ரஸவாதி
கல்லூரி நாட்களிலேயே பல பத்திரிகைகளில் ரஸவாதியின் (ஆர்.ஸ்ரீனிவாசன்) படைப்புகள் வெளிவந்தன. மாணவப் பருவத்தில் கையெழுத்துப் பத்திரிகை நடத்தியவர். கவனிக்கப்பட்ட எழுத்தாளரான இவருக்கு ‘கலைமகள்’ நாவல் பரிசு பெற்ற ‘ஆதரஸ்ருதி’ மேலும் எண்ணற்ற ரசிகர்களை உருவாக்கியது. இதன் கன்னட மொழியாக்கமும் தொடர்கதையாக வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்றது.
நிறையச் சிறுகதைகள் எழுதியுள்ளார். ‘அமுதசுரபி’ நாவல் போட்டியில் பரிசு பெற்ற புதினம் ‘அழகின் யாத்திரை’. அதனை மேடை நாடகமாக்கி முக்கியப் பாத்திரத்தில் நடித்திருக்கிறார். ‘சேவா ஸ்டேஜ்’ குழுவில் நடித்திருக்கிறார். ‘வழி நடுவில்’ என்னும் பரிசுகள் வென்ற மேடை நாடகம் கன்னடத்தில் திரைப்படமாக எடுக்கப்பட்டது. பல வானொலி நாடகங்களும் எழுதியுள்ளார். உதவி இயக்குநராக ‘எங்கள் குல தெய்வம்’ படத்தில் பணியாற்றிய அனுபவமும் உண்டு.
ஓய்வுபெற்ற பிறகு உடல் நலம் பாதிக்கப்பட்டு எழுத இயலாமல் போனது. அதிலிருந்து மீண்டு ‘சேது பந்தனம்’ என்னும் புதினத்தை எழுதி முடித்தார். அந்த நாவல் இவர் மறைந்த பிறகு வெளிவந்தது.
* * * * * *
தோழர் கஜபதி என்னும் கதை …..
கஜபதியைத் தெரியுமோ உங்களுக்கு? ஒல்லியாக, கோட்டு போட்டுக்கொண்டு “பைல்”கட்டும் அதுவுமாக, பழைய குடையுடன், பத்தாம் நம்பர் பஸ்ஸுக்காக பாரீஸ் கார்னரில் காத்திருப்பாரே அவரேதான்.
என்று தொடங்குகிறது.
அரசு அலுவலகங்களில் உழைத்தே ஓடாய்ப்போன லக்ஷக்கணக்கான குமாஸ்தாக்களில் கஜபதியும் ஒருவர். தாம் உண்டு தம் வேலை உண்டு என்று எந்த வம்பிலும் மாட்டிக் கொள்ளாமல் காலந்தள்ளும் ஒரு அப்பாவி! வெள்ளைக்காரன் காலத்திலேயே வேலைக்குச் சேர்ந்துவிட்டவர். – இது அறிமுகம்.
குழிவிழுந்த கன்னம், பள்ளத்தில் கிடந்தாலும் மூக்குக்கண்ணாடி வழியே மிரள மிரள விழிக்கும் கண்கள். அவரது நெற்றிச் சுருக்கங்கள் இருபதாண்டுகளுக்கு மேலான அனுபவங்கள் பதித்த சுவடுகள். வழுக்கைத் தலை, இடையிடையே கருப்போடியிருக்கும் பிசிர் பிசிரான மீசை. – இது தோற்றம்
மாதம் முழுவதம் போடப்படும் பிய்ந்துவிட்ட பித்தான்களுக்குப் பதிலாக குண்டூசிகள் குத்தப்பட்ட ஒரே கோட், குல்லா, டயர் செருப்பு, பளிங்குக் கண்ணாடி – இது உடையலங்காரம்.
அவருக்கு இப்போது பெரிய பிரச்சினை
காரியாலயத்தில் ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்வது என்று சங்கம் தீர்மானம் செய்ததுதான் அவருக்கு ஆபத்தாகப் போயிற்று. சங்கக் கூட்டம். பகல் லஞ்ச் டைமில் காம்பவுண்டுக்குள் இருந்த பெரிய புளிய மரத்தினடியில்தான் வழக்கமாக நடக்கும். தலைவர் ஆவேசமாகப் பேசினார். நூறு நூற்றைம்பது சக ஊழியர்கள் நின்று கேட்டுக்கொண்டிருந்தார்கள். ஸி.ஐ.டிக்களும் மாறு வேஷத்தில் அந்தக் கும்பலில் இருந்ததாகச் சில தோழர்கள் சொல்லிக் கொண்டார்கள்.
