‘புஜ்ஜிக்குட்டி, இன்னைக்கு ராத்திரி பாவ்பாஜி பண்ணுடா செல்லம்’!
தேவி மாதிரி அழகா, சிகப்பா இருக்கா என்று மூத்த பெண்ணான எனக்கு அம்மா அப்பா பார்த்துப் பார்த்து வைத்த பார்வதி என்ற பெயர், காரியம் ஆக வேண்டுமென்றால் என்னவரால் புஜ்ஜிக்குட்டி, செல்லம் என்றாகும்.
என் கணவரால் மிகவும் விரும்பப்படும் இந்த பாவ்பாஜி செய்வதில் என்னவோ நான் ஸ்பெஷலிஸ்ட் ஆகிவிட்டேன். . நிறையக் காய்களைப் போடுவதால் மட்டுமே பாவ்பாஜி ஆகி விடாது. அதன் இரகசியம் அந்தக் காய்கறிகளின் அளவிலும், அதில் சேர்க்கப்படும் மசாலாவிலும் உள்ளது. நான் செய்யும் பாவ்பாஜி பாரெங்கும் மணக்கும், அந்தக் கைப்பக்குவத்திற்கு ஈடு இணை இல்லை என்று அதை ருசித்த எல்லோரும் சொல்வதுண்டு. எங்கம்மா எதைச் சொல்லித்தந்தாரோ இல்லையோ, நன்றாக சமைக்கக் கற்றுக் கொடுத்திருக்கிறார். ஓர் ஆணின் இதயத்திற்குள் வயிற்றின் மூலமாகத்தான் நுழைய முடியும் என்று. ஆனால் எப்படி நுழைவது! இதயம் வயிற்றுக்கு மேலே அல்லவா இருக்கிறது!
சொன்னபடி இராத்திரி பாவ்பாஜி செய்யவில்லை என்றால் வீடு ரெண்டு பட்டுவிடும். எனவே பாவ்பாஜி செய்வதற்கு எல்லா சாமான்களும் இருக்கின்றனவா என்று பார்க்க சமயலறைக்குள் நுழைந்தேன். ம்.. நான் பயந்த மாதிரி காய்கள் மிகவும் கொஞ்சமாக இருக்கின்றன. வெங்காயம் முக்கியமானது. இல்லவே இல்லை. நல்லதாய்ப் போயிற்று. இப்பவே பாரத்தேன். என் பையன் அர்ஜூன் ஸ்கூலிலிருந்து வருவதற்குள் வாங்கி வந்து விடலாம் என்று காலை செருப்பில் நுழைத்து வாயிலுக்கு வந்தேன்.
மடமடவென்று நடையைக் கட்டினபோது, ஆ இதென்ன இந்த செருப்பு சமயம் தெரியாமல் அறுந்து விட்டது. எத்தனை தடவை சொல்லியாகிவிட்டது புதுசு வாங்கித்தரும்படி. இரண்டொரு நாட்களில் எப்படியும் வாங்கியேயாக வேண்டும். கவனத்தை செருப்பிலிருந்து திருப்பி பாவ்பாஜியில் செலுத்தி வேக நடை போட்டேன்.
எதிரில் வந்து கொண்டிருந்த கமலா என்னைப் பார்த்து அர்ஜூன் ஸ்கூல் பற்றி, அடைக்கு போட வேண்டிய அரிசி அளவைப் பற்றி சிறிது நேரம் பேசினாள். இங்கும் அங்கும் அலை பாய்ந்த மனத்தோடே அவளுக்குப் பதில் சொல்லிவிட்டு நடை கட்டினேன்.
திடீரென்று அடுத்தத் தெருவில் இருக்கும் ரகு எதிரில் வந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். இந்தப் பக்கம் வருகிறான் என்றால் கண்டிப்பாக வீட்டுற்குத்தான் செல்கிறான். ஐயகோ! அனுஷா வீட்டில் தனியாக இருக்கிறாளே! மாமனார் மாமியார் வேறு ஊரில் இல்லை அவள் பாதுகாப்பிற்கு. ரகுவின் சில்மிஷம் ஊரறிந்த ஒன்று. நல்ல பெயரே கிடையாது அவனுக்கு. இந்தப்பாழும் செருப்பால் வேகமாக நடக்க முடியவில்லை.
பதைபதைத்தபடி வேண்டிய காய்களை அவசர அவசரமாக வாங்கிக்கொண்டு, தெய்வங்களையெல்லாம் வேண்டிக்கொண்டு வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்தேன். வீடு நிசப்தமாக இருந்தது வேறு என் பயத்தை அதிகமாக்கியது.
மெதுவாக பெட்ரூம் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தேன். அப்பாடி ! மனம் நிம்மதியடைந்தது அந்தக் காட்சியைப் பார்த்து! ஸ்கூலுக்குச் செல்லாத ஐந்து வயது ரகு நாலு வயது அனுஷாவுடன் பொம்மை விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்தான்.
இன்று ரகுவிற்கும் ராஜ (பாவ்பாஜி) யோகம்தான்!