கும்பகோணம் ரயில்வே ஸ்டேஷன் அந்த இரவு வேளையிலும் கூட்டமாகவே இருந்தது.
வைதேகி நுழை வாயில் அருகில் இருந்த டிஜிடல் ஸ்க்ரீனில் சென்னை ட்ரெய்ன் எந்த ப்ளாட்ஃபார்ம் என்று பார்த்தாள். இரண்டு என்றது. கையில் இருந்த ஒரு சின்ன பெட்டியோடு ஐந்தாம் ப்ளட் ஃபார்ம் நோக்கி நடக்க ஆரம்பித்தவள் சட்டென்று நின்றாள்.
அரவிந்த் எங்கே ?
வாசலில் முந்தியடித்து போவதும் வருவதுமாக இருந்த போர்டர்களுக்கும் ஜனங்களுக்கும் வழி விட்டு ஒதுங்கி நின்று கொண்டிருந்தான்.
அவன் வரட்டும் என்று காத்திருந்தாள்.
“என்ன ஒரு இன்டிஸ்ஸிப்லின்ட் க்ரௌட்., அப்படியே மேல வந்து விழறா. நீ எப்படிதான் உள்ள வந்தியோ அம்மா”, என்று அவர்களைத் திட்டிக் கொண்டே வந்தான்.
அவனுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் பொதுவாக சிரித்தாள்.
ஏதாவது சொல்லப் போய் இன்னொரு வாக்குவாதம் ஆரம்பிக்க வேண்டாம். ஆச்சு, ட்ரெயினில் ஏறி படுத்தால் காத்தால சென்னை போய்டலாம். அதுவரைக்கும் எதுவும் பிரச்சனை இல்லாம இருக்கணும் என்று நினைத்துக் கொண்டாள்.
ப்ளாட்ஃபார்ம் நெடுகிலும் ஆங்காங்கே பெஞ்ச்சுகளும் , ஃபேன்களும் போட்டு சுத்தமாகத்தான் இருந்தது.
ஒரு கிழவி கூடையில் பிஞ்சு கத்திரிகாய்களும், பச்சை சுண்டாக்காய்களும் வைத்து விற்றுக் கொண்டிருந்தாள். பார்த்தாலே அருமையாக இருந்தது. அந்த கிழவி வேறு “வாங்கிக்கோ” என்று ஆசை காட்டினாள். வாங்கலாம் தான். அப்புறம், இதை வேற கும்பகோணத்திலேந்து தூக்கிண்டு வந்தியா என்று அப்பாவும் மகனும் சேர்ந்து கிண்டலடிக்க ஆரம்பித்து விடுவார்கள்.
அப்படி என்ன ஆசை சாப்பாட்டின் மேல். வயதாகிக் கொண்டே போகிறது. பிடித்ததை எல்லாம் விட பழகிக் கொள்ள வேண்டாமா?
“ஒரே ஸ்டஃப்பி யா இருக்கு. ஏ.ஸீ வைட்டிங் ரூம் போகலாமா?” என்றான் அரவிந்த்.
“நான் இங்கியே இருக்கேன்டா. நீ வேணும்னா போய்ட்டு வா” என்று சொல்லிவிட்டு காலியாக இருந்த ஒரு பெஞ்ச்சில் உட்கார்ந்தாள்.
வானம் பளிச்சென்று கரு நீல புடவை கட்டிக் கொண்டு நட்சத்திரங்களின் ஒளியில் மின்னியது. நிலா கண்ணுக்குத் தென்படவில்லை.
அவளுக்குக் கும்பகோணம் வருவது என்றால் அலாதி பிரியம். அந்த மண்ணின் பழமையும், எளிமையான மக்களும், சரித்திரக் கதைகள் சொல்லும் நூற்றுக் கணக்கான கோவில்களும், ஊரைச் சுற்றி உள்ள பசுமையான வயல்களும், சுழித்து ஓடும் காவிரியும் அவளை வேறு உலகுக்கு கூட்டிச் செல்லும்.
இதெல்லாம் வெளிப்படையான காரணங்கள். ஆனால், அவையெல்லாம் தாண்டி மிக முக்கியமான காரணம், ஒப்பிலியப்பன். அவர்கள் குலதெய்வம்.
அது என்னவோ அவர் மேல் அப்படி ஒரு தீராத காதல்.