கஜபதி மட்டும் தான் உண்டு தன் வேலையுண்டு என்று கோப்புகளுடன் போராடி மேலதிகாரிகளின் பார்வைக்காகக் குறிப்புகள் எழுதிக்கொண்டு இருந்தார். அவருடைய ‘விசுவாசம்’ அப்படி.
சட்டமும், ரூலும் தெளிவாக இல்லாவிட்டால் மழுப்பின மாதிரி பட்டும் படாமலும் உத்திரவுகள் போடும் அதிகாரிகள்கூட கஜபதியின் “நோட் என்றால் கண்ணை மூடிக்கொண்டு ஓ.கே. உத்திரவை உடனே போட்டு “பைலை” திருப்பி அனுப்பி விடுவார்கள். அவ்வளவு நல்ல பெயர் அவருக்கு மேல் மட்டத்தில். ஆனால் அதிகாரிகளிடம் சொந்த முறையில் தொடர்பு வைத்துக்கொண்டு சில்லறைச் சலுகைகளை அடையும் தைரியமோ சமார்த்தியமோ அவருக்குக் கிடையாது. யார் யாருக்கோ எதற்காகவோ அட்வான்ஸ் இன்க்ரிமெண்ட் தந்து கொண்டிருந்த அந்த அதிகாரிகள் கஜபதியின் வேலையைப் பாராட்டித் தட்டிக் கொடுப்பதுடன் நிறுத்திக் கொண்டார்கள்.
எப்படியாவது தீர்வு வந்துவிடும்; வேலை நிறுத்தம் வராது என்று நம்பிக்கொண்டு இருந்தவர். போராட்டம் ஸ்ட்ரைக் வரை முற்றிவிட்டது என்பது இவருக்குக் கலக்கத்தை ஏற்படுத்துகிறது. அலுவலக தூண்கள் சுவர்கள் எல்லாம் காணப்படும் சுவரொட்டிகளும் கோஷங்களும் இவரை மிரளச்செய்கின்றான். அதிகாரிகளுக்குப் பணிந்தே பழக்கப்பட்டவர்
“தங்கள் கீழ்ப்படிதலுள்ள” என்று வெள்ளைக்காரன் ஆண்டபோது கடிதங்களில் அச்சடித்தே இருக்குமே அதற்கு நிரந்தரமான உதாரணம் கஜபதிதான் என்று கூடச் சிலர் கேலி செய்தார்கள். பணிவு காரணமாக மேலதிகாரிகளுடன் இப்போதும் முதுகு வளைந்து குனிந்துதான் அவர் பேசுவார்.
வேலைநிறுத்தத்தின்போது எந்த ஊழியரும் வேலைக்கு வரக்கூடாது என்று ‘யூனியன்’ சொல்லிவிட்டது. வயதானவர்களும் பயந்தவர்களும் ‘மெயின்கேட்’ முன்பு நடக்கவிருக்கும் மறியலில் கலந்துகொள்ளாவிட்டாலும் வீட்டிலிருந்து வேலைக்கு வராமல் ஒத்துழைப்பு தந்தால் போதும் என்று சொல்லியிருந்தார்கள். ஒரே நாள் விவகாரமாக இருந்தாலும் ஒருவர்கூட வேலைக்குப் போகக்கூடாது என்று சங்கம் தீர்மானமாக இருந்தது.
சர்க்கார் கெடுபிடிகளில் இறங்கியது. பத்து பத்துக்கு வருகைப் பேரேடு அதிகாரியின் மேஜைக்குப் போய்விடும். வேலைக்கு வராதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்து இருந்தார்கள்.
இருபத்தாறு ஆண்டுகளாக செய்யாத ஒரு காரியத்தை அன்று செய்ய கஜபதி விரும்பவில்லை. எப்படியும் “க்ரேஸ்டய”த்துக்குள் காம்பவுண்டுக்குள் நுழைந்து விடவேண்டும். என்னும் துடிப்புத்தான் அவருக்கு இருந்தது.
“என்ன, நேரம் ஆகுதே? கிளம்பலியா?” என்று மனைவி கேட்டபோதுதான் தெய்வத்தின் உத்திரவே வந்து விட்டதுபோல அவருக்குத் தோன்றிற்று. போகத்தான் வேண்டும் என்கிற முடிவும் உடனே உண்டாகிவிட்டது அவர் மனதில்.
வழக்கமான அலங்காரங்களுடன் பஸ் ஸ்டாண்டுக்கு விரைந்து வந்தும் ஒன்பது மணி பஸ் போய்விட்டிருந்தது. ஒன்பது இருபது பேருந்தைத்தான் பிடித்து ‘கிரேஸ் டைம்’ முடிவதற்குள் அலுவலகம் போகவேண்டுமே என்று கவலை ஏற்படுகிறது.
