில் அங்கங்கே தொங்கிக் கொண்டிருந்த விலை உயர்ந்த ஓவியங்கள்.. ஒவ்வொரு மூலைகளையும் அலங்கரிக்கும் கலைப் பொருட்கள்.. மேலிருந்து தொங்கும் கலைநயமான சாண்ட்லியர்.. அந்தக் காலத்து ராஜ சிம்ஹாசனம் போன்ற சோபாக்கள்.. கால் பதிக்கவே கூச வைக்கும் கம்பளங்கள்..

அவன் பிரமித்து நிற்பதைப் பார்த்த பெரியவர்..

”உங்க பேர் என்ன சொன்னீங்க?”

“வந்து.. சுதாகர்.. கிரானைட் பிஸ்னஸ்”

“ஓ.. வெரி குட்.. நான் விஸ்வநாதன்.. விச்சு.. ஐ ஆம் என் ஆர்க்கிடெக்ட்”

சுதாகர் அவரை ஆச்சர்யத்தோடு பார்த்தான்.

“அப்ப இந்த வீடு..”

“ஒவ்வொரு இஞ்சும் நான் பிளான் பண்ணிக் கட்டினது.. வாங்க வீட்டைப் பார்க்கலாம்”

விஸ்வநாதன் முன்னால் நடக்க சுதாகர் அவரைத் தொடர்ந்தான்..

”இந்த ஹாலை கவனிச்சீங்களா? வழக்கம் போல நீளமா இருக்காது.. கொஞ்சம் வளைஞ்ச மாதிரி இருக்கும்.. ஜிக் ஜாக்கா.. நான் பாரீஸ் போயிருந்த போது ஒரு வீட்டுக்கு இன்வைட் பண்ணியிருந்தாங்க.. அந்த வீட்டு ஹால் இப்படித் தான் இருந்தது.. ஏன்னு கேட்டேன்.. இந்த ஷேப்புல ஹால் இருந்தா காத்தோட்டம் சுகமா இருக்கும்னு சொன்னாங்க.. நிஜமாவே அங்க சுகமான காத்தோட்டம் அனுபவிச்சேன்.. அதே மாதிரி இங்கயும் கட்டினேன்.. இந்த சம்மர்ல கூட ஏ.ஸி போடாமலே கூலா இருக்கும்..”

அவர் சொன்னது உண்மை தான்.. வெளியில் இருந்த வெக்கைக்கு உள்ளே அந்தச் சுவடே தெரியவில்லை.

“இங்க வாங்க”

விஸ்வநாதன் சமையலறைக்கு அழைத்துச் சென்றார்..

வெளியே விம்மி உருத்தாமல் சுவருக்குள் அடங்கிய ஷெல்புகள்.. உயர் தர கிடானைட் பதித்த மேடைகள்.. அதில் பதிந்திருக்கும் கேஸ் அடுப்புகள்..

ஒவ்வொன்றாக அவன் வியந்துக் கொண்டிருக்கும் போதே விஸ்வநாதன் தொடர்ந்தார்.

“ஒரு விஷயம் கவனிச்சீங்களா.. இந்த கிட்சன்ல சிம்னியும் கிடையாது.. எக்ஸ்ஹாஸ்ட்டும் கிடையாது.. ஆனா நீங்க காரமா என்ன குக் பண்ணினாலும் கமராது.. கடுகு தாளிச்சாக் கூட கமராது.. ஏன் தெரியுமா? அதோ பாருங்க ஜன்னல் பக்கத்துல.. அந்த ஸ்பெஷல் வெண்டிலேஷன் தான் காரணம்.. நான் இடாலி போயிருந்த போது அங்க ஒரு இடத்துல பார்த்தேன்.. உடனே அதைப் பத்தி விசாரிச்சு வாங்கி வந்துட்டேன்.. இந்த பங்களாவுல நான் யோசிச்சு.. அனுபவிச்சு எவ்வளவோ பண்ணியிருக்கேன்.. ஆனா என் சம்சாரத்துக்கு இந்த வெண்டிலேஷன் தான் ரொம்பப் பிடிக்கும்.. ஏன்னா.. கிட்சன் அவங்க சாம்ராஜ்யமாச்சே”

விஸ்வநாதன் அந்த பங்களாவின் மாடி, கீழ் என்று திருத்தலப் பெருமையைச் சொல்லி முடிப்பதற்குள் இரண்டு மணி நேரம் ஓடி விட்டது.. உண்மையிலேயே சுதாகருக்கு அந்த இடம் ரொம்பவே பிடித்து விட்டது.. அதுவும் விஸ்வநாதன் சொன்ன ஒவ்வொரு வர்ணனையையும் கேட்டவுடன் இந்த இடத்தை விடவேக் கூடாது என்று முடிவு செய்து விட்டான்..

