இருபத்தைந்து வருடங்களுக்குப் பிறகு யு.எஸ்ஸிலிருந்து பறந்து வந்து சென்னை மண்ணை மிதித்து ஐ.டி.சி. சோளாவில் செக்-இன் செய்த மறுகணம் செல் போன் சிணுங்கியது. வேறு யாரு.. என் சகதர்மிணி தான்..
”சொல்லும்மா.. இப்பத்தான் செக் இன் பண்ணினேன்.. ப்ரெட்டி ஹாட்.. ஹோட்டல் இஸ் குட்.. அனு தூங்கிட்டாளா? டேக் கேர்.. ஒன் வீக்குல வந்துருவேன். ஓக்கே.. வில் கேச் அப் லேடர்”
செல்லைக் கட் பண்ணியவுடன் அழைப்பு மணி அலறியது.
சைக்கியாட்ரிஸ்ட் கௌன்ஸில் சேர்மேன் திருவாளர் நிர்மல் மூன்று நான்கு எடுபிடிகள் சூழ உள்ளே வந்தார்.
”வெல்கம் டு சென்னை டாக்டர்”
விலை உயர்ந்த பொக்கேயைக் கையில் திணித்தார். மறுநாள் நான் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கவிருந்த கான்பரன்ஸ் ஏற்பாடுகளைப் பற்றி விளக்கினார்.. மாலையில் வந்து மற்ற விஷயங்களைப் பற்றி பேசுவதாகக் கூறி அவர்கள் விடை பெற்றுச் சென்ற பின் சற்று அயர்ச்சியுடன் நாற்காலியில் சாய்ந்தேன்.. பின் திடீரென்று ஞாபகம் வந்தவனாக செல்லைத் துழாவி ஒரு நம்பரைத் தட்டினேன்..
“ஷங்கி..”
மறுமுனையில் பரவசமான குரல்..
“ஹே.. ராகவ்.. லேண்ட் ஆயாச்சா? இரு.. இப்பவே வரேன்”
“அவசரப் படாதே ஷங்கி.. இன்னும் ரெண்டு நாள் என்னை விட்டுரு.. கான்பரென்ஸ் முடியட்டும்.. அப்புறம் நமக்காகவே மூணு நாள் ஒதுக்கியிருக்கேன்.. ஆமா.. நம்ம ஸ்கூல் ஐவர் கேங்குல வேற யாரையாவது பிடிக்க முடிஞ்சுதா”
”ம்.. நச்சு.. சி.ஏ.வா பிராக்டீஸ் பண்ணறான்.. மாது ஆட்டோமோபைல் ஸ்பேர்ஸ் பிஸ்னஸ்.. ஆனா இப்ப ஊருல இல்லை.. சீனு சிங்கப்பூர்ல ப்ரிட்ஜ் கட்டிண்டிருக்கானாம்”
“சரி.. நாம மூணு பேரும் மீட் பண்ணறோம்”
சொன்னது போல் கான்பரென்ஸ் முடிந்த மறுநாள் காலையில் ஷங்கியிடமிருந்து கால்.
அன்று மதியமே தி பார்க்கில் சந்திக்க ஏற்பாடு..
பல வருடங்கள் கழித்து நண்பர்கள் சந்தித்த போது முதலில் வார்த்தைகள் வரவில்லை.. முதல் சில நிமிடங்கள் “ஹேய்.. ஹேய்” என்று கட்டிப் பிடிப்பதிலேயே கழிந்தன..
ஒரு வழியாகச் சுதாரித்து உள்ளே சென்று ரிசர்வ் செய்திருந்த இருக்கைகளில் உட்கார்ந்து.. வேண்டியதை ஆர்டர் செய்து..
பின் பல வருடங்கள் பின்னோக்கிப் பயணம் செய்து மூன்று பேருமே பள்ளி மாணவர்களாக மாறினோம்..
”ராகவ்.. ஞாபகம் இருக்கா.. இங்கிலீஷ் சார் லவ்வுக்கு அர்த்தம் கேட்ட போது.. நீங்க கணக்கு டீச்சர் மாலினியைப் பண்றதுன்னு பட்டுன்னு சொன்னியே.. அப்ப கிளாஸே சிரிச்சுது”
“ஆமாண்டா.. மனுஷன் ஆடிப் போயிட்டார்”
“அப்புறம் அவர் ஸ்கூலுக்கே வரலையே.. ரிசைன் பண்ணிட்டுப் போயிட்டார்”
என் மனதிலும் பிளாஷ்-பேக் ஓடியது.
