கடைசிப் பக்கம் – டாக்டர் ஜெ.பாஸ்கரன்.

உதக வாத்தியமும் ஆனையாம்பட்டியும்!
ஊரிலிருந்து வந்திருந்த மாமாவுடன் சென்னை நகர ஓட்டல் ஒன்றில் லஞ்சுக்குச் சென்றிருந்தேன். குளிரூட்டப்பட்ட டைனிங் ஹாலில் எதிரெதிரே அமர்ந்து கொண்டிருந்தோம். பெரிய தட்டில் பச்சை, ஆரஞ்சு வண்ணங்களில் பல ‘மெலமைன்’ கப்புகளில் கூட்டு, பொறியல், ரசம், சாம்பார், ஊறுகாய் எனக் கொண்டு வைத்தார், சர்வர் சுந்தரம் ஜாடையில் ஒருவர்! இவ்வளவு கப்புகளா என வாயைப் பிளந்த மாமா, “என்னடா இது, ஜலதரங்கம் வாசிக்கறா மாதிரி இவ்ளோ கப்பு?” என்றார். தஞ்சாவூர் ஆசாமி அவர், எதிலும் சங்கீதத்தையே பார்ப்பவர்!
நம்மில் பலருக்கு ‘ஜலதரங்கம்’ பற்றிய ஞானம் குறைவுதான். பல நல்ல பாரம்பரியக் கலைகளைப் போல, ஜலதரங்கமும் அருகி வருவது வருத்தத்துக்குரியதுதான்.
சமீபத்தில் என் உறவினர் ஒருவரின் வீட்டுத் திருமணத்தில் வித்தியாசமான இசைக் கச்சேரி வேண்டும் என்று, ஜலதரங்கம் ஏற்பாடு செய்திருந்தார்கள். பனகல் பார்க்கில், எப்போதாவது மாலையில் சிறிது நேரம், ஆல் இந்தியா ரேடியோவில் ஜலதரங்கம் ஒலிக்கக் கேட்டிருக்கிறேன். இப்போதுதான் நேரில் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது.
ஆய கலைகள் அறுபத்தி நான்கில் ஒன்று ஜலதரங்கம் வாசிப்பது! தமிழில் “நீரலை இசை”, “நீர்க்கிண்ண இசை” என்று அறியப் படுகிறது. ’உதக வாத்தியம்’ என்ற பெயரும் உண்டு (உதகம் – புவி, நீர் என்கிறது சைவ சித்தாந்த அகராதி). இந்தியாவில்தான் உருவானது – இனிமையான தாள வாத்திய வகையைச் சேர்ந்தது.
ஆரம்ப நாட்களில் வெண்கலக் கிண்ணங்களில் நீரை ஊற்றி, விளிம்புகளை ஒல்லியான, உறுதியான குச்சிகளால் தட்டி எழுப்பப் படும் ஓசைகளைச் சுவரம் பிரித்து வாசிக்கப் பட்டது ஜலதரங்கம். கிண்ணத்தின் அளவு, அதில் விடப்படும் தண்ணீரின் அளவுகளைப் பொறுத்து, வேறு வேறு சுவரங்கள் எழுப்பப்படுகின்றன. பதினாறு முதல் தேவைக்கேற்றாற் போல், இருபது, இருபத்தைந்து கிண்ணங்கள், பல அளவுகளில் உபயோகப் படுகின்றன.
இப்போதெல்லாம், பீங்கான் கிண்ணங்களில் நீரூற்றி இசைக்கப் படுகின்றன. இடது பக்கத்திலிருந்து, வலது பக்கம் வரை அரை வட்ட வடிவில் தேவைக்கேற்ற நீருடன் கிண்ணங்கள் – பெரியதிலிருந்து, சிறியது வரை – வைக்கப் படுகின்றன. (மன்னாதி மன்னன் படத்தில் எம் ஜி ஆர் தன் முன்னால் பல ‘தபேலா’ க்களை வைத்துக் கொண்டு, ‘ஆடாத மனமும் உண்டோ’ பாடலுக்கு வாசிப்பதுதான் நினைவுக்கு வந்தது!) இரண்டு கைகளிலும் குச்சிகளைக் கொண்டு, கிண்ணங்களின் விளிம்பில் தட்டி ஓசை – சுவரங்கள் – எழுப்பப் படுகின்றன. நீரினளவைப் பொறுத்து மாறும் சுவரங்களை வைத்துப் பாடல்கள் இசைக்கப் படுகின்றன. வயலின், மிருதங்கம் பக்க வாத்தியங்களாக, ஜலதரங்கக் கச்சேரிகள் நடக்கின்றன.