முன்பெல்லாம் வருடம் இரு முறை வருவார்கள். சேர்ந்தார்ப் போல விடுமுறை நாட்கள் வந்தால் போதும், கும்பகோணம் போகலாம், என்று கணவனை நச்சரிக்க தொடங்கி விடுவாள். வந்து இரண்டு நாட்கள் தங்கி, சுற்றி இருக்கும் கோவில்கள் எல்லாம் தரிசனம் செய்து, பொறுமையாக திரும்புவார்கள். ம்ம் , அது ஒரு காலம்.
கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாய், இப்போது வருஷம் ஒரு முறை வருவதே பெரும் பாடாகி விட்டது. அதுவும் அரவிந்த் யூ. எஸ். போனதிலிருந்து எல்லாம் மாறி விட்டது.
முதலில் மேற்படிப்பு, அப்புறம் வேலை என்று விளையாட்டு போல ஐந்து வருடங்கள் ஓடி விட்டன. இந்த ஐந்து வருடத்தில் அவன் சென்னை வந்த போதெல்லாம், ஏதாவது ஒரு காரணத்தால் கும்பகோணம் போவது மட்டும் தடைப்பட்டுக் கொண்டே போனது. காரணங்களைத் தாண்டி அவனுக்கு வருவதில் இஷ்டம் இல்லை என்பது தெளிவாக தெரிந்தது.
பக்தி என்பது உள்ளிருந்து எழும் உணர்வு அல்லவா? அதை வெளியில் இருந்து கட்டாயப்படுத்தித் திணிக்கவா முடியும்? அதுவும் தோளுக்கு மேல் வளர்ந்து விட்ட மகனிடம்? சரி, இதுவும் பெருமாள் சித்தம் என விட்டுவிட்டாள்.
அப்படி நினைத்துக் கொண்டாளே தவிர நடைமுறையில் அது அவ்வளவு எளிதாக இல்லை.
போன வருடம் அவன் உடம்பு சரியில்லாமல் இருந்த போது, அவள் நம்பிக்கையின் வேர் ரொம்பவே ஆட்டம் கண்டது. முதலில் சாதாரண ஜுரம் என்று தான் ஆரம்பித்தது, அப்புறம் தீராத வயிற்று வலி வந்து சேர்ந்தது.
உடம்புக்கு வந்தா என்ன? டாக்டர் கிட்ட போய் மருந்து சாப்பிட்டா சரியாய் போய்விடும் என்ற அவன் ‘லாஜிக்’ அந்த வயிற்று வலியிடம் வேலை செய்யவில்லை. மருந்து சாப்பிட்டதும் சரியாவது போல் நடித்து , பின் திரும்பவும் பழையபடி வலிக்க ஆரம்பித்தது. அவன் உடலும் மனமும் சோர்ந்து போனது.
சாப்பிட்டது எதுவும் ஒத்துக்கொள்ளாமல் போய், குழந்தை ரொம்பவே அவஸ்தைப் பட்டான். கூட இருந்து சமைத்துப் போட்டுப் பார்த்துக்கொள்ளலாம் என்றால் அமெரிக்கா என்ன பக்கத்திலேயா இருக்கிறது? ஒவ்வொரு முறை அவன் ஃபோன் பேசும் போதும் அவள் துடித்துப் போய்விடுவாள்.
நாம் அன்பு செலுத்துபவர்கள் நம் கண் முன்னே வேதனைப் படுவதைப் பார்த்தும், உதவ முடியாமல் இருப்பது போல ஒரு கொடுமை எதுவும் இல்லை. வலி என்னவோ அவனுக்குத் தான் என்றாலும், வேதனை எல்லாம் வைதேகிக்கு தான்.
பெருமாளே, அவனை குணமாக்கு. அவனைக் கூட்டிண்டு உன் சந்நிதிக்கு வரேன், என்று மனம் உருக வேண்டிக் கொண்டாள்.
“வாளால் அறுத்துச் சுடினும், மருத்துவன் மேல் மாளாத காதல் நோயாளன் போல்”, என்று அவள் தனக்குத் தெரிந்த ஒரே மருத்துவனின் திருவடியைப் பற்றிக் கொண்டாள்.
மந்திரத்துக்குக் கட்டுப் பட்டது போல, அவன் உடல்நலம் ஒரு மாதத்தில் தேறியது.