“இப்ப நினைச்சா பாவமா இருக்கு.. இப்பலாம் லவ் ரொம்ப சாதாரண விஷயம்.. ஆனா அந்தக் காலக் கட்டத்துல.. லவ் பண்றது வெளில தெரிஞ்சா அவமானம்னு தானே நினைச்சா.. நான் அப்படிச் சொல்லியிடுக்கக் கூடாது”
ஷங்கி உள்ளே புகுந்தான்..
“டேய்.. ரொம்ப பீல் பண்ணாதே.. எது சரி தப்புன்னு தெரியாத வயசு அது.. அப்படிப் பார்த்தா.. தீபாவளிக்கு அடுத்த நாள் ஹிஸ்டரி டீச்சர் நாற்காலிக்கு அடில நான் பட்டாசுக் கொளுத்தி.. அவங்க பதறி அடிச்சு ஓடி கீழே விழுந்து.. இப்ப நினைச்சா எவ்வளவு டேஞ்சரஸ்னு தோணும்.. ஆனா நினைக்கக் கூடாது.. நினைச்சா நம்ம பால்யத்தை அனுபவிக்க முடியாது”
ஷங்கி சொல்வதை ஏற்கலாமா கூடாதா என்று ஒரு முடிவுக்கு வருவதற்குள் பேச்சு வாணிக்குத் தாவியது.
வாணி.. அவள் தான் எங்கள் பள்ளியின் ஆல் இன் ஆல் அழகு ராணி.. எங்களை விட இரண்டு வருடங்கள் ஜூனியர்.
நச்சு தான் ஆரம்பித்தான்.
”சரியான கேரக்டர்டா.. எப்பவும் எங்கயும் தனக்குத் தான் முக்கியத்துவம் இருக்கணும்.. தன்னைப் பாராட்டித் தான் எல்லாரும் பேசணும்..”
ஷங்கி தொடர்ந்தான்.
“கரெக்ட்.. பச்சையா சொல்லணம்னா.. சாவு வீட்டுல கூட அவ தான் பொணமா இருக்கணம்னு நினைக்கிற டைப்”
இதைக் கேட்டு நச்சு சிரித்து விட்டான்.
- “டேய்.. இது ரொம்ப ஓவர்.. நீயும் ராகவும் தானே அவளை உசுப்பேத்தி விட்டுட்டே இருந்தீங்க.. அவ பார்க்க சுமாரா இருந்தாலும் உன்னை மாதிரி அழகு வேற யாருமே கிடையாதுன்னு நீங்க ரெண்டு பேரும் சொல்வீங்க.. அவ படு சுமாரா பாடினாலும்.. அடுத்த பி.சுசீலா நீ தான்னு அப்படின்னு அவளை ஏத்தி விட்டீங்க.. அவ சாதாரணமா ஏதாவது பண்ணினாக் கூட.. உன்னால மட்டும் தான் முடியும்.. வேற யாராலயும் முடியாதுன்னு கூசாம அளந்தீங்க”
“அப்படி நாங்க சொன்னதுல அவளுக்கு எவ்வளவு கிக் இருந்தது தெரியுமா? அதை சந்தோஷமா ரசிப்பா.. நாங்க அவளைப் பாராட்டின உடனே கூட இருந்த மத்த பசங்களும் அவளைப் பாராட்டினப்போ அவ அப்படியே வானத்துல மிதக்க ஆரம்பிச்சுருவா.. நிஜமாவே தன்னை ஆல் இன் ஆல் அழகு ராணியா நினைக்க ஆரம்பிச்சுருவா”
இதைக் கேட்டு நச்சு கொஞ்சம் சீரியஸானான்..
“டேய்.. நீ சொல்ற இந்த.. கிக்.. மிதப்பு தான் பின்னால அவளை ரொம்பவே பாதிச்சிருக்கு தெரியுமா?”
”என்னடா சொல்றே?”
“வாணி இருந்த வீட்டுக்குப் பக்கத்துல தான் என் மாமா பையன் குடியிருந்தான்.. அவன் தான் சொன்னான்.. ஸ்கூல்ல எல்லாரும் அவ ஆசைப்பட்ட மாதிரியே அவளைப் புகழ்ந்து புகழ்ந்து பழக்கப் பட்ட அவ.. காலேஜுக்குப் போன அப்புறமும் அதை எதிர்பார்த்திருக்கா.. ஆனா காலேஜ்ல யாரும் அவளை சீந்தவே இல்லையாம்.. ஏன்னா.. காலேஜ்ல உண்மைலயே அழகான பெண்கள் இருந்தாங்களாம்.. அவங்க உண்மைலயே நல்லாப் பாடினாங்களாம்.. ஆடினாங்களாம்.. அதனால வாணி பிகேம் எ நான்-எண்டிட்டி இன் காலேஜ்.. ஷங்கி சொன்ன மாதிரி சாவு வீட்டுலயே பிணமா இருக்க ஆசைப்படறவ.. அந்த நெக்லெக்டை அவளால ஏத்துக்க முடியலை.. டெப்ரெஸ்ட் ஆயிட்டாளாம்..”