“சர்க்காரிடம் எனக்கு இருக்கும் விஸ்வாசம் இந்த பஸ்ஸுக்கு என்னிடம் இல்லையே” என்று அவருக்கு ஒரு கணம் தோன்றிற்று. அது அவர் நாள் தவறாமல் தினமும் போகும் பஸ்!
அடுத்த பஸ்ஸில் போனால் கூட பத்து ஐந்துக்குப் போகும். ஓட்டமும் நடையுமாக ஆபீஸ் வாசலுக்கு ஐந்து நிமிஷத்துக்குள் போய் விடலாம். ஆனால் வாலண்டியர்கள் மறிப்பார்களே! எப்படியாவது திமிறிக் கொண்டாவது பலவந்தமாக உள்ளே போய்விட வேண்டியதுதான்.
பேருந்து நிறுத்தத்தில் பலர் ‘இங்கே தடியடி’ , ‘அங்கே துப்பாக்கிச் சூடு’, ‘நாலு பேருக்கு மேலே கூட்டம் கூடக் கூடாதாம்’ என்று ஸ்ட்ரைக் அவலை மென்றுகொண்டிருந்தார்கள். கஜபதி அதைக் காதிலேயே வாங்கவில்லை.
யார் யார் வேலைக்கு வரக்கூடும் (சங்கத்தின் வார்த்தைகளில் ‘கருங்காலிகள்’) என்று கணக்குப் போட்டுக் கொண்டிருந்தார். சாதாரணக் குமாஸ்தாக்களுக்கு சாதாரணக் காட்டுமர நாற்காலிகள்தானே.
குடும்பத் தொல்லையைத் தவிர்க்க, இருபத்திநாலுமணி நேரமும் ஆபீஸிலேயே இருக்க மாட்டோமா என்று ஏங்குபவர்களும், இந்த சமயத்திலாவது டிபார்ட்மென்டில் நல்லபெயர் எடுக்கலாம் என்று நப்பாசைப்படும் வழக்கமாக ஒழுங்காக வேலைக்கு வராத சிலரும் பொழுது விடிவதற்குள் உள்ளே வந்து, பல் தேய்ப்பதே ஆபீஸ் குழாயில்தான் என்பதாகத் தீர்மானம் செய்திருந்தார்கள். இதுவும் அவருக்குத் தெரியும். தன்னைப் பற்றி குறிப்பாகத் தலைவர் சொன்னதுதான் அவருக்கு சங்கடமாகப் போயிற்று.
“கஜபதி போன்ற, வயதிலும் அனுபவத்திலும் முதிர்ந்தவர்கள் நம் போராட்டத்தில் கலந்துகொண்டு ஒத்துழைத்தால் நமக்குப் பலம் பெருமை எல்லாம்”
தனது குடும்பத்தின் கஷ்டம் அவருக்குத்தானே தெரியும்? இன்னும் ஐந்தாறு வருடம் ஒட்டிவிட்டால் கௌரவமாக ரிட்டையர் ஆகிவிடலாம். இன்று நேரத்திற்குள் அலுவலகம் போய்விட முடியமா? நேரம் ஓடிக்கொண்டு இருக்கிறது. டைம்கீப்பர் சரியாகப் பதில் சொல்லவில்லை. ‘மீட்டருக்கு மேலே’ கொடுத்து ஆட்டோ அல்லது டாக்சியில் போக ‘தெம்பு’ இல்லை.
பேருந்தும் வருகிறது. சிரமப்பட்டு ஏறிவிட்டார். அலுவலகம் நெருங்கும் சமயத்தில் பேருந்து மேலும் போகாது என்று தெரியவருகிறது. இவரது அலுவலக வாசலில் கலாட்டாதான் காரணம். கஜபதி இரங்கி ஓட்டமும் நடையுமாக விரைகிறார். வழியில் வரிசையாய் லத்தியும் கையுமாகப் போலீஸ்.
“யாரய்யா? பெரியவரே, நில் அங்கேயே. போ திரும்பி! வெலவெலத்துப்போய் கஜபதி நின்றார். குண்டாந்தடியும் முறுக்கு மீசையுமாக அந்த ஸ்பெஷல் போலீஸ்காரன் கறுப்பண்ணசாமி சிலை போல விழி பிதுங்க நின்றான், வழியை மறித்து.
“ஆபீசுக்கு…”
“யாரும் எந்த இடத்துக்கும் இந்த வழியாப் போகக் கூடாது. சொன்னாப் புரியலே? போய்யா!… நிக்காதே. ஓடு” கழி ஓங்கியதைப் பார்த்ததுமே பயந்துபோய் அவர் வந்த வழியே ஓட ஆரம்பித்தார்.