இருவரும் ஹாலில் உட்கார்ந்தார்கள்..

“என்ன.. வீடு பிடிச்சுதா?”

தயக்கத்துடன் கேட்டார் விஸ்வநாதன்.

“பிடிச்சுதாவா? சார்.. இது போல ஒரு வீடு கிடைக்க நான் கொடுத்து வெச்சிருக்கணும்”

சுதாகரின் குரலில் சந்தோஷம் தளும்பி வழிந்தது.

“வீட்டுல கன்சல்ட் பண்ண வேண்டாமா?”

மேலும் தயக்கத்துடன் கேட்டார் விஸ்வநாதன்.

“வேண்டாம் சார்.. என் டேஸ்டும் என் வைப்போட டேஸ்டும் ஒண்ணு தான்.. எனக்குப் பிடிச்சா அவளுக்கும் நிச்சயம் பிடிக்கும்”

சுதாகர் சொன்னதைக் கேட்டு விஸ்வநாதனின் முகம் சற்று வாடியது.

“அப்படியா.. அப்பச் சரி.. உண்மையைச் சொல்லட்டுமா? எனக்கு இந்த வீட்டை விக்க மனசே இல்லை.. நான் பார்த்துப் பார்த்துக் கட்டின வீடு.. ஆனா என்ன.. யாருக்காக இந்த வீட்டைக் கட்டினேனோ.. அதான் என் பொண்டாட்டி.. அவளே போயிட்டா.. ஒரே பொண்ணு.. அமெரிக்காவுல செட்டில் ஆயிட்டா.. இப்ப இங்க வந்திருக்கா.. இங்க நான் தனியா இருக்கக் கூடாதாம்.. இனிமே இவ்வளவு பெரிய பிராபர்ட்டியை ஆளில்லாம மேனேஜ் பண்ண முடியாதாம்.. அதான் இதை வித்திட்டு அவ கூட வரணம்னு கட்டாயப் படுத்தறா.. எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன்.. கேட்கலை.. விக்கறதுல முடிவா இருக்கா.. சரி உன் இஷ்டப் படி பண்ணுன்னு சொல்லிட்டேன்.. ஆனா இன்னமும் மனசு கேட்க மாட்டேங்கறது..”

விஸ்வநாதன் சொல்லச் சொல்ல என்ன செய்வதென்று புரியாமல் தவித்தான் சுதாகர்.

“ஸாரி.. ஏதேதோ சொல்லி உங்க மனசைக் கஷ்டப் படுத்திட்டேன் போலருக்கு.. எனக்கு ஒரு பிராமிஸ் மட்டும் பண்ணுவீங்களா?”

கெஞ்சாத குறையாகக் கேட்ட விஸ்வநாதனை என்ன என்பது போல் பார்த்தான் சுதாகர்.

“இந்த வீட்டை நீங்க வாங்கற பட்சத்துல.. கடைசி வரை இந்த வீட்டோட வடிவத்தை மாத்தக் கூடாது.. ரிப்பேர் பண்ணுங்க.. மராமத்து பண்ணுங்க.. ஆனா ஸ்ட்ரக்சரை மாத்தக் கூடாது.. ஏன் தெரியுமா.. இது போல ஸ்ட்ரக்சர்.. இந்தியாவுல வேற எங்கயும் கிடையாது.. இது.. என் மூளை.. என் உசிர்.. ப்ளீஸ்”

விஸ்வநாதன் சொல்லச் சொல்ல சுதாகருக்கு அவர் மனதில் இருந்த வலி புரிந்தது.. இவருக்கு இந்த வீட்டை விற்க விருப்பமில்லை.. ஆனால் தான் வாங்காமல் போனால் இன்னும் வேறு யாரிடமாவது இந்த இடம் கைமாறத் தான் போகிறது.. இவரின் மகள் பிடிவாதமாக இருப்பதாக இவரே சொன்னாரே.. சற்றே யோசித்து திவாகர் ஒரு முடிவுக்கு வந்தான்..

“சார்.. உங்க வலி எனக்குப் புரியறது.. எனக்கு இந்த வீடு  ரொம்பப் பிடிச்சுப் போச்சு.. ஒண்ணு மட்டும் நிச்சயமாச் சொல்றேன்.. நான் வாங்கறதுன்னா கடைசி வரை கண்டிப்பா இந்த வீட்டை சேதப் படுத்த மாட்டேன்.. பிராமிஸ்”

சுதாகர் இதைச் சொன்னவுடன் விஸ்வநாதன் முகத்தில் கொஞ்சம் நிம்மதி தெரிந்தது.

“ரொம்ப தேங்ஸ்.. இது போதும்.. இப்ப எனக்கு இந்த வீட்டை விக்கறதுல எந்தப் பிரச்சனையும் இல்லை”

“அது சரி சார்.. எவ்வளவு கோட் பண்ணறீங்க?”