”ஐயையோ.. அப்புறம்?”
”என் மாமா பையனுக்கு டெல்லி டிரான்ஸ்பர் ஆகிப் போயிட்டான்.. அப்புறம் நோ நியூஸ் எபௌட் ஹர்”
நச்சு கவலையோடு முடித்தான்.
நான் மெதுவாக ஆரம்பித்தேன்.
“நான் எம்.பி.பி.எஸ். முடிச்சு ஜி.ஹெச் சைக்கியாட்ரி டிபார்ட்மெண்டுல ஹவுஸ் சர்ஜனா இருந்த போது.. திடீர்னு பார்த்தா வாணி.. அவப்பாவோட வந்து இருந்தா.. நச்சு சொன்ன மாதிரி ஷி வாஸ் டெப்ரெஸ்ட்.. ஆரம்ப ஸ்டேஜ் தான்.. ட்ரீட்மெண்ட் அண்ட் கவுன்சிலிங் ஆரம்பிச்சு.. ஷீ ரெஸ்பாண்டட் வெல்.. ஆனா ட்ரீட்மெண்ட் முழுசா முடியறதுகுள்ள அவ அப்பா திடீர்னு கார்டியக் பெயிலியர்ல போயிட்டார்”
“ஓ காட்”
“அதுக்கப்புறம் அவ ட்ரீட்மெண்டுக்கு வரலை.. என் ஹவுஸ் சர்ஜன்ஷிப் டெர்ம் முடிஞ்சு போச்சு.. அண்ட் கொஞ்ச நாளுல நான் பர்தர் ஸ்டடீஸுக்கு யு.எஸ். கிளம்பிட்டேன்”
இதைக் கேட்டு நச்சு ரொம்பவே வருத்தப் பட்டான். அவன் எப்பவுமே கொஞ்சம் செண்ட்டிமெண்டல் டைப்..
“இதுக்குத் தான் சொல்வாங்க.. எப்பவுமே தகுதியில்லாத புகழும்.. தன்னைப் பத்தி எப்பவுமே ரொம்ப உயர்வா நினைக்கிற நினைப்பும் அழிவுல தான் கொண்டு விடும்னு”
இதைக் கேட்டு ஷங்கி சிரித்து விட்டான்.
“பாருடா. ரஜினி பட டைலாக் மாதிரி எடுத்து விடறான்.. டேய்.. ஒண்ணு நடக்கணம்னு இருந்தா நிச்சயமா நடக்கும்.. யாராலயும் தடுக்க முடியாது.. அதோட கடவுள் எல்லாரையும் ஒரே மாதிரி படைக்கறதில்லை.. வாணி அப்படி அவஸ்தைப் படணங்கறது டெஸ்டினி..”
நச்சுவின் கவலை இன்னும் தீரவில்லை.
“ஹும்.. சுலபமா சொல்லிட்டே.. பாவம்.. சின்ன வயசுலயே அம்மா போயாச்சு.. அப்பாவும் இல்லை.. இப்ப எப்படி இருக்காளோ?.. எங்க இருக்காளோ?”
உடனே ஷங்கி சொன்னான்..
“வேற எங்க.. வாழ்க்கைல இவ்வளவு பட்டதுக்கு அப்புறம் ஏதாவது மெண்டல் அசைலத்துல மோட்டு வளையை வெரிச்சுப் பார்த்திட்டு உட்கார்ந்திருப்பா.. என்ன ராகவ்?”
இதைக் கேட்டு நான் சிரித்தேன்.
”இல்லை ஷங்கி.. அவ எந்த மெண்டல் அசைலத்துலயும் இல்லை”
ஷங்கி ஆச்சர்யத்துடன் கேட்டான்.
“உனக்கெப்படித் தெரியும்?”
அமைதியாக அவனைப் பார்த்தேன்.
”ஏன்னா.. இருபத்தஞ்சு வருஷமா அவ மேல என்னைப் பைத்தியமாக்கிண்டிருக்கா”