கில் காமேஷின் அதி உன்னதமான திட்டம் அது . காட்டு மிருகங்கள் எங்கிடுவை தங்கள் இனம் என்று கருதி அவனுக்குப் புகலிடம் கொடுக்கின்றன. அவன் ஒரு பெண்ணுடன் உறவு கொண்டால் அவனை தன் இனம் அல்ல என்று உணர்ந்து விலக்கிவிடும். பின்னர் எங்கிடுவை அழித்து விடலாம் என்று எண்ணினான்.
அதன் படியே அழகி ஒருத்தியை வேட்டைக்காரனுடன் அனுப்பி வைத்தான். அந்த அழகியும் எங்கிடு வருவதற்காகக் காத்திருந்தாள்.
மூன்று நாட்கள் கழித்து எங்கிடு வந்தான். அழகியைப் பார்த்துப் பார்த்தபடியே நின்றான். அந்த அழகி மெல்லத் தன் காம வலையில் எங்கிடுவை வீழ்த்தினாள். ஆறு நாட்கள் அவளுடன் சுகம் கண்ட அவனை மிருகங்கள் ஒதுக்கி வைத்தன. அவனாலும் மிருகங்களுடன் தொடர்ந்து ஓட முடியவில்லை.
அந்த அழகியின் காலடியில் அமர்ந்தான் எங்கிடு. அவள் அவனை மேலும் வசியம் செய்து தன்னுடன் அழைத்துச் சென்றாள். கில் காமேஷ் பற்றியும் சொல்லி அவனை நகரத்திற்கு அழைத்துச் சென்றாள்.
அவள் பேச்சு எங்கிடுவிற்கும் பிடித்திருந்தது. தன் மிருக வழக்கத்தை அறவே ஒழித்தான். மனிதர்களைப் போல ரொட்டியும் மதுவும் குடித்தான். உடலையும் அழகு செய்து கொண்டான். நல்ல உடைகளை உடுத்தினான். வேட்டைக் காரர்களுக்கு உதவியாக சிங்கங்களை வேட்டையாடினான். அவனை விடப் பலசாலி அந்தப் பிராந்தியத்தில் யாரும் இல்லை என்ற பெயர் நிலைத்தது.
ஊருக் நகரில் கில் காமேஷும் தன்னைத் தேடி ஒரு தேவமகன் ஒருவன் வரப் போவதாகவுக் கனவில் கண்டான். அந்த தேவ மகனைத் தன் காதலிகளைவிட அதிகமாகக் காதலிப்பது போன்ற உணர்வையும் அடைந்தான்.
அவனுடைய தாய் அவன் கனவைப் புரிந்துகொண்டு வருபவன் எங்கிடு. அவன் உன்னை என்றும் பிரியாத தோழனாக இருந்து உன்னைக் காப்பாற்றுவான் என்று கூறினாள். கில்காமேஷும் எங்கிடுவைக் காணக் காத்திருந்தான்.
ஆனாலும் கில் காமேஷின் முரட்டுத்தனம் குறையவில்லை. பெண்களை வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு சென்றான். ஆண்கள் அனைவரையும் தனக்கு குற்றேவல் செய்ய வற்புறுத்தினான். ஊருக் நகர மக்கள் அவன் கொடுமை தாங்காது எங்கிடுவிடம் முறையிட்டனர்.
எங்கிடு தான் கில்காமேஷைத் தோற்கடித்து நாட்டில் புதிய திருப்புமுனையைக் கொண்டு வருவதாக உறுதி பூண்டான்.
உடனே எங்கிடு ஊருக் நகரத்திக்குச் சென்றான். நகர மக்கள் அவனைக் கண்டு முதலில் பயந்தாலும் இவன் கில் காமேஷை வென்றுவிடுவான் என்று நம்பினர்.
கில்காமேஷை வரவழைக்க ஒரு திருமணத்தை ஏற்பாடு செய்தனர். காதல் அரசி என்ற அந்தப் பெண் கணவனுக்காக முதல் இரவில் காத்திருந்தாள். அதைக் கேள்விப்பட்ட கில்காமேஷ் மன்னனான தனக்குத் தான் கன்னி கழிக்கும் உரிமை இருக்கிறது என்று அதை நிலை நாட்ட வந்தான்.
கில் காமேஷ் வருகைக்காகக் காத்திருந்த எங்கிடு அவனை வழி மறித்தான். இருவருக்கும் இடையே பலத்த யுத்தம் நடந்தது. இருவரும் காட்டு விலங்குகளைப் போல முட்டி மோதினார்கள். பல நாட்கள் சண்டை நடந்தது. யார் வெற்றி பெறுவார்கள் என்று சொல்ல முடியாமல் இருந்தது.