மறுநாள் அலவலகம் சென்றபிறகு விவரங்கள் தெரிய வருகின்றன. சுமார் முந்நூறுபேர் அலுவலகம் வந்திருந்தார்களாம். அவர்களில் ஒருவராக கஜபதி இல்லை. அவரது மேஜைக்குச் செல்லும் முன்பு பலர் அவரை என்னவோபோலப் பார்த்தார்கள். இருக்கையில் அமர்வதற்கு முன்பே உள்ளிருந்து அழைப்பு.
அறைக்குள் நுழைந்த கஜபதியை ஆபீஸர் ஒரு முறை பார்த்தார். மேஜை மேலிருந்து டைப்படிக்கப்பட்டிருந்த காகிதம் ஒன்றை அவரிடம் நீட்டினார். அவர் பக்கத்தில் இருந்த ஹெட்கிளார்க் வேறொரு பேப்பரில் கையெழுத்து வாங்கினார்.
இருவருமே அவரிடம் பேச்சு எதுவுமே வைத்துக் கொள்ளவில்லை. அறைக்கு வெளியே வந்து அந்தக் காகிதத்தைப் படித்தார் கஜபதி.
“……. வேலைக்கு வராததால் வேலை நிறுத்தம் செய்ததாகக் கருதப்படுகிறது. இன்றிலிருந்து உம்மை ‘சஸ்பெண்ட்’ செய்திருக்கிறோம். கடமை தவறியது பெரிய குற்றம் அதற்காக உம்மை ஏன் வேலை நீக்கம் செய்யக்கூடாது என்பதற்கான காரணத்தை இதைப் பெற்றுக்கொண்ட பத்து நாட்களுக்குள்ளாக……”
தான் நிரபராதி. சந்தர்ப்பக் கோளாறால்தான் வரமுடியவில்லை என்று அவர் உள்ளம் கதறுகிறது. வெளியே இவரைப்போல ‘சஸ்பெண்ட்’ ஆனவர்கள் கும்பல். பலர் வந்து இவருக்குக் கை குலுக்குகிறார்கள். அலக்காக மேடைக்குத் தூக்கி வந்துவிட்டார்கள். மாலைகள் வருகின்றன. தலைவரின் உத்தரவின் பேரில் முதல்மாலை கஜபதிக்கு விழுகிறது. பலத்த கரகோஷம்.
“வேலை நிறுத்தம் வெற்றிகரமாகவே நடத்தி முடித்தோம். தோழர்களின் ஒத்துழைப்பை சங்கம் பாராட்டுகிறது. குறிப்பாக தோழர் கஜபதியைப் போன்ற ஸீனியர்கள் இத பங்குகொண்டு கைகொடுத்து வெற்றிபெறச் செய்து நடத்தி கொடுத்ததுதான் விசேஷம். சங்கத்துக்குத் தனிப் பெருமை அதுவேதான். பல குடும்பத் தொல்லைகளிருந்தும்கூட, பின் விளைவுக்கு அஞ்சாமல் இத்தனை வயதிலும் ஒத்துழைத்த அந்தப் பெரியவரின்… பலத்த கைதட்டல். “தோழர் கஜபதி! வாழ்க!” கோஷம் கஜபதியின் காதை அடைத்தது. திருகத்திருக விழித்தபடி மாலையும் கழுத்துமாக அமர்ந்திருந்தார் அந்தப் – பரம விசுவாசி!
என்று கதை முடிகிறது.
* * * * * *
கதர் ஜிப்பா, வேட்டி அணிந்த தேசபக்தர், நல்ல ஓவியர். புல்லாங்குழல் ‘மாலி’யிடம் முறையாக இசை பயின்ற ஆர் ஸ்ரீனிவாசன் பல சிறுகதைகள் இசையைப் பின்னணியாகக் கொண்டவை. (‘தோடி’, ‘அரங்கேற்றம்’, ‘ஆராதனை’, ‘வித்வானும் ரசிகையும்’, ‘சங்கராபரணம்’).
குறிப்பிடத்தக்க எழுத்தாளாராகப் பிரபல விமரிசகர் ஐராவதம் (ஸ்வாமிநாதன்) அவர்களால் பெரிதும் போற்றப்பட்டவர். ஐராவதம் பரிந்துரைகள் எப்போது ஏமாற்றம் கொடுத்ததில்லை என்று அசோகமித்திரன் ஒரு கட்டுரையில் சொல்லியிருந்தார்.
ரஸவாதி சிறுகதைகள் கொண்ட தொகுப்பு விருட்சம வெளியீடாக இந்த மாதம் (ஏப்ரல் 2021) வெளிவருகிறது.