அவரை நான் முதன் முதலில் சந்தித்தது 1972ம் வருடம். நண்பர் சாருகேசியுடன், கிருஷ்வேணி தியேட்டர் அருகேயுள்ள, தாமோதரரெட்டி தெருவில் விசாரித்துக்கொண்டு போனேன். அந்த கால கட்டத்தில்தான் (1968-1970) தொடர்கதைகள் மட்டுமின்றி நேராகவே (அதாவது பத்திரிகைகளில் வெளிவராத) சில நாவல்களும் புத்தகமாக வெளிவந்தன.
அது போல் வெளி வந்த ஒரு நாவல்தான் ‘கரைந்த நிழல்கள்’. தன்னிலை ஒருமையாக சில அத்தியாயங்களும் (first person) படர்க்கையாக வேறு அத்தியாயங்களும் மாறி மாறி வரும். புரிவதற்கு கஷ்டமாக இருந்தது என்பதைக் குறிப்பிடத்தான் வேண்டும், ஆனால் வெளியே பகட்டாகத் தெரிந்த திரை உலகுக்குப் பின்னால் எத்தனை பேர் கஷ்டப்படுகிறார்கள் என்பதை நுட்பமாகப் புரிய வைத்தது அந்த நவீனம்.
ராஜ்கோபால் என்ற ஒரு பாத்திரம்; சினிமாவில் பணி புரிபவன் என்கிற ஒரு காரணத்தாலேயே, அவனுக்கு யாரும் பெண் தர முன் வரமாட்டார்கள். அதனாலேயே அவன் சில தீய பழக்கங்களில் இறங்குவான். ஒரு கட்டம்:– ஓட்டலிலோ, வெளியிடத்திலோ ஆறிப் போன பஜ்ஜியைச் சாப்பிடுவான். பிறகு நடந்து செல்லும் போது, குமட்டிக் கொண்டு வரும், வாந்தி எடுத்து விடுவான்.
”அதை நக்க ஒரு சொறி நாய் வந்தது” என்று எழுதியிருப்பார் அசோமித்திரன். அந்தப் பாராவைப் படித்தபோது எனக்கு – வாசகன் என்ற முறையில் – ஏற்பட்ட உணர்ச்சிகளை விவரிக்க வார்த்தை இல்லை.
சோகம், அருவருப்பு, ஆத்திரம் போன்ற கலவையான உணர்ச்சிகள் என்னை ஆட்கொண்டன.
அவரிடமே அதைச் சொன்னேன். நூலில் கையெழுத்து ‘அன்புடன் ஜ. தியாகராஜன்’ பெற்றுக் கொண்டேன். மேசையின் மீது சிற்சில பத்திரிகைகள் கிடந்தன. ஆ! என் அபிமான பத்திரிகை குமுதம் கூட!
”உங்களுடைய ‘விட்டேன் ஒரு குத்து’ சிறுகதை ரொம்ப வித்தியாசமாக இருந்தது சார்” என்றேன். அவர் மகிழ்ச்சியில்லாமல் புன்னகை புரிந்தார்.
”நிறைய வெட்டி விட்டார்கள். செக்கை திருப்பிவிடலாம் என்கிற கோபமே வந்தது.” என்றார். ”உங்களுக்கு பிடிச்சுதா?” என்று கேட்டார். (1967ல் குமுதத்தில் வந்த கதை, ரூ.80 வந்திருக்கலாம்).
ஆம் , சொல்ல மறந்து விட்டேனே! ஒரு குறிப்பிட்ட போட்டிக்கு, (வண்ணக் கதைகள் – கலைமகள்) நானும் கதை அனுப்பினேன். கொடுக்கப்பட்ட தலைப்பு: ‘வெண்புறா’ மிகமிக மெதுவாக, பெண் விடுதலை பற்றின உணர்வுகள் வந்த காலம். ‘கூண்டுக் கிளியாக குடும்பத்தில் அடைபட விருப்பமில்லை, வெள்ளை உடை உடுத்தி நர்ஸாக பணிபுரியப் போகிறேன்’ என்ற கற்பனையில் எழுதி அனுப்பினேன்.