விஸ்வநாதன் உடனே தலை அசைத்தார்.

“அதெல்லாம் என் பொண்ணு தான் முடிவு  பண்ணணும்.. எனக்கு பணத்தும் பேர்ல இருந்த ஆசையெல்லாம் போயாச்சு.. அவ இப்ப இல்லை.. வெளில போயிருக்கா.. நீங்க நாளைக்கு இதே டயத்துக்கு வாங்க.. நான் சொல்லி வெக்கறேன்.. நீங்க அவ கிட்டயே மத்த விஷயங்களெல்லாம் பேசிக்குங்க”

அங்கிருந்து திரும்பிய சுதாகருக்கு தன் மனைவியிடம் அந்த வீட்டைப் பற்றிச் சொல்லிச் சொல்லி மாளவில்லை.. விஸ்வநாதன் அவனிடம் விவரித்த ஒவ்வொரு விவரத்தையும் சொன்னான்.. அப்படி ஒரு வீடு அமைய கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்றான்.. விலை மட்டும் தன் பட்ஜெட்டுக்குள் இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டான்..

மறுநாள் விஸ்வநாதன் வீட்டு கேட்டுக்கு முன்னால் காரை நிறுத்தினான்.  நேற்று காணாமல் போயிருந்த செக்யூரிட்டி அவசரமாக வந்தான்..

“வீடு பத்திப் பேச வந்திருக்கேன்”

சுதாகர் சொன்னவுடன் அவன் அவசரமாக தன் மேஜைக்குச் சென்று இண்டர்காமில் யாரிடமோ பேசினான். பிறகு மறுபடியும் அவசரமாக வந்து கேட்டைத் திறந்து சுதாகரை உள்ளே போகச் சொல்லி வழி காட்டினான்.

பங்களாவுக்கு முன்னால் இருந்த இடத்தில் காரை நிறுத்தினான் சுதாகர். அங்கே ஏற்கனவே ஒரு எஸ்.யு.வி. நின்றுக் கொண்டிருந்தது..

காரை விட்டு இறங்கியவன் ஒரு முறை அந்த இடத்தைச் சுற்றிப் பார்த்து அந்த இயற்கை ரசத்தை அனுபவித்தான்.

பிறகு மெதுவாகச் சென்று காலிங் பெல்லைத் தட்டினான்..

சற்றைக்கெல்லாம் கதவு திறக்க..

முப்பது வயது மதிக்கத் தக்க ஒரு பெண் நின்றிருந்தாள். விஸ்வநாதனின் அதே துப்பறியும் சாம்பு சாயல்.. நிச்சயம் அவர் மகளாகத் தான் இருக்க வேண்டும்..

”ஐ ஆம் சுதாகர்.. இந்த பிராப்பர்ட்டி விஷயமாப் பேச..”

சுதாகர் சொல்லி முடிப்பதற்குள் “யெஸ்.. வாங்க” என்று உள்ளே அழைத்துப் போனாள்.

“ஐ ஆம்.. நந்தினி.. வாங்க.. வீட்டை பார்க்கலாம்.. இந்த ஹாலை கவனிச்சீங்களா? வழக்கம் போல..”

நந்தினி ஆரம்பித்தவுடன் சுதாகர் குறுக்கிட்டான்..

“நான் ஏற்கனவே வீட்டைப் பார்த்திட்டேன்.. இந்த வீட்டோட ஒவ்வொரு அம்சமும் எனக்குத் தெரியும்.. இந்த ஹாலோட ஜிக் ஜாக் ஷேப் உட்பட..”

நந்தினி ஆச்சர்யத்தோடு அவனைப் பார்த்தாள்..

“ஏற்கனவே பார்த்திட்டீங்களா? எப்ப?”

“நேத்து.. இங்க வந்திருந்தேன்.. நீங்க இருக்கலை.. உங்கப்பா மிஸ்டர் விஸ்வநாதன் தான் எனக்கு வீட்டைச் சுத்திக் காட்டினார்..”

இதைச் சொன்ன சுதாகரை நம்ப முடியாமல் பார்த்தாள் நந்தினி..

“எங்கப்பாவா?”

“ஆமா.. அவர் தான் இந்த வீட்டைப் பத்தின எல்லா விவரமும் சொன்னார்.. இந்த வீட்டை வாங்கினா கடைசி வரை இதை சேதப் படுத்த மாட்டேன்னு அவருக்கு பிராமிஸ் பண்ணியிருக்கேன்”

நந்தினி அவனை தீர்கமாகப் பார்த்தாள்

”மிஸ்டர் சுதாகர்.. எங்கப்பா இறந்து இருபது நாளாச்சு”

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.