ஆனால் அவனை கும்பகோணம் கூட்டி வர ஆறு மாதம் ஆயிற்று. அவனைக் கெஞ்சி, கொஞ்சி ஒரு வழியாக சம்மதிக்க வைத்தாள்.
ஒரே ஒரு நாள் தான். ஒரே ஒரு கோவில் தான், என்று அவன் கண்டிஷனுக்கு எல்லாம் தலை ஆட்டினாள்.
ஒரு வழியாக எல்லா தடைகளையும் தாண்டி, இன்று காலை ஏகாந்த தரிசனம். பெருமாள் சந்நிதியில் நின்ற போது மனம் உருகி காரணமே இன்றி கண்ணீர் வழிந்தது. எத்தனை நேரம் நின்றிருப்பாள் என்று தெரியவில்லை, கண் விழித்த போது, ஸ்ரீதர் பட்டர் இவளைப் பார்த்து சிரித்தார்.
அவர் தூரத்து சொந்தம், ஒரு வகையில் அண்ணன் முறை.
“அதான், பையனுக்கு உடம்பு எல்லாம் சரியாப் போச்சே, இன்னும் என்ன கவலை,” என்றார் புன்னகைத்தபடி..
“உங்ககிட்ட சொல்றதுக்கு என்ன அண்ணா, இவனை இங்க கூட்டிண்டு வரதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுத்து. அஞ்சு வருஷம் ஆச்சு, கோவில் பக்கம் வந்தே. எது சொன்னாலும் விதண்டாவாதம். தாங்க முடியறது இல்ல. சரியா வளர்க்கலியோ, தப்பு பண்ணிட்டமோனு மனசு கெடந்து தவிக்கறது.” என்றாள்.
தாயுள்ளித்தின் தவிப்பை, வேதனையை அவர் புரிந்து கொண்டார். கனிவோடு அவளைப் பார்த்து, வைதேகி, உனக்கு ராமானுஜர் சரித்திரத்துல, உறங்காவிலி கதை தெரியுமோ ? என்றார்.
அவளுக்குத் தெரியும் என்றாலும் அதை அவர் சொல்லி இன்னொரு முறை கேட்கத் தோன்றியது.
“நீங்க சொல்லுங்க அண்ணா”, என்றாள்.
“உறங்காவிலிக்குத் தன் மனைவி பொன்னாச்சி மேல அளவிட முடியாத காதல். அவளைப் போல அழகியும், அவள் கண்களைப் போல தன்னை அடிமை கொள்கிற பொருளும் இந்த உலகத்திலேயே இல்லைனு நம்பினான்.
ஒரு சமயம் ஸ்ரீரங்கம் சித்திரைத் திருவிழால ராமானுஜர் அவர் சீடர்களோட போயிண்டு இருக்கற போது, உறங்காவிலி தன் மனைவிக்குக் குடை பிடிச்சிண்டு அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு நடந்து வந்த காட்சியைப் பார்த்தார். மத்தவங்க எல்லாம் உறங்காவிலியைப் பரிகாசம் பண்ணார்கள். ஆனா, ராமானுஜர் என்ன நினைச்சார் தெரியுமா, இதோ, ஒருவன் இருக்கிறான், அவனுக்கு எப்படி அன்பு பண்ணனும் தெரிஞ்சிருக்கு. இப்படி அன்பு பண்ண தெரிஞ்சவனுக்குத் தான் பக்தி பண்ண முடியும்னு அவனைக் கூப்பிட்டு வரச் சொன்னார்.
அவனைக் கூட்டி வந்து ரங்கநாதரோட தாமரை மலர் போன்ற கண்களை சேவிக்க வெச்சார். பெருமாள் தன் திருக்கண்களைத் திறந்து அவனுக்குத் தரிசனம் தர அவன் அப்படியே மெய் மறந்து நின்றான், அப்புறம் ராமானுஜர்க்கு சீடரானான்.
ஆழ்ந்த அன்பு தான் பக்தி. நாம எது மேல ரொம்ப அன்பு வெச்சிருக்கோமோ , அதோட குறைகள் நமக்குத் தெரியாது. அப்போ லாஜிக் எல்லாம் பாக்க மாட்டோம். அந்த அன்பு பக்தியா மாற ஒரு க்ஷணம் போதும்.