ஆஸ்பத்திரி, நர்ஸ், தனியாக வசிக்கும் பெண்ணின் மனநிலை – (எனக்கு 20 வயது) எதுவுமே எனக்கு தெரியாது. ஆனாலும் ஆர்வத்தில் எழுதினேன். (அபத்தமான கதை)
அசோகமித்திரனின் ‘வெண்புறா’தான் ரூ.100யைக் கவ்விக் கொண்டு பறந்தது. செகந்தராபாத், முஸ்லீம்கள் வாழும் சூழல். எனக்குச் சரியாக புரியவில்லை. ஆனால் அதே சமயம் கலைமகளில் அவர் எழுதிய ‘அம்மாவுக்காக ஒரு நாள்’ (அற்புதமான கதை) கலைமகளில் படித்து வரிக்கு வரி ரசித்தேன். அம்மாவை சினிமாவிக்கு ஒரு முறை அழைத்துப் போவாதாகச் சொன்ன பிள்ளை மறந்து விடுவான்! சோர்வு எலக்ட்ரிக் டிரெயினில் வருகிற அலுப்பு, ஜனக் கூட்டம் (டிசம்பர் 25) எல்லாமாகச் சேர்ந்து மறந்துவிடும் அவனுக்கு அதில் ஒரு வாக்கியம்.
”இந்துக்கள் வருஷா வருஷம் பல பண்டிகைகள் கொண்டாடுகிற சந்தோஷத்தை, கிறிஸ்துவர்கள் ஒரே நாளில் பெறுகிறார்கள்.”
வீட்டுக்குள் நுழைந்தவுடன்தான் ஞாபகம் வரும்! ”ஸாரிம்மா, என்னை மன்னித்துவிடும்மா” என்று என்னவெல்லாமோ சொல்லி, பிள்ளை இறைஞ்சுவான்.
இதனால் அம்மாவின் ஏமாற்றம் போய்விடுமா? அம்மாவுக்கு மகிழ்ச்சி வருமா? என்று அடுக்கடுக்காக பல வரிகள்.
”சரி சரி, சாப்பிட வா” என்று அம்மா அழைப்பதோடு கதை முடியும்.
அசோகமித்திரனின் சிறுகதைகள் தொகுதி அப்போது வெளியாகியது. தலைப்பு ஞாபகமில்லை. ஆனால் அதில்தான் ‘எலி’ ‘புலிக் கலைஞன்’ இரண்டும் இடம் பெற்றிருந்தன. ஒண்டுக்குடித்தன வீட்டில் ஒரு எலி வந்து படுத்துகிற பாட்டை விவரமாகச் சித்தரித்திருப்பார். பொறி வைத்துப் பிடித்து விடுகிறார்கள்.
அதை அப்படியே ஜாக்கிரதையாக வெளியே கொண்டு போய்விடும் போது, எங்கிருந்தோ ஒரு காக்கை பறந்து வந்து கொத்திக் கொண்டு போய்விடும். புலிக் கலைஞன் மிகப் பிரபலமான கதை. (எ.க.எ. நூலில், ரா.கி. ரங்கராஜன் காட்சிப்படுத்துதல் தலைப்பில் இந்தப் புலிக்கலைஞனை quote பண்ணியிருக்கிறார்.)
ஆபீஸ் பணியில் பதவி உயர்வு கிடைத்தவுடன் ராயப்பன்பட்டி (1977) செல்ல வேண்டியிருந்தது. அந்த 1978-80களில் சென்னை செய்திகள் எல்லாம் ஓரளவு சாருகேசி மூலம்தான் தெரிந்தது. (1978ல் சாவி, தன் பெயர் தாங்கின பத்திரிகையுடன், ‘சுஜாதா’ என்று கூட ஒரு பத்திரிகை ஆரம்பித்தார்)
1980களில் மிகத் தற்செயலாக எழுத்தாளர் சுஜாதா தன் மாமனார் வீட்டில் தங்கியிருந்தார் என்று கேள்விப்பட்டேன். அவருடைய ‘கறுப்பு சிவப்பு வெளுப்பு’ தொடரின் முதல் அத்தியாயம் ஆரம்பித்து இருந்தது. அயல் நாட்டு ‘சர்ச்’ ஒன்றை அற்புதமாக வர்ணித்திருப்பார்.
அவரைச் சந்திக்கப் போன போது, போனில் யாருடனோ உரிமையுடன் பேசிக் கொண்டிருந்தார். ”புது கலர் மெஷின் வாங்கி இருக்கிறீர்களா?” என்றெல்லாம் தொ.பே.யில் வினவினார்.
”யார் சார், ரங்கராஜனா?” என்றேன்.
”எஸ்.ஏ.பி. என்றாரே பார்க்கலாம்! அப்போது மிகத் தற்செயலாக அசோகமித்திரன், சுஜாதாவை பார்க்க வந்தார்.