இடதிலிருந்து வலதுக்கு சுருதி ஏறிக்கொண்டே போகும்! வராத சுவரங்கள், அந்நிய சுவரங்களுக்கான கிண்ணங்களை சுருதி சேர்த்து, அரை வட்டத்திற்கு வெளியே வைத்து, தேவைக்கேற்ப உபயோகிப்பார்கள்! விளிம்பில் தட்டினால் சுவரங்களும், நீ மட்டத்தின் மேல் லேசாகத் தட்டினால், கமகங்களும் உண்டாகும். வேகமாகத் தட்டி வாசிக்கும்போது, கிண்ணங்கள் கவிழ்ந்துவிடாமல் இருக்கவும், அதில் ஊற்றப்படும் நீர் உதவும். (மேடையில் பிளாஸ்டிக் ஷீட் போட்டு, அதன் மீது கிண்ணங்களை வைத்து, நீர் நிரப்பி, ஸ்ருதி கூட்டி கச்சேரி ஆரம்பிக்கக் குறைந்த பட்சம் அரை மணி நேரமாவது ஆகிறது. அதுபோலவே, கச்சேரி முடிந்து, நீரை எடுத்து, கிண்ணங்களைத் துடைத்து வைப்பதற்கும்!)
சேலத்திலிருந்து 67 கிமீ தூரத்தில் உள்ளது ஆனையாம்பட்டி கிராமம். அங்கிருந்த திரு.சுப்பைய்யர் ஜலதரங்கம் வாசிப்பதில் மிகவும் தேர்ந்தவர். அவர் மகன் ஆனையாம்பட்டி கணேசன் அவர்கள்தான் அன்று திருமணத்தில் வாசித்தார். 90 வயது இளைஞர், இரண்டு கைகளினாலும் குச்சிகளைக் கொண்டு அவர் வாசிப்பதைக் காணவே ஆயிரம் கண்கள் வேண்டும். என்ன வேகம், ஸ்வர சுத்தம், தாளக் கட்டு – அபாரம். காஞ்சிப் பெரியவரின் ஆசி பெற்று, காஞ்சி மடத்தில் வாசிப்பவர். ஆல் இந்தியா ரேடியோவின் ‘ஏ’ கிரேட் ஆர்டிஸ்ட். வாத்தியத்திற்கு தமிழ்நாட்டில் வயது 121 – அதில் 70 வருடங்களுக்கும் மேலாக வாசித்து வருகிறார் திரு கணேசன் அவர்கள். அவர் மகன் திரு வெங்கடசுப்ரமணியன் வயலின் வாசிக்க (ரொம்ப அழகா, ஜலதரங்கத்துக்கு இடம் கொடுத்து கூடவே வந்தது பிரமாதம்!), சிதம்பரம் பாலஷங்கர் மிருதங்கத்திலும், ராஜாராம் கடத்திலும் (இவர் விக்கு விநாயகராமின் மருமகன்) சிறப்பாய் வாசித்து, கச்சேரி களை கட்டியது. வாதாபி (ஹம்சத்வனி), எந்தரோ மஹானுபாவுலு (ஶ்ரீராகம்), சரச சாம தான (காபிநாராயணி), மாமயிலேறி (பிலஹரி), நகுமோ (ஆபேரி) என இசைப் பிரவாகம் அன்று மண்டபத்தை நிறைத்தது.
கலைமாமணி, லலிதகலாவேதிகாவின் பொற்பதக்கம் மற்றும் விருது எனப் பல விருதுகள். ஆசியாவிலேயே, ஜலதரங்கம் இசைக்கு முதன்மையாக – அத்தாரிடி – இருப்பவர் திரு கணேசன் அவர்கள்.
“இது போன்ற தொடர்ச்சியில்லாத வாத்தியங்களில் மொழியை – சாகித்தியங்களை – கொண்டு வருவது அவ்வளவு சுலபமில்லை. கிண்ணங்களின் வயது 100 க்கும் மேல். எந்த விரிசல் இல்லாமலும், விரலால் தட்டிப் பார்த்து ஸ்வரத்திற்குச் சமமாக இருக்கிறதா என்றும், உகந்த அளவு தண்ணீர் நிரப்பிய பின் வரும் நாதத்தையும் ஒப்பிட்டுப் பார்த்து வாங்கிக் கொள்ளணும். …. அமரும் மேடை கான்கிரீட் மேடையா, அல்லது மரத்தினாலானதா என்பதைப் பொறுத்து வெளிவரும் நாதமும் வித்தியாசப் படும்.” என்கிறார் திரு கணேசன்.
“இப்போதெல்லாம் பெரிதளவில் கச்சேரிகள் வருவதில்லை. அதற்காக நான் ரொம்ப கவலைப் படுவதில்லை” என்கிறார் 90 வயதான இந்த இசைக் கலைஞர்.
நமது பாரம்பரியம் பற்றி வாய் கிழியப் பேசுபவர்கள், ஜலதரங்கம் போன்ற கலைகளையும் போற்றிப் பாதுகாக்க வேண்டும். பல கலாச்சார மரபுகள் அழிவதைப் போல, நல்ல கலைகளையும் கவனிக்காமல் நாம் அழித்துக் கொண்டிருக்கிறோமோ என்ற வருத்தம் வருகிறது.