முடிவில் கில் காமேஷ் பூமியில் காலை நன்கு ஊன்றிக் கொண்டு எங்கிடுவை அலாக்காகத் தூக்கி கீழே வீழ்த்தினான். எங்கிடு தன் தோல்வியை உணர்ந்தான். கிழகாமேஷிடம் ” நீதான் உண்மையில் மாபெரும் வீரன். தேவர்கள் உன்னை எல்லா மனிதர்களுக்கும் மேலே உயர்த்தியிருக்கிறார்கள். நீ மன்னனாக இருப்பது நியாயமே ” என்று கூறினான்.
அதைக்கேட்ட கில் காமேஷ் தான் கனவில்கண்ட தேவகுமாரன் இவனே என்று உறுதி கொண்டான். அவனை அப்படியே கட்டித் தழுவிக் கொண்டான். ” “எங்கிடு இன்று முதல் நீயே என ஆருயிர்த் தோழன் ” என்று பெருமிதத்தோடு கூறினான்.
அன்றுமுதல் ஊருக் நகரில் அவர்கள் இருவரும் மிகச் சிறந்த நண்பர்களாக இணை பிரியாத தோழர்களாக வலம் வந்தனர்.
கில்காமேஷின் அகம்பாவம், ஆணவம் அகங்காரம் எல்லாம் படிப்படியாகக் குறைந்தது.
அப்போது கில்காமேஷ் ஒரு கனவு கண்டான். அதன் அர்த்தம் என்ன என்பதை எங்கிடு விளக்கிக் கூறினான்.
” கில்காமேஷ்! உன்னை உலகத்துக்கு மன்னனாக கடவுள் நிர்மாணித்திருக்கிறார். யுத்தங்களில் நீ எப்போதும் வெற்றி பெறுவாய் என்ற வரத்தையும் உனக்கு அளித்திருக்கிறார். வேறு யாருக்கும் தராத மேம்பட்ட மனித நிலையையும் உனக்கு அவர் வழங்கியிருக்கிறார். நீ தொடர்ந்து யுத்தங்கள் செய்து கொண்டே இருப்பாய். ஆனால் நீ உன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யக் கூடாது. உன் மக்களிடம் நீ நியாயமாக இருக்கவேண்டும். அப்படிச் செய்வதாக கடவுள் முன் நீ ஆணையிடு! ஆனாலும் நீ இறப்பு என்பதிலிருந்து தப்ப முடியாது!” என்று விளக்கினான்.
அதைச் சொல்லும் போதே எங்கிடுவிற்கு துக்கம் தொண்டையை அடைத்தது.
“நண்பா! என்ன ஆயிற்று உனக்கு? ஏன் இப்படி கண் கலங்குகிறாய்?” என்று கில்காமேஷ் கேட்டான்.
” நான் பலவீனமடைந்துவிட்டேன் போல் தோன்றுகிறது. சோம்பலாக ஒரு காரியமும் செய்யாமல் இருப்பது எனக்குச் சிரமமாயிருக்கிறது” என்று கூறினான்.
அப்போது கில்காமேஷ் வீரதீரத்துடன் கூறினான்.
” எங்கிடு! என விதி நிணயித்த அளவில் நான் அதிபராக்கிரம செயல்களை இன்னும் செய்யவில்லை. வா! நாம் இருவரும் புதிய மனிதர்கள் வாழும் செடார் மரங்கள் நிறைந்த பிரதேசத்துக்குப் போவோம். அங்கே புகழ் பெற்ற வீரர்களின் பெயர்கள் அங்கே நிரந்தரமாகப் பதிக்கப்பட்டிருக்கும். அதில் என் பெயரையும் பொறிக்கச் செய்வேன். அதுமட்டுமல்ல இன்னும் நிறைய இடங்களுக்குச் செல்வோம். சென்ற இடங்களிலெல்லாம் நம் வீரத்தை நிலை நாட்டுவோம். மனிதர் காலடி படாத இடத்திற்குச் சென்று தேவர்களுக்கு மகோன்னத ஆலயம் எழுப்புவோம். காட்டில் நடக்கும் அநீதிகளுக்கு முடிவு காட்டுவோம். எல்லவற்றிற்கும் மேலாக செடார் காட்டை ஆண்டுவரும் ஹம்பாபா என்ற ராட்ஷசனை வென்று நமது வீரத்தைப் பறை சாற்றுவோம்.
அதிகக் கேட்ட எங்கிடு திடுக்கிட்டான்.
(தொடரும்)
நன்றி : கில்காமேஷ் க நா சுப்பிரமணியம் , சந்தியா பதிப்பகம்
நல்ல எளிய முறையில் எடுத்து செல்லப்படும் /சொல்லப்படும் விறுவிறுப்பான கதை.
தொடர்ந்து திகைப்பை கொடுக்கிறது.
சுரேஷ் ராஜகோபால்
LikeLike