அவர்களிருவரும் பேசி முடித்தவுடன், நான் கிளம்பினேன். அசோகமித்திரன் சைக்கிளில் வந்திருந்தார்.
”என் வீட்டுக்கு வாருங்களேன்” என்று அழைத்தேன். ஆழ்வார்பேட்டை ஆஞ்சநேயர் கோயில் எதிரில் என்று அடையாளம் சொன்னேன்.
பச்சை வெஸ்பாவில் நான் முன்னால் சென்றேன். அவர் சொன்னபடி வந்துவிட்டார். காபி கொடுத்து உபசரித்தேன், ரசித்து அருந்தினார்.
”ரொம்ப நன்னயிருக்கே? எங்கே பொடி வாங்கறேள்?”
மனைவி இதற்கு மந்தைவெளி கடை பெயரை சொன்னாள். சிறிது நேரம் பேசி விட்டுக் கிளம்பினார். இப்போது, அவரைக் குறித்து பேச்சு வரும் போதெல்லாம், தான் போட்ட காபியை ருசித்ததை எண்ணி மனைவி மகிழ்ந்து போவாள்.
1985க்குப் பிறகு, சென்னையை விட்டு வேறு வேறு ஊர்களில் வாசம் – பணி நிமித்தமாக ஒரு விடுமுறையின் போது சென்னைக்கு வந்த சமயம், அசோகமித்திரனுக்குப் பாராட்டு விழா. (சாகித்ய அகாடமி விருது என்ற நினைவு). நல்ல கூட்டம், பார்வையாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதில் கொடுக்கும் நிகழ்ச்சியுமிருந்தது.
கூட்டத்தின் நடுவே உட்கார்ந்திருந்த நான் எழுந்தேன். மேடைக்கு சென்று ”இவர் துன்பத்தை மிகைப்படுத்துகிறார். சாதாரணமாக எல்லாரும் ‘புண்ணிலிருந்து ரத்தம் வழிந்தது’ என்று மட்டும் எழுதுவார்கள். ஆனால் அசோகமித்திரன் புண், ரத்தம், சீழ் வருகிற விதம், ரணமான வலி எல்லாவற்றையும் விஸ்தாரமாக எழுதுவார். இவர் ‘சோக மித்திரன்’ என்றே பெயர் வைத்து கொள்ளலாம்” என்றேன் படபடப்பாக.
இறுதியாய்ப் பதிலளித்த அசோகமித்திரன் டால்ஸ்டாய் எழுத்திலிருந்து மேற்கோள் காட்டினார். ”சந்தோஷமாக நிறைவாக இருக்கும் குடும்பம் எல்லாம் ஒரே ரகம். ஆனால் துன்பங்களில் உழலும் ஒவ்வொரு குடும்பமும் ஒரு விதம்” என்றார். ”பொதுவாக சோகத் தன்மைக்கு இலக்கியத்தில் ஒரு வலு உண்டு” என்றார்.
சொல்ல விட்டுப்போய் விட்டதே! 1974-76 கால கட்டத்தில் குஷ்வந்த் சிங் ‘வீக்லி’யில் ஆசிரியராகப் பணியாற்றியபோது, அ.மி. கதை பரிசு பெற்றது. நயேந்திர சைகல் நடுவர் குழுவில் இருந்தார். சினிமா உபநடிகையைப் பற்றின சிறுகதை. தமிழ் நடையைப் போல, அவர் ஆங்கிலமும் வெகு எளிமை.
பின்னர் அதே வீக்லியில் The Great Dream Bazaar’ என்ற தலைப்பில் அவருடைய கட்டுரைகள் வெளிவந்தன. அனைத்தும் ஜெமினி ஸ்டுடியோ அனுபவங்கள். தலைப்பை பத்திரிகை மாற்றி விட்டதாக பின்னர் தெரியவந்தது. (அ.மி. தந்த தலைப்பு – 14 years with Boss)
ஓய்வு பெற்று சென்னைக்கு வந்த பிறகு, சிற்சில கூட்டங்களில் சந்தித்தேன். மிகச் சாதாரணமாக நண்பர்களிடம் உரையாடுவது போல், பேசுவார். இந்தியா டுடே தமிழில் வாஸந்தி, நடராஜன் ஆகியோர் பணியாற்றியபோது, அவர் சிறுகதைகள் வெளியாகின. வேறொன்று – ரஜினிகாந்த சிறப்பு மலர் தயாரித்த போது, அதில் ரஜினியைப் பற்றி ஒரு பக்கக் கட்டுரை எழுதினார். இதே போல் ரகுவரன் இறந்து போனவுடன்.