4 responses to “கடைசிப் பக்கம் – டாக்டர் ஜெ.பாஸ்கரன்.

  1. Excellent Doctor Baskar. ..
    We have to do something..to project Sri. Ganesanji, the great Jalatharang Artist.
    Pranams to him.
    Post in yr.FB.
    Padmini Pattabiraman

    Like

  2. அன்பின் டாக்டர்

    ஜல தரங்கம் பற்றிய உங்கள் கடைசி பக்கம் பிரமாதம்.

    கண்ணுக்கு நூறு வயசு அவ சொல்லுக்கு நாலு வயசு என்று அம்மாடி பாட்டில் எழுதி இருப்பார் கண்ணதாசன்.

    கணேசன் சாரை விடவும் பத்து வயசு கூட, அந்தக் கிண்ணங்களுக்கு…

    சுருதி பிசகாத கட்டுரை….நன்றி

    எஸ் வி வேணுகோபாலன்

    Like

  3. அன்புடையீர் வணக்கம். நீரிசை என்னும் ஜலதரங்கம் வானொலியில் கேட்டு இதயம் துள்ளியதுண்டு. இன்று கண்ணால் வாசிக்கும் வாய்ப்பளித்தமைக்கு நன்றி. இது போன்ற நமது மண்ணின் கலைகளை பாதுகாக்க லலித கலா அகடமி போன்ற சங்கீத நாடக. மேம்படுத்து அமைப்புகள் செய்யவேண்டும். .இப்படியான. முணுமுணுப்பு முகாம்களின் குரல்கள் இயல்பியல் மாற்றத்தை உருவாக்கட்டும். நன்றி.முயற்சி வெல்ல வாழ்த்துகள்.

    Like

  4. ஆனையாம்பட்டி கணேசன் அவர்களின் ஜலதரங்க இசையை ஒரு முறை கேட்டிருக்கிறேன். இதவாயிருக்கும். ஆனால் இந்த வாத்தியம் மற்ற இசைக்கருவிகள் அளவு கச்சேரிகளில் இடம் பெறவில்லை. இதை இசை ரசிகர்கள் போஷிக்கவேண்டும். ஆனையாம்பட்டி சேலம் மாவட்டத்தில் ஒரு சிறிய ஊர். அங்கிருந்துகொண்டு திரு.கணேசன் அவர்கள் இந்தக் கலையை காப்பாற்றிக்கொண்டு வருகிறார்கள். அவருக்கு ஆதரவு தரவேண்டியது இசை ரசிகர்கள் கவனத்தைப் பெறவேண்டும். டாக்டர் பாஸ்கரனின் கட்டுரை சிறப்பு.
    லாவண்ய சத்யநாதன்.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.