அவனோட மனசுல அன்பு பொங்கி நிறையனும்னு பிரார்த்தனைப் பண்ணிக்கோ, அவன் அருமையான குழந்தை. அவனைப் பகவான் பார்த்துப்பார். நீ கவலைப் படாதே,” என்றார்.
அவர் வார்த்தைகளில் இருந்த சத்தியமும், அதை அவர் சொன்ன விதமும், அவள் மனம் சட்டென்று லேசாகியது.
“அம்மா”, என்ற அரவிந்த்தின் குரல் அவள் நினைவுகளைக் கலைத்தது. “ட்ரெய்ன் வந்துடுத்து, ஏ 2 கோச் முன்னாடி வரும் வா” என்று நடக்கத் தொடங்கினான்.
கம்பார்ட்மென்டில் நுழைந்த உடன் அடுத்த பிரச்சனை ஆரம்பமாகியது. அவர்கள் ஸீட்டில் ஒரு இளம் பெண் தன் குழந்தையுடன் உட்கார்ந்திருந்தாள். படிய வாரி பின்னிய தலைமுடியும், அதில் மணத்த மல்லிகையும் அவள் இந்த ஊர் பெண் என்று சொல்லாமல் சொல்லியது. முதல் முறையாக தனியாக பிரயாணம் செய்கிறாள் போல, கொஞ்சம் பயந்தது போல் இருந்தது அவள் முகம்.
உங்க ஸீட் நம்பர் என்ன, என்றாள் வைதேகி.
அந்த பெண் தன் கையில் இருந்த டிக்கெட்டைப் பார்த்த படியே, “ஏ 2 கோச், ஸீட் நம்பர் 2, 3 எங்களது” என்றாள்.
அரவிந்த் ஃபோனில் இருந்த டிக்கெட் நம்பரை மறுபடியும் செக் செய்தான். “இல்ல, ஸீட் நம்பர் 2, 3, எங்களது, வைதேகி, அரவிந்தன். நீங்க சரியா செக் பண்ணுங்க”, என்றான்.
அவள் மறுபடியும் பார்த்துவிட்டு, “இல்லங்க எங்க நம்பர்தான். கரெக்ட்டாதான் போட்டிருக்கு”, என்றாள்.
“திஸ் இஸ் வை ஐ ஹேட் திஸ் ஸிஸ்டம்.. எப்படி ரெண்டு பேருக்கும் அதே ஸீட் நம்பர் குடுக்க முடியும்?” என்று ஆரம்பித்து விட்டான்.
”இப்போ இங்க உட்காருவோம். டி. டி. ஆர் வந்துடுவார், கேட்கலாம்,” என்று அவனை சமாதானப் படுத்தினாள்.
நல்ல வேளை , டி. டி. ஆர் கொஞ்ச நேரத்துக்கெல்லாம் வந்து விட்டார்.
“மேடம், உங்களோடது ஃபர்ஸ்ட் க்ளாஸ், ஏ 1, ஸீட் நம்பர் 2 , 3 . இது செகண்ட் ஏ ஸீ கோச். இப்படியே உள்ள போங்க, ரெண்டு கம்பார்ட்மென்ட் முன்னாடி வரும்” என்றார்.
அவருக்கு தாங்க்ஸ் சொல்லிவிட்டு நகர்ந்தார்கள்.
ஃபர்ஸ்ட் க்ளாஸ் கோச் இன்னும் வசதியாக நன்றாக இருந்தது.
அரவிந்த்தான் நிலைக் கொள்ளாமல் இருப்பது போல் தோன்றியது. கதவைத் திறந்து வெளியில் சென்றான். இப்போ என்ன ஆச்சு என்று யோசித்தாள். ஆனால் ஒன்றும் கேட்கவில்லை.
கொஞ்ச நேரத்துக்கெல்லாம் திரும்ப வந்தான். “நான் அந்த லேடி கிட்ட போய் ஸாரீ சொல்லிட்டு வந்தேன் அம்மா. ஷி வாஸ் ரைட். ஐ வாஸ் ராங். நான் பண்ணது தப்புனு தோணித்து. அதான், ஸாரீ கேட்டுட்டு வந்தேன். அந்த குழந்தை சோ க்யூட் தெரியுமா, என்ன பார்த்து சிரிச்சு என் கூட விளையாடித்து,” என்றான்.
அந்த டிரிப்பில் முதன்முறையாக அவன் சந்தோஷமாக சிரிப்பது போல தோன்றியது வைதேகிக்கு.