யோசித்துப் பார்க்கையில் அ.மி.ன் பலமே இதில்தான் என்று அழுத்தமாகச் சொல்லலாம். சினிமா நடிகர்கள், வெகுஜனப் பத்திரிகை எழுத்தாளர்கள், பின்னணிப் பாடகர்கள் – எல்லோரையும் பற்றி, அவர்களுடைய பிளஸ் பாயிண்டுகளைச் சற்று உயர்த்தி நயமாக எழுதுவார். ஒருமுறை தொலைபேசி உரையாடலில், ”ஓ.பி. நய்யார்தான், சங்கர் ஜெய்கிஷனின் ‘ரிதம்’ போல் இசை அமைத்தார்” என்று சொல்லி, ‘தும்ஸா நளி தேக்கா, நௌதோ கியாரா’ போன்ற படங்களின் இசையைச் சுட்டிக் காண்பித்தார். சிவாஜியை மிகை என்று ஒரேயடியாக பிரபல எழுத்தாளர் ‘இறக்கிய’ போது அதற்கு எதிர்வினையாற்றி தினமணியில் எழுதினார்.
”Only a Journalist; Not a writer ” என்று 1960களில் இலக்கிய கொம்புகள் எல்லாரும் கல்கியை ஒரம் தள்ளியபோது, அவரைப் போல திறமைசாலி உலகிலேயே யாருமில்லை என்று எழுதினார். தியாகபூமியை மனதார பாராட்டியிருக்கிறார். (Hindu)
2014 பிப்ரவரி மாதம் புத்தக நண்பர்கள் அமைப்பு துவங்கியபோது, ‘அப்பாவின் நண்பர்’ என்ற தொகுப்பை நான் விமர்சித்தேன். மற்றொருவர் திருப்பூர் கிருஷ்ணன்.
”உங்க குரல் சரியா இல்லையே வாதூலன்?” என்று கூட்டம் முடிந்தபின் சொன்னார். என் கைத்தடியை அப்போதுதான் கவனித்து ”எங்கே வாங்கினேள்? வீட்டிலே எல்லாரும் என்னையும் ஸ்டிக் வைச்சுக்க சொல்லறா?” என்று அக்கறையுடன் விசாரித்தார்.
அதே அமைப்பு, இந்திரா பார்த்தசாரதி, அ.மி. இருவருக்கும் வாழ்நாள் சாதனை விருதும், பண முடிப்பும் (TAG சாரி உபயம்) வழங்கினார்கள். தலைமை வகித்த முன்னாள் நிதி அமைச்சர், ப. சிதம்பரம் நூறு வருடம் வாழ வேண்டுமென்று வாழ்த்து கூறினார்.
தளர்ந்து போயிருந்த அசோகமித்திரன், ”வேண்டாம், வேண்டாம்” என்று கையை அசைத்தார்.
பின்னர், அவருடைய பேட்டி ஒன்று விகடனின் வெளியான நினைவு; சாருகேசி அவரைச் சந்தித்த பேட்டி ஹிண்டு (ஆங்கிலம்)வில் வெளியாயிற்று. மறுவாரமே, அவர் இறந்து போய்விட்டார்.
என்னுடைய ‘கர்நாடக சங்கீதத்தை ரசியுங்கள்’ நூலைப் படித்து ரசித்து ஓர் சிறிய பாரா ‘ஓம் சக்தி’யில் எழுதினார். ‘கலிபோர்னியா திராட்சை’ என்ற சிறுகதைத் தொகுப்புக்கு முன்னுரை எழுதினார். அதை என்னுடைய பேறாகவே எண்ணுகிறேன்.
இன்றைக்கு, எம்.ஸிடி. பள்ளித் தோழர்கள் 80 வயது கடந்தவர்கள், எனக்கு சிலர் உண்டு. வங்கி நண்பர்கள் பலருடன் தொடர்பு வைத்திருக்கிறேன். எழுத்தாளர் உலகில் நண்பர்கள் நிறைய பேர் உள்ளார்கள். (அக்கறை அமைப்பினால் கிடைத்தவர்கள்).
ஆனால், அவர்களுக்கிடையே அசோகமித்திரன் மிகவும் தனித்துவம் வாய்ந்தவர் என்பதில் சந்தேகமில்லை.